மொழிபெயர்ப்பு : ரஷ்ய சிறுகதை
மூலம் : பியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fyodor Mikhailovich Dostoevsky
தமிழில் : தி.இரா.மீனா
அந்தச் சிறு அனாதை
(The Beggar Boy of Christ’s Christmas Tree)
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்பான குளிர் நாளில் அந்தப் பெரிய நகரில் நான் அந்த ஆறுவயது குழந்தையைப் பார்த்தேன். ஆறுவயதை விடக் கூட குறைவாக இருக்கலாம். தெருவில் பிச்சை எடுக்க அனுப்ப முடியாத அளவுக்கு சிறிய குழந்தை. ஆனால் இன்னும் ஓரிரு வருடங்களில் கண்டிப்பாக அவன் விதி பிச்சை எடுப்பதாகத்தானிருக்கும்.
ஈரமான நடுக்குகிற நிலவறையில் ஒரு நாள் காலையில் அவன் கண் விழித்தான். அழுக்கான ஆடையால் சுற்றப்பட்டிருந்த போதிலும் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். வெள்ளை ஆவி போல அவன் மூச்சு வந்து கொண்டிருந்தது ; ஒரு பெட்டி மேல் உட்கார்ந்திருந்தான்.நேரத்தைக் கடத்துவதற்காக அவன் வாயிலிருந்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.அது வெளியேறுவதை ஒரு வேடிக்கை போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிகமாகப் பசித்தது. காலையிலிருந்து வைக்கோல் படுக்கையில் சீக்காய்ப் படுத்திருந்த அம்மாவின் அருகே போக அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் தலை தலையணைக்கு பதிலாக துணிமூட்டையில் கிடந்தது
அவள் அங்கே எப்படி வந்தாள்? வேறு எங்கிருந்தோ அங்கு வந்த அவள் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும்.அந்த மோசமான விடுதியின் முதலாளி இரண்டு நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கிறான். இன்று விடுமுறை நாள்.மற்ற குடியிருப்புக்காரர்கள் வெளியே போயிருக்கின்றனர். ஒருவர் மட்டும் விடுமுறைக்காகக் காத்திருக்காமல் இருபத்து நான்கு மணி நேரமாக குடிபோதையில் படுக்கையில் கிடக்கிறார்.
இன்னொரு மூலையில் எண்பது வயதான கிழவி மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடக்கிறாள். குழந்தைகளின் செவிலியாக அவள் எங்கேயோ வேலை பார்த்தவள்; இப்போது தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள். புலம்பியும், முனகியும், உறுமியும் அந்தச் சிறிய குழந்தையை பயமுறுத்துகிறாள்.அவள் தொண்டையிலிருந்து வரும் கடகட ஒலியால் அந்தச் சிறுவன் அவள் அருகே வர பயப்படுகிறான். நடை வழியில் குடிப்பதற்கு ஏதோ இருப்பதை அவன் கண்டுபிடித்தாலும், கைநீட்டி அவனால் அதைத் தொட முடியவில்லை பத்தாவது முறையாக அவன் தாயின் அருகே நகர்ந்து அவளை எழுப்பப் பார்க்கிறான். இருளில் நடுங்கிப் போகிறான்.
இருட்டு வந்து விட்டதெனினும் விளக்கேற்ற யாரும் வரவில்லை.உற்றுப் பார்த்து அம்மாவின் முகத்தை அறிகிறான். அவளிடமிருந்து எந்த அசைவு மில்லை. சுவரைப் போல அவள் குளிர்ந்து கிடந்தாள்.
“மிகவும் குளிராக இருக்கிறது” அவன் நினைத்தான்.
அசையாமல் சிறிதுநேரம் இருந்தான். சவத்தின் தோள்மீது அவன் கையிருந்தது .தன் கைவிரல்களை உஷ்ணப்படுத்திக் கொள்ள அவன் வாயால் ஊதினான்.அப்போது படுக்கையில் கிடந்த தன் குல்லாவைப் பார்த்து விட்டான். கதவை பார்த்தான். விடுதியின் தரைத்தளத்தில் அவர்களிருந்தனர்.
பக்கத்து வீட்டு கதவருகே இருந்து இருபத்து நான்கு மணி நேரமும் நாய் குரைத்துக் கொண்டிருக்கும். அதைக் கண்டு பயமில்லாமலிருந்தால் அவன் அங்கு போயிருப்பான்.
ஓ! என்ன நகரம்! இதைப் போல அவன் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவன் இருந்த இடத்தில் கும்மிருட்டாக இருக்கும். அந்த முழு வீதிக்கும் ஒரு விளக்குத்தான். சிறிய தாழ்வான மரவீடுகள், எப்போதும் ஷட்டர் போட்டு மூடப்பட்டிருக்கும் ; இந்த நேரத்திலேயே இருட்டத் தொடங்கிவிடும். யாருமிருக்க மாட்டார்கள். எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி விடுவார்கள்; நாய்கள் கூட்டம் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருக்கும். நூறு ,ஆயிரம் என்று அவை இரவு முழுவதும் ஊளையிட்டுக் கொண்டும், குரைத்துக் கொண்டுமிருக்கும்.ஆனாலும் அங்கு மிக வெதுவெதுப்பாக இருக்கும்! சாப்பிட ஏதாவது கிடைக்கும்.இங்கு… சாப்பிட ஏதாவது கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்! சத்தம் என்றால் இங்கே பரபரப்புத்தான்.. என்ன அற்புதமான விளக்கு,மனிதர்கள் கூட்டம்! குதிரைகள்..வண்டிகள்! அதோடு குளிர் .. குளிர்..! களைப்பான குதிரைகளின் உடல்களில் அழுக்கு படிந்திருக்கும். மூக்குகளிலிருந்து உஷ்ணமான காற்று வரும்.அவற்றின் கால்கள் மென்மையான பனியில் படியும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் எப்படி தள்ளிக் கொள்கிறார்கள்! “ஓ!இப்போது சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் கூட எவ்வளவு நன்றாயிருக்கும்.அதனால் தான் என் விரல்கள் வலிக்கின்றன.”
II
ஒரு போலீஸ்காரன் தலையைத் திருப்பிக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூடாதென அந்த இடத்தைக் கடந்தான்.
இங்கு இன்னொரு வீதி இருக்கிறது. ஓ!எவ்வளவு அகலமானது!இங்கே நான் நசுங்கிச் செத்து விடுவேன். எப்படி எல்லோரும் கூப்பாடு போடுகிறார்கள். ஓடுகிறார்கள், உருள்கிறார்கள்! விளக்கு..விளக்கு! அது என்ன? ஓ! எவ்வளவு பெரிய கண்ணாடி ஜன்னல்! ஓர் அறை, அந்த அறையின் கூரையைத் தொடுமளவுக்கு ஒரு மரம்; அது கிறிஸ்துமஸ் மரம். மரத்தினடியில் எவ்வளவு விளக்குகள்! தங்கக் காகிதங்கள், ஆப்பிள்கள் ! சுற்றிலும் அழகான பொம்மைகள், சிறிய குதிரை வண்டிகள்.. சிரித்தும் ,விளையாடியும், சாப்பிட்டுக் கொண்டும் அழகான உடையணிந்த சுத்தமான குழந்தைகள்.ஒரு சிறிய பெண் குழந்தை ஒரு சிறுவனோடு நடனமாடுகிறாள்.எவ்வளவு அழகாயிருக்கிறாள் அவள்! அங்கிருந்து இசையும் கேட்கிறது. கண்ணாடியின் வழியாக நான் கேட்கிறேன்.
அந்தக் குழந்தை ரசிக்கிறான்.. சிரிக்கவும் செய்கிறான்.அவன் இப்போது தன் விரல்களிலோ ,பாதங்களிலோ எந்த வலியையும் உணரவில்லை.கை விரல்கள் சிவப்பாகி விட்டன. அவற்றை அசைப்பது வேதனையாக இருக்கிறது; அவைகளை இனி மடக்க முடியாது. ஒரு நிமிடம் அழுகிறான். பிறகு நடந்து மற்றொரு அறையில் உள்ள ஜன்னலருகே போகிறான் அவன்அங்கும் மரங்களைப் பார்க்கிறான். மேஜையின் மேல் கேக்குகள், சிவப்பு மற்றும் மஞ்சள் பாதாம் பருப்புகள் போன்றவை இருப்பதைப் பார்க்கிறான். நான்கு அழகான பெண்கள் அங்கிருக்கின்றனர். யார் வந்தாலுமவர்களுக்கு கேக் கொடுக்கின்றனர்; ஒவ்வொரு நிமிடமும் கதவு திறக்க மனிதர்கள் வந்தவண்ணமிருக்கின்றனர்.அந்தச் சிறுவன் தவழ்ந்து முன்னே போய் திடீரெனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். ஓ! அவன் உள்ளே போன போது அவனைப் பார்த்தவுடன் எத்தனை சப்தம்..குழப்பம்! உடனடியாக ஒரு பெண் எழுந்து வந்து ஒரு கோபெக்கை {நாணயம்}.அவன் கையில் வைத்தாள். வெளியே வருவதற்கு வாசல் கதவைத் திறந்து விட்டாள்.அவன் எப்படி பயந்து போனான்!
III
அந்த கோபெக் அவன் கையிலிருந்து தவறி மாடிப்படியில் உருண்டது.அந்த நாணயத்தை கெட்டியாகக் கையில் அவனால் பிடித்துக் கொள்ள முடிய வில்லை.அவன் வெளியே வேக வேகமாக நடக்கிறான்.அவன் எங்கே போகி றான்? அவனுக்குத் தெரியவில்லை.அவன் ஓடிக் கொண்டே இருக்கிறான். கைகளை ஊதிக் கொள்கிறான்.அவன் கஷ்டத்திலிருக்கிறான். அவன் தனியாக உணர்கிறான்,பயமாக இருக்கிறது! திடீரென இது என்ன ! கூட்டமாக மக்கள் நின்றுகொண்டு ரசித்தபடியிருந்தனர்.
“ஒரு ஜன்னல்! கண்ணாடியின் பின்னால், சிவப்பு மற்றும் மஞ்சள் உடைகளில் உயிருடன் இருப்பது போலவே மூன்று அழகான பொம்மைகள்! உட்கார்ந்திருந்தன. வயதான மனிதன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். வேறு இரண்டு பேர் நின்று கொண்டு இசைக்குத் தகுந்தவாறு தலையாட்டி வயலின் வாசித்தார்கள்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உதடுகளை அசைத்தனர்.அவர்கள் உண்மையில் பேசுகிறார்களா? கண்ணாடி மூலமாக அவர்கள் பேசுவது மட்டும் கேட்கவில்லை.”
IV
அவன் திடீரென யாரோ பறிப்பது போல உணர்கிறான்..ஒரு பெரிய வலிமையான பையன் அவனருகே நின்று கொண்டு தலையில் ஓர் அடி கொடுத்து அவன் தொப்பியைப் பறித்துக் கொள்கிறான்.
அவன் கீழேவிழுகிறான். அதே சமயத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்கிறது; அவன் பயத்தால் ஓரிரு கணம் அசையமுடியாமலிருக்கிறான். பிறகு மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டெழுந்து ஓடுகிறான். நீண்ட தூரம் குறுக்குப் பாதையில் ஓடி மரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய முற்றத்தில் ஒளிந்து கொள்கிறான். மூச்சு விடுவது கூட கஷ்டமாகிறது.
திடீரென அவன் மிக வசதியாக உணர்கிறான்.அவனுடைய சிறிய கைகளிலும்,காலகளிலும் எந்த வலியுமில்லை; ஒரு அடுப்பின் அருகே இருப்பது போல அவன் வெம்மையாக உணர்கிறான். அவனுடல் நடுங்குகிறது.
“ஓ! நான் தூங்கப் போகிறேன்! தூங்குவது எவ்வளவு அற்புதமானது! சிறிது நேரம் இங்கிருந்து விட்டு பிறகு மீண்டும் அங்கு போய் அந்தச் சிறிய பொம்மைகளைப் பார்ப்பேன்.” அந்தச் சிறுவன் தனக்குள் சொல்லிக் கொண்டு சின்ன பொம்மைகளைப்பற்றி நினைத்துச் சிரித்துக் கொண்டான். “அவைகள் உயிருடன் இருப்பது போலவே இருக்கின்றன!”
பிறகு அவனுக்கு அம்மா பாடுவது கேட்டது.“அம்மா! நான் தூங்கப் போகிறேன். இங்கு தூங்குவது எவ்வளவு அருமையானது!”
“கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வா” என்று ஒரு மென்மையான குரல் கேட்டது.
அது தன் அம்மாவாக இருக்கவேண்டுமென்று முதலில் நினைத்தான்; ஆனால் அது அம்மாவல்ல. அப்படியானால் யார் அவனைக் கூப்பிடுவது?அவனால் பார்க்கமுடியவில்லை ஆனால் யாரோ ஒருவர் இருட்டில் குனிந்து தன்னைத் தழுவித், தோளில் தூக்கிக் கொள்வதாக உணர்கிறான்; அவன் தன் கையை விரிக்கிறான். உடனே.. ஓ..! என்ன வெளிச்சம்! என்ன ஓர் அருமையான கிறிஸ்துமஸ் மரம்! இல்லை, இது கிறிஸ்துமஸ் மரமில்லை; இது போல அவன் பார்த்ததேயில்லை.
அவன் இப்போது எங்கேயிருக்கிறான்? எல்லாம் பிரகாசமாக இருக்கிறது, எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது, சுற்றி பொம்மைகள் இருக்கின்றன. ஆனால்..இல்லை, பொம்மைகள் இல்லை. சிறுவர்கள், சிறுமிகள்; அவர்கள்தான் மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்கள். அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி வந்து நிற்கின்றனர். அவர்கள் பறக்கின்றனர். அவனை அணைத்துக் கொள்கின்றனர்; அவனைத் தூக்கிக் கொள்கின்றனர்.அவனும் பறக்கிறான். அம்மா தன்னைப் பார்ப்பதையும், மகிழ்ச்சியாகச் சிரிப்பதையும் பார்க்கிறான்.
“அம்மா !அம்மா! இங்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது!” சிறுவன் அவளிடம் சொல்கிறான்.
அவன் குழந்தைகளை அணைத்துக் கொள்கிறான்.கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னாலிருக்கிற பொம்மைகளைப் பற்றி அவர்களிடம் சொல்ல விரும்புகிறான். “நீங்களெல்லாம் யார்?” அன்பாகக் கேட்கிறான்.
இது இயேசுவிடமிருக்கிற கிறிஸ்துமஸ் மரம். தங்களுக்கு என்று எதுவுமே இல்லாத குழந்தைகளுக்காக இயேசு எப்போதும் வைத்திருக்கிற மரம் அது.
அங்குள்ள சிறுவர், சிறுமியர் எல்லோரும் அவனைப் போன்றே இறந்தவர்கள் என்று தெரிந்து கொண்டான்.சிலர் செயின்ட் பீட்டர்பர்க் நகரத்தின் பொது இடங்களில் கூடைகளில் வைத்து கைவிடப்பட்டவர்கள்; சிலர் பசியால் செத்தவர்கள்.இங்கிருக்கும் எல்லோரும் சின்ன தேவதைகள். கிறிஸ்துவுடனிருப்பவர்கள், அவரும் அவர்களில் ஒருவராகத்தானிருக்கிறார். தன் கைகளை அவர்கள் மேல் விரித்து, அவர்களையும் அவர்களின் பாவப்பட்ட தாய்களையும் ஆசீர்வதித்து..
அந்தக் குழந்தைகளின் தாயரும் அங்கிருக்கின்றனர்.அழுகின்றனர்.
தங்களுடைய மகன் அல்லது மகளை அடையாளம் கண்டு அவர்களருகே போய்த் தழுவிக் கொள்கின்றனர்; தாயரின் கண்ணீரைச் சிறுகைகளால் துடைக்கின்றனர்.அழவேண்டாமென்று கெஞ்சுகின்றனர்.
கீழே ,பூமியில் காலையில் அந்த விடுதியின் காவலர் குழந்தையின் சடலத்தை முற்றத்தில் பார்க்கிறார். அது மரக் குவியல்களுக்குப் பின்னால் விறைத்தும், இறுகியும் கிடக்கிறது.
தாயும் அங்கேயே கிடக்கிறாள். அவள் அவனுக்கு முன்னால் இறந்து விட்டாள்; கடவுளின் சந்நிதானத்தில் அவர்கள் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
———————-
ரஷ்ய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படும் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1821 –1881) தத்துவம், உளவியல்,மதம் உள்ளிட்ட துறைகளை முன்வைத்து சிறுகதை நாவல்கள் எழுதியவர். Crime and Punishment, The Idiot, Demons , The Brothers Karamazov ஆகியவை அவருடைய அற்புதமான படைப்புகளில் சிலவாகும். யதார்த்தமே அவரது எழுத்தின் சிறப்பம்சமாகும்.
மனதை உருக்கும் / உலுக்கும் கதை; அருமையான மொழியாக்கம். வாழ்த்துக்கள்!
LikeLike