கம்பன் கவி நயம் என்ற அண்டா பாயசத்தில் ஒரு தேக்கரண்டி இந்தப் பகுதியில் பார்த்தோம்.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 124 படலங்களையும், 10,534 பாடல்களையும் கொண்டவை.
பெருமதிப்பிற்குறிய சிங்கப்பூர் அ கி வரதராஜன் அவர்கள் கம்ப ராமாயணத்தின் அனைத்துப் பாடல்களையும் விளக்கத்துடன் கூறி வருகிறார்.
நிறைய இடங்களில் அறிஞர் பெருமக்கள் முற்றோதல் முறைப்படி அனைத்துப் பாடல்களையும் படித்து வருகின்றனர்.
குவிகத்தில் ராமமூர்த்தி ஆரம்பித்து வைக்க மற்ற நண்பர்களும் தொடர்ந்து தங்களுக்குப் பிடித்த இரு பாடல்களைப் பற்றி எழுதினார்கள்.
சொல்லப்போனால் கம்பனின் அனைத்துப் பாடல்களும் நயம் இழையும் பாடல்கள்தான்.10534 முத்துக்கள் கொண்ட முத்துக்குவியல். அதில் சிலவற்றைக் கையில் வைத்து அழகு பார்த்தோம்.
இந்த மாதம் கம்பராமயணத்தில் முதல் பாடலும் நிறைவுப் படலத்தில் (விடைதரும் படலம்) இந்தப் பகுதியில் உள்ளன. இத்துடன் நாமும் கம்பருக்குத் தாற்காலிக விடை கொடுத்து மற்ற சங்கக் கவிதைகள் , காப்பியங்கள் போன்றவற்றை அடுத்த மாதங்களில் காணலாம்.
கம்பனின் முதல் பாடல்:
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
உலகம் யாவையும்-எல்லா உலகங்களையும்;
தம் உள ஆக்கலும்-தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்;
நிலை பெறுத்தலும் -நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்-அழித்தலையும்;
நீங்கலா அலகு இலா விளையாட்டு உரையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய;
அவர் தலைவர் – அவரே தலைவ ராவார்;
அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
மங்கலச் சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற மங்கலச் சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக எழுகிறது.
இனி இறுதியாக வரும் பாடல்கள், இவற்றை மிகைப் பாடல்கள் என்றும் சொல்வார்கள்
வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும்.
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி.
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!
இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.