ராஜராஜன் – அருண்மொழிவர்மன் – பொன்னியின் செல்வன்
ராஜராஜனை அருண்மொழி என்ற பெயரில் கல்கி ‘பொன்னியின் செல்வனில்’ ஒரு கலக்குக் கலக்கியிருப்பார். அதற்கு மேலே எழுதி நாம் எந்த ஆணியைப் பிடுங்கப்போகிறோம்? (ஆணிக்குப் பதிலாக வேறு ஒரு வார்த்தையைப் போடலாமென்றால், குவிகம் ஆசிரியரின் கடுங்கோபத்துக்கு ஆளாகநேரிடும் என்பதால் அதைத் தவிர்த்து விடுகிறேன்!).
அப்படியானால் எந்தத் தைரியத்தில் இந்த அத்தியாயம் எழுதத் துணிந்தாய் என்று தானே கேட்கிறீர்கள்? கல்கி விட்ட பின் நான் ராஜராஜனைத் தொடர்கிறேன்.
இருந்தாலும் கல்கியின் கற்பனையை சில வரிகளில் அசைபோடாமல் விட மனது வரவில்லை.. கல்கியின் கற்பனையில், அருண்மொழியை ஒரு சாக்கலேட் பையனாகவும், மக்களின் பேரன்பைப் பெற்றவனாகவும், அனைவராலும் மதிக்கத்தக்க இளைஞனாகவும், பெரும் வீரனாகவும், அறிவாளியாகவும் சித்தரித்திருப்பார்.
பொன்னியின் செல்வனைப்பற்றி கல்கியின் சில வரிகள்:
சின்னஞ்சிறு வயதில் பொன்னிநதியில் விழுந்த அருண்மொழியை..
பொன்னித் தாய் நீரிலிருந்து எடுத்துக் கொடுக்க..
பொன்னியின் செல்வன் என்ற பெயர் பெற..
சங்கு சங்கரக் குறி அவனுடலில் இருக்க..
வானதியின் காதலில் விழ..
இலங்கையில் அனுராதபுரத்தில் முடி சூட மறுக்க..
குந்தவையின் தூதனாக வந்த வந்தியத்தேவனைச் சந்திக்க..
பழுவேட்டரையர் அருண்மொழியை அழைத்து வர அரசனிடம் ஆணை வாங்க..
இசைந்த அருண்மொழி – சோழ நாடு பயணம் செய்ய..
கப்பல் விபத்தைக் கடந்து நாகப்பட்டினம் சேர..
கடற்கொந்தளிப்பான சுனாமியைத் தாண்டிட..
நோய்வாய்ப்பட்டு குணமாகி..
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து யானைமேலேறி..
தஞ்சை அரண்மனை சேர..
பின்னாள் – தான் பட்டமேறுவதாகக் கூறி..
கடைசி நொடியில்..
செம்பியன் மாதேவியின் புதல்வருக்கு மகுடமளித்து..
தியாகச் சிகரமாகினான்.
இதை எழுதியதில், நாமும் பெருமை கொள்வோம்.
அருண்மொழியின் கதை அதற்குப்பின்னால் என்னவாயிற்று?
அதைப் பற்றி சரித்திரம் பேசுகிறது..
மதுராந்தகனை மன்னனாக்கும் போது..
‘அவன் ஆளும் வரை ஆண்ட பின் தான்’ – தான் அரசாள்வதாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது..
அச்சமயம் மதுராந்தகனுக்கும், அருண்மொழிக்கும் சம வயது..
ஆக.. மதுராந்தகன் அருண்மொழியைத் தாண்டி வாழ்வானேயானால், அருண்மொழி அரசாள வாய்ப்பு பெறவே இயலாது.
இதை அறிந்தும் மதுராந்தகனை மன்னனாக்கிய அருண்மொழியின் தியாகம் மகத்தானது. அதனால் தான் தியாகசிகரம் என்ற பெயர் அவனுக்குப் பொருந்தும்।
மதுராந்தகன் ஆட்சியில் ராஜராஜன் யுவராஜாவாக இருந்தது மட்டுமல்லாமல்- அரசியல் மற்றும் ராணுவத்தைப் பலப்படுத்துதல் என்று ஆட்சித்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தான். சேர, பாண்டிய, ராஷ்டிரகூட, சாளுக்கிய, கங்க அனைத்து நாட்டு நடப்புகளையும் கூர்ந்து கவனித்து வந்தான். ஒவ்வொருவரும் தனது எதிரியாக வாய்ப்பு இருப்பதாக நம்பினான். ஒவ்வொருவரின் பலம் – பலவீனம் இரண்டையும் துல்லியமாகக் கணித்து..ஒவ்வொருவரையும் வெல்வதற்கான பலங்களைப் பெருக்கிக் கொண்டான். சேர நாட்டு பலமான கடற்படைக்கு நிகராக இல்லாது அதை விட சிறந்த கடற்படையை உருவாக்கத் திட்டமிட்டு- செயல்படுத்தினான்.
மன்னன் மதுராந்தகன் – தன் தாய் தந்தையர் போல சமயப்பணிகளைச் செய்து, அருண்மொழியின் உதவியால் நாட்டைக் காத்துக் கொண்டான். அருண்மொழியும் மன்னனுக்கு அடங்கிய இளவரசனாகவே இருந்தான். ஆயினும் சுடர்மிகு அறிவுடன் இருந்ததால், பெரும் கனவுகளுடனும், காலம் கனியும் நாளை எண்ணிக்கொண்டிருந்தான். தன்னை வளர்த்த செம்பியன் மாதேவி, அக்கா குந்தவையை மதித்து அவர்கள் சொல் கேட்டும் வந்தான்.
பதினைந்து ஆண்டுகள் சென்றன.
கி பி 985. ஜூன் மாதம்.
மதுராந்தகன் மறைந்தான்.
அருண்மொழி அரசனானான்.
காலம் கனிந்தது.
மகாகாளி தமிழகத்தில் கடைக்கண் வைத்தாள்.
தமிழகத்தின் பொற்காலம் உருவானது.
உலகப்பேரரசர்களில் சிறப்பானவன் என்று சரித்திரஆசிரியர்களால் பாராட்டப்படும் ஒரு மாமன்னன் உருவானான்.
நம்மைப் போன்ற சரித்திர எழுத்தாளர்களுக்கு அவன் புரிந்த உதவி என்ன தெரியுமா?
தனது ஆட்சிக்குறிப்புகளை மெய்க்கீர்த்திகளாக செப்புத்தகடுகளில் எழுதி சரித்திரத்துக்குச் சோறு போட்டவன் அவன்.
“இவனுடைய சாதனைகளை விட இவனது ஆளுமையும், இயல்புகளும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்” – என்கிறார் சரித்திர ஆய்வாளர் நீலகண்ட சாஸ்திரி.
மதுராந்தகன் ஆட்சியிலேயே அருண்மொழி சோழநாட்டின் உள்கட்டமைப்பை (இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) வளப்படுத்தியிருந்தான். பலமான மற்றும் ஊக்கமுற்ற இராணுவம், பலமான கடற்படை எல்லாம் உறுதிபடுத்தப்பட்டு அருண்மொழி ஆட்சிக்கு வரும் போது தயார் நிலையில் இருந்தது.
அரசனானவுடன்.. ஒவ்வொரு எதிரியையும் ஒன்று விடாமல் களைவது என்று திட்டமிட்டான்.
எதிரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தான்:
- பாண்டியமன்னன் அமரப்புயங்கன்..
- சேரமன்னன் பாஸ்கரவர்மன்..
- குடகு நாடு
- கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி
- இலங்கை
- சாளுக்கிய நாடு
- சீட்புலி நாடு
- வேங்கை நாடு
- கலிங்க நாடு
- மாலத்தீவு, இலக்கத்தீவு
இராஜராஜ சோழன் சரித்திரம் நமக்கு ‘அல்வா’ போல கிடைத்துள்ளது.. அதை ஒரே அத்தியாயத்தில் அடக்கலாமா? அவனது சாதனைகளை மேலும் ‘வச்சு’ செய்யவேண்டாமா! தொடரட்டும் சோழ நாட்டின் சரித்திரம்!.