வான்கா – ஆன்டன் செக்காவ் – தமிழில் :தி.இரா.மீனா               

Vanka by Anton Chekhov

ஒன்பது வயதான வான்கா வேலை செய்வது ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில். அந்த வேலைக்கு வந்து மூன்று மாதங்களாகி விட்டன. அன்று கிறிஸ்துமஸ். முதலாளி, அவர் மனைவி, கடையின் மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போகும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவர்கள் புறப்பட்டுப் போன பிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மை பாட்டிலையும், துருப்பிடித்த முனையுடைய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான். தனது முதல் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள், பரவியிருந்த ஷெல்புகள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு எல்லாவற்றையும் சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான். பெஞ்சில் அந்தத் தாளிருந்தது. மண்டியிட்டு உட்கார்ந்தான்.

“அன்புள்ள தாத்தா, கான்ஸ்டனின் மகாரிட்ஸ்,நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்.உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக !எனக்குத் தாய்தந்தை என்று யாருமில்லை.சொல்லிக் கொள்ள என்று உறவு நீங்கள் மட்டும்தான்.”

மெழுவர்த்தியின் வெளிச்சத்தை ஏறிட்டுப் பார்த்தான்.தாத்தா கான்ஸ்டனின் மகாரிட்சை நினைத்தான். அவர் ழிவராவ் குடும்பத்தில் இரவு காவலராக வேலை பார்க்கிறார். அறுபத்தி ஐந்து வயதாகும் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். ஆனால் சுறுசுறுப்பானவர். சிரிக்கும் முகமும், மயக்கும் கண்களும் கொண்டவர். பகல்நேரத்தில் வேலையாட்களின் குடியிருப்புகளுக்கான சமையலறையில் தூங்குவார். அல்லது சமையல்காரர்களோடு சேர்ந்து ஏதாவது  நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பார். இரவில் ஆட்டுத் தோலாலான கம்பளியை உடலில் சுற்றிக்கொண்டு, தன் சிறிய கம்பைத் தரையில் தட்டியபடி காம்பவுண்டைச் சுற்றிச் சுற்றி வருவார். வயதான கஸ்தங்காவும், ஈலும் தலையைத் தொங்கப் போட்டபடி அவரைப் பின்தொடரும். குறிப்பாக ஈல் மிகவும் அன்பானது, மென்மையானது. தன் எஜமானர்கள், வெளியாட்கள் என்று எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கும். யாருக்கும் அது பற்றி நல்ல  அபிப்ராயமில்லை. ஸ்டோர்ரூமுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துவிடுவது, கோழி குஞ்சைப் பிடிப்பது என்று பல நமுட்டு வேலைகள் செய்து அகப்பட்டுக் கொள்ளும்; அநேகமாக எல்லா வாரங்களிலும் பிடிபட்டு, சாவதுபோல அடிவாங்கிப் பின்பு பிழைத்துவிடும்.

சந்தேகமில்லாமல் இந்தச் சமயத்தில் தாத்தா கேட்டுக்கு அருகே  நின்று கொண்டு சர்ச்சின் சிவப்பு ஜன்னல்களைப் பார்த்தபடி, வேலையாட்களுடன் பேசியபடியிருப்பார். அவருடைய சிறிய கம்பு பெல்டிலிருந்து தொங்கிக் கொண்டு இருக்கும். குளிரினால் கைகளைக் கோர்த்துக் கொண்டு வயதானவருக்கே உரிய கேலிப் பேச்சோடு முதலில் வீட்டு  வேலைக்காரரையும்,  பிறகு சமையல்காரரையும் பரிகாசம் செய்வார்.

“இந்தாருங்கள், பொடி எடுத்துக் கொள்ளுங்கள்”என்று அந்தப் பணிப் பெண்ணிடம் பொடி டப்பாவை நீட்டுவார்.

அந்தப்பெண் அதை எடுத்துக் கொண்டு தும்முவாள். அவளைப் பார்த்துச் சிரித்தபடி “தும்மிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்பார்.

அவர்கள் நாய்களுக்கும் பொடியைக்  கொடுத்து தும்மலை வரவைப்பார்கள். கஸ்தங்கா தும்மி, பின்பு தலையாட்டி விட்டு பயத்தோடு அப்பால் போய்விடும். ஈலுக்கு தும்மல் வராது; வாலை ஆட்டிக்கொண்டு போய்விடும்.

வானிலை அருமையாக இருக்கும். காற்று இதமானதாகவும், லேசாகவும் இருக்கும். ராத்திரியின்  கருமையிருப்பினும், சிம்னியிலிருந்து வரும் புகை காரணமாக கிராமம் வெண்ணிறக் கூரையோடு இருப்பதாகத் தெரியும். வானம் முழுவதிலும் மின்னும் நட்சத்திரங்கள் சிதறியிருக்கும்

வான்கா பேனாவில் மையைத் தொட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினான்.

“நேற்று குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்த போது என்னை மறந்து அசந்து தூங்கிவிட்டேன். தலைமுடியைப் பிடித்து இழுத்து, முற்றத்திற்கு அழைத்து வந்து முதலாளி காலணிகளைத் தேய்க்கும் கட்டையால் என்னை விளாசிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன்னால் எஜமானியம்மா மீனைக் கழுவச் சொன்னார்கள். நான் மீனை கீழ்ப் பகுதியிலிருந்து சுத்தம் செய்ததால், அதைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்தில் மோதினார்கள். அதனால் வேலையாட்கள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். எஜமானனுக்கு வைத்திருந்த வெள்ளரித் துண்டுகளை அறைக்குப் போய் எடுத்துவரும்படி என்னிடம் வேலையாட்கள் சொன்னார்கள். அவருக்கு அது தெரிந்து விட்டது. அவர் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடித்துவிட்டார். சாப்பிட எதுவுமில்லை. காலையில் ரொட்டி, மதியம் கஞ்சி, இரவில் ரொட்டி என்று  சிறிது கிடைக்கும். தாழ்வாரத்தில் படுக்கவேண்டும். இரவில் அந்தச் சின்னப்பேய் அழுதபடி என்னைத் தூங்க விடாது. எழுந்து தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். தாத்தா! என்னை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுங்கள். என்னால் பொறுக்க முடியவில்லை .நான் கிராமத்திற்கு வந்துவிடுகிறேன்.இங்கிருந்து கூட்டிக் கொண்டு போய் விடுங்கள்; இல்லாவிட்டால் நான் சாக வேண்டியதுதான்.”

வான்கா கண்களைத் துடைத்துக் கொண்டான். விம்மினான்.

“உங்களுக்கு நான் பொடி தயாரித்துத் தருவேன். நான் சரியாக நடந்து கொள்ளா விட்டால் என்னை நீங்கள்  அடித்து நொறுக்கலாம்.எனக்கு அங்கு எதுவும் வேலை இருக்காது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் காலணிகளைத் துடைக்கும் வேலைசெய்வேன். அல்லது பெட்காவுக்கு பதில் நானே ஆடு மேய்ப்பேன். தாத்தா! என்னால் பொறுக்கவே முடியவில்லை.

இங்கு வாழ்க்கை என்பதேயில்லை. இந்த இடத்தைவிட்டு கிராமத்திற்கு ஓடிவந்து விடலாமென்றால் எனக்கு காட்டைப் பார்த்தாலே பயம். காலில் போட்டுக் கொள்ள செருப்பு எதுவுமில்லை. நான் பெரியவனான பிறகு உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். யாரும் உங்களை எரிச்சல்படுத்த விடமாடேன். நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்குச் செய்வது போல…”

“மாஸ்கோ மிகப் பெரிய நகரம். பணக்காரர்களின் வீடுகள்தான் அதிகம்.. அங்கு நிறையக் குதிரைகளிருக்கும். ஆனால் ஆடுகளில்லை. அங்கிருக்கும் நாய்கள் பகைக் குணம் கொண்டவையல்ல. பாட்டுப் பாடப் போவதற்கு இங்கு யாரும்  அனுமதிக்கமாட்டார்கள். ஒருமுறை கடையில் மீன்பிடிக்கும் கொக்கிகள் தொங்க விடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். விற்பதற்காக வைத்திருந்தார்கள். அதை வைத்து எந்த வகை மீனையும் பிடித்துவிடலாம். நாற்பது பவுண்ட் மீனைப் பிடிக்கும் அளவுக்கும் கூட ஒரு கொக்கி இருந்தது. அதுபோல எல்லா விதமான துப்பாக்கிகளையும் விற்கும் கடைகளையும் பார்த்திருக்கிறேன். அங்கு முதலாளியின் விலையுயர்ந்த துப்பாக்கி போலப் பல துப்பாக்கிகள்.. கசாப்புக் கடையில் முயல்கள், மீன்கள், காட்டுக்கோழிகள் என்று எல்லாமுமிருக்கும். ஆனால் அவை எங்கிருந்து சுட்டுக் கொண்டு வரப்பட்டவை என்று கடை உரிமையாளர் சொல்லமாட்டார்.”

“தாத்தா ! பெரிய வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும்போது அதிலிருக்கும் அந்த வாதுமைக் கொட்டையை எனக்காக வைத்திருங்கள்.வீட்டு அக்காவிடம்  இது வான்காவிற்காக என்று சொல்லுங்கள்”

வான்கா பெருமூச்சு விட்டு ஜன்னலை வெறித்தான். தாத்தா தன் முதலாளியின் வீட்டிற்காக கிறிஸ்துமஸ் மரம் கொண்டு வர, காட்டிற்குப் போன போதெல்லாம் தானும் போனதை நினைத்துக் கொண்டான். அது மிகவும் சந்தோஷமான நேரம். காட்டிற்குள் போகும்போது தாத்தா தொண்டையைச் செருமி மிகப்பெரிய ஒலியெழுப்புவார். காடு அதை எதிரொலிக்கும். வான்காவும் அப்படிச்செய்வான். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டுவதற்கு முன்னால் தாத்தா புகை பிடிப்பார். புகையை வெளியே விட்டு, சிறிது பொடியும் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரிப்பார். அங்கிருக்கும் அந்தச் சிறிய ஊசியிலை மரங்கள்.. தங்களில் யார் முதலில் வெட்டப்பட்டு சாவார்கள் என்று காத்திருப்போடு அசையாமல் நிற்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து ஒரு முயல் பனியினூடே அம்பாய்ப் பறக்கும்..“ பிடி..அவனைப் பிடி..விடாதே“என்று தாத்தா கத்துவார். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டியபிறகு தாத்தா அதை இழுத்துச்சென்று பெரிய வீட்டின் முன்னால் போடுவார். பின்பு அதை அலங்கரிக்கும் வேலைகள் நடக்கும்.. வான்காவுக்கு மிகவும் பிடித்த  ஓல்கா இக்நாத் யெவ்னா அக்கா தான் எல்லோரையும் விட மிகவும் மும்முரமாக இருப்பாள். வான்காவின் அம்மா பெல்கயே அங்கு வேலை செய்தவள். அவள் உயிருடனிருந்த போது ஓல்கா அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தருவாள். நூறு வரை எண்ணுவதற்கு சொல்லித் தருவாள்.. தின்பண்டங்கள் கொடுப்பாள்.. சில சமயங்களில் நடனமும் ஆடுவாள். அம்மா இறந்தபிறகு வான்கா தாத்தாவுடன் சமையல் பணியாளர்கள் இடத்திற்கு அனுப்பப்பட்டான். பிறகு அங்கிருந்து  மாஸ்கோவிற்கு.

“தாத்தா,கண்டிப்பாக வாருங்கள்!” தயவுசெய்து என்னை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள்.இந்த அனாதையின் மீது இரக்கம் காட்டுங்கள்; எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.என்ன விதமான கொடுமை இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன்.வாழ்க்கை சீரழிந்து விட்டது. நாயை விடக் கேவலமாகிவிட்ட நிலையிலிருக்கிறேன்.. அல்யோனா, ஒற்றைக்கண் யகோர்கா ஆகியவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் இசைக் கருவியை யாருக்கும் தர வேண்டாம்..தாத்தா தயவுசெய்து வாருங்கள். உங்கள் பேரன்”

வான்கா அந்தத் தாளை இரண்டாக மடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கவரில் போட்டான்..சிறிது யோசனைக்குப் பிறகு மையைத் தொட்டு முகவரி எழுதினான்.

                கிராமத்தில் உள்ள தாத்தாவுக்கு

பின்பு சிறிதுநேரம் தலையைச் சொறிந்துகொண்டான். கான்ஸ்டனின் மகாரிட்ஸ் என்று எழுதினான். நல்லவேளை கடிதம் எழுதவிடாமல் தடுப்பதற்கு அங்கு யாருமில்லை.. சட்டையைப் போடாமல் தொப்பியைப் போட்டுக் கொண்டு சட்டை போட்டது போன்ற நினைவில் தெருவிற்கு ஓடினான்.

அந்தப் பெட்டியில் போடப்படும் தபால்கள் தபால்கார்கள் மூலம் வண்டிகளில் எல்லா இடங்களுக்கும் அனுப்பப் படும் என்று கசாப்புக் கடையில் இருப்பவன் விவரம் சொல்லியிருந்தான். வான்கா அருகிலிருக்கும் தபால் பெட்டியை நோக்கி வேகமாக ஓடி, அந்த அருமையான கடிதத்தை அதற்குள் போட்டான்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிய நினைவுகள் தாலாட்ட அவன் நித்திரையில் ஆழ்ந்தான்… அடுப்புப்  பற்றிக் கனவு வந்தது. தாத்தா அடுப்பினருகில் இருந்தார், கால்களை ஆட்டியபடி ,அந்தக் கடிதத்தை சமையல்காரர்களுக்குப் படித்துக் காட்டியபடி..

ஸ்டவ் அருகே ஈல் தன் வாலை ஆட்டியபடி நின்றிருந்தது.

                      ————————————

உலகின் சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெறும் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ் [ 1860—1904 ] மருத்துவப் பட்டம் பெற்றவர்.  நாடகம், சிறுகதை என்ற துறைகளில் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்தவர். நாடகங்களில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்களுள் ஒருவரான இவர் ’மனநிலை சார்ந்த அரங்கியல்’ என்னும் நுட்பத்தையும், ஆழமான உரையாடல்களையும் அறிமுகப் படுத்தியவர். மக்களின் தினசரி வாழ்க்கையை,வாழ்க்கைப் போக்கை மிக இயல்பாக, எளிமையான வகையில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட எழுதியவர். வான்கா என்னும் இச்சிறுகதை குழந்தைத் தொழிலாளியின் மன வலிகளை ,ரணங்களைச் சொல்லும் கதையாகும்.  அவருடைய மிகச் சிறந்த சிறுகதைகளில் சில  :The  Tutor,  The Cook s Wedding , Vanka,  A Story without an end , Small Fry

 

குறுக்கெழுத்து – பிப்ரவரி 2022 – சாய் கோவிந்தன்

சென்ற மாதம் பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்துப் போட்டி வைத்தோம். 14 பேர் கலந்து கொண்டார்கள். அதில் 4 பேர் தான் சரியான விடை எழுதியிருக்கிறார்கள்.

1. திரு ராமமூர்த்தி 

2. திரு நாகேந்திர பாரதி 

3. திரு குமார் G 

4. திருமதி மைதிலி ரவி (பகவத் கீதா ) 

நால்வருக்கும்  பாராட்டுதல்கள்.

முதலில் அனுப்பிய ராமமூர்த்தி அவர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. 

சரியான விடை இங்கே :

 

 பூ 
ங்
2
கு
லி
3
யா
ஜை
4
னை
5
கு
ந்
6
வை
7
கொ
தை
கை
8
லை
9
டி
10
வா
ர்
யா 
ள்
11
சே
ந்
ன்

___________________________________________________________________

 

இனி பிப்ரவரி  மாத குறுக்கெழுத்துப் போட்டி. 

இது தீம் சம்பந்தப்படாத  பொதுவான குறுக்கெழுத்துப் போட்டி.. அனைவரும்  கலந்து கொள்ளலாம். 

மின்னஞ்சலில்தான் அனுப்பவேண்டும். 

முதலில் வரும் சரியான விடைக்கு 100 ரூபாய் பரிசு. 

இதை கிளிக் செய்து விடைகளை அனுப்புங்கள். 

http://beta.puthirmayam.com/crossword/D8C2D1BAFD

 


அன்பெனும் இனிய கவிதை – மீனாக்ஷி பாலகணேஷ்

Vijay Sethupathi and Trisha Krishnan starrer '96' audio- Dinamani

கைகள் ஒன்றோடொன்று உறவாடி, கண்கள் ஒன்றையொன்று நோக்குகின்றன. நமது இதயத்தின் பதிவுகள் இவ்வாறே தொடங்குகின்றன.

           இது வசந்தகாலத்தின் நிலவு பொழியும் இரவுமருதாணியின் இனிய வாசம் காற்றில் பரவுகின்றது; எனது புல்லாங்குழல் இசைக்கப்படாமலும், நீ தொடுக்கும் மலர்மாலை முடிக்கப்படாமலும் தரையில் கிடக்கின்றன.

           குங்குமப்பூ நிறத்திலான உனது முகத்திரை எனது கண்களை போதையிலாழ்த்துகிறது.

           நீ எனக்காகத் தொடுத்த மல்லிகைமாலை எனது இதயத்தைப் புகழ்ச்சியில் திளைக்கவைக்கிறது.

           இது கொடுப்பதும் கொடுக்காததுமான விளையாட்டு; காட்டியும், வெளியிட்டும் விளையாடுவது; சில புன்னகைகள், சில சிறிய நாணங்கள்; சில பயனற்ற தடுமாற்றங்கள்.

           உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.

                                            ***

           நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை. முடியாததை அடைய முயலுவதில்லை! இனிமையின் பின் நிழல்களில்லை; இருளில் ஆழத் துழாவுவதில்லை.

           உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.

                                               ***

           சொற்களற்ற அமைதிக்குள் சென்று நாம் தடுமாறுவதில்லை; நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதொரு வெளியில் நாம் கைகளை உயர்த்தித் தேடுவதில்லை.

           நாம் கொடுப்பதும் பெறுவதும் நமக்குப் போதும்.

           நாம் வலியின் மதுவை அருந்துவதற்காக மகிழ்ச்சியை எல்லையில்லாமல் கசக்கிப் பிழியவில்லை.

           உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.

               (தாகூர்- தோட்டக்காரன்- கவிதை 16)

                          ———————————-

96 Movie Review | Vijay Sethupathi, Trisha – Chennaionline

           காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு. தாகூரின் இந்தப் பாடல்கள் அந்த இனிமையான காதலைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

           எவ்வளவு உண்மை என்று ஏதாவது ஒரு நிகழ்வுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பளிச்சென்று புரியும்.

           இது காதலர் தினம் தொடர்பான கட்டுரை / கதை! எனக்கு நினைவுதெரிந்து நான் அறிந்துகொண்ட நிறைவேறாத காதல்கள் சில, ஆண்டுதோறும் இந்ததினத்தில் நினைவுக்கு வந்து மனத்தை வருத்துவதுண்டு. தாகூரின் இந்தக்கவிதை விசாலத்தையும் சுந்தரேசனையும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைக்கு!

           கேரளாவில் எங்கள் பெரியப்பா வாழ்ந்த ஏதோ ஒரு சிற்றூர். அங்கு விசாலம் மிகவும் ஏழைக் குடும்பத்துப்பெண். பெரிய அழகியாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காந்த அழகு இருந்தது அவளிடம். இந்த மாதிரிக் குடும்பங்களில் தகப்பனார் இல்லாமல் இருப்பதுதானே வழக்கம்? இங்கும் அதுவே நிஜம்! ஊரின் சின்னக் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விளக்குக்கு எண்ணெய் போடுவதிலும், வேண்டும் வீடுகளுக்குச் சென்று சமையலில் ஒத்தாசை செய்வதிலும், மாலைப் பொழுதுகளில் ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி மகிழ்வதிலும் அவள் நாட்கள் கழிந்தன. ஏதோ இருந்த அற்ப சொத்தை வைத்துக்கொண்டு காலட்சேபம் நடந்தது.

           டாக்டர் சுந்தரேசன் அந்தச் சின்ன ஊருக்கு டாக்டர். உடன் சாதுவான அம்மாவும், ஹைஸ்கூல் வாத்தியாராக இருந்து ரிடையரான அப்பாவும் இருந்தார்கள். எப்போதோ ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாத அம்மாவைக் கூட்டிக்கொண்டுவந்த விசாலத்திடம் சுந்தரேசனுக்கு ஈடுபாடு உண்டாயிற்று. நாளாக ஆக அவளுக்கும் அது புரிந்தது.  ஆனால் அது எங்கும் போய் முடியப்போவதில்லை என்று இருவருக்கும் தெரியும். சாதுவான, வெகுளியான, அன்பான, கலகலப்பான அந்தப் பெண்ணிடம் பரிவாகத் தொடங்கிய ஈர்ப்பு காதலாக வளர்ந்தது. அந்த ஊரைப் பொறுத்தவரை காதல் கெட்டவார்த்தை! அதுவும்  விசாலம் காதலில் விழலாமா?

           ஒருநாள் ஆற்றங்கரையில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தவன், “விசாலீ, எத்தனை நாள் பேசாமல் இருப்பது? உங்கள் அம்மாவிடம் வந்து பேச என் அப்பா அம்மாவை அனுப்பட்டுமா?” என்று கேட்டான்.

           “நடக்காத விஷயம் டாக்டர். யாரும் நம் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை,” விசாலம் உறுதியாகச் சொன்னாள். கோவிலுக்குக் கொண்டுபோவதற்காக தொடுத்துக்கொண்டிருந்த மாலை பாதியில் நின்று விட்டிருந்தது.

           “சர்வ நிச்சயமா எப்படிச் சொல்லுகிறாய் விசாலம்? நாம் திருமணம் செய்து கொள்வதில் உனக்கு விருப்பமில்லையா?”

           மெல்ல விரியும் பூப்போல அவள் முகத்தில் லேசான புன்னகை. “நான் அப்படிச் சொல்லலையே! எப்படி முடியும் டாக்டர்? நீங்களே யோசித்துப் பாருங்கோ! ஏதோ ஒரு சமயத்தில் இரண்டுபேரும் இஷ்டப்பட்டுட்டோம். தப்புத்தண்டா ஒண்ணும் நடக்கலையே! அதுவரைக்கும் நிம்மதி!” மலையாளம் கலந்த தமிழில் அவள் பேசுவதே ஒரு அழகு.

           “நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறப்போ எங்களுக்கு கீட்ஸோட ‘ஓட் ஆன் அ க்ரீஷியன் அர்ன்’ (Ode on a Grecian Urn) பாடமா இருந்துது. அதில அழகா ரெண்டு வரி இருக்கும் பாருங்கோ!  கேட்ட ராகங்கள் இனிமையானவை; ஆனால் கேட்காத ராகங்கள் இன்னுமே அழகானவை, இனிமையானவை, என்பான் கீட்ஸ். (Heard melodies are sweet, but those unheard are sweeter than those) அதுமாதிரித்தான் இது,” என்றாள் விசாலம். அந்த வறுமையிலேயும் இன்டர் படித்து முடித்திருந்தாள் அவள். பேச்சில் புத்திசாலித்தனம், பெரிய மனுஷித்தனம் எல்லாம் பளிச்சிட்டது.

           அவளையே பார்த்தான் சுந்தரேசன். சொன்ன வரிகளின் உள்ளர்த்தம் புரிந்தது அவனுக்கு.

           “குளிர் காலம் வந்தால் வசந்தகாலம் இன்னும் ரொம்பத் தொலைவில்லையே என்று நீ படித்ததில்லையா?” (For if winter comes, can spring be far behind?)

           “எனக்கு பதில் சொல்லத் தெரியலை டாக்டர்,” என்றாள் விசாலி.

           விசாலியும் சுந்தரேசனும் கடைசிவரை ஒருவரை ஒருவரோ வேறு எவரையுமோ திருமணம் செய்துகொள்ளவேயில்லை. நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஊரும் வாய்க்கு வந்தபடி பேசி ஓய்ந்தும் போயிற்று.

           விசாலி காலமானபோது சுந்தரேசன் தான் அந்திமக்கிரியைகள் செய்தாராம்.

           எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஒருமுறை ஊருக்குப் போனபோது சுந்தரேசன் மாமாவே இதைச் சொன்னார்.

           வயதும், அறிவு முதிர்ச்சியும், உரிமையும் தந்த தைரியத்தில் அவரைக் கேட்டேன்: “ஏன் மாமா நீங்கள் அவாளைக் கல்யாணம் செய்துக்கலே? என்ன தயக்கம் உங்களுக்கிடையிலே?”

           “பாஸ்கர்! உனக்கு இப்போப் புரியும். விசாலம் ஒரு பால்ய விதவை. விவரம் புரியாத எட்டு வயசிலே கல்யாணம் பண்ணிவைத்து, அவள் பெரியவளாகி காதல், வாழ்க்கை எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாலேயே அவன் புருஷன் பெரிய வியாதிவந்து போயிட்டான். இவளுக்கு மேலே படிக்கவும் வழியில்லே. நாங்கள் மட்டும் விருப்பப்பட்டு என்ன பிரயோசனம்? அந்தமாதிரி கல்யாணங்களை யாரும் அந்தக் காலத்தில் ஒத்துக் கொண்டதேயில்லை. நண்பர்களாகவே இருந்து விட்டோம். என்னால முடிஞ்சது அவளை நல்லபடியா வழியனுப்பி வைக்கிறதுதான். அதனைத் தடுக்க என் அப்பா அம்மாவோ, அவளோட அம்மாவோ இருக்கலை அல்லவா? ஊர் பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சு. இதொண்ணுதான் மிச்சம். யாரைப் பற்றியும் கவலைப்படற நிலையை நானும் தாண்டியாயிற்று,” என்று சிரித்தார் மாமா. கண்களின் ஓரம் இரு நீர்த்துளிகளைப் பார்த்தேனோ?

           தாகூரின் கவிதையின் சில வரிகளை இங்கு திரும்ப ஒரு உயிர் அனுபவமாக உணர்ந்தேன். இதயம் கனத்து வழிந்தது. சுந்தரேசன் மாமா விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார். நான் மெல்ல எழுந்து வெளியே வந்தேன். அந்த வீட்டின் மகிழமரத்தடியே நின்று அந்த வரிகளை அசைபோட்டுச் சிலிர்த்தேன்.

           ஒரு வாழ்க்கை கவிதையாயிற்றா? அல்லது கவிதைகள் தான் வாழ்க்கையை உணர்த்துகின்றனவா?

           நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை.

           இயலாததை அடைய நாம் முயலுவதில்லை!

           இனிமையின் பின் நிழல்களில்லை;

           இருளில் ஆழத் துழாவுவதில்லை.

           உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.

                                          

கம்பன் கவிநயம் – சுந்தரம்

இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல். 

 

கம்பர் எப்படி சட்டென்று தசரதனின் முடிவை நிர்ணயிக்கிறார் ! 

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.

தசரதன் மீண்டும்  தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?” என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்” என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.

இவ்வளவு டிரமடிக் ஆக காட்சியைக் காட்ட கம்பனைத் தவிர வேறு யாரால் முடியும்?   

 

அடுத்தது ஜடாயுவின் மரணம். அதை சினிமாவின் இடைவேளைக்கு  முன் வந்த காட்சி போல கம்பர் விஸ்தாரமாக அமைத்திருப்பார். இராவணன் சீதையை விமானத்தில் கடத்தி வான் வழியாகச் செல்லும்போது அவனைத் தடுக்க வரும் வயதான வீரனாக ஜடாயு வருகிறார். ஜடாயு இராவணனை தடுத்து நிறுத்துகிறார். அவனுக்கு அறிவுரை சொல்கிறார். வில்லன் கேட்பானா? ஜடாயுவை –  அவர்  வயதை எள்ளி நகையாடுகிறான். 

Ravana slaughtering Jatayu the vulture, while an abducted Sita looks away in Horror Painting by Ravi Varma

இருவருக்கும் போர் நடக்கிறது. இராவணனைத் தாக்கிக் கொண்டே சீதைக்கும் ஆறுதல் கூறுகிறார். தன்னால் ராவணனை ஜெயிப்பது கடினம் என்று ஜடாயுவிற்கும் தெரியும். இருந்தாலும் நாம் சண்டை போட்டு உயிர் துறப்பதற்குள் இராமன் வந்து சீதையை காப்பாற்றிவிட மாட்டானா என்ற நப்பாசை அவர்  கண்களில் தெரியும். முடிவில் இராவணன் சிவன் வாளை உபயோகித்த பின்னரே அவரைக் கொல்லவும் முடிந்தது. 

அதை கம்பர் மிகச் சிறப்பாக ஜடாயு உயிர் நீத்த படலத்தில் திரைப்படம் போல அமைத்திருப்பார்.  

ஜடாயுவின் மரணத்தைக் காட்டும் பாடலில் சோகத்தை மீறி அவருடைய வீரமே புலப்படுமாறு கம்பன் படைத்திருப்பார். 

வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்           நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்                       மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்         குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். –

        சடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும், விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.

  

நாணயம்- ரேவதி ராமச்சந்திரன்

10 Tips for Safe Solo Female Train Travel in India | Soul Travel India

‘அம்மா எனக்கு கோட்டையில் வேலை கிடைச்சிருக்கு’ கமலி ரொம்ப சந்தோஷமாகக் கூவிக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள். இதைக் கேட்ட அவள் அம்மா ஜானுவுக்கு கவலை உண்டாயிற்று. கமலிக்கு மிகவும் பிடித்த குட்டி ஜாங்கிரி பண்ணிக் கொண்டிருந்த ஜானு ‘கமலி செங்கல்பட்டிலிருந்து கோட்டை வரை நீண்ட பயணம் செல்ல வேண்டுமே!’ என்று யோசித்தாள். ‘என்னம்மா சந்தோஷ ரேகையையேக் காணோம்!’ என்று கமலி ஒரு ஜாங்கிரியை சுவைத்துக் கொண்டே ஜானுவுடைய முகவாயைப் பிடித்துத் தூக்கினாள். ‘இல்லைடி அத்துணை தூரம் போக வேண்டுமே என்று யோசிக்கிறேன்’ என்றாள். ‘அம்மா நான் அங்கே வேலை செய்கிற என் ஃப்ரெண்ட்கிட்டே கேட்டேன். டிரையின் வசதியைப் பற்றி அவள் ரொம்ப சொன்னாள். வேகமாகச் செல்லும் டிரையின்லே போகலாமாம், பஸ்ஸைவிட ரொம்ப வசதியாம், தூரமெல்லாம் ஒரு விஷயமே இல்லை, ஒரு மணி நேரத்தில் போய் விடலாம், பஜனை, பாட்டு என்று ஜாலியா போகலாம்  என்றாள்’ என்று மூச்சு விடாமல் பேசினாள். சிறிது ஆசுவாசப்பட்டு ஜானு மிச்சமுள்ள ஜாங்கிரியைப் பண்ணுவதில் முனைந்தாள்.

ஆயிற்று. இன்றுடன் ஒரு மாதம் ஓடியேப் போய் விட்டது. கமலி ரொம்ப உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு டிஃபன், சாப்பாடு எல்லாம் எடுத்துக் கொண்டு செல்வாள். டிரையினில் தலையை ஆற்றிக் கொள்வது , எல்லோரோடும் டிஃபன் பங்கீட்டுக் கொண்டு சாப்பிடுவது, பஜனை செய்வது, எப்படி ஆபீஸில் ஃபைல் பார்ப்பது என்று தெரிந்து கொள்வது, சமையல் எப்படி வித விதமாகச் செய்வது என்று அளவளாவுவது என்று இப்படி பயணம் கழிந்து விடும். இதனால் நெடுந்தூரம் என்பது ரொம்பவும் ஜாலியாகவே  இருந்தது. மாலையிலோ வேறு விதமான அனுபவம். கீரையை கட்டாக மிகக் குறைந்த விலையில் வாங்கி அதை ஆய்வது, மல்லிப்பூ வாங்கி சரமாகத் தொடுப்பது, பாட்டுப் பாடுவது என்று பொழுது போய் விடும். நல்ல காய்கறிகள், பழங்கள் என்று நிறைய வரும். அவைகளை வீட்டிற்கு வாங்கிச்  செல்வார்கள். சில சமயம் ஜாதக பரிவர்த்தனைகளும் நடைபெற்று திருமணமும் நடந்துள்ளன. கமலியும் இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு விட்டாள்.

ஒரு நாள் ஏப்ரல் மாதத்தில் நல்ல பெரிய மாம்பழங்களை ஒரு வயதான மூதாட்டி கொண்டு வந்தாள். வாசனை மூக்கைத் துளைத்தது. தன் தம்பி முந்திய இரவுதான் மாம்பழங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. என்ன விலை என்று விசாரித்தாள். ‘அம்மா நல்ல தோட்டத்து மாம்பழம், நேற்றுதான் பறித்தது. வாசனைப் பார்’ என்றாள் மூதாட்டி. ‘ஆமாம் நல்ல பெரிய பழம்தான் என்ன விலைம்மா’ என்று கமலி மீண்டும் விசாரித்தாள். ‘ஒரு பழம் கிட்டத்தட்ட ஒரு கிலோ தேறும், நல்ல ருசியான பழம், ஒன்று எண்பது ரூபாய்’ என்று மெதுவே கூறினாள். பழத்தையும், அந்த மூதாட்டியையும் பார்த்து ஒன்றும் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டு நூற்று அறுபது ரூபாய் கொடுத்தாள். ‘உங் கை நல்ல போனி ஆகட்டும்’ என்று மூதாட்டி முகமலர்ச்சியுடன் போனாள். இவளும் சந்தோஷமாக தன் தம்பியை நினைத்துக்கொண்டே அந்தப் பழங்களைப் பையில் வைத்துக் கொண்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து இவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இருந்தது. இவள் இறங்கத் தயாராகும்போது அந்த மூதாட்டி அவசர அவசரமாக இவள் இருப்பிடம் வந்து ஒரு பழத்தை நீட்டி ‘நல்ல வேளை நீங்க இன்னும் இறங்கவில்லை இதை வாங்கிக்கோம்மா’ என்றாள். கமலி உடனே ‘இல்லம்மா, எனக்கு இரண்டு பழம் போதும். நல்ல பெரிதாக இருக்கின்றன’ என்றாள். ‘இல்லை இதுக்கு நீ காசு கொடுக்க வேண்டாம்’ என்றாள். ‘எனக்கு இனாம் தந்தால் உங்களுக்குத்தான் நஷ்டம். நீங்கள் ஏன் நஷ்டப்பட வேண்டும்?’ என்று பரிவோட வினாவினாள். அதற்கு மூதாட்டி ‘இல்லம்மா, இதற்கு நீ காசு கொடுக்க வேண்டாம் ஏற்கனவே கொடுத்து விட்டாய். இது இனாமும் இல்லை’ என்று இழுத்தாள். புரியாமல் பார்த்த கமலியிடம் மேலும் ‘அம்மா, நான் விலை சொன்னவுடன் நீ பேரம் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டாய். ஆனால் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் எல்லோரும் விலையைக் குறைக்கச் சொல்லி ஐம்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டார்கள். நானும் எல்லோரும் வாங்கினால் எனக்கும் வியாபாரம் ஆகும் என்று வேறு வழி இல்லாமல் கொடுத்து விட்டேன். ஆனால் நீ எண்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டாய். எனக்கு மனசு கேட்கவில்லை. அதனால்தான் உனக்கு இன்னொரு பழம் கொடுக்க வந்தேன்’ என்று கூறி புடவைத் தலைப்பால் வேர்வை வடியும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கமலியின் முகத்தில் ஆச்சரியம், அதிசயம், சந்தோஷம் எல்லா ரேகைகளும் ஓடின. இப்படியும் மனிதர்களா! இல்லை மனிதருள் மாணிக்கங்களா! இதனால்தான் மாரியும் பொழிகிறானோ!

                              

வளவதுரையன் கவிதைகள்

கனவில்தான்……

கிளி ஜோசியம் பாக்கலயோ கிளி ஜோசியம்... ஸ்டாலினுக்கு ஆப்பு!!

கதவு திறந்திருந்தாலும்
பறக்க மறந்தது
பழகிப் போய்விட்டது.

கம்பிகளைக் கடித்துக் கடித்து
அலகெல்லாம் வலிக்கிறது.

ஒரு நெல்லுக்காகக்
கழுத்து நோக
முப்பது சீட்டுகளைக்
கலைக்க வேண்டிஉள்ளது.

வெளியில் தெரியும்
வானமெல்லாம்
விரிந்து கிடக்கும்
கானல்நீர்தான்.

காலை முதல்
யாருமே வராததால்
முழங்கால்களுக்கிடையில்
முகம் புதைத்திருக்கும்
இவனும் பாவம்தான்.

எதிர்மரக்கிளையில்
இருக்கின்ற இணையே!
இன்றும் உன்னைக்
கனவில்தான்
கலக்கவேண்டும் போலிருக்கிறது.

 

தலைக்கனம் 

Facebook

கடந்த ஆறு மாதங்களாக
எனக்குத் தலைக்கனம்
அதிகமென்கிறார்கள்.

ஆமாம்; நான் கவிஞனன்றோ?
நானே வளர்த்துக் கொண்ட
நளினமான தலைக்கனம்!

எப்பொழுதுமே தலைக்கனம்
எல்லார்க்கும் தொல்லை தரும்.
எனக்குப் புதுவிதக் குழப்பம்

என் மனைவி இரவு முழுதும்
என்னால் உறங்க முடியவில்லை என்றாள்.

ஏனென்று கேட்டேன்
பதில் சொன்னாள்
தலைக்கனமாம் உங்கள்
முடிகாட்டில் குடிகொண்ட
மூன்று குருவிகளும்
இரவு முழுதும் பேசுகின்றன.
ஒரே சத்தம்

சரி, தலைக்கனத்தைச்
சற்று செதுக்கி வைப்போமென
ஓர் அழகு நிலையம் போனேன்;

நான்கைந்து பேர் காத்திருக்க
நான் வாசலில் அமர்ந்தேன்;

சற்று நேரம் கழிந்த்து.
என்பக்கத்தில் வந்து
ஒரு நாயும் பூனையும் அமர்ந்தன.

சற்று நேரம் கழிந்தது.
இன்னும் ரொம்ப நேரம் ஆகுமோ?

நாய் இப்படிக் கேட்டதும்
நான் திடுக்கிட்டுப் போனேன்.
நாய்கூடப் பேசுமா எனக்
கடைக்காரரைக் கேட்டேன்;
அவர் சொன்னார் ஆச்சரியப்படாதீர்

இப்போது கேட்டது நாயின் குரலன்று
நாயின் குரலில் பூனைதான் மிமிக்ரி செய்தது

 

 

 

அபூர்வங்கள்-2- பானுமதி.ந

இதழ்: சித்திரக் கவிதை - 4

சென்ற இதழில் ‘ஸந்த’ என்ற சொல்லை வைத்து சந்தான ராமனைப் பாடிய தீக்ஷிதரைப் பார்த்தோம். இதில் கணக்கை வைத்து கண்ணனைத் துதித்த திருமங்கை ஆழ்வாரைப் பார்ப்போம்.

07/02/2022 அன்று இரத சப்தமி. சூரியனின் தேர் வடகிழக்காக நகரத் தொடங்கும் நாள். அன்று தேர் வடிவில் கோலம் போடுவார்கள். திருமங்கை ஆழ்வார் தேரைப் போலவே பாசுரம் பாடியுள்ள அபூர்வத்தைப் பார்க்கப் போகிறோம்.

சோழ தேசத்தில் திருக்குறையலூரில் பிறந்த இவர் சோழ மன்னனின் படைத்தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றி பெற்றவர். அதற்குப் பரிசாக திருமங்கை என்னும் குறு நிலத்திற்கு அரசனானார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இவர் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்று 137 பாடல்கள் பாடியுள்ளார்.

அவற்றில் திருவெழுகூற்றிருக்கை (ஏழு+ கூற்று+ அறிக்கை) என்பதைப் பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இது ரதபந்தம்- தேர் அமைப்பினை ஒத்த பா வடிவம். ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறி ஏறி இறங்கி இறுதியில் ஒன்றில் முடியும் வகையில் நாராயணனை இதில் பாடியுள்ளார்.

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்   (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை   (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்   (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன்   (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி   (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே   (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய்   (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த   (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே   (46)

இவ்வகைப் பாடல்கள் ஏழு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டங்கள் அமைத்து எண் ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும், இறங்கியும் சொற்களால் அமைக்கப்படும் சித்திரப் பாக்கள் அல்லது தேர் வடிவப் பாக்கள் என்று சொல்லப்படுகின்றன. பாடலில் இடம் பெற்றுள்ள எண்களும், பாடலின் பொருளும், அறிவு பூர்வமாகவும், தமிழ்ச் சுவையாலும் மேம்பட்ட அனுபவத்தைத் தருகின்றன.

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் ஒற்றை உந்தியிலிருந்து பெரும் தாமரைப் பூ கிளைத்தெழுந்து பிரும்மன் உருவாகிறான்.

இரு சுடர்களான நிலவும், கதிரவனும் உதிக்க அஞ்சிய இலங்கையின் மூன்று மதில்களைக்  (கடல், மலை, வனம்) கடந்து இரு பக்கமும் வளையும் கோதண்டத்தால் அம்பினைச் செலுத்தி எதிரிகளை அழித்தான் இறைவன்.

நால் வகை நிலங்களை வேண்டி வாமனனாக வந்து மூவடியால் உலகம் அளந்தவன்.

நான்கு திசைகளும் நடுங்க, பெரிய திருவடியின் மீதேறி மும்மதம் கொண்ட இரு பெரும் செவியுடன் நின்ற ஒற்றை வேழமான கஜேந்திரனைக் காத்தவன்.

முத்தீ வளர்த்து, ஐந்து வகை வேள்விகளைச் செய்து, அனைவரின் நன்மைக்கென ஆறு வகை செயல்களைப் புரியும் வேள்வியரை இங்கே பாடுகிறார் ஆழ்வார்.

புற விஷயங்களில் ஐந்து புலன்களும் அலைபாய்வதை அடக்கி, மனது, புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கினையும் வசப்படுத்தி, சத்வம், ரஜஸ், தமோ (அமைதி, கோபம், சோம்பேறித்தனம்) ஆகிய மூன்றில், கோபத்தையும், சோம்பலையும் போக்கி, ஒரே ஒருவனான அவனை நினைப்பவர் உலக வாழ்வெனும் துக்கத்திலிருந்து மீள்கிறார்கள்.

மூன்று கண்களும், நான்கு தோள்களும் உடையவரும், ஐந்து நா கொண்ட பாம்பையும், கங்கை என்னும் ஆறையும் சிரசில் தரித்த உருத்திரனாக இருப்பவன் அவனே!

பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் நீலமணி போல், வராஹனாக சுமந்து காத்தருளிய கடவுளே!

அறு சுவைகளும் அவனே!

ஒளி பொருந்திய ஆயுதங்களை ஐந்து திருக்கரங்களிலும் ஏந்தும் எழில் கொண்டவனே!

அழகிய நான்கு தோள்கள் கொண்டவனே!

முந்நீர் வண்ணக் கடல் போலத் தோற்றம் காட்டுகிறாய்.

களங்கமில்லா ஒரு நிலவு; அது உன் இரு துணைவிகளான பெரிய பிராட்டியும், பூமித் தாயாரும். அவர்கள் பூவிலும் மென்மையான தமது இரு திருக்கரங்களால் முப்பொழுதும் உன் இரு திருவடிகளை வருட அறிதுயிலில் இருக்கிறான்.

நெறி முறைகள் மூன்று- சமூக, குல, நீதி ஆகியவைகள் வகுத்து நடத்துபவன்.

நால் வகை தொழில் தர்மம் சொன்னவன்.

ஐம்பெரும் சக்தியும் அவன் (நிலம், நீர், காற்று, விண், தீ)

ஆறு கால்களுடைய வண்டினம் தேன் குடித்து மயங்கும் மலர்களைச் சூடியுள்ள நப்பின்னையைக் கைபற்ற ஏழு எருதுகளை வென்றவனும் அவனல்லவா?

ஆறு சமயங்களும் அவனே. (ஸார்வாகம், பௌத்தம், சமணம், வைசேஷிகம், சாங்க்யம், பாசுபதம், நையாயிகம் என்று சொல்கிறார்கள் சிலர்; கணாதிபத்யம், கௌமாரம், சாக்தம், சைவம், வைணவம், சௌரம் என்றும் சொல்கிறார்கள் சிலர்.)

நறுமணம், அடர்த்தி, மென்மை, வசீகரம், சுருளான கேசம் என்ற ஐந்து சிறப்புகளுடைய குழலுடையவளான திருமகள், அவன் மார்பில் வசிக்கிறாள்.

அறம், பொருள், இன்பம், வீடு  என்ற நான்கையும் அருள்பவன் அவனே.

மும்மூர்த்தியாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்ற வடிவில் இருக்கிறான்.

இருவகைப் பயனாகவும் இருக்கிறான். காரணக் காரியங்கள் அவன் மாயையால் காட்டப்படுகின்றன.

அனைத்தையும் அடக்கிய ஒன்று அவனே. ஒன்றே ஒன்றான பரமன் அவன்.

ஆழ்வார் பொன்னி நதியால் சிறப்புறும் இயற்கையைப் பாடி நிறைவு செய்கிறார். காவிரி பாய்ந்து, கழனி செழித்து, சோலைகள் மலர்ந்து, தேன் கனிகள் மிகுந்து, வானைத் தொடும் கொடிகள் மாளிகைகளின் மேலே பறக்கும் தென் திருக் குடந்தையில் அறிதுயிலும் பரமா, என் இன்னல்களைப் போக்காயோ என நமக்கும் சேர்த்து வேண்டுகிறார்.

இப்பாசுரம் மிகுந்த தத்துவ பொருளைக் கொண்டுள்ள ஒன்று. அதைப் பற்றி இதில் குறிப்பிடப்போவதில்லை. கணிதமும், தமிழும் இணையும் இறை அழகைக் கொண்டாடுவதுதான் நோக்கம்.

 

 

இரட்டைப்பிள்ளையார் – தரும ராஜேந்திரன்

தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் நகரில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும்  ஸ்ரீ  இரட்டைப்பிள்ளையார் என்கிற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலய ஜீர்ணோதாரணஅஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது
“கணபதி என்றிடக்  கலங்கும் வல்வினை                              கணபதி என்றிடக்  காலனும் கைதொழும்                            கணபதி என்றிடக்  கருமம் ஆதலால்                                      கணபதி என்றிடக்  கவலை தீருமே”
சிறப்புமிக்க இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின்              காணொளி குவிகம் வாசகர்களின் தரிசனத்திற்காக

கண்ணன் கதையமுது -4 – தில்லை வேந்தன்

Krishna GIFs | Tenor

(கம்சனைக் காண வந்த நாரதன்,எட்டாம் குழந்தை என்றில்லாமல் எந்தக் குழந்தையாகவும் நாராயணன் வரக் கூடும் என்று கூறிச் செல்கிறான்.
நாரதனின் எச்சரிக்கையால் அச்சமும், ஆத்திரமும் கொண்ட கம்சன், வசுதேவன், தேவகியைச் சிறையில் தள்ளி, அவர்களது முதல் ஆறு குழந்தைகளைக் கொல்கிறான்.)

தேவகி ஏழாம்முறை கருவுறுதல்

ஆலய மணிகள் காற்றில்
அன்புடன் ஓம்ஓம் சொல்ல,
பாலையும் பசுக்கள் தாமே
பாங்குடன் நனிசு ரக்க,
வேலைநீர் பொங்க லைகள்
மென்மையாய்த் தவழ்ந்து செல்ல,
சோலைவாழ் மயிலே அன்னாள்
சுடர்க்கரு மீண்டும் உற்றாள்

( வேலை- கடல்)

திருமால் மாயைக்கு இட்ட கட்டளை

ஆவதுவும், ஆனதுவும் வருங்கா லத்தில்
ஆவதற்குக் காத்திருக்கும் அனைத்த றிந்தான்,
மாவடிகள் மூவடியால் விண்ணும் மண்ணும்
மாவலியின் முடித்தலையும் அன்ற ளந்தான்,
சேவடியின் புகழ்போற்றி முனிவர், தேவர்
செப்பிநிதம் மகிழ்கின்ற முகில்நி றத்தான்
ஏவிலினால் இயங்குகின்ற மாயை வந்தாள்
மாலவனின் மலரடியை வணங்கி நின்றாள்.

“வடமதுரை வன்சிறையில் மங்கை நல்லாள்
வயிற்றினிலே எழுகருவாய் அனந்தன் உள்ளான்
திடமுடனே வளர்கருவை அகற்றி நீயும்
சிந்தாமல் சிதறாமல் ஏந்திச் செல்வாய்
அடர்பொழில்சூழ் கோகுலத்தில் நந்த கோபன்
அரண்மனைவாழ் ரோகிணியின் வயிற்றில் சேர்ப்பாய்
மடமயிலாள் யசோதையவள் கருவி லேநீ
வளர்ந்தொருபெண் குழந்தையெனப் பிறத்தல் வேண்டும்”

( எழுகரு – எழுகின்ற/ உருவாகும் கரு)
(எழுகரு – ஏழாவது கரு)
( அனந்தன் – ஆதிசேஷன்)

மாயை, தேவகியின் ஏழாவது கருவை ரோகிணிக்கு மாற்றுதல்

மகிழ்ந்தாள் மாயை, பாற்கடலின்
மாயன் உரைத்த மொழிகேட்டு
நெகிழ்ந்தாள், பணிந்தாள் திருவடியை.
நேரே மதுரை சிறைநுழைந்து
முகிழ்ந்த மொட்டாம் கருவகற்றி
முடுகி நந்தன் மனையின்கண்
திகழ்ந்த சீரார் ரோகிணியின்
திருவ யிற்றில் சேர்த்தாளே!

( முகிழ்ந்த – தோன்றிய)
(முடுகி – விரைந்து)

மாயை யசோதை வயிற்றில் கருவாதல்

ஓயாப் பிறவி கடல்கடக்க
உதவும் ஒருவன், முல்லைநிலக்
காயா மலரின் வண்ணத்துக்
கடவுள் வகுத்த வழியினிலே
சேயாய் நிலத்தில் பிறப்பெடுக்கச்
சிந்தை கொண்டு மாயையவள்
தாயாம் யசோதை மணிவயிற்றில்
தானோர் கருவாய் உருவானாள்!

ஏழாம் கரு கலைந்தது என்று அனைவரும் நினைத்தல்

தேவகி கருவும் மாறிச்
சென்றதை அறிந்தார் இல்லை
காவலின் கொடுமை யாலே
கலங்கியே கலைந்தது என்றே
யாவரும் எண்ணி உள்ளம்
ஏங்கியே வருந்த லானார்.
பாவியாம் கொடியோன் கம்சன்
படுவனே துன்பம் என்றார்

தேவகி எட்டாம் முறை கருவுறுதல்

எட்டாம் முறையாய்க் கருவுற்றாள்
எழிலார் மங்கை தேவகியாள்
மட்டார் மாலை மாலவனும்
வந்து புகுந்தான் மணிவயிற்றில்
கிட்டாப் பேறும் கிட்டியதே
கேடில் செல்வம் எட்டியதே
முட்டாச் சிறப்பின் முழுமுதல்வன்
மூண்ட கருவின் உள்ளுற்றான்

(முட்டாச் சிறப்பு — குறைவுபடாத தலைமை)

செய்தி அறிந்த கம்சன் நிலை

செய்தி கேட்ட கொடுங்கம்சன்
சிந்தை கலங்கி நிலைகுலைந்தான்
மெய்தி கழ்ந்த பேரழகை,
மேனி சுமந்த பொன்னெழிலை,
எய்தி நின்ற பூரிப்பை,
இருகண் கூசும் ஒளிப்பொலிவை
மைதி கழ்ந்த மாமாயன்
வரவின் குறிப்பாய் ஐயுற்றான்.

கொல்ல நினைத்தான், கொன்றுவிட்டால்
கூடும் கொடிய பழிநினைத்தான்.
நல்ல தங்கை கருசுமந்தாள்
நமனாய் மாறி உயிர்பறித்தால்
சொல்ல முடியாப் பெரும்பாவம்
சூழும் நிலையை மிகவுணர்ந்தான்
மெல்ல முள்மேல் ஆடையினை
விலக்க எண்ணி முடிவெடுத்தான்.

ஆத்திரத்தால் அறிவிழந்தான் கம்சன், ஆனால்
அவப்பெயரை அஞ்சியதால் பொறுத்தி ருந்தான்;
காத்திருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டான்;
காலையிலும், மாலையிலும்,நிலவு வானில்
பூத்திருக்கும் வேளையிலும் எண்ணம் எல்லாம்
பொன்னாழி, புரிசங்க ஆழி யான்பால்
கோத்திருந்தான். நாரணன்பேர் உள்ளம் எங்கும்
குடியிருக்கச் சேர்த்திருந்தான் செயல் மறந்தான்.

( தொடரும்)

 

கடைசிப்பக்கம் – ஜெ.பாஸ்கரன்.

வீசாவும் வினய ஆஞ்சனேயரும்!

திரேதா யுகத்திலேயே வானில் பறந்தவர் ஆஞ்சனேயர் – பாஸ்போர்ட், வீசா ஏதுமின்றி இலங்கைக்குள் வான் வழி சென்றவர்!

நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் புஷ்பக விமானம் இராமாயணத்தில் பேசப்படுகிறது – தேவ தச்சரான விஸ்வகர்மாவினால் செயப்பட்டது. குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை, இராவணன் அபகரித்ததாகவும், அதில்தான் சீதையை மண்ணோடு பெயர்த்துக் கவர்ந்து சென்றதாகவும் புராணம் சொல்கிறது! இராவண வதத்திற்குப் பிறகு, விபீஷணன் புஷ்பக விமானம் பற்றி இராமனிடம், “வெள்ளை நிற மேகத்தின் நிறமுடையதும், சூரிய ஒளியில் மின்னுவதும், பாதுகாப்பானதும், அதி விரைவாகச் செல்லக்கூடியதும் (இலங்கையிலிருந்து ஒரே நாளில் அயோத்தியில் சேர்த்துவிடுமாம்!), நினைத்த மாத்திரத்தில் பறக்கக் கூடியதுமானது” என்று சொல்கிறான் என்று வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இன்றைய அதிவிரைவான விமானங்களுடன் ஒத்துப் போகின்ற விவரணைகள் நம்மை வியக்கத்தான் வைக்கின்றன! இராவணன் கடத்திய அதே விமானத்தில், சீதாதேவியை மீட்டு அழைத்து வருகிறார் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி!

எல்லாம் சரி, பாஸ்போர்ட் விசா பிரச்சனைகள் இல்லாத தெய்வப் பிறவிகளா நாம்? சமீபத்தில் கனடா செல்ல விசா கிடைப்பதில் சிறிய சிக்கல் – ஒருவரின் பாஸ்போர்ட் காலாவதியாவதுடன் (expiry க்கு சரியான தமிழ்தானே?), அவரது கனடா விசாவும் முடங்கிவிடுகிறது – மீண்டும் முதலிலிருந்து விண்ணப்பிக்க வேண்டும்! யூ எஸ் போன்ற நாடுகளின் விசா, பாஸ்போர்ட் ஆயுளையும் தாண்டி, அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்!

என் பாஸ்போர்ட் புதுப்பித்த போது, கனடா விசாவுக்கு விண்ணப்பித்தேன் – ‘பயோமெட்ரிக்ஸ்’ என்னும் கைரேகைப் பதிவுக்கும் சென்று வந்தேன். இனி அவர்கள் என் பாஸ்போர்ட்டை வரவழைத்து, அதில் கனடா விசாவுக்கான ஸ்டாம்ப் (முத்திரை) பதிக்க வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறேன் ……

இதற்குள், கொரோனா பேண்டமிக் எல்லாவற்றையும் போல் கனடா இமிக்ரேஷனையும் முடக்கி வைத்தது – எனக்கு விசா எப்போது வரும் என்று தெரியவில்லை! அதற்குள், குடும்ப சுழல் காரணமாக எனக்கு யூஎஸ் மற்றும் கனடா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட… ஈமெயில், போன் கால்கள், கடிதங்கள், விசாரிப்புகள் எல்லாம் கிணற்றிலிட்ட கல்!

பூவிருந்தவல்லி தாண்டி, பெரிய ‘மோட்டல்’ எதிரே வடக்கே திருப்பதி நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டு கிமீ பயணித்தால் வருவது திருமேழிசை. ஊரைப்பற்றியும், திருமேழிசை ஆழ்வார் பற்றியும், அமர்ந்த கோலத்தில் உள்ள ஜெகன்னாத பெருமாள் தல வரலாறு பற்றியும், அவரது கட்டை விரலில் உள்ள ‘கண்’ பற்றியும் பேச ஆரம்பித்தால், கனடாவிற்கு நடந்தே போனால் ஆகும் நேரமாகிவிடும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன் (மற்றொரு வியாசத்தில் முயற்சிக்கலாம்!).

‘மஹீசார க்‌ஷேத்ரம்’ – துவாபர யுகத்தில் பூலோகம் முழுவதையும் ஒரு பக்கத்திலும், மறு பக்கத்தில் திருமேழிசையையும் வைத்தால், திருமேழிசை ஒரு நெல்மணி அளவு (? 1 கிராம்) எடை கூடுதலாக இருக்கும் பெருமை உடையதாம்! ஒரு சமயம் பிரம்மாவுக்கு, திருப்பதி வேங்கடேசப் பெருமாள், இந்த ஊரில் உட்கார்ந்த கோலத்தில் தரிசனம் கொடுத்ததாக ஒரு புராண வரலாறு கூறுகிறது, பெரும்பாலும் மஹா விஷ்ணு நின்ற கோலத்திலும் (திருப்பதி), கிடந்த கோலத்திலும் (ஶ்ரீரங்கம்) அருள்பாலிப்பது வழக்கம். ஶ்ரீதேவி, பூதேவி இருபுறமும் இருக்க, உட்கார்ந்திருக்கும் கோலத்தில் மூலவர் இருக்கும் இந்தக் கோயில் (ஜெகன்னாத பெருமாள் கோயில் அல்ல) ஶ்ரீவீற்றிருந்த பெருமாள் தெவஸ்தானத்தைச் சேர்ந்தது. கிரீடத்தில் நான்கு லட்சுமிகளையும் சேர்த்து, அஷ்ட லட்சுமிகளுடன் அருள்பாலிக்கும் பெருமாள் “வீற்றிருந்த பெருமாள்” – தூய்மையாகவும், அமைதியாகவும், ஆளுயர உண்டிகளில்லாமலும் உள்ள இந்தக் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப் படுகிறது – ஶ்ரீசெண்பகவல்லித் தாயார், ஆண்டாள், லக்‌ஷ்மி நரசிம்மர், வரதராஜப் பெருமாள், ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள முனிகள், திருமேழிசை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார் சன்னதிகளும் உண்டு – இவர்களுடன் ஶ்ரீ வினய ஆஞ்சனேய ஸ்வாமி – விசா ஆஞ்சனேயர் – சன்னதியும் இருக்கிறது!

ஶ்ரீவினய ஆஞ்சனேயர் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்; வராஹமுக ஆஞ்சனேயர்; வரப்ரசாதி; புதிதாகக் கட்டப்பட்டுள்ள சன்னதியில் அருள் பாலிக்கும் இவர் கடன் தொல்லைகளையும், விஷ ஜுரம், ஜுர ரோஹம் போன்றவைகளையும் தீர்த்து வைப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது – “வைத்தியருக்கெல்லாம் வைத்தியர்” என்றும் போற்றப் படுகிறார்! திருமணமாகாத பெண்கள் ஆறுவாரம் பிரார்த்தனை செய்தால் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் உண்டு! இவரை வழிபட்டால், வெளி நாடுகளுக்கு வீசா கிடைப்பதில் உள்ள தடங்கல்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது – வீசா ஆஞ்சனேயர்!

மூன்று முறை மறுத்த யூஎஸ் விசா என் நெருங்கிய உறவினருக்கு, இங்கு வந்து சென்றபின் உடனே கிடைத்தது என்பதையும், தூரத்து உறவினர் ஒருவருக்கு, இங்கு வந்து சென்றபின் ஆஸ்திரேலியா விசா எதிர்பாராமல் விரைவில் கிடைத்தது என்பதையும் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்!

என் கனடா வீசாவுக்காக திருமேழிசையும் சென்று வந்தேன். வீசா வேண்டாத போதும், வீற்றிருந்த பெருமாளையும், வினய ஆஞ்சனேயரையும் பல முறை சேவித்திருக்கிறேன் – டயமண்ட் கல்கண்டு, புளியோரை, துத்தியொன்னம்,அக்காரவடிசில் போன்ற பிரசாதங்கள் கிடைக்கும் – பிரசாதமாக, விற்பனைக்கல்ல! நம்மாலாகாத ஒரு காரியத்துக்கு, யாரையாவது நம்பித்தானே ஆகவேண்டும்!

முன்பே வாங்கியிருந்த யூஎஸ் விமான டிக்கட், மாற்ற முடியாத நிலையில் (மீண்டும் மாற்றினால் ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் மேல் இழக்க வேண்டி வரும்!), கனடா விசா வராத நிலையில் யூஎஸ் வந்துவிட்டேன்.

ஒரே குழப்பம் – விசா ஸ்டாம்ப் பதிக்க பாஸ்போர்ட்டை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது இங்கேயே யூ எஸ் ல் வாங்கிகொள்ளலாமா? நேரில் கனடா இமிக்ரேஷன் போக வேண்டுமா? இந்தியாவுக்குத் திரும்பி வந்து விசா வாங்க வேண்டுமா?

கடைசியாக, விசா கொடுக்க, கனடா என்பசியிலிருந்து அழைப்பு வந்துவிட்டது! இங்கேயே யூ எஸ் லேயே ஸ்டாம்ப் பதிக்கலாம் என்றும் வந்து விட்டது!

பாஸ்போர்ட் அனுப்பிவிட்டு, விசாவுடன் திரும்பி வரும்வரை, ஶ்ரீவினய ஆஞ்சனேயரை – விசா ஆஞ்சனேயரை – நினைத்துக்கொண்டு இருப்பது மட்டும்தான் செய்ய முடியும்!