‘’அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு இல்லாதிருத்தல் அரிது” அதிலும் ‘மாதராய்ப் பிறத்தல் மனிதரின் பாக்கியம்’. ‘உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும், உயிரினுக்குயிராய் இன்பமாக்கிடும், உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’, “நடமாடும் சக்தி நிலையம்” “துன்பத்தைத் தீர்ப்பது பெண்மை”, “ஆணும் பெண்ணும் சரி நிகரெனக் கொள்”, “தையல் சொல் கேள்” இப்படி பெண்ணின் பெருமை அளப்பரியது. எல்லா நாளும் பெண்களுடையது என்றாலும் உலகம் மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுவதால், வேறு வேறு துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் எட்டு மகளிர்களை பேட்டி கண்டு அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இதைப் போல அநேகர் இருக்கலாம். அவர்கள்தான் இந்த நாட்டு முன்னேற்றத்திற்கு வழிகாட்டிகள்.
நமது மூவர்ணக் கொடி போல மூன்று வித எல்லைப்படைகள் உள்ளன. அதில் ஒன்றான விமானப் படையில் ஒன்பது வருடங்கள் பணி புரிந்து விருப்ப ஓய்வு எடுத்துள்ளவர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்க்வார்டன் லீடர் சேத்னா குலியா. எம் ஏ (ஆங்கிலம்), எம்பிஏ, பிஎட் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது அரசு பாதுகாப்பு லைசென்ஸ் பெற்று சொந்தமாக ஏஜென்ஸி வைத்து நடத்துகிறார். மேலும் படிப்பு சம்பந்தமாக கன்ஸல்டண்ட்டாகவும், பேச்சாளர்களை ஊக்குவிக்குபவராகவும் இருக்கிறார். ஒரு முறை விமானத்தை ஓட்டும்போது தரை இறங்க முடியாமல் பத்து மணி நேரம் வானத்திலேயே பறந்துள்ளார். விமானப்படையில் பணியாற்றும் இவரது கணவர் ஜம்முவில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது ஒரு வயது குழந்தையுடன் பஞ்ஜாபில் இடிந்து கிடந்த வீட்டை தனியாளாக சரி செய்து குடியேறியுள்ளார். புத்தகத்தில் மூழ்கும் இவர் கடைசியாகப் படித்து ரசித்தது பெங்குவின் பதிப்பகத்தில் சுதாமுர்த்தி அவர்களின் “வைஸ் அண்ட் அதர்வைஸ்”. தன்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ள உண்மை சம்பவத்தைக் கூறி அதனை எப்படி கடப்பது என்று எழுத்தாளர் சொல்வதாகவும், அது ஒருவரது வாழ்க்கை முறையை மேலும் செம்மைப்படுத்துவதாகவும், அறிவு சம்பந்தமாக யோசிக்க வைப்பதாகவும் இவர் உணருகிறார்.
இரண்டாவது முத்து குருக்ஷேத்ரா பல்கலைகழகத்தில் எல்லா செயல்களுக்கும் ஆதாரமாக உள்ள பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த அனுபமா மூர்த்தி. கணவர் விமானப்படையில் வொர்க்ஸ் மற்றும் ஆபேரஷனில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். காஸ் தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் இவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ஹரியானா மாநிலத்தில் 1991 முதல் அடிப்படையான விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். இராஜஸ்தானில் ஜோத்புருக்கு அருகிலுள்ள மிகவும் வெப்பமயமான பலோடி என்ற இடத்தில் இரண்டு மாதக் குழந்தையுடன் ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார். புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள இவரைக் கவர்ந்த புத்தகங்கள் பல இருந்தாலும் பெங்குவின் ராண்டம் பதிப்பகத்தின் குஞ்சன் ஜெயின் எழுதியுள்ள “ஷீ வாக்ஸ் ஷீ லீட்ஸ்” முதன்மையானது என்று கூறுகிறார். இந்தப் புத்தகத்தில் 24 பகுதிகளில் வியாபாரம், விளையாட்டு, நடிப்பு, எழுத்துத்துறை, இவ்வாறு 24 வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களது வெற்றியை நோக்கிப் பயணித்த பாதை ஆழமாக சித்தரிக்கப்பட்துள்ளது என்றும் சுதாமூர்த்தி, இந்துஜெயின், மேரிகோம், மீராநாயர், சானியாமிர்சா போன்றவர்கள் இதில் அடக்கம் என்றும் கூறுகிறார். இந்தப் புத்தகம் ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கும் என்று கூறும் இவர் இதனை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப் புது எண்ணங்கள் தோன்றுகின்றன என்கிறார்.
மூன்றாவது முத்து நர்ஸிங் படித்த ஆர்மியில் வேலை பார்த்த ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கொடா நகரத்தைச் சேர்ந்த மேஜர் மீனாக்ஷி மோகல். விமான தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த நான்கு வயது குழந்தை அதீத காய்ச்சலாலும் வயிறு வலியாலும் துடித்த போது தன் சிறிய குழந்தையை, கணவர் விமானப் படையில் காஷ்மீரில் இருந்ததால், வீட்டில் வேலை செய்யும் ஒரு சிறுமியிடம் ஒப்படைத்துவிட்டு, காப்பாற்றியதை தனது படிப்பிற்கு கிடைத்த, கொடுத்த மரியாதையாக எண்ணுகிறார். புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பௌலோ கோயில்கோ எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஹார்பர் டார்ச் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள “தி ஆல்கெமிஸ்ட்” புத்தகத்தை மிகவும் விரும்புகிறார். இந்தப் புத்தகம் ஒருவரைத் தன்னுள் பார்க்குமாறு செய்கிறது என்றும் அதனால் இது சுய உதவிகரமாக இருக்கும் என்கிறார்.
நான்காவது முத்து குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுப்பதில் பட்டம் பெற்றுள்ள குஜராத்திலுள்ள சூரத் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் உம்மேசல்மாசாக்கேர்வாலா. தனியார் மருத்துவமனையில் பணி புரியும் இவர் ஒரு முறை தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விபத்து நேர்ந்த ஒருவருக்கு சிகைச்சை செய்துள்ளார். அவரது உயிரைக் காத்த இவர் ‘நான் ஒரு தாய் மட்டுமல்ல மருத்துவராக இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையுள்ளவள் ஆவேன்’ என்று தனது பணியின் தன்மையைப் புரிந்து கடமை ஆற்றியுள்ளாள். புத்தகப் புழுவான இவருக்கு மிகவும் பிடித்தது ஆட்ரியா பதிப்பகத்தின் ராண்டா பைய்ர்னே எழுதியுள்ள “தி சீக்ரட்” என்ற நாவல் ஆகும். இந்தப் புத்தகம் அவருக்கு நல்ல சிந்தனையைத் தூண்டுவதாகவும், எந்த ஒரு கடினமான சூழலையும் எதிர் கொள்ள ஆற்றலைத் தருவதாகவும் கூறுகிறார்.
ஐந்தாவது முத்து அமெரிக்காவில் ஓஹியோ மாநில கல்லூரியில் பணி புரிந்து விட்டு தற்போது புது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் பணி புரியும் லக்னோவைச் சேர்ந்த டாக்டர் பாவனா பிஸ்ஸா. குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் பணி புரிந்த போது தன்னுடைய மூத்த பேராசிரியர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது சில காலம் தொடர்ந்தது. ஒரு நாள் துணிச்சலை வரவழித்துக் கொண்டு ‘நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்’ என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். புத்தகமும் கையுமாக இருக்கும் இவரைக் கவர்ந்த புத்தகம் அநேகம் இருந்தாலும் பிலோசாபிகல் லைப்ரரி 1946 இல் வெளியிட்ட பரமஹம்ஸ யோகாநந்தஜியால் எழுதப்பட்ட “ஒரு யோகியின் ஆடோபயோகரபி” தன்னைக் கவர்ந்தது என்று கூறுகிறார். பல பேருடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் புத்தகம் வாழ்க்கையை நோக்கும் தன்னுடைய கண்ணோட்டத்தையும் மாற்றி இருப்பதாகப் பெருமைப்படுகிறார். இந்தப் புத்தகம்தான் வெளிநாட்டில் அமைதியான முறையில் மேலே சொன்ன நிகழ்வினை எதிர்நோக்கத் துணையாக இருந்தது என்று கூறும் இவர் இந்தப் புத்தகத்தைத் தன் வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
ஆறாவது முத்து ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று உத்தர பிரதேசப் பள்ளியின் முதல்வராக இருக்கும் வங்காளத்தைச் சேர்ந்த மதுமிதா பானர்ஜி. பள்ளியின் சமையல் கூடத்தில் பிடித்த தீயை சமயோசிதமாக அணைத்து எல்லாக் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல பயிற்சி நிறுவனங்களை நிர்வாகிக்கும் இவருக்குப் பிடித்த புத்தகம் ரூபா & கம்பனியால் வெளியிடப்பட்ட நைனா லால் கித்வாய் எழுதிய “30 விமென் இன் பவர்”. இந்தப் புத்தகத்தில் வேறு வேறு துறையில் உள்ள பெண்கள் எப்படி சுலபமாகவும், திடமனதோடும் தங்களது நிறுவாகத்தை நடத்தினார்கள் எனக் கூறி அதற்கு முன்னோடியாக இருப்பதால் தன்னை இந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார்.
ஏழாவது முத்து கேரளாவைச் சேர்ந்த சரித்திரத்தில் டாக்டர் பட்டமும், யோகாவில் எமஸ்சி பட்டமும் பெற்றுள்ள சுமதி ஹரிதாஸ். கேலிகட் பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகள் பணி புரிந்த இவர் தற்போது 67 வயதிலும் “வித்ய பாரதி அகில பாரதீய சிக்க்ஷா சமஸ்தானத்தில்” பணி புரிந்து வருகிறார். யோகா வகுப்புகளும் நடத்துகிறார். ஓய்வு பெற்ற கணவரும், 4 குழந்தைகளும் ஊக்குவிக்க சமூக சேவைகளும் செய்து வருகிறார். நேரத்தை சரியாக செலவழிப்பதும், நம்பகத்தன்மையும் எந்த ஒரு பெண்ணிற்கும் வெற்றியைத் தரும் என்று இவர் திடமாக நம்புகிறார். முதல்வராக இருந்த போது அரசியல் கழகங்கள் மாணவர்களைத் தூண்டி விட்ட போது மன உறுதியுடன் தன் நிலையிலிருந்து வழுவாமலும், கல்லூரியின் நடவடிக்கைகளுக்குப் பங்கம் வராமலும் எதிர் கொண்டதைத் தன் சாதனையாகக் கருதுகிறார். எந்தப் புத்தகம் தங்களைக் கவர்ந்தது என்ற கேள்விக்குத் தன்னால் பதில் அளிப்பது முடியாத காரியம் ஏன் எனில் தான் படித்த புத்தகங்கள் அனைத்தும் ஏதோ ஒருவிதத்தில் தன்னை முழுமையாக்குவதில் பங்கு வகிக்கின்றன என்கிறார். மிகவும் சிறந்தது என ஆதிகாவியம் இராமாயணத்தைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும் புதுப் புது எண்ணங்கள் தோன்றுவதாகவும், முக்கியமாகப் பெண்கள் எந்தச் சூழலிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டுவதாகவும் கருதுகிறார். “கம்ப்ளீட் வொர்க்ஸ் ஆஃப் ஸ்வாமி விவேகானந்தா”, காந்திஜியின் “மை எக்ஸ்பரீமென்ட் வித் ட்ரூத்” இந்த இரண்டு புத்தகங்களும் வாழ்க்கையையும், இந்த நாட்டையும், மனித உறவுகளையும் பார்க்கும் கண்ணோட்டத்தைத் தருகின்றன என்று மனந்திறந்து கூறுகிறார்.
எட்டாவது முத்து பி ஏ படித்துள்ள நேபாள நாட்டு பிரஜை வைஷாலி குருங். 39 வயதாகும் இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். சோலனில் என் ஐ ஐ டியில் 12 வருடங்களாகப் பணி புரிகிறார். ஒரு சமயம் தொழில் கல்வி படிக்காத 50 வயதிற்கு மேலுள்ள 22 அதிகாரிகளுக்கு கடுங் குளிரில் பயிற்சி அளித்துள்ளார். நேபாளத்தில் தனது குடும்பத்தை விட்டு இங்கு வாழும் இவருக்குத் துணை புத்தகங்களே என்று கூறும் இவருக்கு பிரான்செசகோ மிரல்ஸ் மற்றும் ஹேக்டர் அவர்களால் எழுதி இங்கிலாந்து ராண்டம் ஹவுசால் வெளியிடப்பட்ட ‘இக்கிகய்’ மிகவும் பிடித்தமான புத்தகம் என்கிறார். இது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், நீண்ட வாழ்விற்கும் ஓர் அர்த்தத்தை உணர்த்துகிறது எனவும், அதன் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.
இந்த எட்டு முத்துக்கள்தானா என்றால் இல்லை கடலில் மூழ்கி நான் எடுத்தவை இவை. மாணிக்கங்கள், வைடூரியங்கள் என்று பலவும் உள்ளன. அதிலும் நமது எல்லையைக் காக்கும் வீரர்களின் துணைவிகள் எந்த ஒரு உதவியும் இல்லாமல், குளிரும் பனியிலும் தனியாகப் போராடி கணவரது சுமையைத் தன் தோளில் தாங்குவது போற்றற்குரியது. பல்வேறு தேசம், நாடு, மதம், கலாச்சாரம் இவைகளைத் தாண்டி இவர்கள் எல்லோரும் ஒரே மனித ஜாதி என்ற அடிப்படையில் மனிதத்தன்மையின் புனிதத்தைக் காப்பாற்றும் பெண்ணினம். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நாம் தலைவணங்கிப் பாராட்டுகின்றோம். இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் மனித நேயத்திற்கும் அதனை எடுத்துரைக்கும் நூல்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம்.
வாழிய பாரத நம் நாடு! வந்தே மாதரம்! பாரதி சொன்ன மாதிரி “தையலை உயர்வு செய்ய வேண்டும். “போற்றி போற்றி பல்லாயிரம் போற்றி”! “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பாரதி அவர்களைக் கொண்டாடுகிறார். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா!