“பாட்டி! கதை சொல்லு பாட்டி”
“பிரபு, லதா! பெரிய பாட்டியை தொந்தரவு பண்ணாதீங்க! நேரமாச்சு, போய் படுங்க”
“பானு, ஏதோ ஆசைப்பட்டு கதை கேக்குது புள்ளைங்க. கேக்கட்டும் விடு”
“ஆமாம் வந்த அன்னிலேருந்து தினமும் கதை சொல்லியாச்சு, கேட்டாச்சு. போதும் எல்லாம்”
“அட இன்னும் ஒரு வாரம்தான். நீயும் புள்ளைங்களும் உங்க ஊருக்குப் போயிட்டீங்கன்னா, அப்புறம் அங்கே கதை சொல்ல இந்தப் பெரிய பாட்டியும் இல்லை. கேக்கறதுக்கு இங்கே புள்ளைங்களும் இருக்கப் போறதில்லை. நான் யாருக்கு இனிமே கதை சொல்லப் போறேன்?”
“அதுசரி! பெரியம்மா! தினமும் இவங்களுக்கு இந்த இருபது நாளா ராத்திரி புதுசு புதுசா கதையெல்லாம் சொல்லி கெட்ட பழக்கம் பண்ணி வைச்சிருக்கீங்க. சென்னைக்குப் போனதும், இவங்களுக்கு தினமும் நானும் கதை சொல்ல வேண்டியிருக்கும்”
“அம்மா! அங்கே நீ ஒண்ணும் கதையெல்லாம் சொல்ல வேண்டாம். நம்ம வீட்டிலே டி.வி., வீடியோ கேம்ஸ் எல்லாம் இருக்கு. இங்கே அதெல்லாம் ஒண்ணுமே இல்லையே?”
“லதா! இங்கே வந்து நல்லா வாயாடக் கத்துக்கிட்டே நீ! ”
“சரி! போகட்டும் பானு, குளந்தைதானே! ஆசைப்பட்டுக் கேக்குது. நான் சொல்றேன். புள்ளைங்களா! இன்னிக்கு ஒரு கதை கேப்பமா? ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தாராம்…….”
“ஐயோ! ராஜா கதை கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு பாட்டி. வேறே கதை சொல்லு”
“இந்தக் கதை வேறே ராஜா கதை…. பரீச்சித்து மகாராசா கதை…..சொல்லட்டுமா?”
“பாட்டி! அந்தக் கதை நாலு நாள் முன்னாலேயே சொல்லிட்டே. எலுமிச்சம் பழத்திலே பாம்பு வந்து ராஜாவைக் கடிச்ச கதை… தெரியும் பாட்டி”
“ஓ! அந்தக் கதையும் சொல்லிட்டேனா? சரி…. இன்னொரு கதை சொல்றேன். பஞ்ச பாண்டவங்க இருந்தாங்கள்லே… அவுங்களுக்கு குரு துரோணரு. அவருக்கு ஒரு புள்ளை. அசுவத்தாமன்னு பேரு. பெரிய வில் வித்தைக்காரன். மகாபாரத சண்டை நடந்திச்சிலே? அதிலே துரோணரை எப்படி கொன்னாங்கன்னா…”
“அதுவும் தெரியும் பாட்டி..அஸ்வத்தாமங்கிற யானையைக் கொன்னுட்டு, துரோணர் புள்ளை அஸ்வத்தாமன் செத்துப் போயிட்டான்னு பீமன் பொய் சொல்லிட்டான். அதைக் கேட்டுட்டு துரோணர் வில்லைத் தூக்கி எறிஞ்சிட்டு சோகமா உட்கார்ந்திருக்கிற போது அவரு தலையை வெட்டிட்டாங்க. தன் அப்பாவை கொன்னதுக்கு அஸ்வத்தாமன் பாண்டவங்க புள்ளைங்களைக் கொன்னு பழி வாங்கிட்டான். இந்தக் கதையும் போன வாரமே சொல்லிட்டே பாட்டி…”
“அப்படியா! சொல்லிட்டேனா? எல்லாம் மறந்து போயிடுது. நீ நல்லா நாபகம் வச்சிருக்கியே!”
“சரி! பிரபு, போதும். எல்லாக் கதையும் பெரிய பாட்டி சொல்லியாச்சு. இனிமே கதை எதுவும் இல்லை. போய் படுங்க போங்க”
“இருக்கட்டும் பானு. நான் இன்னிக்கு வேறே கதை சொல்றேன்… இதுவரைக்கும் யாருக்கும் சொல்லாத கதை….ம்ம்ம்.. எப்படி ஆரம்பிக்கலாம்? ம்… சரி! ஒரு ஊர்லே ராமசாமி, ராமசாமின்னு ஒருத்தர் இருந்தாரு…”
“ராமசாமியா! நம்ம ஊர் பெருமாள் கோவில்லே இருக்காரே, அந்த ராமர் சாமியா?”
“அவரு சாமிடா கண்ணு! இவரு ஆசாமி. பெரிய பணக்காரரு. நெறைய நிலபுலம், தோப்பு தொரவுன்னு வைச்சிருந்தாரு. பத்து தலமுறை பரம்பரை சொத்து. பெரிய வீடு, வாசல்ன்னு ஊர்லேயே பெரிய மிராசுதாரு. அவருக்கு ஒரு தம்பி இருந்தாரு”
“அவரு பேரு லட்சுமணசாமி. சரியா பாட்டி?”
“ஏய்! பிரபு! என்ன அவசரம். பாட்டி சொல்லுவாங்க கேளு!”
“நீ ராமன் தம்பி லட்சுமணன்னு சரியா சொல்லிட்டே. ஆனா இவன் பேரு அது இல்லை. கலியமூர்த்தி. கலியன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க….அண்ணன் மேலே அவனுக்கு ரொம்ப மரியாதை, பக்தி. அவரு சொல்லுக்கு மறு சொல்லு சொல்ல மாட்டான். அவரு சொன்னதை அப்படியே மாறாம செய்வான். அண்ணனும் தம்பியும் ராமர் லட்சுமணர் மாதிரி அப்படி ஒத்துமை”
“கேளு! நீயும் லதாவும் எதுக்கெடுத்தாலும் சண்டை போடுறீங்களே? கூடப் பொறந்தவங்கன்னா அவங்க மாதிரி ஒத்துமையா இருக்கணும். புரியுதா?”
“பானு!மேலே கதையக் கேளு! இப்படியே ரொம்ப வருஷம் ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கும் போது, கலியனுக்கு கலியாணம் ஆச்சு. கொஞ்ச நாள் போனதும் புதுசா வீட்டுக்கு வந்தவ தகறாரு பண்ண ஆரம்பிச்சா. பெரியவர் தம்பியை ஏமாத்திட்டு, குடும்ப சொத்தையெல்லாம் தன் இரண்டு புள்ளைங்களுக்கே சேர்த்து வைக்கிறாருன்னு ஒரு சந்தேகத்தைக் கிளப்பி அவரு கிட்டேயே சண்டை போட ஆரம்பிச்சா. கலியன் மொதல்லே அவளைக் கண்டிச்சான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு சொக்குப் பொடி போட்டு மயக்கி அவ தன் புருஷனை கைக்குள்ள போட்டுகிட்டா. அவனும் சொரணை கெட்டுப் போயி அவ பேச்சைக் கேட்டுகிட்டு சொத்தைப் பிரிக்கச் சொல்லி அண்ணனோட தகறாறு பண்ண ஆரம்பிச்சான்”
“பெரியம்மா, என்ன கதை இது? புராணக் கதையா, இல்லை உங்க கட்டுக் கதையா?”
“இரு, இரு! முழுசா கேளு பானு! அண்ணன் தம்பிக்குள்ளே இருந்த சின்னச் சின்ன வாய்த் தகறாறு பெரிசாப் போயி, கைகலப்பிலே கொண்டு போயி விட்டுடுச்சு. ஒரு நாள் வீட்டிலே பெரியவர் தனியா இருக்கும் போது, பெரிய சண்டையாய் வந்துடுச்சு. சண்டை முத்திப் போயி, சின்னவன் பெரியவரை உதைக்கப் போயி அவரு செத்தே போயிட்டாரு”
“ஐயோ! செத்து போயிட்டாரா? சும்மா உதைச்சதிலே செத்துட்டாரா?’
“பின்னே? உதைச்சதிலே படாத இடத்திலே பட்டா செத்துதானே போவாங்க?”
“பாட்டி! நீ சொல்றது ஒண்ணுமே புரியலை. எப்படி பெரியவரு செத்தாரு?”
“லதா! வேண்டாத கேள்வியெல்லாம் கேட்காதே! பாட்டி சொல்றதைக் கேட்டுகிட்டு சும்மா இரு”
“சரி! விடு! சின்னப் பொண்ணுதானே! சொன்னாலும் அதுக்குப் புரியப் போறதில்லை”
“லதா நீ கொஞ்சம் சும்மா இரு! கதை ரொம்ப இண்டரெஸ்டிங்கா போயிகிட்டு இருக்கு. ஒரு கொலை நடந்திருக்கு. அப்புறம் என்ன ஆச்சு, பாட்டி?”
“அப்புறம் என்ன? போலீஸ் வந்துச்சு. சின்னவனை புடிச்சிகிட்டு போயிட்டாங்க. ஊரே சோகமாயிடுச்சு”
“அப்போ சின்னவரை ஜெயில்லே போட்டுட்டாங்களா? தண்டனை கொடுத்தாங்களா பெரியம்மா”
“ம்… பானு, உனக்கும் கதையிலே சுவாரசியம் வந்துருச்சா? இரு ஒவ்வொண்ணா சொல்றேன். அந்த ஊர்லே இன்னொரு பெரிய மனுஷன் இருந்தாரு. அவரு கலியனுக்கு ரொம்ப வேண்டியவரு. சின்னப் புள்ளையிலேயிருந்து இரண்டு பேரும் சிநேகிதங்களா பளகினவங்க. அவரும் சொத்து சுகம் உள்ளவருதான். ஊரே ரெண்டு பட்டு கிடக்கும் போது, என்ன செய்யறதுன்னு தெரியாம சின்னவன் பொண்டாட்டி “காப்பாத்துங்க”ன்னு வந்து அவரு கால்லே விளுந்தா..”
“அவரு பேரு என்ன பாட்டி?”
“அது ஏதோ ஒரு பேரு…ஏதோ ஒரு புள்ளையார் பேருன்னு வைச்சிக்கோயேன். கதையைக் கேளு! அந்த நல்ல மனுஷனும் அவ மேலே பரிதாபப்பட்டு ‘என்னோட சிநேகிதனை நான் எப்படியாவது காப்பாத்தியே தீருவேன்’னு சொல்லி அவளுக்கு வாக்குக் கொடுத்திட்டாரு”
“பாவி, அவளாலேதானே அவ புருஷன் தன் அண்ணனோட சண்டை போட்டு, கொலைக் கேசிலே மாட்டிகிட்டாரு. அவளைத்தான் ஜெயில்லே போடணும் பெரியம்மா”
“போடலியே! போடலியே! சரி, அவளை விடு! அவ எப்படியோ போகட்டும். சின்னவனோட சிநேகிதரு டவுன்லே பெரிய வக்கீலாப் பார்த்து கேசை கொடுத்தாரு. கலியனை முதல்லே தன்னோட சொந்த ஜாமீன்லே வெளியே கொண்டு வந்தாரு. அவரு இப்படி செஞ்சதினாலே அண்ணனோட குடும்பத்துக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஆயிடுச்சு. ‘சின்னவரைக் காப்பாத்த வேண்டாம்’னு பெரியவரோட இரண்டு பசங்களும் கேட்டுகிட்டாங்க. இவரு ஒத்துக்கலை. அது அந்த இரண்டு குடும்பத்துக்கும் தீராத நிரந்தரப் பகையாவே ஆயிப் போச்சு. இவரை பயமுறுத்திப் பாத்தாங்க. இவரு மசியலை. ‘தன்னோட சினேகிதனைக் காப்பாத்தி அவன் கையிலே இரும்பு காப்புக்குப் பதிலா தங்க காப்பு போட்டு ஊருக்குள்ளே அளைச்சிகிட்டு வருவேன்’னு அவுங்க எதிரிலேயே சபதம் போட்டாரு…..”
“கதை ரொம்ப நல்லா இருக்கு பாட்டி. நிறுத்தாம மேலே சொல்லு”
“சொல்றேன். நெனவுபடுத்தித்தானே சொல்லணும்…அப்புறம் கேசு நாலு வருஷம் நடந்துச்சு. கேசுக்கும் டவுனுக்குப் போய் வர்ரதிலேயும் இவரு கையிலே இருந்த பணமெல்லாம் கரைஞ்சிச்சு. அதைப் பத்தி கவலைப்படமா தன் சொத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வித்து வித்து பணத்தை தண்ணியா செலவளிச்சாரு. போலீஸ்காரங்களுக்கும் வக்கீலுக்கும் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாரு”
“ஐயோ! பாவம். சிநேகிதருக்காக அவரு எப்படி பாடுபட்டிருக்காரு பெரியம்மா. அப்புறம் என்ன ஆச்சு? சின்னவரு தப்பிச்சாரா இல்லையா?”
“ஆ! கேசு முடிஞ்சு தம்பி அண்ணனைக் கொலை பண்ணினதுக்கு நேரடி சாட்சி எதுவும் இல்லைன்னு சொல்லி அவரை விடுதலை பண்ணிட்டாங்க. தான் சபதம் போட்டது போலவே, கலியன் கையிலே தங்கத்திலே காப்பு போட்டு ஊர்லே ஊர்வலமா அழைச்சிகிட்டு வந்தாரு”
“பெரிய ஹீரோதான் போல இருக்கு பாட்டி”
“என்னவோ போ! ஆனா அதுக்கு அப்புறம்தான் அவருக்குக் கெட்ட நேரம் ஆரம்பிச்சுது”
“என்ன ஆச்சு பெரியம்மா?”
“பெரியவரு குடும்பத்துக்கும் இவருக்கும் பகையாயிடுச்சின்னு சொன்னேல்லே? அது ரொம்பப் பெரிசாயிடுச்சு. இவரைப் பளி வாங்க அவங்க காத்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் ஊர்லே கோயில் திருவிளா. ஊர் ஜனமெல்லாம் கோயில்லே கூடி இருக்கு. இவரு அவசர வேலையா டவுனுக்கு போயிருந்தாரு. ரயில்லே ஊருக்குத் திரும்பி டேசன்லேருந்து இருட்டிலே வய வரப்புலே வந்துகிட்டு இருந்த போது, செத்துப் போன அந்தப் பெரியவரோட இரண்டு புள்ளைங்களும் வளியை மறிச்சு அவரை அங்கேயே குத்தி கொன்னு போட்டுட்டாங்க……..”
“ஐயோ! அப்படியா ஆயிப் போச்சு? பாவிப் பசங்க! பாவம், சிநேகிதனுக்கு உதவி செஞ்ச அந்த நல்ல மனுஷனுக்கா இப்படி ஆவணும்? கொடுமை….”
“அம்மா! அந்த அஸ்வத்தாமன் கதையிலே வர்ர மாதிரி இதிலேயும் அப்பாவைக் கொன்னவங்களை புள்ளைங்க பழி வாங்கிட்டாங்க இல்லை? கதை இண்டரெஸ்டிங்கா இருக்கு…நெட்ஃப்ளிக்ஸ்லே ஒரு படம். அதிலேயும் இதே மாதிரிதாம்மா.. ஒரு டாக்டர் வந்து……”
“சரி! போதும். உங்க டி.வி. படக் கதையெல்லாம் இருக்கட்டும். நேரமாயிடுச்சு. போய்ப் படுங்க..”
“அம்மா, பாட்டி கதை இன்னும் முடியலை…. அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?”
“மீதிக் கதை என்னன்னு பாட்டி கிட்டே கேட்டு நாளைக்கு நான் சொல்றேன். ம்… எழுந்திரிங்க”
“போம்மா, நீ ரொம்ப மோசம்.…. சரி! நாளைக்கு மீதிக் கதையை மறக்காம சொல்லணும், சரியா? வா லதா போலாம்”
“சரி பெரியம்மா.. குழந்தைங்க போயிட்டாங்க. இப்போ சொல்லுங்க.. அப்புறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சு? அந்த நல்லவரோட குடும்பம் சீரளஞ்சு போச்சு”
“அந்தக் கொலைகார பசங்களை போலீஸ்லே புடிச்சுக் கொடுக்கலையா?”
“இல்லை… கொலை நடந்ததுக்கு சாட்சி சொல்ல ஒருத்தரும் வரல்லை… ஊர்லே பாதி பேருக்கு பணத்தைக் கொடுத்து வாயை அடைச்சிட்டாங்க… மீதி பேரை மெரட்டி படிய வைச்சாங்க. போலீஸ்காரங்க ஏதோ கேஸ்ன்னு போட்டாங்க.. ஆனா ஒண்ணும் நடக்கலை”
“அவரு காப்பாத்தினாரே அந்த சின்னவரு கலியன் கூட சாட்சி சொல்ல வரலையா?”
“இல்லை… சொத்துக்கு ஆசைப்பட்டு அவனும் அந்தக் கொலைகாரப் பசங்களோட சமாதானமாப் போயி அவங்ககூட சேர்ந்துகிட்டான்.”
“பாவி! அந்த நன்றி கெட்ட பயலுக்குப் போய் அந்த நல்லவரு உதவி செஞ்சாரே? அது சரி, பெரியம்மா, இந்தக் கதையைப் போயி எதுக்கு பசங்ககிட்டே சொல்றீங்க? அவங்களுக்கு என்ன புரியப் போவுது?”
“அவங்களுக்குப் புரியாட்டா என்ன? உனக்குப் புரியுமில்லே? என் கதையை நான் வேறே யார் கிட்டெ சொல்லி அளுவேன்?”
“என்ன சொல்றீங்க பெரியம்மா?”
“ஆமாம் பானு.. அந்தக் கதையிலே வந்த நல்லவருதான் என் புருஷன்…….”
“ஐயோ! அவரா? நம்ம விநாயகம் பெரியப்பாவா?”
“ஆமாம். நல்ல மனசோட தன் சொத்தையெல்லாம் அளிச்சு தன் சிநேகிதனைக் காப்பாத்தினாரு என் புருஷன். அந்த சிநேகிதனே அவருக்குத் துரோகம் செஞ்சிட்டான்…………”
“அழாதே பெரியம்மா…”
“அவரு செத்துப் போகும் போது எனக்கு இருபத்தெட்டு வயசு…கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் என் வயித்திலே ஒரு புளு பூச்சி கூட வளரலே. இருந்த சொத்தெல்லாமும் போயி நிர்கதியா நின்னேன். ஊர்லே ஒரு பய எங்களுக்கு ஆதரவுக்கு வரலை…என்னைப் பெத்தவங்களும் முன்னலேயே செத்துப் போயிட்டாங்க. கடைசியிலே ஒரு நாள் உங்க அப்பாவும் அம்மாவும் வந்து அவங்க கூட என்னை அளைச்சிகிட்டு வந்திட்டாங்க. இதோ நான் தங்கச்சி வீட்டுக்கு வாள வந்து அம்பது வருஷம் ஆயிப் போயிடுச்சு.”
“பெரியம்மா! உங்க புருஷன் உங்க சின்ன வயசிலே இறந்து போயிட்டார்னு தெரியும். ஆனா இந்தக் கதையெல்லாம் தெரியாது. நீங்கதான் எனக்கும் என் தம்பிக்கும் அம்மாவுக்கு மேலே ஒரு பெரிய அம்மாவா இருந்தீங்க. எங்க அம்மாவைவிட உங்க கிட்டேதான் நாங்களும் புள்ளைங்களா வளர்ந்தோம். ஆனா உங்க வாழ்க்கையிலே இப்படி ஒரு சோகம் இருக்கும்னு இதுவரையிலே எங்களுக்குத் தெரியாது பெரியம்மா. அம்மாகூட சொல்லலை”
“சரி! சரி! பானு! அதுக்காக இப்போ என் கதையைக் கேட்டுட்டு நீ அளுவாதே. என் கதையை வேறே யார்கிட்டே நான் சொல்வேன். என் புள்ளைங்ககிட்டேதானே சொல்ல முடியும். அதான், ஏதோ இன்னிக்கு தோணுச்சு.. மனசிலே இருந்ததையெல்லாம் சொல்லி கொட்டிட்டேன். நீ அளுவாம கண்ணைத் தொடச்சிகிட்டு போய்ப் படு. ரொம்ப நேரமாயிடுச்சு… போ கண்ணு”
அஸ்வத்தாமன் செத்துட்டான்னு பொய் சொன்னது பீமன் இல்லே தர்மன்.
கதையைச் சரியாச் சொல்லனும்.
தவறான கதையை பரப்பக் கூடாது.
LikeLike