தங்கள் இலக்கிய ஆர்வத்தின் திறவுகோல் யாரென்று கூறமுடியுமா? ( ஜெயராமன் பாஸ்கரன், கனடா)
தி வேணுகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் நாகநந்தி. சென்னை ஏ எம் சமணக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆ.வி. யில் முத்திரைக் கதைகள் எழுதியவர். நாடக ஆசிரியர், நடிகர். என் இலக்கிய ஆர்வத்தின் அடிநாதம்; இலக்கியத்தை எப்படி அணுகவேண்டும் என்று சுட்டிக்காட்டிய வழிகாட்டி. வள்ளுவனும் பாரதியும் அவர்தம் இரு விழிகள். அவர் பெயரை “குவிகம்” வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை உங்கள் கேள்வி தந்துள்ளது. நன்றி.
“சரவண பவ” என்றவுடன் முதலில் உங்களுக்கு நினைவில் தோன்றுவது எது? ( சாய்நாத் , சென்னை )
சிறுவயதில், எங்கள் வீட்டில் இருக்கும் ஹாலில் நடுநாயகமாக “யாமிருக்க பயமேன்” சரவண பவ என்று எழுதப்பட்டிருக்கும் பெரிய சைஸ் வேல்முருகன் படம். மாலை வேளைகளில் படத்தின் மேல் ஒரு சிறு மின்சார பல்பு எரிந்துகொண்டிருக்கும். உண்மையிலேயே எனது இளவயது பயங்களையும், தேர்வு பயங்களையும் உடனுக்குடன் தீர்த்துவைத்த அற்புதமான படம். கண்ணை மூடினால் இப்போதும் என் நினைவில் வரும்.
சங்ககால தமிழ் இலக்கியத்திற்கும், பக்தி கால தமிழ் இலக்கியத்திற்கும் இடையில் கால இடைவெளி அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. அந்தக் காலகட்டத்தில் இலக்கிய செயல்பாடுகள் குறைந்து விட்டனவா அல்லது சுவடிகள் கிடைக்கவில்லையா? ( பானுமதி, சென்னை)
எல்லாக் காலகட்டத்திலும் இலக்கிய செயல்பாடுகள் இருந்திருக்க வேண்டும். இடைக்காலத்தில் இன்னும் சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்திருக்கலாம். தமிழ்த்தாத்தா கண்டுபிடிக்கும்வரை சங்கம் இருந்ததே சந்திக்கு வரவில்லையே! உவே சா நூலகத்திலேயே இன்னும் படிக்காத பல ஓலைச்சுவடிகள் கட்டுக்கட்டாக உள்ளன. இப்போது ஓலைச்சுவடிகளைப் படித்து அறியும் தமிழறிஞர்களும் அருகிவிட்டனர்.
“மரபுக் கவிதை என்பது புதுக்கவிதை ஆனது. அதுவே சுருங்கி சுருங்கி ஹைக்கூ ஆனது. எனவே தமிழ்க் கவிதையின் இப்போதைய “வடிவம்” தான் என்ன? (ராய செல்லப்பா,சென்னைப்பட்டினம் )
கவிதை புதுவகை யாப்புள் செல்லும் போது ஹைக்கூ போன்ற கவிதைகள் பிறந்தன, புதிய வரையறைகள் பிறந்தன. ஆனால் தற்காலக் கவிதைகள் தங்களுக்குத் தாங்களே வடிவம் கொடுத்துக் கொள்கின்றன. உரைநடை போல் தொடர்ந்து எழுதாமல் “அடி அடியாகப்” பிரித்து எழுதுவது ஒன்றே இன்றைய கவிதையின் “வடிவமாக” எஞ்சி உள்ளது.
பாரதியாரின் ‘ஆசைமுகம் மறந்து போச்சே’ பாடலை அவர் இளம்வயதில் தானிழந்த தன் தாயின் முகம் மறந்து போயிற்றென்று பாடினார் என ஒரு கருத்து நிலவுகின்றதே, உண்மையா? விளக்குவீர்களா? (மீனாக்ஷி பாலகணேஷ், பெங்களூர்))
நான் அறிந்து இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. பாரதியாரைப் பற்றி வழங்கி வந்த சில கருத்துகளை செல்லம்மா பாரதி மறுத்துப் பேச வேண்டிய சூழல் அன்றே இருந்தது. இன்றைய நிலையில் பலர் பல சொல்கின்றனர். ஆதாரம் ஏதும் இல்லை. மேலும் ஆசைமுகம் மறந்து போச்சே என்ற காதல் பாடலின் பின்னணியில் அன்னைமுகம் இருப்பதாக சொல்வது ஏற்புடையதன்று.
மண் விடுதலை, பெண் விடுதலையைப் பிரதானமாகப் பாடிய பாரதி இந்நாளில் வாழ்ந்திருந்தால், எந்த சமூக அவலத்தைப் பிரதானமாகப் பாடியிருப்பார்? ( ராம், லாஸ் ஏஞ்சலிஸ் )
விடுதலை பெற்ற மண்ணும் பெண்ணும் தேர்ந்தெடுக்கும் நெறியற்ற பாதைகளின் அவலங்களைப் பாடுவார்.
பாரதி பாடலில் ஏதேனும் இலக்கணம் தவறி, பின்னாளில் வேறு யாரேனும் திருத்தியது உண்டா? (கவிஞர் செம்பருத்தி, சென்னை)
நிச்சயமாகக் கிடையாது. அவரது விநாயகர் நான்மணிமாலையின் கையெழுத்துப் பிரதி சிதைவுற்று இருந்ததால் பதிப்பகத்தார் அந்நாளில் சுத்தானந்த பாரதியையும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையையும் அணுகி சீர் செய்துதரச் சொல்லி சில சீர்கள் சேர்க்கப்பட்டன. தஞ்சைப் பல்கலைக்கழகப் பதிப்பில் இவை போன்ற இடங்கள் வளைவுக்குறிக்குள் போடப்பட்டுள்ளன. பாரதியாரே தமது பாடல்களில் பல இடங்களைப் பதிப்பின் போது மாற்றி எழுதியுள்ளார். “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்பதை சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே” என்று மாற்றியுள்ளார். பாஞ்சாலி சபதத்திலும் சில இடங்களை அவரே திருத்தி எழுதியுள்ளார்.
“நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் “எனத் துவங்கும் பாடலில் சக்தித் தாயைப் பாடும் பாரதி , அதே பாடலில் தொடர்ந்து ” வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய், தெள்ளு கலைத் தமிழ்வாணி” என கலை மகள்/ தமிழ்த்தாய் என அழைக்கிறார்?
வெள்ளை மலர்மிசை அமர்ந்தவள் சரஸ்வதியாகிய கலை மகள் அல்லவா? ( வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்)காளி மாதாவும் சரஸ்வதியும் வேறல்லவா? பாரதி சக்தி மாதாவை கலை மகளாக தமிழ் வாணியாக உருவகிக்கறாரா? (முத்து சந்திரசேகரன், கோவை )
உருவகம் ஏதும் இல்லை.பாரதி கணக்கில் எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆனால் சக்தி அனைத்துக்கும் மேல். ஒரே பாட்டில் பல தெய்வங்களைப் பாடியவன் பாரதி. ஆறு துணை என்ற தலைப்பில் “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் என்ற பல்லவியில் கணபதி, முருகன், கண்ணன், கலைமகள், திருமகள் அனைவரையும் பாடியுள்ளானே ! மேலும் நீங்கள் குறிப்பிடும் பாடலில் இறுதியில் வரும் இந்தக் கண்ணியின் நிறைவில் ஓம் சக்தி ஓம் என்று பாடாமல் சக்தி வேல் என்று பாடியுள்ளான். எனவே அப்பாடலில் கலைமகள் தவிர ,முருகனைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளதாக அறியலாம்.
“கவியரங்கப் பட்டிமன்றம் என்ற நிகழ்ச்சி பாரதி கலைக் கழகத்தில் எப்பொழுது துவங்கியது? அதன் சிறப்பையும், அதில் பங்கு பெற்ற மூத்த கவிமாமணி நா.சீ.வ. அவர்களோடு உங்களுக்கான நட்பையும் பகிருங்களேன்.” ( மீ.விசுவநாதன், சென்னை )
பாரதி கலைக்கழகக் கவிதைப்பட்டிமன்றம், 1985 ல் தொடங்கியது (ஓராண்டு முன்பின்னாக இருக்கலாம்). முதல் கவிதைப் பட்டிமன்றம் கவிஞர் இளந்தேவனின் இராயப்பேட்டை இல்லத்தில் நடைபெற்றது. தலைப்பு : சீரிய பொழுது இரவா? பகலா? ; நடுவர் – வவேசு. என்ன தீர்ப்புக் கொடுத்தேன் என்பது மறந்துவிட்டது.
என்னிலும் பல ஆண்டுகள் மூத்த கவிமாமணி நா.சீ.வ. பீஷ்மன் என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியவர். பல நூல்களின் ஆசிரியர். திரிலோகம், நா.பா., மகரிஷி, லா.ச.ரா , தி.சா. ராஜு போன்றோரின் நெருங்கிய நண்பர். இளையவனான என் தலைமையில் பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு என்னை வழிநடத்தி எனக்குப் பெருமை சேர்த்தவர். நல்ல கவிதை வரி ஒன்று கண்டால் போதும், தலைமேல் வைத்துக் கொண்டு குழந்தை போலே கூத்தாடுவார். இலக்கிய இரசனையில் இன்னொரு டி.கே.சி. மனம் திறந்து பாராட்டுவார். மீ.வி. கவிதையில் குருவருள் பொறியாக வளர்கிறது என உங்கள் கவிதையை அவர் பாராட்டியதும் நினைவில் பசுமையாக உள்ளது.
இன்னும் தமிழ் பயிற்று மொழியாக இல்லாமல் சரளமாக வீட்டில் பேசும் மொழியாகவும் இல்லாமலும் இருக்கின்ற காலகட்டத்தில் சிற்றிதழ்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்.? (ராஜாமணி,சென்னை)
கையே காணவில்லையென்றால் கைரேகை பார்ப்பது எப்படி ? தமிழ் படிக்காமல் வளரும் தலைமுறையிடம் என்ன எதிர்பார்க்கமுடியும் ? ஆனால் நல்ல தமிழ் அறிந்தோரும் இலக்கிய ரசனை உள்ளோரும் இனி “சிற்றிதழ்களை” மட்டுமே சுவையான வாசிப்பு அனுபவத்திற்கு நம்பி இருக்கவேண்டும். அந்த நம்பிக்கைக்காகவேனும் எதிர்காலத்தில் சிற்றிதழ்கள் நிச்சயம் வாழும்.
அருமையான, அளவான பதில்கள். வெகு சிறப்பு வவேசு சார்
LikeLiked by 1 person
எதிர்பார்த்தபடியே வ.வே.சு.வின் கேள்வி-பதில் முதல் இதழிலேயே களைகட்டிவிட்டது. அந்நாளில் கலைமகளில் ‘விடையவன்’ என்ற பெயரில் கிவாஜ அவர்கள் விடையளித்த அதே தரம் இவரிடம் காணமுடிகிறது. நம்மவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
LikeLiked by 1 person