
இது குவிகம் மின்னிதழின் 100 வது இதழ்!
குமுதம், விகடன், கல்கி, குங்குமம் இவற்றின் இணைப்புதானே குவிகம் என்று நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்.
குவிவோம், ( GATHERING) கவனம் (FOCUS) இவ்விரண்டையும் இணைப்பதே குவிகம் என்ற பொருளில் நாமே உண்டாக்கிய சொல்தான் குவிகம். .
எட்டு ஆண்டுகளுக்கு மேல் வந்துகொண்டிருக்கும் மின்னிதழ்!
பெரிய சாதனை என்று சொல்ல முடியாவிட்டாலும் சதம் அடித்த பெருமிதம் ஒன்று இருக்காத்தான் செய்கிறது.
மாதாமாதம் 25 டிஜிடல் பக்கங்கள் ! கதை- கவிதை- கட்டுரை – தகவல் -தொடர் – ஆடியோ-வீடியோ குறும்படம் இப்படி எல்லா வகையான வடிவங்களைத் தரும் மின்னிதழ்!
முதலில் தமிழ்வாணனின் கல்கண்டு வார இதழ் போல இருந்தது. அதாவது நான் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன்.
இப்போது கிட்டத்தட்ட 20 பேர் மாதாமாதம் எழுதுகிறார்கள்.
குவிகத்தில் வந்த தொடர்கள் அனைத்தும் புத்தகமாகவும் வந்துள்ளன!
மீனங்காடி , மணிமகுடம், சில படைப்பாளிகள், இன்னும் சில படைப்பாளிகள், ஷாலு மை வைஃப், சரித்திரம் பேசுகிறது ( பாகம் 1, பாகம் 2, பாகம் 3) குவிகம் கடைசிப்பக்கம், ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் , எங்கேயோ பார்த்த முகம், ஆதலினால் கவிதை செய்தோம் போன்றவை குவிகத்தை அலங்கரித்துப் பின்னர் புத்தகங்களாகவும் வந்துள்ளன.
இன்னும் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல எழுத்தாளர் நண்பர் வட்டம் குவிகத்தில் இணைந்திருக்கிறார்கள்!
அவர்கள் துணையோடு இன்னும் பயணிப்போம்.
இந்த இதழிலிருந்து வ வே சுவைக் கேளுங்கள் என்ற கேள்வி – பதில் பகுதி ஆரம்பமாகிறது.
உலக இதிகாசத்தில் கில்காமேஷ் கதை முடிந்து இலியட் ஆரம்பமாகப்போகிறது.
படைப்பாளிகள் பலரைப் பற்றி சுருக்கமாக விவரித்து அவர் புகழைப் பரப்பினோம்.
கடைசிப்பக்கம் என்ற தலைப்பில் தரமான கட்டுரைகளைத் தொடர்ந்து தருகிறோம்.
தமிழ்த் திரைக் கவிஞர்கள் என்று வாலி, கண்ணதாசன் என்று பெரிய பட்டியல் தொடர்ந்து வருகிறது.
குண்டலகேசி முடிந்து கண்ணன் கதையமுதம் கவிதையாகப் பரிணமிக்கிறது.
குறுக்கெழுத்துப் போட்டியும் துவக்கிவிட்டோம்.
கம்பன் கவி நயம் முடிந்து இனி சங்கப் பாடல்களின் நயயங்கள் வெளிவரும்.
மனநலக் கல்வியின் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன.
மலையாளம் ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து சிறந்த கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறோம்.
தாகூரின் நாட்டிய மங்கை நாடகத்தையும், காந்தியின் கடைசி ஐந்து வினாடிகள் என்ற நாடகத்தையும் வழங்கினோம்.
அறுசுவை உணைவைக் கவிதையாகவும், குதூகலம் தரும் குழந்தைப் பாடல்களை எழுத்திலும், வீடியோவிலும் தந்தோம்.
குவிகம் பொக்கிஷம் என்ற தலைப்பில் கிளாசிக் சிறுகதைகளை பதிவு செய்தோம்.
திரைக் கவிதை, திரை ரசனை என்று திரையில் தொடரும் இலக்கியத் தரத்தை எடுத்துக் காட்டினோம்.
காளிதாசனின் குமாரசம்பவத்தைக் கவிதையாய்த் தந்தோம்.
குவிகம் இலக்கியத் தகவல்கள் மற்றும் அளவளாவல்கள் பற்றிய தகவல்கள் தந்தோம்.
இன்னும் எண்ணற்ற கதைகள் கவிதைகள் கட்டுரைகள். சிறப்பான அட்டைப்படங்கள்
இவற்றையெல்லாம் நமக்கு அளித்த எழுத்தாளர்கள் யார் என்பதைப் பற்றியும் குவிகத்தின் 100 மாதப் பயணத்தைப் பற்றியும் சொல்ல மார்ச் 20 மாலை 6.30 மணிக்கு குவிகம் அளவலாவல் நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தவறாமல் வாருங்கள்!
குவிகம் நண்பர்கள் அனைவரும ஒன்று சேர்வோம்! கவனமுடன் முன்னேறுவோம்.
இனிவரும் நாட்களில் ஆடியோ, வீடியோ அதிகம் வரும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரும். போட்டிகள் நிறைய வரும். புத்தக விமர்சனங்கள் வரும். நகைச்சுவையும் மிளிரும். வித்தியாசமான கதைகள் கவிதைகள் கட்டுரைகள் வரும். பரிசுகளும் வரும் !
வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் குவிகத்தின் அடையாளம்.
நண்பர் தில்லைவேந்தன் குவிகம் பற்றி எழுதிய வாழ்த்து வெண்பாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்.
துளியில் தெரியும்!
சின்னப் பனித்துளி சீரோங்கு தென்னையினைத்
தன்னுள்ளே காட்டும் தகவினைப்போல் – மன்னுபுகழ்
மின்னிதழாம் நம்குவிகம் விள்ளும் பொருளனைத்தும்,
என்னசொல்லி வாழ்த்துவேன் இங்கு!
தொடர்ந்து பயணிப்போம்!