‘அம்மா எனக்கு கோட்டையில் வேலை கிடைச்சிருக்கு’ கமலி ரொம்ப சந்தோஷமாகக் கூவிக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள். இதைக் கேட்ட அவள் அம்மா ஜானுவுக்கு கவலை உண்டாயிற்று. கமலிக்கு மிகவும் பிடித்த குட்டி ஜாங்கிரி பண்ணிக் கொண்டிருந்த ஜானு ‘கமலி செங்கல்பட்டிலிருந்து கோட்டை வரை நீண்ட பயணம் செல்ல வேண்டுமே!’ என்று யோசித்தாள். ‘என்னம்மா சந்தோஷ ரேகையையேக் காணோம்!’ என்று கமலி ஒரு ஜாங்கிரியை சுவைத்துக் கொண்டே ஜானுவுடைய முகவாயைப் பிடித்துத் தூக்கினாள். ‘இல்லைடி அத்துணை தூரம் போக வேண்டுமே என்று யோசிக்கிறேன்’ என்றாள். ‘அம்மா நான் அங்கே வேலை செய்கிற என் ஃப்ரெண்ட்கிட்டே கேட்டேன். டிரையின் வசதியைப் பற்றி அவள் ரொம்ப சொன்னாள். வேகமாகச் செல்லும் டிரையின்லே போகலாமாம், பஸ்ஸைவிட ரொம்ப வசதியாம், தூரமெல்லாம் ஒரு விஷயமே இல்லை, ஒரு மணி நேரத்தில் போய் விடலாம், பஜனை, பாட்டு என்று ஜாலியா போகலாம் என்றாள்’ என்று மூச்சு விடாமல் பேசினாள். சிறிது ஆசுவாசப்பட்டு ஜானு மிச்சமுள்ள ஜாங்கிரியைப் பண்ணுவதில் முனைந்தாள்.
ஆயிற்று. இன்றுடன் ஒரு மாதம் ஓடியேப் போய் விட்டது. கமலி ரொம்ப உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு டிஃபன், சாப்பாடு எல்லாம் எடுத்துக் கொண்டு செல்வாள். டிரையினில் தலையை ஆற்றிக் கொள்வது , எல்லோரோடும் டிஃபன் பங்கீட்டுக் கொண்டு சாப்பிடுவது, பஜனை செய்வது, எப்படி ஆபீஸில் ஃபைல் பார்ப்பது என்று தெரிந்து கொள்வது, சமையல் எப்படி வித விதமாகச் செய்வது என்று அளவளாவுவது என்று இப்படி பயணம் கழிந்து விடும். இதனால் நெடுந்தூரம் என்பது ரொம்பவும் ஜாலியாகவே இருந்தது. மாலையிலோ வேறு விதமான அனுபவம். கீரையை கட்டாக மிகக் குறைந்த விலையில் வாங்கி அதை ஆய்வது, மல்லிப்பூ வாங்கி சரமாகத் தொடுப்பது, பாட்டுப் பாடுவது என்று பொழுது போய் விடும். நல்ல காய்கறிகள், பழங்கள் என்று நிறைய வரும். அவைகளை வீட்டிற்கு வாங்கிச் செல்வார்கள். சில சமயம் ஜாதக பரிவர்த்தனைகளும் நடைபெற்று திருமணமும் நடந்துள்ளன. கமலியும் இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு விட்டாள்.
ஒரு நாள் ஏப்ரல் மாதத்தில் நல்ல பெரிய மாம்பழங்களை ஒரு வயதான மூதாட்டி கொண்டு வந்தாள். வாசனை மூக்கைத் துளைத்தது. தன் தம்பி முந்திய இரவுதான் மாம்பழங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. என்ன விலை என்று விசாரித்தாள். ‘அம்மா நல்ல தோட்டத்து மாம்பழம், நேற்றுதான் பறித்தது. வாசனைப் பார்’ என்றாள் மூதாட்டி. ‘ஆமாம் நல்ல பெரிய பழம்தான் என்ன விலைம்மா’ என்று கமலி மீண்டும் விசாரித்தாள். ‘ஒரு பழம் கிட்டத்தட்ட ஒரு கிலோ தேறும், நல்ல ருசியான பழம், ஒன்று எண்பது ரூபாய்’ என்று மெதுவே கூறினாள். பழத்தையும், அந்த மூதாட்டியையும் பார்த்து ஒன்றும் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டு நூற்று அறுபது ரூபாய் கொடுத்தாள். ‘உங் கை நல்ல போனி ஆகட்டும்’ என்று மூதாட்டி முகமலர்ச்சியுடன் போனாள். இவளும் சந்தோஷமாக தன் தம்பியை நினைத்துக்கொண்டே அந்தப் பழங்களைப் பையில் வைத்துக் கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து இவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இருந்தது. இவள் இறங்கத் தயாராகும்போது அந்த மூதாட்டி அவசர அவசரமாக இவள் இருப்பிடம் வந்து ஒரு பழத்தை நீட்டி ‘நல்ல வேளை நீங்க இன்னும் இறங்கவில்லை இதை வாங்கிக்கோம்மா’ என்றாள். கமலி உடனே ‘இல்லம்மா, எனக்கு இரண்டு பழம் போதும். நல்ல பெரிதாக இருக்கின்றன’ என்றாள். ‘இல்லை இதுக்கு நீ காசு கொடுக்க வேண்டாம்’ என்றாள். ‘எனக்கு இனாம் தந்தால் உங்களுக்குத்தான் நஷ்டம். நீங்கள் ஏன் நஷ்டப்பட வேண்டும்?’ என்று பரிவோட வினாவினாள். அதற்கு மூதாட்டி ‘இல்லம்மா, இதற்கு நீ காசு கொடுக்க வேண்டாம் ஏற்கனவே கொடுத்து விட்டாய். இது இனாமும் இல்லை’ என்று இழுத்தாள். புரியாமல் பார்த்த கமலியிடம் மேலும் ‘அம்மா, நான் விலை சொன்னவுடன் நீ பேரம் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டாய். ஆனால் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் எல்லோரும் விலையைக் குறைக்கச் சொல்லி ஐம்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டார்கள். நானும் எல்லோரும் வாங்கினால் எனக்கும் வியாபாரம் ஆகும் என்று வேறு வழி இல்லாமல் கொடுத்து விட்டேன். ஆனால் நீ எண்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டாய். எனக்கு மனசு கேட்கவில்லை. அதனால்தான் உனக்கு இன்னொரு பழம் கொடுக்க வந்தேன்’ என்று கூறி புடவைத் தலைப்பால் வேர்வை வடியும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கமலியின் முகத்தில் ஆச்சரியம், அதிசயம், சந்தோஷம் எல்லா ரேகைகளும் ஓடின. இப்படியும் மனிதர்களா! இல்லை மனிதருள் மாணிக்கங்களா! இதனால்தான் மாரியும் பொழிகிறானோ!