குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாகத் தன் கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
- தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
- வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
- தமிழ் ! – நவம்பர் 2021
- பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
- கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
- ஓடுது பார் ! – டிசம்பர் 2021
- கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
- என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
- பார் பார் மெட்ரோ பார் !
- நேதாஜி நேதாஜி
41. வருகுது சைக்கிள்
41 . சைக்கிள் !
அம்மா அப்பா பாருங்க !
தள்ளிப் போயி நில்லுங்க !
இதோ நானும் வருகிறேன் !
சைக்கிள் ஓட்டி வருகிறேன் !
சரக்கென்று மிதிக்கிறேன் !
சர்ரென்று போகுது !
வேகம் வேகமாய் மிதித்தால் –
விர்ரென்று போகுது !
போன பிறந்த நாளிலே –
பாட்டி தாத்தா தந்தது !
பரிசாய் கொடுத்த சைக்கிளு !
பரபரன்னு போகுது !
கார் ஸ்கூட்டர் போகுது –
சாலையிலே நிறையவே !
பத்திரமாய் போகிறேன் !
பையப்பைய ஓட்டுறேன் !
கவனமாகப் போகிறேன் !
கவலை எதுவும் வேண்டாமே !
நேராகப் பார்த்து நானும் –
நல்விதமாய் ஓட்டுவேன் !
தம்பி சீனு, கூடவா !
உனக்கும் சொல்லித் தரேண்டா !
தங்கச்சி பாப்பா, நீயும் வா !
நீயும் சைக்கிள் ஓட்டலாம் !
42 . என்ன மரம் ?
சாலையில் நடந்து போகையிலே
வெய்யில் வந்தால் இளைப்பாற –
நிழல் கொடுக்கும் நெடிய மரம் –
விழுதுகள் தொங்கும் பெரிய மரம்…
அது என்ன மரம் ?
ஆலமரம் ! ஆலமரம் ! ஆலமரம் !
கோயில்களிலே இருக்கும் மரம் –
கும்பிடுவார்கள் சுற்றும் மரம் –
வேல் போல் இலைகள் கொண்ட மரம் –
பிள்ளையார் விரும்பும் நல்ல மரம்….
அது என்ன மரம் ?
அரச மரம் ! அரச மரம் ! அரச மரம் !
பழங்கள் தொங்கும் பச்சை மரம் –
பறவைகள் கூடி மகிழும் மரம் –
கோடையில் கனிகள் கொடுக்கும் மரம் –
வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம்…
அது என்ன மரம் ?
மா மரம் ! மா மரம் ! மா மரம் !
வீடு தோறுமே வைக்கும் மரம் –
பாரதம் முழுதும் பார்க்கும் மரம் –
கசப்புத் தன்மை கொண்ட மரம் –
மருத்துவ குணங்கள் நிறைந்த மரம்….
அது என்ன மரம் ?
வேப்ப மரம் ! வேப்ப மரம் ! வேப்ப மரம் !
பச்சைப் பசேலென இருக்கும் மரம் –
கூட்டுக் குடும்பமாய் வாழும் மரம் –
குலை தள்ளி சற்றே சாய்ந்த மரம் –
பூ காய் இலை தண்டு கொடுக்கும் மரம்….
அது என்ன மரம் ?
வாழை மரம் ! வாழை மரம் ! வாழை மரம் !
உயர உயர வளரும் மரம் –
ஊரின் எல்லையில் பார்க்கும் மரம் –
நுங்கும் பதனியும் அளிக்கும் மரம் –
தாகத்தைத் தீர்க்கும் ஒல்லி மரம்….
அது என்ன மரம் ?
பனை மரம் ! பனை மரம் ! பனை மரம் !
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மரம் –
காய்கள் குலையாய் தொங்கும் மரம் –
இளநீர் தேங்காய் கொடுக்கும் மரம் –
தமிழ்நாட்டினிலே தழைக்கும் மரம்….
அது என்ன மரம் ?
தென்னை மரம் ! தென்னை மரம் ! தென்னை மரம் !