சுமதி மொபிலைப் பார்த்தாள். கடந்த பத்து நிமிடங்களில் நூறு மெசேஜ். செங்கமலம் தான். “உடனே வா..” – இது தான் மெசேஜ். அந்த நூறு மெசேஜ்ஜிலும் இதே செய்தி தான். ‘கிரேஸிப் பெண் இவள்! என்ன ஆச்சு இவளுக்கு?’
செங்கமலத்தின வீடு சுமதி வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. திருச்சிக்கு அருகில் – நகரமுமல்லாமல், கிராமமுமல்லாமல் ..அது ஒரு சிறிய பண்ணை வீடு.. தொழுவம் .. மாடு.. காலையில் சேவல் கூவும். சுமதி செங்கமலத்தின் வீடு போய்ச்சேரும் போது இருட்டத் தொடங்கியிருந்தது.
செங்கமலம் நாலு மாதத்தில் ரொம்பவே இளைத்து போயிருந்தாள். கண்ணின் அடியில் கருவளையம். கொழு கொழு கன்னங்கள் போய் அதில் குழி விழுந்திருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட குருவி போல இருந்தாள்.
“என்னடி! என்ன ஆச்சு உனக்கு?” – சுமதி கேட்டாள்.
“மனசே சரியில்லையடி.. ராத்திரி ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடவேயில்லை. கண்ணன் போனப்புறமே இப்படி தான்” -என்றாள் செங்கமலம்.
“என்னடி ‘கண்ணன் என் காதலன்’ – அந்தக் கதை தானே. கண்ணன் எங்கடி போனான்? மும்பை தானே போயிருக்கிறான். சீக்கிரம் வருவான்”
“அவன் என்று சொல்லாதேடி” -கொஞ்சினாள்!
“நீயே அவனை அவன் என்று தானே சொல்வாய்”. செங்கமலம் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“அது போகட்டுமடி.. அவனிடமிருந்து வாட்சப் மெசேஜ் நாலு மாதமாக இல்லை. அவன் போனும் எடுக்கவில்லை. என்ன ஆச்சோ. பாரதியார் கண்ணன் பாட்டு எழுதியது போல நானும் அவனை நெனச்சு நெனச்சு வாடுகிறேன். தூக்கம் போச்சு.. பசி போச்சு. இந்த போன் இருந்துதான் பிரயோஜனம் என்ன?” – செங்கமலம் போனை சதுர்த்தேங்காய் போடுவது போல போட்டு உடைத்தாள். கண்கள் சிவந்தது. உடம்பு நடுங்கியது.
“உனக்கு என்ன பைத்தியமா?” -சுமதி.
அஞ்சு நிமிஷத்தில் செங்கமலத்தின் உடம்பு நடுக்கம் நின்றது..
“சாரிடி! அவன் இல்லாமல் நான் என்ன செய்வேன். தினமும் வாசல்லே உட்கார்ந்து மாட்டையும், சேவலையும், அணிலையும் பார்த்துக்கிட்டு இருக்கிறேன். வெளியே அந்த மரத்தடியில் ஒரு அணில் நாள் பூரா உலாத்திக்கிட்டிருக்கு. அதுக்கென்ன சோகமோ. அது போலவே எனக்கும் மனசு துடிக்கிறது”
“செங்கமலம்.. இதப்பாரு.. நீயும் காலேஜ் முடிச்சு நாலு மாசமாச்சு. ஏதாவது வேலைக்கு சேர்ந்து போற வழியைப்பாரு. நீ இப்ப தனியா வீட்டிலே இருக்கிறே .. அது தான் அணில் ஆடு இலை என்று பேசத்தோணுகிறது. உன்னுடைய அண்ணன் சென்னையில தானே இருக்கான்? அவன் கிட்ட போ. அதை விட்டு விட்டு கண்ணன்-கத்திரிக்காய் என்று என்ன இது கலாட்டா? அவன் என்ன செத்தா போயிட்டான். ?”
கொஞ்சம் வாய் தவறி உளறிவிட்டாள்.
சொல்லி முடிக்கவில்லை. செங்கமலம் பொங்கிவிட்டாள்.
“என்ன திமிருடி உனக்கு? கண்ணனைப் பத்தி என்ன சொன்னே..”. கையில் கிடத்த ஐபேடை எடுத்து சுமதியின் முகத்தில் விட்டெறிந்தாள். சுமதியின் நெற்றியின் சொட்டு ரத்தம் பரவியது.
“உனக்குப் பைத்தியம் தான்.. நான் கிளம்பறேன்” – சுமதி புறப்பட்டாள். வீடு போய் சேர்ந்து நெற்றியில் ‘பேண்ட் எயிட்’ போட்டாள். கண்ணனுடைய வாட்ஸ் அப் நம்பர் அவளிடமும் இருந்தது.
“கண்ணன்.. செங்கமலத்தை மறந்து விட்டாயா?” -என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
உடனே கண்ணனிடமிருந்து போன் வந்தது. “சுமதி! நானும் செங்கமலமும் போன இரண்டு வருஷமாக சந்தோஷமாத்தான் இருந்தோம். ஆனா ஆறு மாசம் முன்னே அவளுக்கு எங்கள் காதல் ஒரு வெறியாயிடுச்சு. நான் வேலைக்காக மும்பை போறேன்னு சொன்ன உடனே ‘ ஏண்டா போறே’ ன்னு கத்தி என் சட்டையைக் கிழித்தாள். நான் அதிர்ந்து போனேன். அதுக்கப்பறம் பல நேரம் வயலண்ட். சில நேரம் காதலைக் கொட்டுவாள். பல நேரம் நெருப்பைக் கொட்டுவாள். நான் முன்பு பார்த்த ஜென்டில் செங்கமலம் போய்விட்டாள். அதற்காக அவளை நான் மறந்து விட்டேன் என்று நினைக்க வேண்டாம். அப்புறம் நான் வேலைக்காக மும்பையிலிருந்து அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு – ஆறு மாதத்துக்குப் போகிறேன்.. செங்கமலத்திடம் இப்போதைக்கு எதுவும் சொல்லாதே” என்றான்.
சுமதி “கண்ணன்! அவளுக்கு ஏதோ டிப்பிரஷன் போலிருக்கு. நல்ல சைக்கியாடரிஸ்ட் இடம் காட்ட வேண்டும்”.
சுமதி – செங்கமலத்தின் அண்ணனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். ஒரு வாரத்தில் செங்கமலம் சைக்கியாடரிஸ்ட் டாக்டரைப் பார்த்தாள். ஸ்கிசோஃப்ரினியா – என்ற மன வியாதி உறுதிப்படுத்தப்பட்டது. மனப்பிரமைகள் – மருட்சி மற்றும் ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான சிந்தனை மற்றும் பேச்சு – செங்கமலம் அந்த மன நோயில் பாதிக்கப்பட்டிருந்தாள்.
சுமதி, கண்ணனுக்கு செங்கமலத்தின் நிலைமையை மெசேஜ் செய்தாள். கண்ணனிடமிருந்து பதில் வரவேயில்லை.
‘அவன் தான் என்ன செய்வான்? இந்தப் பைத்தியத்தை கட்டிக்கொண்டு மாரடிப்பானா என்ன?’ – சுமதி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அன்று செங்கமலத்தின் பிறந்த நாள். அவள் பெயருக்கு ஒரு சாக்கலேட் பார்சல் வந்தது. அது செங்கமலத்துக்கு ரொம்பப் பிடித்த சாக்கலேட்! செங்கமலத்துக்கு கண்ணனையே நேரில் பார்த்தது போல் சந்தோஷம். அத்தனை சாக்கலேட்டையும் இரண்டே நிமிஷத்தில் சாப்பிட்டாள். ஒவ்வொரு வாரமும் சாக்கலேட் பார்சல் – தவறாமல் வந்தது. செங்கமலத்திற்கு கண்ணனைக் காணாமல் மன நோயும் அதிகமானது – உடல்நிலையும் மோசமானது. திருச்சி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள். சுமதி தினமும் செங்கமலத்தை சென்று பார்த்தாள்.
“அவன் வராமல் சாக்கலேட் மட்டும் எனக்கு அனுப்புகிறான். வரவர சாக்கலேட்டே பிடிக்கவில்லை. அவனது நினைப்பே என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது”- என்றாள் செங்கமலம்.
சுமதி கண்ணனுக்கு தெரிவிக்கவேண்டும் என்று மெசேஜ் அனுப்பினாள். பதில் ஒன்றும் இல்லை. ‘அமெரிக்கா போய்விட்டானோ? அப்படியே போனாலும் மெசேஜ் அனுப்ப என்ன தடை? கண்ணனுடைய நண்பன் அர்ஜூன் திருச்சியில் இருந்தான். அவனுக்கு மெசேஜ் அனுப்பி கண்ணனைப் பற்றி விசாரித்தாள்.
அர்ஜுனிடமிருந்து இருந்து போன் வந்தது.
“சுமதி! நாலு மாசம் முன்னாடி கண்ணன் மும்பை வந்தவுடனே -ஒரு வகையான நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டான். நடை சற்று பாதிக்கப்பட்டது. போன மாதம் மும்பையில் ஒரு சாலையில் க்ராசிங் செய்யும் போது விபத்தில் அடிபட்டான். நான் அப்ப மும்பையில் தான் இருந்தேன். ஹாஸ்பிடலில் ஒரு நாள் இருந்தான். செங்கமலத்துக்கு சொல்லவேண்டாம் என்று சொன்னான். மேலும் என்னிடம் ‘அவள் குணமாகும் வரை வாரா வாரம் நீ சாக்கலேட் அனுப்பு. குணமான பின் மெதுவாக அவளுக்கு எனது முடிவைச் சொல்லிவிடு’ – என்றான்.
‘என்ன உன் முடிவு என்றேன்’? அவன் சிரித்தான். ‘நான் எடுக்கும் முடிவு அல்ல. ஆண்டவன் என்னை முடிக்க எடுத்த முடிவைச் சொல்கிறேன்’ என்றான். நான் அழுது விட்டேன். அன்று இரவு அவன் முடிவு வந்தது. சாகும் வரை அவன் நெஞ்சில் செங்கமலம் தான்.. சாகும் போதும் ‘செங்கமலம் உன்னைக் காணாமல் போகிறேனே’ என்று கலங்கினான்“ – என்றான்.
“கண்ணன் பெயரில், நான் தான் செங்கமலத்திற்கு சாக்கலேட் வாரா வாரம் அனுப்பி வருகிறேன்”- என்றான். சுமதி இடிந்து போனாள். காத்திருக்கும் செங்கமலத்துக்கு என்னவென்று சொல்வது?
செங்கமலமும் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறாள் – கண்ணனைச் சேரும் நாளை.
“நீ வருவாயா”