கவியரசு கண்ணதாசன்
இந்த பெயர் உச்சரிக்கப் படாமல், எந்த ஒரு நாளும் கடந்து போவதில்லை என்றே கூறலாம்.
மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்,
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்,
நான் நிரந்தரமானவன், அழிவதில்லை,
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று, மரணம் அடைவதற்கு 20 வருடங்கள் முன்பாகவே அவன் கூறிவிட்டான் மஹாகவியைப் போல, அவன் ஒரு சித்தன் – ஒரு தீர்க்கதரிசி.
பாரதிக்குப் பின், பண்டிதர்களை மட்டுமல்ல, பாமரர்களையும் அவன் பாடல்கள் ஈர்த்தது. காரணம், அவன் எளிமையில் இலக்கியத்தைத் தந்தவன் – இலக்கியத்தில் எளிமையைத் தந்தவன்.
ஒரு கவிஞனின் வெற்றிக்குக் காரணம் மூன்று விஷயங்கள்
1. திறமை 2. தன்னம்பிக்கை 3. துணிவு.
இந்த மூன்றும் கண்ணதாசனிடம் நிறையவே இருந்தது.
திறமை
இரண்டே வரியில் இராமாயணத்தை சொன்னவன் –
கோடு போட்டு நிற்க சொன்னால், சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால், ராமன் கதை இல்லையே,
துணிவு
என்னதான் நடக்கும்,நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கிறவரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்றை பார்த்து விடு,
என்கிறான்.
தன்னம்பிக்கை
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில், என்றும்,
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்,
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்,
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்,
என்றும் பாடுகிறான்.
அது மட்டுமா ? ஒரு வார்த்தையை வைத்தே சொற்சிலம்பம் நடத்தியவன்,அவன்.
காய் – அத்திக்காய் காய் காய்
தேன் – பார்த்தேன் சிரித்தேன்
ஊர் – எந்த ஊர் என்றவளே
மே – அன்பு நடமாடும் கலைக்கூடமே
தான் – அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
பூ – பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
வளை – என்னவளை முகம் சிவந்தவளை
கை – அஹ்ஹாஹோ கை கை
காவல் – உடலுக்கு உயிர் காவல்
ஓட்டம் – தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
நோ – காதல் கதை சொல்வேனோ
வண்ணம் – பால் வண்ணம்
ஒரே பாடலில் காதல், தத்துவம் இரண்டையும் சேர்த்துப் பாடியது எனக்கு தெரிந்து கவியரசராகத்தான் இருக்க முடியும்..
பெண், இல்வாழ்வை, திருமண சுகத்தை, ஆசை தீர அனுபவிக்க விரும்புகிறாள். ஆனால், அவனோ, வாழ்வின் நிலையாமையை புரிந்துகொண்டு, விரக்தியுடன், அதை விட்டு விலகப் பார்க்கிறான். கேள்வி – பதில் பாணியில், வாழ்வை கவிஞர் அணுகியிருப்பது மிக அழகு . அவள், காமத்துப் பாலையும், காளிதாசனையும் வரிகள் ஆக்குகிறாள்.
அவனோ, பட்டினத்தாரையும், பஜகோவிந்தத்தையும், வரிகள் ஆக்குகிறான்.
அவள் பாடுகிறாள் –
இது மாலை நேரத்து மயக்கம் – பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும் – அந்த இன்பம் தேடுது எனக்கும்
அவன் பதிலாகக் கூறுகிறான் –
இது கால தேவனின் கலக்கம் – இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
விடவில்லை, அவள், காமத்துடன்,தொடர்கிறாள் –
பனியும் நிலவும் பொழியும் நேரம், மடியில் சாய்ந்தால் என்ன ?
பசும் பாலைப் போலே மேனி எங்கும் பழகிப் பார்த்தால் என்ன?
அவன் உறுதியாகவே, பதிலை உரைக்கிறான் –
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன?
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தால் என்ன?
என்கிறார்.
இப்படி அவனுக்கென்றே, தனித் திறமையைக் கொண்டவன் கண்ணதாசன். அவனின் பாடல்களில் எதை எடுப்பது? எதை விடுவது? காதல்,தத்துவம், சிரிப்பு, தேசம், குடும்பம், மனிதவளம், குழந்தை, வாழ்வு, கடவுள் என அவன் தொடாத பொருளே இல்லை எனலாம். ;
உளியால் செதுக்கப்படுபவைகள் எல்லாம் சிலைகள் ஆவதில்லை. உணர்ச்சிகளாலும் உந்துதல்களாலும் உதிர்கின்ற வார்த்தைகள் எல்லாம் கவிதைகள் ஆவதில்லை. தமிழ்த்திரை வரலாற்றிலே எத்தனைக் கவிஞர் பெருமக்கள் பாடல்கள் எழுதியிருந்தாலும் “கண்ணதாசனுக்குப் பின் – கண்ணதாசனுக்கு முன்” (க. மு., க. பி. ) என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியவன் அவன். அவனுடைய பாடல்கள் வாழ்வின் எல்லாத் துறைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா வயதினராலும் பாடப்படுகின்றப் பெருமை கொண்டது. அவன் கையாளாத பொருளுமில்லை; தலைப்புமில்லை;
காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பார்கள். ஆனால் நான் கூறுவேன் – காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. காதல் மனித வாழ்வின் ஒரு அங்கம். பாரதியின் “காதல் செய்வீர் – காதலினால் இன்பம் உண்டு”. இவைகளை ஒட்டியே கவியரசும் காதலை அற்புதமாய்ப் பாடியிருக்கிறார். கம்பனுக்கும், பாரதிக்கும் பிறகு காதலைக் கண்ணியமாய் கையாண்டவன் இவன்.
“மண் பார்த்து விளைவதில்லை –
மரம் பார்த்து காய்ப்பதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா – அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லய்யா’
என்கிறான்! அத்துடன், வள்ளுவனின் குறளைக் கருத்திலே வைத்து
“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே”
என்றும் விவரிக்கிறான்! இந்தக் காதல் மானிடர்க்குப் பொது; இதனைத் தடுப்பது பெரிய தீது என்பதைத்தான்
‘காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே –
‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே’ என்றும்
‘நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை’
என்றும் இந்த மண்ணின் தத்துவத்தை, மதம் கடந்த ஒழுக்கமான பழக்கத்தை, மனிதப் பிறவியின் அடிப்படைத் தேவையை, நியாயப் படுத்திக் காண்பிக்கின்றான்.
“ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் கணவன் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்”
என்று பெண்மையை வலிமையாய்க் காட்டுகிறான். அடுத்த வரிகளிலே அந்த உள்ளத்தின் மென்மையையும் காட்டுகின்றான்.
ஒரு கொடியில் ஒரு முறைதான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா’
என்று கற்புடைய காதலைக் காட்டுகின்றான்! இல்லற சுகத்தை இனிதே பாடியவன், இந்த இல்லறக் காதலை, தாம்பத்யத்தை, விரசமில்லாமல் கூறுகின்ற வார்த்தைகள்தான் எத்தனை எத்தனை!
‘நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே!
அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!
என்றும்
‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’
என்றும் பாடுவது தாம்பத்ய உறவைப் போற்றுகிறது. அப்படிப்பட்ட உறவுதான் குடும்பத்தை வளர்க்கும். அந்தக் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மொழி வழங்கும் சுரங்கம்’
என்றும்,
அன்னை எனும் கடல் தந்தது
தந்தை எனும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் எனும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்’
என்றும் கூறுகிறான். இப்படிப்பட்ட உறவுதான் இறுதிவரை உறுதியாக இருக்கும் என்பதைத்தான்
‘ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’
என்கிறான்.
இப்படிக் காதலைத் தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் பாடங்களையே பாடல்களாய்த் தந்திருக்கிறான். காரணம், அனைத்துமே அவனின் அனுபவம். அவனைப் பொறுத்தவரை அனுபவம் என்பது தெய்வீகம். அதைத்தான்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே அறிவதுதான் வாழ்க்கை என்றால்
ஆண்டவனே நீ எதற்கு என்றேன்!
ஆண்டவன் அருகே அழைத்துச் சொன்னான்
அந்த அனுபவமே நான் தான் என்று!
அதனால் தான் நம் அனைவரின் அனுபவத்தோடு ஒத்துப்போகிறது அவனது பாடல்கள்.
நம் அனைவரின் துன்பத்திற்குக் காரணம் எண்ணம்தான். அந்த எண்ணம் வருகின்ற இடம் மனம். மனம் முழுதும் ஆசை. அதனைதான்,
கையளவே தான் இதயம் வைத்தான்
கடல்போல் அதிலே ஆசை வைத்தான்’
என்றும் பாடுகிறான். இந்த ஆசையைக் கொடுப்பதே மனம்தானே! அதனைக் கூட
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா’ என்றும் –
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி,
நாளைப் பொழுதை இறைவனுக்களித்த
நடக்கும் வாழ்வில் அமைதி கிடைக்கும் , என்றும் விடையும் கூறுகிraaன்.
இப்படியில்லாமல் ஆசையின் வழியிலே வாழ்க்கையைச் செல்ல விட்டால், நிம்மதிதான் மறையும். எனவே தான்,
“கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவேஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே இருப்பது தான் உலகம், கண்ணா!
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா!
என்கிறான்.
மனிதன் ஆசையை விட்டு விட்டு, உழைப்புடனும், நம்பிக்கையுடனும் வாழ வேண்டுமென்கிறான்.
பஞ்சைப்போட்டு நெருப்பை மறைப்பவன்
பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா!
நெஞ்சுக்குள் நீதியை மறைத்து வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா
தன் நேர்மையிலும், உடல் வேர்வையிலும்
நின்று வாழ்பவன் மனிதனடா!
நேர்மையும் உடல் உழைப்பும் மனிதனுக்குத் தேவை என்பதனை இந்த வரிகளிலே காட்டுகின்றான். கடமையைச் செய்யாமல், பலனை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை என்பதைக்கூட
“எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்”
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று”
இந்தக் கடமையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. அப்பொழுது ஏற்படும், மனச்சோர்வை நீக்க நம்பிக்கை வரிகளை நமக்குத் தருகின்றான்.
‘நாளைப் பொழுதென்றும் நமக்கென வாழ்க! –
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!
வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க!.
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல!
என்றும்,
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்’ என்றும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் –
வாசல் தோறும் வேதனை இருக்கும் –
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை”
என்றும் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றான். நிம்மதி வேண்டுமானால் நம்பிக்கையுடன், மனதினில் நிறைவு வேண்டும். அதனை,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’
என்று, மனமானது மாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று,
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் தொடந்து வரும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் –
மயக்கம் தெளிந்து விடும்
என்று கூறுகிறான்.
அந்த மனம் கிடைத்தால் மயக்கம் தீரும். அதனைத்தான்,
மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில்
எந்தச் சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்!
என்றும்
‘காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்றும் பாடுகிறான்.
தன்னை அறிதலே வாழ்க்கை! தன்னை உணர்தலே வாழ்க்கை! இதுதான் மதங்கள் கூறுவது, சமயங்கள் கூறுவது! என்பதை,
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!”
அன்னையின் மடியில் ஆடுதல் இன்பம்
கன்னியின் மடியில் சாயுதல் இன்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்!’
என்கிறான்!
இப்படி வாழ்க்கைக்குத் தேவையான எல்லாக் கருத்துகளையும் கொடுத்து விட்டுச் சித்தரின் தத்துவங்களையும் அள்ளித் தந்திருக்கிறான். வாழ்க்கையின் நிலையாமையை நன்றாகவே கூறுகின்றான்.
வந்தது தெரியும், போவதெங்கே
வாழ்க்கை நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது!
என்றும்
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு,
பாவம் மனிதரென்று’
என்றும் நிலையற்ற வாழ்வினை எண்ணிக் கொண்டு வாழ வேண்டுமென்கிறான். எனவே இறை நம்பிக்கையை வலியுறுத்துகிறான்.
மூலம் வித்து, முளைப்பது பூங்கொடி
மூலம் விந்து, முளைப்பது பாலகன்
மூலம் மேகம், முகிழ்ப்பது பொன் மழை
மூலம் இல்லாமல் முளைப்பன இல்லையே!
ஆயின் இந்த அவனிக்கு மூலம்
யாரோ அறியேன்! அவனை என் மனம்
இறைவன் என்பது எவ்வழித் தவறாகும்’
என்று கூறுவதுடன்
தன்னையறிந்துத் தன்பால் சூழ்ந்த
மன்னுயிர்க் கூட்டம் மனநிலை யறிந்து
நம்பிய வழிகளில் நடப்போர் கண்களில்
இம்மை வாழ்விலும் இறைவன் வருவான்’
என்று கூறுகிறான்.
இப்படி வாழ்க்கையின் அத்தனை எல்லைகளையும் தொட்டவன், நமக்கு வாழ்வதற்குரிய பொருள்களை இல்லையென்று கூறாமல் பாடல்களாய் வாரி வழங்கிய வள்ளல் கவிஞன் அவன்.
அவன் மது போதை, மாது போதை, மயக்க போதைகளில் இருந்தவன். ஆனால் புகழ் போதையில் மட்டும் மயங்காதவன்; அடக்கத்தை உயர்வாய் எண்ணியதால்தான், படித்தவர்மட்டும் அல்லாமல் அனைவர் நெஞ்சினிலும் கற்பனையாய், கவிதை வரிகளாய் அடங்கியிருப்பவன்.
எனவேதான், இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று கூறியதுடன், “எப்படி வாழ வேண்டும் என்பதற்கு என் புத்தகங்களையும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு என் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அழுத்தமாகச் சொன்னான், அந்த இமாலயக் கவிஞன்.
இவன் பாடல்கள் அனுபவத்தின் சுவடுகள் என்பதால் நம் அனைவரின் வாழ்விற்கும் என்றென்றும் பொருத்தமாகவே இருக்கும்