மலரும் மணமும் – மீனாக்ஷி பாலகணேஷ்

                                     

           சங்க இலக்கியம் – அறிவியல் தகவல்கள் இவற்றையும் குவிகத்தில் இணைக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் திரு. சுந்தரராஜன் அவர்கள் பல சமயங்களில் என்னுடன் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். முயற்சிக்கலாமே என எண்ணினேன். இது எனது முதல் எளிய முயற்சி. குறை-நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். (மீ. பா.)

                                           0000000

           “கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்,” என்று கூறிப் பொருள் ஈட்டச் சென்றிருக்கிறான் அவளுடைய அன்புக் கணவன். கார்காலமும் வந்துவிட்டது. தலைவனோ இன்னும் திரும்பவில்லை. தோழி இதைக்கண்டு கவலை கொள்கிறாள்.

           ‘அடடா, எப்படி நம் தலைவி அவன் பிரிவை இன்னும் தாங்கிக் கொள்ள போகிறாள்,’ என்று கவலைப் படுகிறாள். தலைவியோ அவளிடம் ஆறுதல் மொழிகள் பேசுகிறாள்:

           “தோழீ! குளிர்ச்சி நிறைந்த மழைக்காலத்திற்கே உரியதான பித்திகம் (பிச்சி) எனும் மலர்கள், அறிவில்லாதவை; தாம் சிவக்க வேண்டிய காலத்துக்கு முன்பே அவை சிவந்தன. அதனைப் பார்த்து இது கார்காலம் என்று நானா மயங்குவேன்? (ஏமாறுவேன்); மாட்டேன்.

           “(எனது கவலையெல்லாம்) இந்த மழைமேகங்கள் நடு இரவில் முழங்கும் ஓசையை, இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் அவர் கேட்டால், ஏற்கெனவே பிரிவினால் வருந்துபவர், தன் வேலையை முடிக்காமல் திரும்பி விடப்போகிறாரே என்பதுதான்,” என்கிறாள்.

           பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத் 

           தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

           யானே மருள்வேன் றோழி பானாள்    

           இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் 5          

           என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே     

           அருவி மாமலைத் தத்தக்      

           கருவி மாமழைச் சிலைதருங் குரலே. (குறுந்தொகை- 94)

           சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றான குறுந்தொகையில் காணும் அழகான பாடல் இது! முல்லைத்திணையில் அமைந்த இந்தப்பாடல் தலைவி தோழியிடம் கூறுவதுபோல அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கதக்கண்ணனார் எனும் புலவர்.

           மழைக்காலத்தில்தான் சிவக்க வேண்டிய பித்திகம் இடிமுழக்கம் கேட்டே சிவந்து விட்டதனால் அதனை அறிவில்லாதவை எனக் கூறுகிறாள் தலைவி!

           பித்திகம் எனும் மலர் பிச்சி, பித்திகை, செம்முல்லை எனப்படும். இந்தப்பூ மாலையில் மலரும். இதன் வெளிப்பகுதி சிவப்பாக இருக்கும்.

           ஐப்பசி, கார்த்திகை மாதங்களான கார்காலத்தில் மேகமூட்டத்தாலும் தொடர்ந்து பெய்யும் மழையாலும் பொழுதினை அறிய இயலாது; அப்போது பெண்கள் வீட்டில் வளரும் பித்திகக் கொடியிலிருந்து அரும்புகளைப் பறித்து ஒரு தட்டில் இட்டு வைப்பார்கள். அது சரியான மாலைப்போதில் மலர்ந்து மணம் வீசும்.  இதனைக் கொண்டு மாலையில் விளக்கேற்றும் நேரம் ஆயிற்று என்று பண்டைக்காலத்தில் மகளிர் அறிந்து கொண்டனர். இரும்பினாலான விளக்கில் திரியும் நெய்யும் இட்டு ஏற்றிவைத்து, நெல்லையும் மலரையும் தூவி தெய்வ வழிபாட்டை நடத்தினர் என நெடுநல்வாடை கூறுகிறது. போ(பொழு)தினை அறிய உதவுவதனால் மலர்களுக்குப் ‘போது’ எனும் பெயர் உண்டானதென வாகீச கலாநிதி கி. வா. ஜ. அவர்கள் கூறியுள்ளார்.          

மடவரன் மகளிர் பிடகைப் பெய்த

           செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்

தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்

திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ

நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது

மல்ல லாவண மாலை யயர (நெடுநல்வாடை-39-45; மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியது)

இவையனைத்துமே கண்முன் விரியும் இனிய காட்சிகள். சந்தனம் பூசிய மார்பில் பித்திகைமாலையையும் அணிவது அந்தக்கால ஆடவர் வழக்கம்.

           நமது மண்ணுக்கே உரிய மலர்களின் பெருமையை விரித்துக்காட்டுவன சங்க இலக்கியங்கள். இதில் நாம் காணும் ஒரு மணம்வீசும் மலர்தான் பித்திகம்.

           மலர்கள் தத்தமக்குரிய பொழுதுகளில் மலர்ந்து மணம் வீசத் தவறுவதே இல்லை என்பது லின்னே (Linnaeus) போன்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவு. மலர்களைக் கொண்டு, அவை மலரும் பொழுதைக்கொண்டு, ஒரு நாளின் அல்லது ஆண்டின் பொழுதை அறிந்து கொள்வது பழந்தமிழகத்தில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இது தமிழர்களாகிய நாம் மிகவும் பெருமைப்பட வேண்டியதொரு செய்தி.

           தமிழிலக்கியங்களிலிருந்து இதற்கு என்னும் எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.

           மலர்களும் அவற்றின் மணங்களும் மனித நாகரிகத்துடன், வாழ்வுடன் நெருக்கமான தொடர்புள்ளவை. இறை வழிபாடு, திருமணம், விழாக்கள், பண்டிகைகள் என அனைத்திலும் மலர்கள் தனிப்பட்ட இடத்தை வகிக்கின்றன.

           விரியும் மலர்களில் நறுமணம் எதனால் வருகிறது என்று நம்மில் சிலருக்கு எண்ணம் எழக்கூடும்! ஒன்றிலிருந்து ஒன்றாக நமது எண்ணங்கள் எங்கெல்லாமோ தாவி கருத்துக்களைத் தேடி அலைகின்றன அல்லவா? இதுவே இயல்பு!! இதுபற்றி அறிவியல் தொடர்பான செய்திகளைப் பார்க்கலாமா?

                                0000000

           மலர்களின் நறுமணம் அவற்றின் இதழ்களில், சில வேதிப்பொருட்களால் (volatile organic compounds) ஆன எண்ணைகளால் உண்டாகிறது. குளிர்ச்சியாக உள்ள மொட்டுக்கள் விரிந்து வரும்போது, வெப்பநிலை உயரும், அப்போது இந்த எண்ணைகள் ஒன்றோடொன்று கலந்து ஆவியாகி, ஒவ்வொரு மலருக்குமே தனித்ததான வாசத்தைப் பரப்பும். மலர்களுக்கு வாசம் எதற்காக? மகரந்தச் சேர்க்கைக்கு (Pollination) உதவும் வண்டினங்களைக் கவர்ந்திழுக்கத்தான்!!

           மலர்களின் நிறமும் வாசமும் வண்டுகள், பட்டாம்பூச்சி இனங்களைக் கவர்ந்திழுக்க வேண்டியே! வாசங்கள் தொடர்பான வேதிப்பொருள்கள் பலரகப்பட்டவை, ஒன்றைப்போல் ஒன்றிருக்காது. வாசனையால் கவரப்பட்டு மலர்களை நாடும் வண்டினங்கள் பரிசாகப் பெறுவது மலருள்ளிருக்கும் சுவையான தேனைத்தான்! ஒவ்வொரு வண்டினமும் (beetles), பட்டாம்பூச்சி (bees and butterflies) இனமும், அந்துப்பூச்சி (moth) இனமும் ஒவ்வொரு விதமான வாசனையால் கவரப்படும். குறைந்த தூரம், அதிக தூரம் வரை வாசம்வீசி பூச்சிகளைக் கவரும் வேதிப்பொருட்கள் உண்டு. இரவில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளால் இவை அறிந்து கொள்ளப்படும். தேனீக்களாலும், பட்டாம்பூச்சிகளாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும் மலர்வகைகள் இனிய மென்மையான நறுமணம் கொண்டவை. மாறாக, வண்டினங்கள், வௌவால்கள் போன்றன அடர்த்தியான, அழுத்தமான, பழவகை வாசனைகளால் கவரப்படும்.

           எவ்வாறு இந்தப் பூச்சி இனங்கள் ஒரே வாரியான மலர்களுக்கு மட்டுமே சென்று தேனருந்தி, மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன என்பதுபற்றி இன்றுவரை அறிய இயலவில்லை. நறுமணங்களில் உள்ள சின்னஞ்சிறு வேறுபாடுகளின் மூலமே சரியான மலர்களைக் கண்டடைகின்றன இப்பூச்சிகள்! ஒரேதரமான பூக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட (தேனீக்களால்தான்; பின் மனிதன் அதை எடுத்துக் கொள்கிறான்!!) தேன் வாங்கக் கிடைக்கும். ஆப்பிள் மலர்கள், கலிஃபோர்னியன் பாப்பி, (Californian poppy) ஆரஞ்சுப்பழ மலர்கள், இன்னபிற. மிகச்சரியான வாசனை இழைகளை (tones) வெளிப்படுத்துவதன் மூலம், சரியான மலர்கள் மகரந்தச் சேர்க்கையை நடத்திக் கொள்கின்றன. அரும்பாக இருக்கும் மலரிதழ்களில் இவ்வாசனை வெளிப்படுவதில்லை. உதாரணமாக சிறிய மல்லிகை மொட்டுகளில் இவ்வாசனை இருக்காது. சரியாக மலர்ந்து இதழ்கள் பிரிந்து விரியும்போது வாசனையும் மிக உச்சத்தில் இருக்கும். மகரந்தச் சேர்க்கை நடந்து முடிந்ததும், மலரிதழ்கள், வாசத்தை இழந்து வாடி விடும். உதிர்ந்தும் விடும்.

           அது சரி! தேனீக்களும் மற்ற வண்டினங்களும் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட மலரில் தமக்கான உணவு (தேன்) உள்ளதெனத் தெரிந்து கொள்கின்றன? மலர்களின் நறுமணத்திற்குக் காரணமான இந்த வேதிப்பொருட்களை, தேனீயின் ‘வேதிப்பொருட்களை உய்த்துணரும் கருவி’ (chemoreceptors) இனம் கண்டுகொள்கின்றது. ஏனென்றால் மகரந்தச் சேர்க்கை ஒரே வகையைச் சார்ந்த மலர்களிடையேதான் நிகழ வேண்டும். இரவில் மலரும் மலர்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் கொண்டு திகழும். பூச்சிகளும் வௌவால்களும் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும்.

           மலர்களின் வாசங்கள் பலவிதம். ஆப்பிள், செர்ரி மரங்களின் மலர்வாசம் வண்டுகளும், தேனீக்களும் விரும்பும்வண்ணம் இனிமையாக இருக்கும். அதே நேரம் இதே வகையைச் சேர்ந்த பேரிக்காய் (Pear) மரத்தின் மலர்வாசம் சகிக்க இயலாததாக இருக்கும். ஒருவிதமான அழுகல் வாசனையுடன் இது வண்டுகளைத் தன்பால் ஈர்க்கும். இதேபோல ‘பிணவாச மலர்’ (Corpse flower) என்று ஒன்றுண்டு. இந்தோனேஷிய காடுகளில் இவை வளரும். இம்மலரின் வாசம் அழுகும் மாமிசத்தின் வாசம்போல இருக்கும். அதுவே வண்டுகளைத் தம்பால் கவர்ந்திழுக்கும்!!

           வாசம் மிகுந்த மலரிதழ்களே பெர்ஃப்யூம் எனப்படும் நறுமணப்பொருட்களைத் தயாரிக்க உதவுகின்றன. தம்மை நறுமணம் சூழ்ந்திருக்கவேண்டும் எனும் ஆசைக்காக மகளிர் அக்காலத்தில் மலர்களை மாலைகளாக்கியும், தொடுத்தும் அணிந்தனர். இன்றும் அணிகின்றனர். இவ்வாச மலர்களே நறுமணப்பொருட்களான பெர்ஃயூம் தயாரிக்க முன்னோடிகளாயின எனலாம். இன்று இது மிகப்பெரியதொரு துறையாக வளர்ந்து பலகோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளது.

                                                     0000000

           அறிவியலிலிருந்து ஆன்மீகத்துக்கு வருவோம்! திருப்புடை மருதூர் ஈசருக்கு நாறும்பூ நாதர் என்று பெயர்; எப்படி வந்தது? அருமையான ஒரு கதையின் விளக்கம்: கருவூர்ச்சித்தர் சிவாலயங்களுக்கெல்லாம் சென்று அங்கு உறையும் சிவனைப் பணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் தாமிரவருணியின் கரைவழியாக வந்தவர், மறுகரையில் ஒரு கோவிலைக் கண்டார். அவர் ஆற்றினைக் கடந்துசென்று வழிபட முடியாதவாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலில் உள்ள இறைவனின் பெயர் சித்தருக்குத் தெரியாது. ஆனால் அந்தக்கோவிலைச் சூழ்ந்திருந்த நந்தவனத்தின் மலர்களிலிருந்து நறுமணம் காற்றில் மிதந்துவர, அதனை நுகர்ந்தவர், “நாறும்பூ நாதரே! (மணமிகுந்த பூக்களின் நடுவே உள்ள ஈசனே!) உன்னைத் தரிசிக்க அருளவேண்டும்,” என வேண்டியதாகவும், இறைவனும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, கருவூர்ச்சித்தர் தன்னைத் தரிசிக்க அருளியதாகவும் கூறுவர்.

           இன்றைய இலக்கியப்பயணம் சங்கப்பாடல், அறிவியல், ஆன்மீகம் என்று நிறைவுறுகிறது.

           அடுத்தது என்ன? தேட வேண்டும்! காத்திருப்போம்!!

                                           00000000000

          

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.