மதுராந்தகன்
நாம் இன்னும் பொன்னியின் செல்வன் கதையின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறோம். அதில், சுந்தர சோழனுக்குப் பின்னர், ‘யார் மன்னன்’ என்ற பெரும் கேள்வி மையமாக இருந்தது. மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மன்னனான் என்ற விடை கிடைத்தது.
அந்த உத்தம சோழனோடு நமக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்கலாம்? ’நீங்க.. நல்லவரா? கெட்டவரா?’!
தமிழ்ச்சரித்திரத்தில் நாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் மர்மம் – ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு. அதில் மதுராந்தகனுக்குப் பங்கு இருந்ததா? அது மர்மத்தின் மர்மம்.
இதைப்பற்றி அலசி ஆராய – நாம் இன்று ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். இதில் ‘மதுராந்தகன் கெட்டவனே’ என்ற அணியில் சரித்திர ஆய்வாளர் திருவாளர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி பங்கு பெற உள்ளார்.
எதிர் அணியில், உத்தம சோழன் தன் பெயருக்குத் தகுந்தாற்போல ‘உத்தமனே’ என்று வாதிட வருகிறார் – சரித்திர ஆய்வாளர் திருவாளர் ‘சதாசிவ பண்டாரத்தார்’.
‘இந்த பட்டி மன்றத்தின் நடுவர் யாரோ?’ என்று நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள். உங்கள் ஊகம் சரிதான்.
‘ஹி.. ஹி.. அந்த யாரோ நாம் தான்!’
பட்டிமன்றம் துவங்கட்டும்.
நடுவர்:
சரித்திர ஆய்வாளர் ‘நீலகண்ட சாஸ்திரியார்’ மதுராந்தகனை வில்லனாகக் காட்டுகிறார். அவரை முதலில் பேச அழைக்கிறோம்:
நீலகண்ட சாஸ்திரியார்:
‘உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர்ப் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட வேறு எந்தப் பதவியையும் ஏற்க அவன் விரும்பவில்லை. அரசக்குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தினால், அரியணை உரிமை தனக்கே என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும், அவன் மக்களும், அரியணையைத் தன்னிடமிருந்துப் பறித்துக்கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி, ஆதித்த கரிகாலனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறு வழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான்.
அருண்மொழியின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றி கொண்டது. உள்நாட்டுக் குழப்பம் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, அருண்மொழி, உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்து, அவன் காலத்துக்குப் பிறகு, தான் பட்டத்துக்கு வருவதற்குப் பொறுமையுடன் இசைந்தான். உத்தமனுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை, உத்தமனுடைய மக்கள் ஏற்காமல், அருண்மொழியே ஏற்கவேண்டும் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர் போல் தோன்றுகிறது.
இந்த வரலாறு உண்மையாயிருப்பின், பக்திக்கும் நேர்மைக்கும் புகழ் பெற்ற பெற்றோர்களுக்குத் தன்னலமும் மூர்க்கத்தனமும் உடைய மகன் பிறந்தான் என்ற முடிவு எற்படுகிறது. அவசர புத்தி, சுயநலம் ஆகியவற்றின் உருவமாக அவன் திகழ்ந்தான். முடிவாக, ஆதித்தன் மரணத்துக்குக் காரணமான இருவருக்கு இராசராசன் ஆட்சிக் காலத்தில்தான் தண்டனை கிடைத்தது என்பது என்பது மதுராந்தகனின் நிலையை உறுதி செய்கிறது.’
நடுவர்:
நீலகண்ட சாஸ்திரியார், உத்தமன் உண்மையில் ‘உத்தம வில்லனே’ என்று சாதிக்கிறார். இப்பொழுது, சதாசிவ பண்டாரத்தார், உத்தமன் – தன் பெயருக்கேற்ற உத்தமன் தான் என்று வாதிட வருகிறார்.
சதாசிவ பண்டாரத்தார்:
‘உத்தம சோழன், தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து ஆதித்தனை கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலரது கூற்று. சற்றே ஆராய்ச்சி செய்தால் அது எத்துணை தவறான கருத்து என்பது விளங்கும். உத்தம சோழனுக்கு அந்தக் கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலன் தம்பியும், குடிகளால் அன்பு பாராட்டு பெற்றவனும், பெரிய வீரனுமான அருண்மொழி அரியணயைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானல்லவா? உத்தமன் அரசாள அவன் ஒப்புக்கொண்டிருக்க மாட்டான்.
உத்தமன் நாட்டை ஆட்சி புரிவதில் ’விருப்பமுள்ள’ வரையில் தான் அதனை மனத்தாலும் விரும்பேன் என்று குடிமக்களிடம் அருண்மொழி கூறியுள்ளான். அப்படி உத்தமன் ஆதித்தன் கொலையில் ஈடுபட்டிருந்தானாகில், மக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் உள்நாட்டு குழப்பங்கள் விளைந்திருக்கும். உத்தமன் ஆட்சி அமைதியாக நடந்தது. இராசராசன் பின்னாளில் கல்வெட்டில், செம்பியன் மாதேவியைக் குறிக்குமிடத்தில் ‘ஸ்ரீ உத்தமசோழரை திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன் மாதேவிப் பிராட்டியார்’ என்று குறித்தது காண்க.
இனி முக்கிய கருத்து. ‘ஆதித்தன் மரணத்துக்குக் காரணமான இருவருக்கு இராசராசன் ஆட்சிக் காலத்தில்தான் தண்டனை கிடைத்தது’ என்பது. இதை வைத்து உத்தமன் மீது கொலைப்பழி சுமத்துவது தவறு. மறைவில் நடந்த கொலையில் தொடர்புள்ளவர் யாவர் என்பதை ஆராய வருடங்கள் ஆகியிருக்கலாம். அதற்குள் உத்தமன் காலம் முடிந்திருக்கலாம்.
மேலும், இராசராச சோழன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்று பெயரிட்டான். பின்னாளின் அந்த மகன் இராஜேந்திர சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டிருந்தான். இராசராசன் தனது சிறிய தந்தை மதுராந்தகன் பால் பேரன்பு பூண்டொழுகியவனாதலின், தன் மகனுக்கு அவன் பேரே வைத்தனன் என்பது ஈண்டு உணரர்பாலது.”
நடுவர்:
“இருவரின் வாதங்களைக் கேட்ட பின் நாம் ஒரே முடிவுக்குத்தான் வர இயலும். கல்கியே மதுராந்தகன் மீது பழி சொல்ல விரும்பாமல், அவன் மதுராந்தகனே அல்ல என்று ஆள்மாறாட்டம் செய்து எழுதினார். சரியான ஆதாரம் எதுவுமில்லாததால், அந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கிறோம்”
இந்த பட்டி மன்றம் இனிதே முடிந்தது.
இனி சமாசாரங்களுக்கு வருவோம்.
செம்பியன் மாதேவி அவரது மகன் மதுராந்தகன், கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் வளர்த்திருந்தார். அருண்மொழி மதுராந்தகனை மன்னனாக்கியதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அருண்மொழிவர்மனுக்கும் மதுராந்தகனுக்கும் ஒரு உடன் படிக்கை ஏற்பட்டது. அதன்படி அருண்மொழி, உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்து, அவன் காலத்துக்குப் பிறகு, தான் பட்டத்துக்கு வருவதற்குப் பொறுமையுடன் இசைந்தான்.
அந்நேரம் மதுராந்தகனுக்கு வயது 24. ஒரு வேளை மதுராந்தகன் அருண்மொழியின் வாழ்நாள் தாண்டியும் உயிர்வாழ்ந்திருந்தால், அருண்மொழிக்கு அரசாள வாய்ப்பே இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால், அதைப் பற்றிக் கவலை இல்லாது அருண்மொழி இந்த உடன்படிக்கை செய்திருந்தான். தியாக சிகரம் என்று கல்கி கூறியது எத்துணை பொருத்தம்!
பரகேசரி உத்தம சோழன் (கிபி 969 – 986) அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். பொற்காசு ஒன்று – நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது..
உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். கணக்கில் அடங்காதோ என்னவோ! ஐந்து பேர் மட்டுமே குறிப்பிடத்தக்கவர். அருள் – பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்டரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும் சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது. மாமியாரைக் கைக்குள் வைப்பதில் அவர்களுக்குத்தான் எத்தனை கவனம்!
உத்தம சோழனுக்கு ஒரு மகன். அவன் பெயர் – மதுராந்தகன் கண்டராதித்தர். அவன் இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான். அவன் அந்நாளின் ‘அறநிலைய அமைச்சர்’ போலும்!.
(கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவி புடைப்பு சிற்பம். புகைப்பட உதவி: thehindu.com)
ராஜமாதா செம்பியன் மாதேவி, பல சோழ மன்னர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். உத்தமசோழரின் மறைவுக்குப் பின்னர் பேரன் ராசராசசோழனை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து 1001 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை மன்னர் முதலாம் ராஜேந்திர சோழர் அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது.
போர்கள் நிறைந்த சோழர் சரிதத்தில், உத்தம சோழன் காலம் ஒரு அமைதிக் காலம்! அமைதியை சரித்திரம் பொதுவாகக் கொண்டாடுவதில்லை.
இனி வரும் நிகழ்வுகள் பொன்னேட்டில் குறிக்கப்பட வேண்டியவை.
அவை விரைவில்.