
தண்ணீர்! தண்ணீர்!
இது ஒரு சுய புலம்பலே. நிச்சயமாக சென்னையின் வெள்ளத்தை பற்றியதோ அல்லது திரு. கோமலின் காவியப்படைப்பு பற்றியதோ இல்லை.
காலையில் எழுந்து வந்து நொந்து போய் உட்கார்ந்ததை பையன் பார்த்து விட்டான்.
“ என்னப்பா ஒரே டல்லா இருக்கீங்க” என்றான்.
‘ஏம்பா கேக்குற, இந்த குளிர் நாள்ல நைட் இரண்டு மூன்று தடவை பாத் ரூம் போய், தூக்கம் கlலைஞ்சு ஒரே கஷ்டம்பா. என் கிட்னிக்கு ஏதோ ஆயிடுச்சு” என்றேன்.
‘இன்னிக்கு சாயந்தரம் டாக்டரை பார்த்துடலாம்பா’ என்றான்.
5 மணிக்கு appointment. மறக்காமல் வாஷ்ரூம் போய் விட்டு 4 மணிக்கே கிளம்பி சென்று ஒரு வழியாக 7 மணிக்கு டாக்டரை பார்த்தோம். நான் சொன்னதை பொறுமையாக கேட்டார். வயசு என்ன என்றார். எழுபது என்றேன்.
பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. எதுக்கும் இந்த test எல்லாம் எடுத்துக்கிட்டு நாளை வந்து பாருங்கள் என்றார். வரிசையாக அவர் எழுதிய test எல்லாம் எடுத்து முடிக்க ஒரு நாள் வேண்டும்.
X-ray , scan ரிப்போர்ட் எல்லாம் ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் டாக்டரைப் பார்க்கச் சென்றோம்.
ரிப்போர்ட்களை வாங்கி மேஜையில் வைத்துக் கொண்டே ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள் எனக் கேட்டார்.
ரொம்ப பெருமையா ‘சின்ன வயசில இருந்தே காலையில இருந்து இரவு வரை நிறைய குடிப்பேன், அதுதானே நல்லது டாக்டர் என்றேன்.
டாக்டரின் முகம் பிரகாசமாகியது. பிரச்சனையே அதுதான் என்றார் அவர்.
உடனே லெட்டர் பேடை எடுத்து ஒரு நாள் முழுதும் எடுக்க வேண்டிய அளவு 1.5 லிட்டர் எனவும், ஒவ்வொரு முறையும் 200 ml க்கு மேல் கூடாது எனவும், இரவு 7 மணிக்கு பின்னர் நீர் கண்டிப்பாக அருந்தக்கூடாது என prescription எழுதி fees ஐ வாங்கிக் கொண்டார்.
மறக்காமல் 1.5 லிட்டர் மற்றும் 200 ml அளவு குடுவைகள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தண்ணீரை மருந்து போல அளந்து அளந்து குடித்தேன். கூகுள் வேறு பயமுறுத்தியது. தண்ணீர் உடலுக்கு தேவையென்றால் உடம்பு சிக்னல் கொடுக்குமாம், அப்பொழுது சிறிதளவு நீர் அருந்தலாமாம். சாப்பிட்டு சரியாக 30 நிமிடங்கள் சென்றுதான் நீர் அருந்த வேண்டுமாம். கிட்னிக்கு அதிக வேலை கொடுத்தால் விரைவில் ரிப்பேராகி விடுமாம். இன்னும் ஏதேதோ. அதில் கூறப்பட்ட அறிகுறிகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக இருப்பது போல ஒரு பிரமை. கூடவே பயம்.
என்ன ஆச்சு. நம்ம விஷயத்திற்கு வருவோம். ஒண்ணும் ஆகல. விதியை மதியாலோ டாக்டராலோ வெல்ல முடியாது. முன்னர் இரண்டு, மூன்று தடவை என இருந்தது இப்பவும் அதே கதைதான். சரி பரவாயில்லை என விட்டு விடலாம் என்றிருந்தேன், ஒரு WhatsApp தகவல் வரும் வரை. அது என்னவா?
Nocturia (night time urination) க்கும் bladder க்கும் சம்பந்தமே இல்லையாம்!

என்னோட இதயத்திற்கும் என்னைப் போலவே வயசாயிடுச்சாம். எனவே மெதுவாக வேலை செய்யுமாம். பகலில் நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ இருப்பதால் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதிகளில் இருந்து இரத்தம் சுத்தகரிப்பிற்காக இதயத்திற்கு செல்வது குறைகிறதாம். எனவே கால் பகுதிகளில் உள்ள திசுக்களில் நீர் சேர்ந்திருக்குமாம். இரவில் காலை நீட்டி படுத்தவுடன் கால் பகுதிகளில் உள்ள நீர் இரத்தத்தோடு கலந்து இதயத்திற்கு சென்று சுத்தகரிக்கப் பட்டு bladder க்கு செல்கிறதாம். எனவே மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை எழ வேண்டி இருக்குமாம். தவறில்லை என கூறி நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.
உடம்பில் உள்ள நீரெல்லாம் bladder க்கு சென்றவுடன் இரத்தத்தில் நீர் இல்லாது பசை போல் ஆகி வேறு எங்கோ(heart attack) கொண்டு விட்டு விடுமாம். அதைத்தவிர்க்க படுக்கும் பொழுதும் இடையே விழிக்கும் பொழுதும் நீர் அருந்தினால் இதயத்திற்கு நல்லதாம்.
இரவில் நாம் உறங்கும் பொழுது கூட விழித்திருந்து பணி புரியும் நம் இதயத்திற்கு நாம் செய்ய வேண்டிய கைமாறு:
1.தினசரி 30-45 நிமிடங்கள் நடை. இடையே போன் பேசும் பொழுதும் நடந்து கொண்டே பேசலாம்
2.10- 11 மணிக்குள் உறங்க சென்று 7 மணி நேர தூக்கம்
3.குப்பை உணவை (junk food) இயன்ற வரை தவிர்த்தல்.
4.காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் இரவு படுக்கும் முன்னரும் வெது வெதுப்பான நீர் அருந்துதல். இவற்றை கடைப்பிடித்தால் 70 வயதிலும் புதிதாக பொருத்தப்பட்டது போல இதயம் வேலை செய்யுமாம்.
ஊரிலிருந்து வந்திருந்த என் அண்ணனிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூலாக “ராத்திரியில வந்தா போயிட்டு வந்து படுத்து தூங்க வேண்டியதுதானே. இதைப் போய் பெரிசா ஆராய்ச்சி பண்ணி வாடஸ்அப்பில பதிவெல்லாம் போடுற. பேசாம தூங்கப்பா” என்றார்.
இதுவும் சரிதானே.
( மேலே டாக்டரை பற்றி கூறியது கூடுதல் சுவைக்காக மட்டுமே. மற்றபடி நம் உயிர் காக்கும் சேவை செய்யும் டாக்டர்களை கிண்டல் செய்யும் நோக்கமல்ல)