இயக்கம்: கே. எஸ். சேதுமாதவன்
கதை: கமலஹாசன்
இசை: மகேஷ் மாதவன்
நடிப்பு: கமலஹாசன்,கௌதமி
நாகேஷ்,ஸ்ரீவித்யா,
வெளியீடு நவம்பர் 2, 1994
———————————————இப்படத்தில் நடித்த நாகேஷுக்கு, சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதும், , தமிழ்நாட்டின் மாநில விருதின் சிறப்புப் பரிசும் கிடைத்தன.1994 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது.
திவ ஸ்வப்னா என்கிற புத்தகம் பகல் கனவு என்று தமிழில் வந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அற்புதமான கல்வியாளர் கீஜுபாய் பதேகா (1885-1939) அவர்களது அற்புதமான படைப்பு அது. இந்த நூலுக்கான அறிமுகவுரையில், தேசத்தின் மிகச் சிறந்த கல்வியாளர், என் சி இ ஆர் டி அமைப்பின் முன்னாள் இயக்குநர் பி கிருஷ்ண குமார் ‘பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய கல்வி முறை, பள்ளி ஆசிரியர் ஒரு ஜடம் போல் இருப்பதையே விரும்பியது, சுதந்திர இந்தியாவின் ஆசிரியர்களும் அதே தடத்தில் நடைபோடுவதில் வியப்பில்லை, ஒரு லட்சம் கனவுகள், கேள்விகளோடு உள்ளே நுழையும் இளம் தளிர்களின் கற்பனைகள், வளர்த்தெடுப்பார் அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன நம் பள்ளிகளில். 1932ல் முதலில் வெளியான இந்த நூல், அப்போதே இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பேசப்பட்டது, இப்போது மறுபிரசுரம் ஆவது காலப் பொருத்தமானது’ என்று குறிப்பிடுகிறார்.
கல்லூரி ஆசிரியர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் நிலவும் சூழலை மெல்ல மெல்ல சலனப்படுத்தி, ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர்த்த முடியுமா, தடைகள் எந்த உருவத்தில் வந்து நிற்கும், அதையும் அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதன் காட்சிப்படுத்தல் தான் நம்மவர் திரைப்படம்.
‘எனக்குரிய இடம் எங்கே’ என்ற அருமையான புத்தகத்தில் கல்வியாளர் பேரா ச மாடசாமி, தனது முதல் நாள் கல்லூரி வகுப்பறை அனுபவம் பற்றிய பதிவைச் செய்திருப்பார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மொழிப்பாடம் நடத்தத் தனது வாழ்க்கையின் முதல் வகுப்பறைக்குள் அவர் சென்று நிற்கையில், அறிமுகமற்ற மாணவர்கள் உலகில் அன்றே அவர் இலகுவாக நுழைய வாய்த்ததும், மிகுந்த மன நிறைவான நிலையில் வெளியே வந்த அவரை அப்போதே தனது அறைக்கு அழைத்த கல்லூரி முதல்வர், ‘எல்லாம் போச்சே….நம்ம கல்லூரி கவுரவம் போச்சே…இத்தனை சிரிப்பு, கைதட்டல், ஆரவாரம் எல்லாம் உங்கள் வகுப்பறையில் இருந்து தானே வெளியே கேட்டது. எல்லாம் போச்சே’ என்று கடுமையாகக் கடிந்து கொண்டாராம். ஆனால், முதல்வர் விருப்பத்திற்கேற்ற பாதையை சிந்திக்கவே செய்யாமல், இன்னுமின்னும் மாணவர்கள் இதயத்தில் இடம் பெறும் ஆசிரியராக, அவர் தனது பணியைத் தொடர்ந்ததையும், விரைவில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதையும், ஆனாலும் சளைக்காமல் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததையும் பேசிச் செல்லும் அந்த நூல்.
கற்றலின் இன்பத்தை, பொறுப்புணர்வின் பாடத்தை, நேயமிக்க தோழமையைச் செயல் விளக்கமாகக் கொண்டு பற்ற வைக்கும் ஆசிரியராக கமல் ஹாசன் அபாரமாக நடித்திருப்பார் நம்மவர் படத்தில். நிலை மறுப்பு, மறுப்பின் மறுப்பு என்று இயற்கையின் அடிப்படையை சமூக அறிவியலாளர்கள் விளக்குவார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதைக்கு மாறாக எதிர்த்து நிற்கும் மாணவர் பாத்திரத்தில் கரன் அற்புதமாகச் செய்திருப்பார். அவரையும் மாற்றத்திற்கு உள்ளாக்கும் வேதியல் மாற்றம் தான் திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதை. ஆனால், அது இலகுவாக, சேதமின்றி நிகழ்ந்துவிடுவதில்லை.
அநீதிக்கு அடங்கிப் போகிறவர் அல்ல அந்த ஆசிரியர். அவரது ஆயுதம் அன்பு தான். அதை ஒளிர்விக்க, சில சில்லறை ஆயுதங்களையும் சமயத்திற்கேற்ப எடுத்து தான் தீர வேண்டி இருக்கிறது. அது தற்காப்புக்காக. அதன் அதிர்ச்சிக் காரணம் பின்னர் தான் திரைக்கதையில் சொல்லப்படுகிறது – அவர் மீது காதல் கொள்ளும் சக ஆசிரியை கவுதமி அவர் மீது அறியாமல் கோபம் கொள்ளும் இடத்தில் !
கல்லூரி நிர்வாகத் தரப்பின் பின்னணியில் தறிகெட்டு அலையும் கரன், போதை மருந்துகளின் உலகிற்கு மாணவரைப் பலியாக்கிக் கொண்டிருப்பவர். அந்த மாணவர்களையும், பின்னர் அவரையுமே மீட்டெடுக்கும் அசாத்திய வேலையை எடுத்துக் கொள்ள வேண்டிய இடத்திற்கு, இயல்பான கதையோட்டத்தின் போக்கில் வந்தடைகிறார் கமல். அதற்கு, மாணவி ஒருவர் எதிர்கொள்ளும் துயரமிக்க அதிர்ச்சி நிகழ்வும், அதைத் தொடரும் தற்கொலையும் தூண்டுதல் தருகின்றன. தனது நண்பனாக இருந்த சக மாணவன் ஆசிரியர் பக்கம் நகர்ந்ததால் பழிவாங்க, அவனது தோழியைக் கடத்தி போதை மருந்துகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தி விபச்சார வழக்கில் சிறைக்குள்ளும் கொண்டு தள்ளி விடுகிறார் கரன். கமல் அவளை பெயிலில் வெளியே அழைத்துக் கொண்டுவந்து வீட்டில் சேர்த்துச் சென்றபின், இரவு முழுக்கத் தந்தையிடம் புலம்பியவள், மறுநாள் அவரது நடை நேரத்தில் தூக்கில் தொங்கிவிடுகிறாள்.
பழி வாங்கத் துடிக்கும் தவறான திசையில் பயணம் செய்யும் மாணவனுக்கும், அவன் திசையை நல்வழிப்படுத்த அவனோடே மோதும் நேர்மையான ஆசிரியனுக்குமான இறுதிக் கட்டப் போரில் இரத்தம் சிந்தியும் அன்பின் கொடியை இரண்டு பக்கத்திலும் பறக்க விடச் செய்கிறது திரைக்கதை. அண்மையில் மறைந்த கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் அபாரமான படமாக்கம் நம்மவர்.
கண்மணி சுப்புவின் வசனங்கள் படத்தின் உயிர் நாடி. மிகவும் இயல்பாக நகைச்சுவையும், துயரச் சாயையும், நம்பிக்கை துளிர்ப்பையும் காட்சிக்குக் காட்சி மிக அளவாக எழுதப் பட்டிருப்பதும், திரைக்கலைஞர்கள் அதை அம்சமாக வெளிப்படுத்துவதும் சொல்லப்படவேண்டியது. கவுதமியின் காதல் ததும்பும் கண்களின் மொழியும், முறைத்துக் கொண்டு துடுக்காகவும், மிடுக்காகவும் நடந்து கொள்ளும் உடல்மொழியும் ரசனைக்குரியவை. கமல் – கவுதமி மட்டுமே இடம்பெறும் காட்சிகள் அற்புதமான கவித்துவமிக்கவை. மிகச் சில நிமிடங்களே வந்து போகும் கௌரவ வேடத்தில், ஸ்ரீ வித்யா மிகக் காத்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துவது படத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. கமல் கவுதமி காதலை அவர் கண்களாலேயே அவதானிப்பது அவருக்கே மட்டும் வாய்க்கும் தனிச்சிறப்பு. கரனுக்குச் சிறப்பான பெயர் பெற்றுத் தந்தது படம்.
படத்திற்காக விருது பெற்ற நாகேஷ், பிரபாகர் ராவ் பாத்திரத்தை அத்தனை அம்சமாக உள்வாங்கி அசத்தலாகச் செய்திருப்பார். மகளை இழந்த தருணத்தில் தொடரும் காட்சியில் (அது ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்று சொல்கின்றனர்) மகத்தான நடிப்பை வழங்கியிருப்பார் தமிழ்த் திரையின் ஒப்பற்ற கலைஞர் நாகேஷ். மாணவராக நடித்திருப்போரும் (திக்குவாய் பேசுபவராக வருபவர் உள்ளிட்டு) மிகப்பெரிய பங்களிப்பு செய்திருக்கும் படம். சேது விநாயகம், செந்தில், டெல்லி கணேஷ் உள்ளிட்ட கலைஞர்கள் அளவான பாத்திரங்களை அவர்களுக்கே உரிய முறையில் சிறப்பாகச் செய்திருப்பார்கள்.
மகேஷ் இசையமைப்பில், கல்லூரியைத் தூய்மைப்படுத்தும் ‘சொர்க்கம் என்பது நமக்கு’ பாடல் ஒரு கொண்டாட்ட கீதம் எனில், ‘பூங்குயில் பாடினால்’ பாடல், எஸ் பி பி – சித்ரா குரல்களில் அருமையான மெல்லிசை. பின்னணி இசையும், மது அம்பாட் ஒளிப்பதிவும், சதீஷ் படத் தொகுப்பும், கமலின் திரைக்கதையும் (வெவ்வேறு ஆங்கில மொழி படைப்புகளைத் தழுவியது என்று சொல்லப்படுவது என்றாலும்) நம்மவர் படத்தை முக்கிய திரைப்படமாக மிளிர வைத்திருப்பவை. விக்ரம் தர்மா பயிற்சியில் சண்டைக் காட்சிகளும் படத்தின் இன்றியமையாத அம்சமாக அமையப் பெற்றவை.
இரத்தப் புற்று நோயாளி என்பதைப் படம் வெளிப்படுத்தும் இடமும், அதை ஒப்புக்கொண்டும் மறுத்தும் நாயகன் வெளிப்படும் விதமும் கமல் நடிப்பின் முக்கிய முத்திரைக் காட்சிகள். சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை விதைப்பது அத்தனை சுலபமானது இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் காட்சிப்படுத்தும் படம், அதே நேரத்தில், அது சாத்தியம் என்பதை அதைவிடவும் அழுத்தமாகப் பொறிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கி வந்திருப்பது.
உணர்வுகளோடு பிறந்தோம் என்று வரும் புலமைப்பித்தன் பாடல் வரி சொல்வது போலவே, உணர்வுகளைத் தீண்டும் படத்தில் சில காட்சிகள் உணர்ச்சிவசப்படவும் வைப்பது. ஆசிரியரையோ மாணவரையோ உயர்த்தவோ தாழ்த்தவோ செய்யாமல், ஆசிரியர் மாணவர் உறவைக் கொண்டாட வைக்கும் படம், பெற்றோர் – குழந்தைகள் உறவையும் பேசுகிறது. சமூகம் எங்கே வழி அடைபட்டு முட்டிக் கொண்டு தடுமாறுகிறது, எங்கே அதை நேர் செய்ய வழியும் திறந்து கொடுக்கிறது என்பதை அசாதாரண இயல்பு மொழியில் பேசுபவர் யாராயினும் நம்மவராகத் தான் இருக்க முடியும்.
நல்ல விமர்சனப் பார்வை. பூங்குயில் பாடினால் பாடல் காட்சி கவித்துவமானது. நாகேஷ் என்னும் ஒப்பற்ற கலைஞன் – 100% ஒத்துப்போகிறேன்!
LikeLike