இவ்வருடம் மார்ச் ஒன்றாம் தேதி மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. ஓதுவதற்கு அரியவனான சிவன், மௌன குருவாக இருக்கையில் பிரும்மத்தை உணர்த்துகிறார். அவரே ஆவுடையுடன் கூடிய லிங்க வடிவத்தில் அருவுருவமாக இருக்கிறார். நம் கண்கள் கண்டு களிக்கவென்றே நடராஜராக ஆடுகிறார். உலகின் மிகச் சிறந்த கலைப்படைப்பு என்று நடராஜத் திரு உருவைத் தயக்கமில்லாமல் சொல்லலாம். ஆன்மீகமும், அறிவியலும் இணையும் அற்புத வடிவம். European Council for Nuclear Research (CERN) முகப்பில் நடராஜரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அது பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) என்று சொன்ன இயற்பியலாளர்கள் கார்ல் (Carl Segan) மற்றும் ஃபிரிட்ஜாப் கேபர் (Fritjob Capro) மேலும் அதைப் பற்றிச் சொல்லும்போது அணுத்துகள்களின் அதி அற்புதமான இயக்கத்தை (dynamism of sub atomic particles) ஆடலரசனின் வடிவமைப்பு எடுத்துக்காட்டுவதாகச் சொல்கிறார்கள்.
நம் மரபிலும் நடராஜ தத்துவம் இயற்பியலின் கூறுகளை உள்ளடக்கிய ஐந்தெழுத்து மந்திரம் என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனின் தாண்டவத்தினால் உலகம் இயங்கிக் கொண்டுள்ளது என்றும் விளக்கம் சொல்வார்கள்.
‘திருவடி நிலையும் வீசுஞ் செய்காலுஞ் சிலம்பு
முழுவளரொளியும் வாய்ந்தவூருமுடுத்த தோலு’
என்று நடராஜ தத்துவப் பாடலில் ந. சுப்ரமண்ய அய்யர் சொல்கிறார்.
‘மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…’
இது நடராஜப் பத்தில் சிவ தாண்டவத்தைத் துதிக்கும் பாடல். ஒவ்வொரு சொல்லும் அவர் ஆடும் நிலையைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு கால்களுள்ள மான் நால் வேதத்தைக் குறிக்கிறது. நால் வேதங்களும் அவர் கையில் அடங்குகிறது.
ஞான உருவான அவர் தீச்சுடரை ஏந்தி வழி காட்டுகிறார்.
நிலவினை இளம்பிறையெனச் சூடியிருக்கிறார். சந்திரன், வளர்வதும் தேய்வதுமான வாழ்வின் இயக்கத்தைச் சுட்டுகிறது.
இந்த உலகம் வளம் பெறுவதற்காக தூயவளான கங்கையை தன் சிரசிலிருந்து பெய்விக்கிறார். அவள் பாய்வதும் இயக்கமே.
சக்தியுடன் இணைந்த சிவன் தனி நடனம் செய்வதில்லை. சக்தியே இயக்கம். சிவகாமி அம்மையுடன் ஆடுகிறார். உமையும் சிவமும் இணைந்த கோலமே அர்த்த நாரீஸ்வரர் மற்றும் லிங்கத் திருக்கோலம். நடராஜ உருவத்தில் அம்மை சக்தியென ஆடுகிறார்.
திருமாலவன் மகிழ்ந்து இந்தக் கூத்தில் இணைகிறார்.
சிவனின் திருமார்பில் இலங்கும் முப்புரி நூலும் அசைந்தாடுகிறது.
மறை ஓதும் வித்தகனாகிய பிரும்ம தேவன் ஆடுகிறார்.
அகில உலகின் அனைத்துக் கோள்களும் தங்கள்
சுழற்சிப் பாதையில் அவர் இயக்கியபடி ஆடுகின்றன.
யானை முகத்தோனாகிய விநாயகர் ஆடுகிறார்.
சிவன் காதுகளில் இருக்கும் குண்டலங்கள் அசைந்தாடுகின்றன.
தண்டை அணிந்த பாதங்கள் ‘தீம், தத்தளாங்கு தக திமி தோம்’ என்ற லயத்தில் ஒலிக்கின்றன.
இடையில் அணிந்த புலியாடை அழகு மிளிர அவன்
ஆட்டத்தில் நிலை குலையாமல் துலங்குகிறது. புலியை ஏன் இங்கே சொல்ல வேண்டும்? விலங்கு உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் நாம் நமசிவாயத்தை நினைக்க வேண்டும் என்பதற்காகவே.
என்றுமே குமரன் அழகன் முருகன். அவனும் நடனத்தில் இணைகிறான்.
ஞானப்பாலுண்ட சம்பந்தர் உள்ளிட்ட அடியார்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம், பதினெட்டு சித்தர்கள், எட்டு திசையின் தேவதைகள் என அனைவரும் அவன் ஆடலினால் இயக்கம் பெறுகின்றனர்.
நந்தி தேவர் மத்தளம் கொட்டி ஆடுகிறார்.
அழகிய மங்கையர் நடனமாடுகின்றனர்.
ஆடலரசே, என்னுடைய வினைகள் முற்றும் தீர்ந்தோட விரைவாக என்னைக் காக்க ஆடி வர வேண்டும் நீ; ஐயனே, சிவகாமியின் அன்பிற்குரியவனே, பொன்னம்பலமாம் சிதம்பரத்தில் ஆனந்த நடமிடும் ஈசனே!
உலகம் இயங்குவதை சிவ நடனம் சுட்டிக் காட்டுகிறது.அவர் காலின் கீழ் முயலகன் இருக்கிறான்.
அண்டங்களின் மையத்தில் அவர் திருப்பாதம் ஒன்றை ஊன்றியிருக்கிறார். இடது பாதம் சக்தியின் பாதம். அத்தனை இயக்கத்திற்கும், ஆற்றலுக்கும் அவளே ஆதாரம் என்று தில்லை அம்பலவாணன் சொல்லாமல் சொல்கிறார்.
படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்து இயக்கங்களையும் மான், மழு, மதி, புனல், மால், ப்ரும்மா, கணபதி, முருகன், சித்தர்கள், தேவர்கள், அடியவர்கள், கோள்கள், அனைத்துப் பிரபஞ்சங்கள் ஆகியவற்றை ஆட்டத்தின் மூலமாகக் குறிப்பிடும் இப்பாடல் தனிச் சிறப்பு வாய்ந்தது.
நின்றது அறிவின்மையின் மீது; தூக்கியது ஆர்க்கும் சிலம்பின் ஒலி; அதனுடன் ஓங்கி ஒலிப்பது டமருகம் என்ற முரசு. அதன் ஒலியில் பிறந்தது தமிழ் எனும் அமுதம் என்று சொல்வார்கள்.
அவர் கழுத்தைச் சுற்றிக் காணப்படும் நாகம், நம்மைப் பாவங்கள் செய்யாதே என்று எச்சரிக்கிறது. அவர் அணிந்திருக்கும் ஐந்து நாக ஆபரணங்கள், ஐந்து பூதங்களைக் குறிக்கும், ஐந்து தொழில்களைக் குறிக்கும், ஐந்து புலன்களையும் குறிக்கும் குறியீடு.
அவரது திருமுகத்தில் இலங்கும் கண்கள் ஆதவனையும், மதியையும் போன்றவை. அவரது நடனத்தில் அலை பாயும் அந்தக் கற்றைக் குழல்கள் சிற்ப ஞானத்தின் அற்புதம். அது மட்டுமல்ல மூவகை ஆகாயத்தைக் குறிப்பதும் அதுவே. நாம் காணும் ஆகாயம், மனோ ஆகாயம் மற்றும் சித் ஆகாயம். வானம், மனம், தகராகாசம் (இதயத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது) என நாம் புரிந்து கொள்ளலாம்.
வா(முகம்)சி (மான்) (மழு) சி
ம (புலித்தோலாடை)
ந (வலது பாதம்)
இதை நீங்கள் ‘நடராஜ’ என்ற சொல்லிற்கும் பொருத்திப் பார்க்கலாம். மேலும் அந்தக் கோடுகளை இணைத்தால் மனக் கண்ணில் அவர் உருவத்தினைப் பார்க்கலாம்.
இருபதாம் நூற்றாண்டில் பருப் பொருட்களின் உள் இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள் வளர்ந்தன. அணுவின் உட்பொருட்கள் தனிப்பட்டவைகளாக இல்லை என்பதையும், பிரிக்கவியலாத செயற்கூறுகளின் உள் வினையாற்றல் என்றும் இயற்பியல் சொல்கிறது. இந்த உட் செயற்பாடுகள் தடங்கலில்லாத சக்தியை உற்பத்தி செய்து, மாற்றி, உருவாக்கி, அழித்து செயல் புரிந்து கொண்டே இருக்கிறது. இந்த உள் இயக்கம் நிலைத்த பருப் பொருளை வடிவமைக்கிறது. நிலைபெற்றுள்ளது எனத் தோன்றினாலும், குறித்த லயத்தில் அவைகள் இயங்குவதால் தான் உலகே இருக்கிறது.
முடிவிலா இந்த ஆடலில் அனைத்தும் நடக்கிறது.
சரக் கோட்பாடு (String Theory) சொல்கிறது: தாள லயத்துடன் இருக்கும் சரங்களால் இந்த உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சரங்களில் இருக்கும் துகள்கள் எதிர்மின்னணு (Electron), குவார்க் (Quark) போன்ற துகள்களைக் காட்டிலும் மிகச் சிறியது. அவை மாறுபட்ட அலைவரிசைகளில் இயங்கி பொருட்களுக்கு அவ்வவற்றிற்கான எடையும், வடிவமும் தருகின்றன.
‘அவர் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ அல்லவா?
பானுமதி.ந