வான்கா – ஆன்டன் செக்காவ் – தமிழில் :தி.இரா.மீனா               

Vanka by Anton Chekhov

ஒன்பது வயதான வான்கா வேலை செய்வது ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில். அந்த வேலைக்கு வந்து மூன்று மாதங்களாகி விட்டன. அன்று கிறிஸ்துமஸ். முதலாளி, அவர் மனைவி, கடையின் மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போகும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவர்கள் புறப்பட்டுப் போன பிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மை பாட்டிலையும், துருப்பிடித்த முனையுடைய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான். தனது முதல் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள், பரவியிருந்த ஷெல்புகள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு எல்லாவற்றையும் சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான். பெஞ்சில் அந்தத் தாளிருந்தது. மண்டியிட்டு உட்கார்ந்தான்.

“அன்புள்ள தாத்தா, கான்ஸ்டனின் மகாரிட்ஸ்,நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்.உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக !எனக்குத் தாய்தந்தை என்று யாருமில்லை.சொல்லிக் கொள்ள என்று உறவு நீங்கள் மட்டும்தான்.”

மெழுவர்த்தியின் வெளிச்சத்தை ஏறிட்டுப் பார்த்தான்.தாத்தா கான்ஸ்டனின் மகாரிட்சை நினைத்தான். அவர் ழிவராவ் குடும்பத்தில் இரவு காவலராக வேலை பார்க்கிறார். அறுபத்தி ஐந்து வயதாகும் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். ஆனால் சுறுசுறுப்பானவர். சிரிக்கும் முகமும், மயக்கும் கண்களும் கொண்டவர். பகல்நேரத்தில் வேலையாட்களின் குடியிருப்புகளுக்கான சமையலறையில் தூங்குவார். அல்லது சமையல்காரர்களோடு சேர்ந்து ஏதாவது  நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பார். இரவில் ஆட்டுத் தோலாலான கம்பளியை உடலில் சுற்றிக்கொண்டு, தன் சிறிய கம்பைத் தரையில் தட்டியபடி காம்பவுண்டைச் சுற்றிச் சுற்றி வருவார். வயதான கஸ்தங்காவும், ஈலும் தலையைத் தொங்கப் போட்டபடி அவரைப் பின்தொடரும். குறிப்பாக ஈல் மிகவும் அன்பானது, மென்மையானது. தன் எஜமானர்கள், வெளியாட்கள் என்று எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கும். யாருக்கும் அது பற்றி நல்ல  அபிப்ராயமில்லை. ஸ்டோர்ரூமுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துவிடுவது, கோழி குஞ்சைப் பிடிப்பது என்று பல நமுட்டு வேலைகள் செய்து அகப்பட்டுக் கொள்ளும்; அநேகமாக எல்லா வாரங்களிலும் பிடிபட்டு, சாவதுபோல அடிவாங்கிப் பின்பு பிழைத்துவிடும்.

சந்தேகமில்லாமல் இந்தச் சமயத்தில் தாத்தா கேட்டுக்கு அருகே  நின்று கொண்டு சர்ச்சின் சிவப்பு ஜன்னல்களைப் பார்த்தபடி, வேலையாட்களுடன் பேசியபடியிருப்பார். அவருடைய சிறிய கம்பு பெல்டிலிருந்து தொங்கிக் கொண்டு இருக்கும். குளிரினால் கைகளைக் கோர்த்துக் கொண்டு வயதானவருக்கே உரிய கேலிப் பேச்சோடு முதலில் வீட்டு  வேலைக்காரரையும்,  பிறகு சமையல்காரரையும் பரிகாசம் செய்வார்.

“இந்தாருங்கள், பொடி எடுத்துக் கொள்ளுங்கள்”என்று அந்தப் பணிப் பெண்ணிடம் பொடி டப்பாவை நீட்டுவார்.

அந்தப்பெண் அதை எடுத்துக் கொண்டு தும்முவாள். அவளைப் பார்த்துச் சிரித்தபடி “தும்மிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்பார்.

அவர்கள் நாய்களுக்கும் பொடியைக்  கொடுத்து தும்மலை வரவைப்பார்கள். கஸ்தங்கா தும்மி, பின்பு தலையாட்டி விட்டு பயத்தோடு அப்பால் போய்விடும். ஈலுக்கு தும்மல் வராது; வாலை ஆட்டிக்கொண்டு போய்விடும்.

வானிலை அருமையாக இருக்கும். காற்று இதமானதாகவும், லேசாகவும் இருக்கும். ராத்திரியின்  கருமையிருப்பினும், சிம்னியிலிருந்து வரும் புகை காரணமாக கிராமம் வெண்ணிறக் கூரையோடு இருப்பதாகத் தெரியும். வானம் முழுவதிலும் மின்னும் நட்சத்திரங்கள் சிதறியிருக்கும்

வான்கா பேனாவில் மையைத் தொட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினான்.

“நேற்று குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்த போது என்னை மறந்து அசந்து தூங்கிவிட்டேன். தலைமுடியைப் பிடித்து இழுத்து, முற்றத்திற்கு அழைத்து வந்து முதலாளி காலணிகளைத் தேய்க்கும் கட்டையால் என்னை விளாசிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன்னால் எஜமானியம்மா மீனைக் கழுவச் சொன்னார்கள். நான் மீனை கீழ்ப் பகுதியிலிருந்து சுத்தம் செய்ததால், அதைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்தில் மோதினார்கள். அதனால் வேலையாட்கள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். எஜமானனுக்கு வைத்திருந்த வெள்ளரித் துண்டுகளை அறைக்குப் போய் எடுத்துவரும்படி என்னிடம் வேலையாட்கள் சொன்னார்கள். அவருக்கு அது தெரிந்து விட்டது. அவர் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடித்துவிட்டார். சாப்பிட எதுவுமில்லை. காலையில் ரொட்டி, மதியம் கஞ்சி, இரவில் ரொட்டி என்று  சிறிது கிடைக்கும். தாழ்வாரத்தில் படுக்கவேண்டும். இரவில் அந்தச் சின்னப்பேய் அழுதபடி என்னைத் தூங்க விடாது. எழுந்து தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். தாத்தா! என்னை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுங்கள். என்னால் பொறுக்க முடியவில்லை .நான் கிராமத்திற்கு வந்துவிடுகிறேன்.இங்கிருந்து கூட்டிக் கொண்டு போய் விடுங்கள்; இல்லாவிட்டால் நான் சாக வேண்டியதுதான்.”

வான்கா கண்களைத் துடைத்துக் கொண்டான். விம்மினான்.

“உங்களுக்கு நான் பொடி தயாரித்துத் தருவேன். நான் சரியாக நடந்து கொள்ளா விட்டால் என்னை நீங்கள்  அடித்து நொறுக்கலாம்.எனக்கு அங்கு எதுவும் வேலை இருக்காது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் காலணிகளைத் துடைக்கும் வேலைசெய்வேன். அல்லது பெட்காவுக்கு பதில் நானே ஆடு மேய்ப்பேன். தாத்தா! என்னால் பொறுக்கவே முடியவில்லை.

இங்கு வாழ்க்கை என்பதேயில்லை. இந்த இடத்தைவிட்டு கிராமத்திற்கு ஓடிவந்து விடலாமென்றால் எனக்கு காட்டைப் பார்த்தாலே பயம். காலில் போட்டுக் கொள்ள செருப்பு எதுவுமில்லை. நான் பெரியவனான பிறகு உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். யாரும் உங்களை எரிச்சல்படுத்த விடமாடேன். நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்குச் செய்வது போல…”

“மாஸ்கோ மிகப் பெரிய நகரம். பணக்காரர்களின் வீடுகள்தான் அதிகம்.. அங்கு நிறையக் குதிரைகளிருக்கும். ஆனால் ஆடுகளில்லை. அங்கிருக்கும் நாய்கள் பகைக் குணம் கொண்டவையல்ல. பாட்டுப் பாடப் போவதற்கு இங்கு யாரும்  அனுமதிக்கமாட்டார்கள். ஒருமுறை கடையில் மீன்பிடிக்கும் கொக்கிகள் தொங்க விடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். விற்பதற்காக வைத்திருந்தார்கள். அதை வைத்து எந்த வகை மீனையும் பிடித்துவிடலாம். நாற்பது பவுண்ட் மீனைப் பிடிக்கும் அளவுக்கும் கூட ஒரு கொக்கி இருந்தது. அதுபோல எல்லா விதமான துப்பாக்கிகளையும் விற்கும் கடைகளையும் பார்த்திருக்கிறேன். அங்கு முதலாளியின் விலையுயர்ந்த துப்பாக்கி போலப் பல துப்பாக்கிகள்.. கசாப்புக் கடையில் முயல்கள், மீன்கள், காட்டுக்கோழிகள் என்று எல்லாமுமிருக்கும். ஆனால் அவை எங்கிருந்து சுட்டுக் கொண்டு வரப்பட்டவை என்று கடை உரிமையாளர் சொல்லமாட்டார்.”

“தாத்தா ! பெரிய வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும்போது அதிலிருக்கும் அந்த வாதுமைக் கொட்டையை எனக்காக வைத்திருங்கள்.வீட்டு அக்காவிடம்  இது வான்காவிற்காக என்று சொல்லுங்கள்”

வான்கா பெருமூச்சு விட்டு ஜன்னலை வெறித்தான். தாத்தா தன் முதலாளியின் வீட்டிற்காக கிறிஸ்துமஸ் மரம் கொண்டு வர, காட்டிற்குப் போன போதெல்லாம் தானும் போனதை நினைத்துக் கொண்டான். அது மிகவும் சந்தோஷமான நேரம். காட்டிற்குள் போகும்போது தாத்தா தொண்டையைச் செருமி மிகப்பெரிய ஒலியெழுப்புவார். காடு அதை எதிரொலிக்கும். வான்காவும் அப்படிச்செய்வான். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டுவதற்கு முன்னால் தாத்தா புகை பிடிப்பார். புகையை வெளியே விட்டு, சிறிது பொடியும் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரிப்பார். அங்கிருக்கும் அந்தச் சிறிய ஊசியிலை மரங்கள்.. தங்களில் யார் முதலில் வெட்டப்பட்டு சாவார்கள் என்று காத்திருப்போடு அசையாமல் நிற்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து ஒரு முயல் பனியினூடே அம்பாய்ப் பறக்கும்..“ பிடி..அவனைப் பிடி..விடாதே“என்று தாத்தா கத்துவார். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டியபிறகு தாத்தா அதை இழுத்துச்சென்று பெரிய வீட்டின் முன்னால் போடுவார். பின்பு அதை அலங்கரிக்கும் வேலைகள் நடக்கும்.. வான்காவுக்கு மிகவும் பிடித்த  ஓல்கா இக்நாத் யெவ்னா அக்கா தான் எல்லோரையும் விட மிகவும் மும்முரமாக இருப்பாள். வான்காவின் அம்மா பெல்கயே அங்கு வேலை செய்தவள். அவள் உயிருடனிருந்த போது ஓல்கா அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தருவாள். நூறு வரை எண்ணுவதற்கு சொல்லித் தருவாள்.. தின்பண்டங்கள் கொடுப்பாள்.. சில சமயங்களில் நடனமும் ஆடுவாள். அம்மா இறந்தபிறகு வான்கா தாத்தாவுடன் சமையல் பணியாளர்கள் இடத்திற்கு அனுப்பப்பட்டான். பிறகு அங்கிருந்து  மாஸ்கோவிற்கு.

“தாத்தா,கண்டிப்பாக வாருங்கள்!” தயவுசெய்து என்னை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள்.இந்த அனாதையின் மீது இரக்கம் காட்டுங்கள்; எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.என்ன விதமான கொடுமை இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன்.வாழ்க்கை சீரழிந்து விட்டது. நாயை விடக் கேவலமாகிவிட்ட நிலையிலிருக்கிறேன்.. அல்யோனா, ஒற்றைக்கண் யகோர்கா ஆகியவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் இசைக் கருவியை யாருக்கும் தர வேண்டாம்..தாத்தா தயவுசெய்து வாருங்கள். உங்கள் பேரன்”

வான்கா அந்தத் தாளை இரண்டாக மடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கவரில் போட்டான்..சிறிது யோசனைக்குப் பிறகு மையைத் தொட்டு முகவரி எழுதினான்.

                கிராமத்தில் உள்ள தாத்தாவுக்கு

பின்பு சிறிதுநேரம் தலையைச் சொறிந்துகொண்டான். கான்ஸ்டனின் மகாரிட்ஸ் என்று எழுதினான். நல்லவேளை கடிதம் எழுதவிடாமல் தடுப்பதற்கு அங்கு யாருமில்லை.. சட்டையைப் போடாமல் தொப்பியைப் போட்டுக் கொண்டு சட்டை போட்டது போன்ற நினைவில் தெருவிற்கு ஓடினான்.

அந்தப் பெட்டியில் போடப்படும் தபால்கள் தபால்கார்கள் மூலம் வண்டிகளில் எல்லா இடங்களுக்கும் அனுப்பப் படும் என்று கசாப்புக் கடையில் இருப்பவன் விவரம் சொல்லியிருந்தான். வான்கா அருகிலிருக்கும் தபால் பெட்டியை நோக்கி வேகமாக ஓடி, அந்த அருமையான கடிதத்தை அதற்குள் போட்டான்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிய நினைவுகள் தாலாட்ட அவன் நித்திரையில் ஆழ்ந்தான்… அடுப்புப்  பற்றிக் கனவு வந்தது. தாத்தா அடுப்பினருகில் இருந்தார், கால்களை ஆட்டியபடி ,அந்தக் கடிதத்தை சமையல்காரர்களுக்குப் படித்துக் காட்டியபடி..

ஸ்டவ் அருகே ஈல் தன் வாலை ஆட்டியபடி நின்றிருந்தது.

                      ————————————

உலகின் சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெறும் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ் [ 1860—1904 ] மருத்துவப் பட்டம் பெற்றவர்.  நாடகம், சிறுகதை என்ற துறைகளில் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்தவர். நாடகங்களில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்களுள் ஒருவரான இவர் ’மனநிலை சார்ந்த அரங்கியல்’ என்னும் நுட்பத்தையும், ஆழமான உரையாடல்களையும் அறிமுகப் படுத்தியவர். மக்களின் தினசரி வாழ்க்கையை,வாழ்க்கைப் போக்கை மிக இயல்பாக, எளிமையான வகையில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட எழுதியவர். வான்கா என்னும் இச்சிறுகதை குழந்தைத் தொழிலாளியின் மன வலிகளை ,ரணங்களைச் சொல்லும் கதையாகும்.  அவருடைய மிகச் சிறந்த சிறுகதைகளில் சில  :The  Tutor,  The Cook s Wedding , Vanka,  A Story without an end , Small Fry

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.