வட்டாட்சியர் அலுவலகத்தைப் பார்த்தபடி சாலையின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மீனாட்சி. பத்துமணி ஆகவில்லையெனினும், அதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டனர். ஓரிரு ஊழியர்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தொலைதூரத்திலிருந்து ரயிலில் தினசரி வந்து பிரயாணத்திலும், அலுவலகத்திலும் வாழ்க்கையை நடத்துபவர்கள். காலை டிபன், மதிய உணவு என்று ஒரு நாளைய உணவை பையில் சுமந்துவந்து அலுவலகப் பணிகளின் ஊடே சாப்பிட்டுக் கொள்பவர்கள்.
அலுவலக காம்பவுண்டு சுவரை ஒட்டினாற் போல் அமைந்த காப்பி,டீ பங்க் கடையும் தனது உலோகப் பெட்டியின் கதவுகள் வானை நோக்கி உயர அன்றைய பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தது. பளபளவென்று தேய்த்து , அதற்கு வீபூதியும், குங்குமமுமிட்டு அறுபத்துமூவருக்கும் இளையவராய் பித்தளை பாய்லர் கவுண்டரில் எழுந்தருளியிருந்தது. அருகில் சிஷ்ய கோடிகளாய் உப்பு பிஸ்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள். அலுவலகத்தில் வருகிற பொதுமக்கள் தங்களது வேலை முடிகிற வரைக்கும், பொழுது போக்குவதற்கும், தாகசாந்தி செய்வதுற்குமான ஒரே இடம்.
கடந்த சில வாரங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மீனாட்சிக்கு அவையெல்லாம் பார்த்து பழகிவிட்டன. ஆனால் அவள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எழுத்தர் அன்புக்கரசி இதுவரை வரவில்லை. சரியாக பத்துமணிக்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தாமதமாக , இரு கால்களையும் ஸ்கூட்டியின் வெளிப்புறம் தொங்கவிட்டபடி வந்து சேருவாள். கஷ்டப்பட்டு வண்டியை இழுத்து ஸ்டாண்டு போடுவாள். சில சமயம் டீக்கடைச் சிறுவன் பார்த்துவிட்டால் அவனே அவள் செய்கிற அந்த ஒரு வேலையையும் செய்து கொடுத்துவிடுவான். கால்கள் வைக்குமிடத்திலிருந்து லஞ்ச்பாக்ஸ், பிளாஸ்க் வைத்த பிளாஸ்டிக் வயர் பின்னிய பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைவாள். இவளுக்கு மட்டும் வீடு அருகில் இருக்கிறதுபோல என்று நினைத்துக் கொள்வாள் மீனாட்சி.
மீனாட்சி அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள்.கடந்த சில மாதங்களில் அவள் வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்கள் நடந்துவிட்டன…? இன்றைக்கு அன்புக்கரசியிடம் பேசி இரண்டில் ஒன்று தெரிந்தாகவேண்டும் என்கிற தீர்மானத்தோடு இருந்தாள்.
***
“உன் பேருதான் மீனாட்சியா?”
“ஆமாங்க சார்..”
“அதென்ன உன் வீட்டுக்காரர் பேரு மட்டும் விக்டர் தங்கராசுன்னு..? “ மேனேஜர் ஆர்வக் கோளாறர்.
“அவர் பேரு நெசத்துல தங்கராசுதான் சார். வீடு வீடா ஜெப நோட்டிசு கொடுக்கறவங்க, நான் இல்லாத நேரமாப் பாத்து, இப்படிப் பேரு வெச்சுக்கிட்டா வாழ்க்கையில் வெற்றிதான்னு சொல்லி , அவர் மனசை மாத்திப்புட்டாங்க சார்…“ என்றாள் மீனாட்சி.
“நல்லா வேலை செய்யற ஆளு .. தெருத் தெருவாகப் போய் பிளீச்சிங் பவுடர் தூவறதும், மருந்து தண்ணி பீச்சறதும் பொறுப்பாக செய்வாப்புல…பாவம்” சொல்லிவிட்டு மானேஜர் சற்று மௌனமாக இருந்தார். கொரோனாவில் அவளது கணவன் இறந்து போனதில் , அவரது கம்பெனியும் காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அவர் குரலில் ஒலித்தது.
உதடுகளை மீறி எழுந்த அழுகையைப் புடவைத் தலைப்பு நுனியில் அடக்கிக் கொண்டாள்.
“கம்பெனில அவருக்கு கொரோனான்னு சொன்னாங்க.. எந்த ஆசுபத்திரிக்கு இட்டுக்கினு போனாங்க.. என்னாச்சு, ஏதாச்சு.. கடைசி நேரத்தில் என்னைப் பாக்கணும்னு சொன்னாப்புலயா.. ஒண்ணும் தெரியலை சார்..கடைசி வரைக்கும் கண்ணுல காட்டலை.. செத்துடுச்சுன்னு ஒரு நாள் வந்து சொன்னாங்க.. பெரிய அதிகாரிங்க பொய்யா சொல்லப் போறாங்க?. எரிக்கலை.. புதைச்சுட்டோம்னு சொன்னாங்க.. இன்னிக்கு வரைக்கும் எந்த இடத்துல புதைச்சாங்கன்னு கூட …” வாக்கியத்தை முடிக்க முடியாமல். குமுறிக் குமுறி அழுதாள்.
அவளது அழுகை வெடித்துச் சிதறி ஓய்வதற்கு காத்திருந்தார் அந்த அதிகாரி.
“உங்க வீட்டுக்காரரு மாதிரி பல பேரு உயிரைக் காவு வாங்கிடுச்சு இந்தக் கொரோனா.. ஆனால் அவர் செய்த அந்த புனிதமான வேலையினால பல பேரைக் காப்பாத்திருக்காருன்னு நெனச்சுக்க.. அப்புறம்.. நீ கேட்டபடி உன் ஏரியாவுலயே டூட்டி போட்ருக்கோம்.. எத்தனை மணிக்கு வரணும், என்ன செய்யணும்னு எல்லாம் சூப்பர்வைசர் சொல்லுவாரு..”
மீனாட்சி கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டாள்.
“ வாரிசுதாரர் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொடுத்தா, கம்பெனி நஷ்டஈடு, பிஎப் பணம், அரசாங்கம் கொடுக்கிற இழப்பீடு எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம்..” என்று மீண்டும் நினைவூட்டினார் மானேஜர்.
அந்த தனியார் துப்புரவு கம்பெனி அலுவலகத்திலிருந்து மீனாட்சி வெளியில் வந்தாள் .
மானேஜர் சொல்லிக் கொடுத்தது போல , வீட்டின் அருகிலிருந்த ஈசேவை மையம் வழியாக வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து மூன்று மாதங்களாயிற்று. அது சென்றடைந்த அலுவலகத்தைத் தெரிந்து கொண்டு அந்த அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள்.
ஆரம்பத்தில் கொரோனாவின் உச்சத்தில் அலுவலகம் செயல்படவேயில்லை..பின்னர் பாதி பேர்கள் வரத்தொடங்கியிருந்த நிலையிலும், மீனாட்சிக்கு தேவையான டிபார்ட்மெண்டில் மட்டும் யாரும் வரவில்லை. ’தடுப்பூசி கேம்ப்’ வேலைகளுக்கு போயிருக்கின்றனர் என்று ஒரு சமயம் பதில் கிடைத்தது.
யாரிடம் கேட்கவேண்டும் என்று தெரியாத நிலையில், கடைசியில் டீக்கடைப் பையன் மட்டும் அவள் அடிக்கடி வருவதைப் பார்த்துவிட்டு விசாரித்து வந்து சொன்னான். அந்த அலுவலகத்தில் அவனுக்கு சகலமும் அத்துப்படி. அன்புக்கரசியின் பெயரைச் சொன்னவனும் அவன்தான்.
பல படையெடுப்புகளுக்குப் பிறகு , ஒரு நாள் அன்புக்கரசியைப் பார்த்தும் விட்டாள். அன்புக்கரசியின் மேசை மீதிலும் சுற்றியிருந்த அலமாரிகள் முழுக்க காகிதக் கட்டுகள். அவையெல்லாம் அவளைப் போல வெவ்வேறு காரணங்களுக்கான விண்ணப்பித்தவர்களின் மனுக்களாக இருக்கவேண்டும்.
அதுவரை மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தவள், மீனாட்சியைப் பார்த்துவிட்டு ‘கொஞ்சம் வெளியில் நில்’ என்பது போல் சைகை காண்பித்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள். மீனாட்சியும் அவளது உரையாடல் கேட்கிற தொலைவிற்கு அப்பால் நின்றபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது பார்வையே அன்புக்கரசிக்கு இடையூறாகத் தோன்றியதோ..? முகத்தைச் சுளித்தபடி, “என்னம்மா… என்ன வேண்டும்? இந்தக் டயத்துல பப்ளிக் யாரும் இங்க வரக்கூடாதும்மா.. யார் மூலமா என்ன வருதுன்னு தெரிய மாட்டேங்குதே” மாஸ்க்கை எடுத்து மாட்டியபடி கேட்டாள்.
மீனாட்சி விபரங்களைச் சொன்னதும், அன்புக்கரசி திரும்பி, விண்ணப்பக் காகிதக்கட்டுகளை மேம்போக்காக பார்வையிட்டு பெரும் மூச்சொன்றை வெளியிட்டாள். “எவ்வளவு குவிஞ்சு கிடக்கு பாத்தியா? இதுக்கு நடவடிக்கை எடுக்கிற ஆளுங்க சரியா வரதில்லை.. உன் பேப்பரைத் தேடி எடுத்து வைக்கிறேன். அடுத்த வாரம் வா..” என்றாள்.
சரியாக அடுத்த வாரம் மீனாட்சி தன்னுடைய வேலையை முடித்து விட்டு மதியந்தான் வரமுடிந்தது. அது இயல்பாக நடந்ததா அல்லது மீனாட்சியைப் பார்த்து வெளியில் இறங்கினாளா என்பது தெரியாது.
“வெளியில டூட்டி போட்டிருக்காங்க.. மார்க்கெட் பக்கம் போய் , மாஸ்க் போடாதவங்களுக்கு ஃபைன் போடணும்னு சொல்லியிருக்காங்க..நான் போயிக்கிட்டே இருக்கேன்.” என்று இறங்கிப் போய்விட்டாள். மீனாட்சியின் கண்கள் அன்புக்கரசியின் மேசை மேலிருந்த பேப்பர்கட்டுகளின் பால் சென்றது. முன்பைவிட , காகிதக்கட்டின் உயரம் கூடியிருந்தது.
அடுத்த முறை , அவளது மனுவைப் பற்றி முதலிலிருந்து விசாரித்துவிட்டு, “வீட்டுக்கு வந்து என்கொயரி பண்ணணும். உங்க தெரு பக்கத்துல இரண்டு வீட்டுல நோட்டிசு ஒட்டியிருக்காங்கபோல..? அதுக்கு அப்புறமா அதிகாரிங்க வருவாங்க ..” என்றாள் .
இப்படியாக, நடைமேல் நடையாக நடந்து அலுத்து ஓய்ந்துவிட்டாள் மீனாட்சி. எந்தக் காரணத்திற்காக அவளது மனுவின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்கிறார்கள் என்று புரியாமல் தவித்தாள்.
டீகடைப் பையன்தான் சொன்னான். “இல்லக்கா .. மத்த நாள்ள இங்க திரிகிற ஏஜெண்டுங்க மூலம் காரியத்தை முடிக்கலாம். அவங்க மூலம் லஞ்சம் பட்டுவாடா ஆகிவிடும். உங்க வேலையும் ஆயிடும். கொரோனா பயத்துல அவங்களையும் காணோம். “ மீனாட்சியை அருகில் அழைத்து,” இங்க வேலை பாக்கவறங்களுக்கு சேரவேண்டிய பணத்தை எங்க ஓனர்கிட்டத்தான் ஏஜெண்டு குடுப்பாங்க.. வீட்டுக்கு கிளம்பிப் போக சொல்ல, அவங்க ஓனர்கிட்ட வாங்கிட்டு போய்டுவாங்க.. பணம் வரமாட்டேங்குது.. வேலையும் நடக்கல.. அதான் விசயம் அக்கா” என்று மெதுவாக குட்டை உடைத்தான்.
கடந்த முறை வந்தபோது, அன்புக்கரசி அப்போதுதான் முதல் முறையாகப் பார்ப்பது போல் மீனாட்சியைப் பார்த்தாள்.
எப்பவும் போல் விரல்களால், பேனாவைச் சுழற்றியபடி, “என்ன வேணும்.. ?” என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள்.
“ரெண்டு மாசமா நான் அடிக்கடி வர்றேன் மேடம்.. நீங்க ஏதாவது சொல்லி நாளைத் தள்ளிக்கிட்டே இருக்கீங்க.. என் பேரு உங்களுக்கு தெரியவேண்டாம்.. எனக்கு என்ன வேணும்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்லை..?” என்று படபடத்தாள் மீனாட்சி.
ஒரு சாதாரணப் பெண்மணி தன்னைக் கேள்விகேட்பதா என்று நினைத்தமாத்திரத்தில் அன்புக்கரசிக்கு கோபம் தலைக்கேறியது.
“என்னை எப்படி நீ கேள்வி கேட்கலாம்.? நான் என்னோட மேலதிகாரிக்குத்தான் பதில் சொல்லுவேன்.. இங்க பாத்தியா?” உட்கார்ந்தபடியே பின்புற அலமாரிகளிலும், மேசை மேலிருந்த காகிதக் கட்டுக்களையும் காட்டினாள்.
“என்னன்னு பாத்தீல்ல..? எல்லாம் உன்ன மாதிரி எழுதி, எழுதி அனுப்பவரங்களோடதுதான்.. எப்படி குப்பை மாதிரி குவிஞ்சு கிடக்கு பாத்தியா ..? அவங்க யாரும் வரல.. நீ மட்டும் ராணி மாதிரி வந்து என்னா கேள்வி கேட்கிற.. போ.. போ.. அது வரும்போது வரும்.. நீ கிளம்பு..” என்றபடி அவளைத் துரத்தியடிக்காத குறையாகப் பேசினாள்.
“என்ன மேடம் எங்களோட மனுக்களைப் போய் குப்பைன்னு சொல்றீங்க.. ?” என்ற மீனாட்சிக்கு தினமும் தான் பெருக்கியெடுக்கிற நாற்றமெடுக்கும் குப்பைகளுடன் தன்னுடைய மனுவையும் ஒப்பிட்டு சொல்வதை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவே இல்லை. அன்புக்கரசி பதில் பேசாமல் ஏதோ வேலை செய்வதுபோல் அவளைப் புறக்கணித்தாள்.
சற்று நேரம் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
அதற்கப்புறந்தான் அன்புக்கரசிக்காக இன்றைய காத்திருப்பும் அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற அவளது திடமான முடிவும்….
செல்போன் மணி அவளது சிந்தனைகளைக் கலைத்தது.
அவளுடன் வேலை செய்யும் லீலாவிடம் இருந்துதான் போன். போனைக் காதில் வைத்ததுமே, “என்னாக்கா. இன்னிக்கி டூட்டிக்கி வர்லியா..? “ என்றாள்.
“கொஞ்சம் வேலை இருக்குடி.. லீவு போட்டிருக்கேன்.”
“சூப்ரவைசர் உன்னைக் கேட்டாரு.. தெரியலைன்னு சொன்னேன்.. உடனே உன்னை கவரைத் தெருவுக்கு வர சொல்றாருக்கா..”
“நாந்தான் லீவுன்னு சொன்னேன்ல.. அதுவும் இந்த வாரம் மேட்டுப்பாளையம் தெருன்னு சொன்னாரே..”
“டூட்டிக்கு கூப்பிடலக்கா. கவரைத் தெருவுல நம்ம எல்லாரையும் கவுரவம் பண்ணப் போறாங்களாம்… நீ இல்லேன்னா எப்பிடிக்கா?.. சரி.. சரி.. சீக்கிரம் வா..” போனை வைத்துவிட்டாள்.
போகவில்லையென்றால் சூப்ரவைசர் அடுத்தநாள் தேவையின்றி ஏதேனும் பேசுவார். ஷேர் ஆட்டோவைப் பிடித்தாள்.
அன்றைக்கு கவரைத்தெரு குதூகலத் தோற்றத்தில் காட்சி அளித்தது.. அங்கங்கே கலர் பேப்பரில் தோரணங்கள் கட்டப்பட்டு ஒய்யாரமாகக் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததுமே ‘நாளைக்கு இதெல்லாம் தெருவுல எறஞ்சு கிடக்கும். அதையும் நாமதான் அள்ளணும்’ என்று முதலில் தோன்றியது அவளுக்கு.
சூப்பர்வைசர் உட்பட பத்துப் பதினைந்து துப்பரவு ஊழியர்கள் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
லீலா அவளைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள்.எல்லோரும் வந்தாயிற்று என்று உறுதிப்பட்டவுடன் , அவர்களை வரிசைக்கு மூன்று பேராக நிறுத்தி வைத்தனர். மீனாட்சி மூன்றாவது வரிசையில் நின்றாள்.
ஒவ்வொரு வரிசைக்கும் , தெருவாசிகள் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து மரியாதை செய்வதாக ஏற்பாடு. பணியாளர்கள் மேல் ரோஜா இதழ்களைத் தூவி, கர்ப்பூர ஆரத்தி எடுத்துவிட்டு, அரிசி துணிமணியுடன் கொஞ்சம் ரொக்கப் பணமும் கொடுப்பார்கள் என்று ஒலிபெருக்கியது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் , தினமும் வந்து தெருக்களைச் சுத்தம் செய்வதற்காக தாங்கள் செய்யும் மரியாதை அது என்று தெரு குடியிருப்பு சங்கத் தலைவர் பேசினார். வீடுகளிலிருந்து ஒரு சிலர் நிகழ்ச்சிகளை தமது போன் வீடியோவில் கவர்ந்து கொண்டிருந்தனர்.
முதல் வரிசையில் மரியாதை செய்து முடித்ததும், இரண்டாம் வரிசையில் உள்ளவர்களுக்கு மரியாதை செய்ய ஆரம்பித்தனர் வேறு இருவர்.
உயிரோடிருந்திருந்தால், தன்னுடைய இடத்தில் கணவன் தங்கராசு அல்லவா நின்றிருக்கவேண்டும் என்ற நினைப்பில் மீனாட்சியின் கண்களில் நீர் பெருகியது.
அப்போது அவளது வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு ரோஜாமலர் தூவ வந்த இருவரில் அந்த ஒரு பெண்மணி.. மீனாட்சி அப்போதுதான் கவனித்தாள்…. அன்புக்கரசி…!
‘இந்தத் தெருவிலா மேடம் குடியிருக்காங்க..? நான் பார்த்ததே இல்லையே..’ என்று தோன்றிய மறுகணமே ‘ஆபீசுல வெச்சுக் கேட்கவேண்டியதை இங்கயே கேட்கவேண்டியதுதான்.’ என்று தீர்மானித்தாள்.
மீனாட்சி மெதுவாக தன் மாஸ்க்கை கழற்றினாள். அவளைப் பார்த்ததில் அன்புக்கரசி திகைத்தபடி நிற்க, மீனாட்சி சிரித்துக் கொண்டே, “உங்க ஆபிசுலேயும் ஜனங்க போட்ட குப்பை நிறைய குவிஞ்சு கிடக்குன்னு சொன்னீங்களே.. அதை எப்போ சுத்தம் செய்யப் போறீங்க மேடம்?” என்று கேட்டாள்.
“என்னாக்கா.. இவங்களை உனக்குத் தெரியுமா?” என்றாள் அருகிலிருந்த லீலா ஆச்சரியத்துடன்.
“நல்லாத் தெரியும்.. வருசத்துல முன்னூத்தி அருவத்தஞ்சு நாளும் குப்பை போடறவங்க..” என்றாள் சத்தமாக.
வார மலருக்கு போக வேண்டிய கதை! 👍
LikeLike