அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா?
‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ – தங்கப்பதுமை படத்தில் சிவாஜி, டி ஆர் ராஜகுமாரி நடிக்க, டி எம் எஸ், பி லீலா பாடும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் (விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை) ’முகம்’ பற்றிய சிந்தனைகளைக் கிளறியது! முகம் உண்மையிலேயே அகத்தில் எழும் உணர்ச்சிகளைக் காட்டும் கண்ணாடிதான் – மேலும் முகம் ஒருவரின் குணத்தையும் குறிக்கக் கூடியது (ஒருவரது ‘மற்றொரு முகம்’ – மற்றொரு குணம்!) என்ற சிந்தனையைக் கொடுக்கிறது பட்டுக்கோட்டையார் பாடல்!
முகம் என்பது ‘முகத்தல்’, ‘முகர்தல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த காரணப்பெயர் – வதனம் என்னும் சொல்லும் முகத்தையே குறிக்கிறது – ‘வதனமே சந்திர பிம்பமே’ என்ற பாகவதர் பாட்டில் வரும் அதே வதனம்தான்!
ஒவ்வொருவருக்கும் அவரது முகம் பிரத்தியேகமானது. முகங்களைச் சரியாக அடையாளம் காணும் பகுதி மூளையின் டெம்பொரல் மற்றும் ஆக்சிபிடல் மடல்களில்(Lobes) உள்ள நியூரான்களின் வேலையே. இவை விபத்துகளிலோ, கட்டி,
ஸ்ட்ரோக் போன்றவைகளாலோ பாதிக்கப் படும்போது, தெரிந்த முகங்களை அடையாளம் காணமுடியாமல் போகலாம் – இதற்கு ‘ப்ரோசோபக்னோசியா’ (Prosopagnosia) என்று பெயர். கண்ணாடியில் பார்த்து, உங்களையே ‘இது யார்?’ என்று கேட்டுக்கொள்ளும் நிலை வரலாம்!
முகத்தில் சின்னச் சின்னதாக 43 தசைகள் இருக்கின்றன என்பது சிலருக்குச் செய்தியாக இருக்கக் கூடும்! முகபாவங்களில் காட்டப்படும் உணர்ச்சிகளுக்கும், வார்த்தைகள் இல்லா மெளன மொழிக்கும் இவையே காரணம்! மகிழ்ச்சி, கோபம், வீரம், அச்சம் போன்ற முகபாவங்களுக்கு (21 என்கிறது கூகிள்சாமி!) இந்தத் தசைகளின் ஒருங்கிணைந்த அசைவுகளே காரணம். மூளையின் டெம்பொரல் மடலின் ‘ஃப்யூசிஃபார்ம் கைரஸ்’ என்னும் அடுக்கில் இந்த உணர்ச்சிகளின் கண்ட்ரோல் உள்ளது. மனதின் உணர்ச்சி நிலைக்கேற்ப, முகத்தில் சிரிப்போ, கோபமோ, வருத்தமோ தெரிகிறது! எனக்குத் தெரிந்து முகத்தின் 43 தசைகளையும் சரியான விகிதத்தில், உபயோகித்தவர் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே!!
ஒருவருடைய முகம், அவருடைய குணாதிசயங்களை – Character – காட்டுமா? அரிஸ்டாடில் காலம் முதல் இந்தக் கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. முகத்தைப் பார்த்து, குணங்களையும், குலம் கோத்திரங்களையும் கூறுகின்ற அறிவியல் ‘ஃபிஸியோக்னோமி’ (Physiognomy) எனப்படுகிறது. ஆனால், என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா அகராதி, இதனை ஒரு ‘போலி அறிவியல்’ (Pseudoscience) என்கிறது – நம்ம ஊர் கைரேகை சாஸ்திரம், கிளி ஜோசியம் போன்ற, ‘முக ஜோஸியம்’ என்பதைப் போல சித்தரிக்கின்றது.
ஜப்பானியர்கள், முகத்தின் மேல் பகுதி உடல் மற்றும் ஆவியின் நிலையையும், நடுத்தரப் பகுதி (புருவம் முதல் மூக்கின் நுனி வரை) மனநிலையையும், கீழ்ப் பகுதி (மேல் உதடு முதல் கன்னம் வரை) ஒரு நபரின் தன்மையையும் பிரதிபலிப்பதாகக் கருதுகின்றனர்!
பெரிய மண்டை அறிவு ஜீவியையும் , பரந்த நெற்றி புத்திசாலித்தனத்தையும், நல்ல தீர்க்கமான தாடை மன உறுதியையும், கண்கள் மன அழகையும், அழகில்லாத பற்களும், தோலும் கெட்ட குணங்களையும் காட்டுவதாக ஒரு கருத்து உண்டு. இது உண்மையா, பொய்யா என்று தெரியாது; ஆனால் முகத்தைப் பார்த்து, ஒருவரை எடை போடுவது என்பது ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில், கவுண்டமணி, கிரேசி மோகனைப் பார்த்துப் பேசுவதாக சுஜாதா எழுதியுள்ள ஒரு டயலாக், இதன் அடிப்படையில்தான் என்று நம்பலாம்.
பலவிதமான புருவங்கள் (இப்போது இது சாத்தியமில்லை – எல்லாப் புருவங்களும் அழகிய ‘வில்’லாய் செதுக்கப் படுவதால்!), கண்கள், மூக்குகள் (மேல் நோக்கி தூக்கிய மூக்கு கோபக்காரர் என்கிறது – கூர்மையான மூக்கு அறிவாளி என்கிறது), தாடை, உதடுகள், காதுகள், முடியின் நிறம் போன்றவற்றின் அமைப்பு, ஒருவரின் குணாதிசயங்களைச் சொல்லக்கூடியவை என்பது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், இவற்றில் பல பரம்பரையாக – Hereditory – வரக்கூடும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அப்படியே சில குணாதிசயங்களும்!
முகத்தில் கண்கள் சொல்லும் செய்திகள் நிறையவே இருக்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்! கருவிழிகளை விட, நிறம் சிறிது குறைவாக உள்ள கண்விழிகளைக் கொண்ட பெண்களுக்கு வலிகளைத் தாங்கும் சக்தி கூடுதல் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. அடர்ந்த பழுப்பு நிறம் கொண்ட விழிகளைக் கொண்டவர்கள் இயற்கையிலேயே தலைவர்களாகக் கூடியவர்கள் என்கிறார் எடின்பரோவைச் சேர்ந்த சைக்காலஜிஸ்ட், அந்தோணி ஃபல்லோன்! பெரிய கண்கள் உடையவர்கள் மகிழ்ச்சியாகவும், திறந்த மனமுடையவர்களாகவும், கலைத் திறன் உடையவர்களாகவும் இருப்பார்களாம். அதனால்தான் ‘கண்களை நம் ஆன்மாவின் ஜன்னல்கள்’ என்கிறார்கள்! ‘ “Watch closely the eyes of him who bows the lowest” (அதிகப் பணிவுடன் இருப்பவனின் கண்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்) என்கிறது ஒரு போலந்து நாட்டுப் பழமொழி! கண்களில் கள்ளம் இருக்கலாம்!
தீ விபத்திலோ, கேன்சர் ஆபரேஷனினாலோ மாறிய முகங்களைப் பார்க்கத் தயங்குவது, அவர்கள் முகத்தைப் படிக்க முடியாததனால்தான் என்று உளவியல் செய்தி சொல்லுகின்றது.
‘போட்டோஜெனிக்’ முகம் -கண்கள், உதடுகள், மூக்கு எல்லாம் அமைப்புடன் symetrical ஆக இருந்தால் புகைப்படங்களில் நன்றாக வரும் முகம்! படம் எடுக்கும் போது, போட்டோகிராஃபருடன் சண்டை ஏதும் இல்லாதிருப்பது நல்லது. நல்ல காமெரா, லைட்டிங் எல்லாம் முகத்தை அழகாகக் காட்டும்! மற்றபடி போட்டோவுக்கும், குணங்களுக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை!
ஆஸ்திரேலியாவின் ஆலன் ஸ்டீவ்ஸ், சைக்காலஜிஸ்ட், முக வசீகரத்தை வைத்து, 7 குணநலன்களைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார். அகலமான முகம் உள்ளவர்கள் தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள் என்கிறார். கண்களின் அளவு, இடையே உள்ள தூரம், மூக்கின் நீள அகலங்கள், உதடுகளின் அமைப்பு, தலையின் வடிவம் இவற்றையும், அவர்களது குணநலன்களையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். சுவாரஸ்யமான கட்டுரை, வாசித்துவிட்டு வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்களின் முக ராசியை ஆராயலாம்!
பொதுவாகவே அழகான முகம் உடையவர்கள் மனமும் அழகாக இருக்கும் என்று ஏதோ கட்டுரையில் படித்த ஞாபகம். இதையே சோ அவர்களும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இரண்டு வழியிலும் விதிவிலக்குகள் உண்டு என்பதுதான் உண்மை!
அறிவியல் பூர்வமாக இல்லாவிட்டாலும், சில முகங்கள் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துவிடும். அவர்களது குணங்களும். இப்படிப்பட்ட முகம்தான் வேண்டும் என்று நாம் கேட்டுப்பெற முடியாது (சில சினிமாக்களில் இது சாத்தியம்!). ஆனால் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் கொண்டு நல்லனவற்றையே சிந்திக்கமுடியுமானால், நம் முகம் எப்போதும் அழகாகப் பிரகாசிக்கும் என்பதை நான் நம்புகிறேன்.
“At fifty everyone has the face he deserves” – Orwell.
(‘The human face reconsidered’ by John Brophy,
‘Reading faces’ by Leopolo MD & Samm Sinclair – வாசிக்கலாம்!)
அருமையான கட்டுரை. அதற்கேற்ற அழகான எம்ஜிஆர் முகம். நன்றி டாக்டர் சார்.
LikeLike
மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை, முகம் மனத்தின் கண்ணாடி (FACE IS THE INDEX OF THE MIND) என்ற சொல்லப்படுவதுண்டு. குழந்தைகளுக்கான கதைகளில் இந்து, நந்தா இருவருக்குமே சொன்ன கதை, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, அழகற்ற முகம் என்பது. வீட்டுக்கு வரும் விருந்தினர் கதவு தட்டும்போது, எட்டிப் பார்த்துவிட்டு, பார்க்க சகிக்கவில்லை என்று அஞ்சி ஓடி ஒளிந்து கொள்கின்றனர் சிறுமியும் அவள் தம்பியும். பிறகு அம்மா வந்து திறக்கிறாள்,
இவர்களோ தவிக்கின்றனர், வந்திருப்பவர் திருடராக இருக்குமோ, மோசமான மனிதரோ யாரோ, ஏன் தான் அம்மா திறக்கிறாள் கதவை என்று… அம்மாவோ அவரை உற்சாகமாக வரவேற்றுக் குழந்தைகளை அழைத்து அறிமுகம் செய்விக்கிறாள், அப்பாவின் உற்ற நண்பர் என்று, அவரும் கொண்டு வந்த அழகழகான பரிசுப்பொட்டலங்களை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி அன்பு செலுத்துகிறார், அம்மா, பின்னர் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்கிறாள், முகத்தைப் பார்த்து முடிவு செய்யக் கூடாது என்று!
நல்ல அலசல், உங்கள் கட்டுரை…
அது சரி, முகத்தில் முகம் பார்க்கலாம் என்றால், சிவாஜியின் முகத்தை, எம் ஜி ஆர் முகத்தில் பார்த்துக் கொள்ளவா?
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike
அப்படியில்லை.. ஓர் அழகான முகத்திற்காக எடிட்டர் போட்டிருக்கலாம்! முகத்தில் முகம், ஒரு மனிதனுக்குப் பல முகங்கள் – குணங்கள் – இருப்பதை குறிப்பதாஅத் தோன்றியது. ‘எனக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்று சொல்வதைப் போல!!
LikeLike
வ.வே.சு வைக் கேளுங்கள் பகுதி மிக சுவாரஸ்யமாக இருந்தது. பதில்கள் யதார்த்தமாகவும் , பொருள் பொதிந்ததாகவும், அறிவு சார்ந்து அமைந்தது அருமை.
திரு S.L.நாணு அவர்களின் ” மதிற்சுவர் ”
சிறு கதை சிந்தனையை தூண்டுவதாக அமைந்தது.பாராட்டுக்கள்
LikeLike