சில பல வருஷங்களுக்கு முன்னாள் ஏதோ இட்சிணி உபாசனையின் பேரில் எனக்கு தொழிலதிபர் ஆகிவிட வேண்டும் என்ற பேரவா எழுந்து அது என்னை நாளொரு பொழுதும் வாட்டி எடுத்து ஒரு சுபயோக சுப தினத்தில் கம்பெனி ஆரம்பிக்க வைத்துவிட்டது. உடனே ஒன்றிரண்டு புரோஷ்யூர்கள் தயாரித்து “Artificial Intelligence சிஸ்டம் வாங்கலியோ” என்று டமுக்கு டப்பா போட்டுக்கொண்டு ஹைதராபாத் தெருக்களில் சுற்றினேன்.
தெலுங்கு பேசுபவர்களுக்கே சகாயம் பண்ணிப்பண்ணி அலுத்துப்போயோ என்னமோ அந்த ஏழுகொண்டலவாட எனக்கும் பெரும் சகாயமாகப்பண்ணினார். அந்த கத்திரி சிகரெட் தயாரிக்கும் கம்பெனி “உன்னுடைய சிஸ்டத்தை வாங்கிக்கொள்ளுகிறோம். ஆனால் மவனே, நீயே இருந்து முழுசுமாக நிறுவிவிட்டுப்போகலை, சிண்டைப்பந்தாடிடுவோம்” என்று எச்சரிக்கை செய்ததோடு அவர்களுடைய கெஸ்ட் ஹௌசில் மூன்று மாசம் டேரா போடுவதற்குமான ஏற்பாட்டையும் செய்து விட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் அவன் போடும் சோளம் கலந்த கூட்டுக்கே ஏழு, எட்டு ரோடி உள்ளே தள்ளிவிடலாம். அப்புறம் டிவியில் தெலுங்கு படங்களைப்பார்க்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் தூக்கம் வரவில்லைஎன்றால் நான் என் வலது காதை எடுக்கத்தயார்.
ஒரு மாதம் நானும் என் பிராஜக்ட் மானேஜர் ராமகிருஷ்ணனும் அந்த கெஸ்ட் ஹௌசில் பிரம்மச்சர்ய வ்ரதத்துடன் கத்திரி சிகரெட் கம்பெனி ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டிருந்தோம். நவராத்திரி வெகேஷன் குறுக்கிட்ட போது. கம்பெனியின் டைரக்டர் ரவி என்னை மடக்கினார்.
”என்ன ரகு எப்போ மெட்ராஸ் போறீங்க?”
”இல்லை ரவி. இன்னும் முதல் ஃபேஸ் முடியலை. குப்தா வேறு அடுத்த வாரம் லீவுல போகப்போகிறார். எனக்கு அவரோட டைம் வேணுமே . அதனால போகலை!
”ஒண்ணு பண்ணுங்க ரகு! மெட்ராசுல பசங்களுக்கு லீவுதானே. அவங்களை இங்க வரவழைச்சுடுங்க. நம்ம கெஸ்ட் ஹௌசிலெயெ உங்க ரூமில் தங்கிக்கலாமே. நான் வைத்தி கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிடறேன்! ராமகிருஷ்ணன் ஃபாமிலிகூட வரட்டும்!”
ரவிக்கு காலை மோஷனிலிருந்து பேரப்பிள்ளைகள் பிறக்கும் வரை சுகானுபவமாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டு லதா, பசங்களை வரவழைத்தேன். கூடவே என் பிராஜக்ட் மானேஜர் ராமகிருஷ்ணனின் ஃபாமிலியையும் வரவழைத்தோம்.
விஸ்தாரமான எஸ்டேட் அந்த கெஸ்ட் ஹௌஸ். ஒன்றிரண்டு டைரக்டர்களும் அங்கேயே குடியிருந்ததால் மெயிண்டனன்ஸ் பக்காவாக இருக்கும். அழகான தோட்டம். நீர்வீழ்ச்சி. பீங்கானில் சொல்ப உடை அணிந்த பெண்ணின் சிலை என்று சம்ப்ரதாயமாக இருந்தாலும் அழகாகவே இருக்கும். லதாவுக்கும் பசங்களுக்கும் பரம குஷி. காலை ப்ரேக்ஃபாஸ்ட், அப்புறம் வாக்கிங். கேம்ஸ் ரூமில் காரம். செஸ், டேபிள் டென்னிஸ் என்று விளையாட்டு.
நானும் ராமகிருஷ்ணனும் மட்டும் ஒரு நல்ல க்ரஹஸ்தன்களாக உழைத்துக்கொண்டு குடும்பம் ஜாலியாக இருந்த சொர்க்க நேரம்.
மாலை வேளைகளில் எங்காவது போவோம். என்ன பெரிய “எங்காவது“ டாங்க் பண்ட்,, விட்டால் பாரடைஸ் ஷாப்பிங் அதுவும் இல்லையென்றால், கெஸ்ட் ஹவுசுக்கு உள்ளேயே நடை பயிலுதல்.
ஒரு சாயங்காலம் கேம்ஸ் ரூமில் பில்லியர்ட்ஸ் ஆடுகிறோம் என்ற பெயரில் அதகளம் பண்ணிவிட்டு அடுத்த பில்டிங்கில் இருக்கும் சாப்பாட்டு மெஸ்சுக்கு நடந்தோம். எதிரே ஏதோவொரு டைரக்டர் வீட்டு வேலைக்காரி ஒரு தக்குனூண்டு சைஸ் பொமரேனியன் நாய்க்குட்டியுடன் வந்து கொண்டிருந்தாள். அன்னிக்கு அம்மாவாசையோ என்னமோ, சாதுவாக வந்த அந்த நாய்க்குட்டி, ராமகிருஷ்ணனின் மகன் அருணைப்பார்த்து என்ன நினைத்ததோ, குலையோ குலை என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. அசந்தர்ப்ப நேரத்தில் சங்கிலியை கழற்றிக்கொண்டு அவனை துரத்த வேறு ஆரம்பித்தது. இவன் பதட்டத்தில் அருண் “ஐயோ அம்மா பிடி பிடி” என்று அவன் கதற, அது விடாமல் சுத்தி சுத்தி இவனைத்துரத்த, ரகளை கொஞ்ச நேரம். ஒரு மாதிரி அதைப்பிடித்து கட்டி இழுத்துக்கொண்டு போன பின்னரும் இவன் ”பிடி பிடி” என்று முனகிக்கொண்டிருந்தான்.
அன்றிலிருந்து அருணுக்கு மிருகங்கள் என்றாலே பயம்தான். மைசூரில் ஒரு முறை ஜூவுக்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஹோட்டல் ரூமிலேயே டிவிபார்த்துக்கொண்டு தங்கிவிட்டான் என்றும் கேள்விப்பட்டேன்.
கொடைக்கானலில் ஒரு முறை ரிஸார்ட் சாப்பாடு அலுத்துப்போய் ஒரு டாபாவில் சாப்பிடப் போனபோது, பாதி சாப்பாட்டில் சின்ன பூனை ஒன்று அருண் காலடியில் வர, இவன் பயத்தில் ஒரு வீசு வீச, டேபிள் தட்டு எல்லாம் உருண்டதை இப்போதும் கொடைக்கானலில் கார்ப்பரேஷன் பள்ளியிலேயே கதையாகச்சொல்கிறார்களாம் என்பதாக ராமகிருஷ்ணன் பின்னாளில் சொன்னார்
எங்கள் ஆஃபீசில் அருணுடைய நாய், பூனை, பயம் ஒரு ஃபோல்க் லோர் போல ஆகிவிட்டிருந்தது.
போன வருஷம் நடந்த அவன் கல்யாணத்துக்குப் போக முடியவில்லை. சென்ற வாரம் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு ஒரு விசிட் அடித்து விசாரித்தேன்.
ராமகிருஷ்ணன் ஒரு ஃபோட்டொவைக்காட்டினார்.
பிராஜக்டுக்காக சவுத் ஆஃப்ரிக்கா போனபோது ஒரு வீக் எண்டில் க்ரூகர் பார்க்கில் ஒரு பெரிய சிங்கத்தின் பிடரியில் தடவிக்கொண்டே அருண் வெற்றிப்பார்வை பார்க்கும் கலர் ஃபோட்டோ. சிரித்துக்கொண்டே அருணிடம் கேட்டேன்.
“அட! சின்ன நாய்க்கே நாலு மைல் ஓடுவே! எப்படிடா உனக்கு இவ்ளோ தைரியம் வந்தது?“
“கல்யாணத்துக்கு அப்புறம்” என்றாள் அருணின் புது மனைவி அஞ்சனா.
மனைவியையே ஜெயிக்க முடிந்தவனுக்கு மிருகங்கள் எம்மாத்திரம்?
LikeLiked by 1 person