புத்தகச் சந்தை


அன்றைய நாட்களில் பெரிய கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் காய்கறிகளும், சுற்றி விளையும் உணவுப் பொருட்களும் வார சந்தையில் மட்டும்தான் வாங்க முடியும்.
கிராமங்களில் காய்கறிக்கென கடைகள் இருக்காது. வீட்டில், காட்டில் விளையும் காய் கறிகளை தெரிந்தவர்களுக்கு விற்றால் பாவம். கிராமத்தில் அனைவரும் தெரிந்தவர்கள்தானே. ஓசியில்தான் கொடுக்க வேண்டும். எனவே சத்தம் போடாமல் வண்டியில் ஏறி அவை பக்கத்து நகரின் மண்டிகளுக்கு சென்று விடும்.
அதே காய்கறிகள் மீண்டும் வண்டி பிடித்து சந்தையன்று விளை பொருளாக பிறந்த ஊர் வந்து சேரும்.
சில மைல்கள் சுற்றளவிலிருந்து, பொடி நடையாக சந்தையில் பொருள்களை வாங்கி தலையிலும் கைகளிலும் சுமந்தபடி நடந்து கொண்டே பேசிச் செல்வது ஒவ்வொரு வாரமும் நடக்கும் வைபவம். குடியானவர்க்கு அது ஒரு பொழுது போக்கும் ஆகும்.
சந்தை தினத்தன்று உழவு வேலைகள் அனைத்தும் மதியத்தோடு நிறுத்தப் படும்.
கிணத்தில் இறங்கி ஒரு சிறு குளியல் போட்டு மேல் சட்டையை தேடி எடுத்து போட்டுக் கொண்டு அவசரம் அவசரமாக கிளம்புவது வாரம் நடக்கும் வாடிக்கை.
குழந்தைகள் வீதி வரை தனக்கு வேண்டியதை நினைவு படுத்திக் கொண்டே தொடர்ந்து வருவர்.
மனைவி மார்களோ ‘அந்த உதவாக்கறையோடு சேர்ந்து கள்ளுக் கடை பக்கம் போயிடாதய்யா’, என தங்கள் கவலையை கொட்டித் தீர்ப்பார்கள்.
பல வீடுகளில் எதற்கு வம்பென பெண்களே சந்தைக்கு கிளம்பி விடுவார்கள்.
அவ்வார கொள்முதலில் கண்டிப்பாக பொரி உருண்டையுடன் பொரி கடலையும், காரச் சேவும் வீட்டில் காத்திருக்கும் குழந்தைகளுக்காக இருக்கும். சற்று அதிக பணத்துடன் வந்திருப்பவர் சந்தைக்கு வந்திருக்கும் மிட்டாய் கடையில் இனிப்புகள் வாங்கிச்செல்வர்.
சந்தைக்கு அடுத்த தினம் சில வீடுகளில் மீனோ மட்டனோ மணக்கும்.
என் சிறு வயதில் அம்மா பத்திரம், பத்திரம் என இரண்டு மூன்று தடவைகள் எச்சரிக்கை செய்து கொடுத்த ஐந்து ரூபாய்களை எடுத்துச் சென்று மணப்பாறை சந்தையில் இரண்டு பைகளில் சுமக்க முடியாமல் காய்கறி வாங்கிச் சென்றது ஞாபகம் வருகிறது. ஓசியில் கொசுறாக மறக்காமல் கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கூடவே பச்சை மிளகாயும் கிடைத்த நாட்கள் அவை.
மணப்பாறையில் ஒரு விசேசம், புதன் கிழமை காய்கறிச் சந்தையென்றால், வியாழன் மாடுகளுக்கான சந்தை. வியாழன்று வீதிகளில் மனிதர்கள் நடக்க சற்று யோசிக்க வேண்டும். அன்று மட்டும் வீதிகளின் மொத்த குத்தகை மாடுகளைக்கு மட்டுமே. மாடுகளின் வாயைத் திறந்து பற்களைப் பார்த்து சரியான வயதைச் சொல்வதற்கு எந்தப் பள்ளியில் படித்தார்கள் எனத் தெரிய வில்லை. மாடு விற்பவரும் வாங்குபவரும் தம் கைகளை ஒரு துண்டால் மறைத்து விரல்களால் பேரம் பேசும் கலையை கற்க வேண்டும் என்ற என் கணவு இன்று வரை நிறைவேர வில்லை. இனி வருத்தப்பட்டுப் பயனில்லை.
இன்று சந்தையில் குதிரைகளும் விற்பனைக்கு வருவதாக கேள்வி.
உற்பத்தியாளர், வியாபாரி, வாடிக்கையாளர் ஆகிய மூவரும் கூடும் இடம் சந்தை.
இன்றும் fair, mela, exhibition என வெவ்வேறு பெயர் தாங்கி உற்பத்தியாகும் பொருளனைத்திற்கும் சந்தை நடந்து கொண்டுதான் உள்ளன.
கடைசியாக வாரச் சந்தையை ‘கடைசி விவசாயி’ படத்தில் பார்த்தது.
தலைப்பிலிருந்து விளகி ஏதோ உளறிக் கொண்டுள்ளேனா? வேறு ஒன்றுமில்லைச. கடந்த வாரம் புத்தகச் சந்தை சென்று வந்தீர்களே அதைப் பற்றி சில வரிகள் எழுதுங்கள் என குவிகம் ஆசிரியர் பணித்தார். சந்தை என்றவுடன் என் நினைவுகள் எங்கெங்கொ சென்று விட்டன.
இந்த ஆண்டு சில தினங்கள் நடந்த புத்தக சந்தையின் மொத்த விற்பனை ரூபாய் 15 கோடிகளாம். கூகுள், ஆன்ட்ராய்ட் ஆட்சி செய்யும் காலத்தில் இது ஒரு நிறைவான செய்தி.
எத்துனை புதிய படங்கள் வந்தாலும் ஒரு பழைய MGR படம் வந்து கல்லா கட்டுவது போல ஒவ்வொரு ஆண்டும் கல்கியின் பொன்னியின் செல்வன் விற்பனையில் முதலில் நிற்குமாம். ஒரு மாறுதலுக்காக இவ்வாண்டு புதுமைப் பித்தன்.
எங்கு திரும்பினும் கண்களில் பட்ட இளைஞர் தலைகள், இப்புத்தக சந்தை இன்னும் நூறு வருடங்கள் மேலும் தொடரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
நான் கடந்த சந்தையில் வாங்கிய புத்தகங்கள் இன்னும் படித்து முடிய வில்லை. இவ்வாண்டு கண்டிப்பாக புத்தகச் சந்தை செல்வதில்லை என்ற முடிவுடன் இருந்தேன்.
நிறைவு நாள் நெருங்க, நெருங்க கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தன. மெதுவாக நடுக்கம் கைகளுக்கும் பரவியது. சரி, சென்று சுற்றிப் பார்த்துவிட்டு ஒரிரு புத்தகங்களோடு திரும்புவோம் என கிளம்பினேன்.
திரும்பி வரும் பொழுது இரண்டு கைகளிலும் பைகள் நிறைய புத்தகங்கள்.
கண்டிப்பாக அடுத்த ஆண்டு புத்தகச் சந்தை செல்லக் கூடாது.
பிரசவ வைராக்யம்.