அபூர்வங்கள் -4 – பானுமதி

                                                        படியில் குணத்து பரதன்

பச்சைப்புடவைக்காரி - புரிந்துகொள்ளாத பாத்திரங்கள் - பரதன் 2 - 263

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, இயந்திர மொழி கற்றுப் பகுத்தாயக்கூடிய ஒன்று, உங்களை இந்தியத் திரு நாட்டின் முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுத்துள்ளது. மாலைகள், சால்வைகள், வாழ்த்துகள், கோஷங்கள், இவற்றினிடையே உற்றார்கள், நண்பர்களின் பெருமிதம். அனைத்து சேனாதிபதிகளும், காவல் துறையும், குண்டு துளைக்காத வாகனமும், நிறைவான வசதியுடன் கூடிய தனி விமானமும், முழுதும் நடந்து மாளாத மிகப் பெரிய வசிப்பிடமும் உங்களுக்கே, உங்களுக்கே.! நீங்கள் ஆணையிட்டால் தான் இந்திய அரசே இயங்க முடியும். இப்படிப்பட்ட வாய்ப்பை நாம் யாரேனும் நழுவ விடுவோமா?

ஆனால், அதை வேண்டாமென்று மறுதலித்தவன் பரதன்.

“தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன

நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி போயினை என்ற போழ்து

புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் ராமர் நின்

கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!

கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதனைப் பற்றி  குகன் இவ்வாறு பேசுகிறான். ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ என்று வியக்கிறான். இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும், மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை ஒத்த ராமன், தனக்குரிய அரசினை விட்டுக் கானகம் சென்ற அந்தத் தியாக இராமன், பரதனின் மாண்பின் முன்னர் ஆயிரத்தில் ஒரு பங்குதான் என்று காட்டில் வசிக்கும் ஒரு வேடன் சொல்கிறான் என்றால் பரதனின் சிறப்பினை நாம் அறிந்து கொள்ளலாம். ராமன் அறக்கடல், தர்ம சீலன். ஆனால், அவனினும் சிறந்தவன் பரதனே என்று கம்பர் பல இடங்களில் சொல்கிறார்.

“தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும் பள்ளம் எனும்

தகையானைப் பரதனென்னும் பெயரானை எள்ளரிய குணத்தாலும்

நிறத்தாலும் இல்லிருந்த வள்ளலையே அனையானைக்

கேகயர் கோன் மகள் பயந்தாள்.”

இதை விஸ்வாமித்திரர் கூற்றாகக் கம்பன் எழுதுகிறார். ஜனகரின் புதல்வியான மாண்டவியை மணம் செய்து கொண்டவன் பரதன். அந்தப் பரதனைப் பற்றிச் சொல்லும் போது, நற்குணங்கள் சங்கமிக்கும் அரிய குணக்கடல், இராமனை ஒத்த மாண்புடையவன் என்று முனிவரே சொல்கிறார்.

பரதனைக் கண்டவுடன் முதலில் கொள்ளும் சீற்றம், அவனது தோற்றத்தைக் கண்டதும் மாறும் சிந்தனை, அவனை வியந்து பணிவது என்றெல்லாம் குகனின் வாயிலாக கம்ப நாடகம் நடக்கிறது.

சீற்றத்தில் அவன் சொல்லாக வெளி வருவது என்ன ஒரு வீரச் சந்தத்தில் அமைந்திருக்கிறது பாருங்கள்:

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லோளா?

தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?

ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ?”

‘என்னைத் தாண்டி இந்தப் பரதனைப் போக விட்டு விடுவேனா நான்? அவருடைய சேனைகள் எனக்குப் பொருட்டா என்ன? தோழன் என்று என்னை உயர்த்திய அந்தப் பரமனின் சொல் வேதச் சொல்லல்லவா? பரதனை இராமர் இருக்கும் இடத்திற்குச் செல்லவிட்ட இந்தக் கீழ்மையான வேடன் இன்னுமா இறக்கவில்லை என்று இராமர் நினைப்பாரே? நான் ஒருக்காலும் பரதனை அனுமதியேன்’ என்று ஆவேசமுற்ற குகன், பரதனின் தோற்றத்தப் பார்த்தவுடன் தன் நினைப்பை மாற்றிக் கொள்கிறான்.

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்

தம்பியையும் ஒக்கின்றான்; தவம் வேடம் தலை நின்றான்

துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்

எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்றான்..”

‘பரதனும், சத்ருக்கனனும் இராம இலட்சுமணரை ஒத்திருக்கின்றனர். தவக் கோலத்தில், கண்ணீர் ஆறாகப் பெருக, இராமர் இருக்கும் திசை நோக்கி கூப்பிய கரங்களுடன் நிற்கும் இவன் இராமனுக்குப் பின் பிறந்தவனில்லையா? அவனிடத்தில் தவறுகள் வருமா என்ன என்று  சிந்திக்கிறான் குகன்.’

கம்பர் இங்கே ஒரு செய்தியை நுணுக்கமாகச் சொல்கிறார்: முன்னேர் வழி பின்னேர் செல்லும் என்பதுதான் அது.

“வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை

நல்கலை இல்மதி என்ன நகை இழந்த முகத்தானைக்

கல் கனியக் களிகின்ற துயரானைக் கண்ணுற்றான்

வில் கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்.”

பேரரசினைப் பெற்றவனாகவா பரதன் காட்சி அளிக்கிறான்?

“அறங்கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்

பிறன் கடை நின்றவன் பிறரைச் சீறியோன்

மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்

துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன்”

என்றெல்லாம் அரற்றியவன் பரதன். உலகின் அத்தனை பழிகளும் என்னைச் சேரட்டும், நான் அரசில் ஆசை வைத்து அண்ணனைக் காட்டிற்கு விரட்ட நினைத்திருபேனாகில் என்ற பரதனின் மன உளைச்சலைக் கம்பரைத் தவிர யார் இப்படிப் பாட முடியும்?

பரதன், இராமரை கங்கையைக் கடந்து அக்கரையில் பார்க்கும் போது அண்ணல் காட்டில் இருக்க தான் நாட்டில் இருப்பதா என ஏங்குகிறான். அவன் எப்படிப் போனான், என்னென்ன செய்தான் என்பதையும் கவிஞர் விட்டு வைக்கவில்லை.

“கார் எனக் கடிது சென்றான்; கல் இடைப் படுத்த புல்லின்

வார் சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்.

பார் மிசை பதைத்து வீழ்ந்தான்;படுவரல் பரவை புக்கான்

வார் மணிப் புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.”

பாதுகா பட்டாபிஷேகம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்

அரியணை வேண்டாம், அதிகாரம் வேண்டாம், செல்வச் சுகமும் வேண்டாம், மனைவியுடன் வாழ வேண்டாம், அயோத்தி மாநகர் வேண்டாம், சிம்மாசனத்தில் அமர வேண்டாம், உந்தன் பாதுகையைத் தலையில் தாங்கிச் சென்று அதைப் பீடத்தில் அரசனென வைத்து உன் அரசை நடத்துவேன். பதினான்கு ஆண்டுகளில், அண்ணா, நீ வரவில்லையென்றால் நான் தீக்குளிப்பேன் என்ற பரதனை விட உயர்ந்தவரா இராமர்?

பிறர் தன்னைப் பார்த்துவிடக் கூடாதென்று புலர் பொழுதிற்கு முன்னர் சென்று ஆற்றில் குளித்து விட்டு ஓடி வருவான் அவன். செய்யாத செயலுக்காக வருத்தப்பட்டு, தன் நிலையைத் தாழ்த்திய பரதன் எங்கே? கற்பரசி எனத் தெரிந்தும் தீக்குளிக்க வைத்த இராமன் எங்கே?

பதினான்கு ஆண்டுகள்  கடக்கப் போகின்றன. இந்நேரம் இராமர் வந்திருக்க வேண்டும்.. இல்லை, அவர் வரவில்லை என்று கலங்கிய பரதன் சத்ருக்கனனை தீ மூட்டச் சொல்லி அதில் இறங்கி உயிர்த் தியாகம் செய்வதற்காக அதை வலம் வருகையில் உயிர் காக்கும் உத்தமனாகிய அனுமன் ‘ஐயன் வந்தான்; ஆரியன் வந்தான்’ என்று நற்செய்தி சொல்லி கைகளால் தீயை அணைக்கிறார். அடையாளமாகக்  கணையாழியைக் காட்டுகிறார். அதை வாங்கிக் கொள்ளும் பரதன் அடைந்த பரவசம் சொல்லில் அடங்காது. கம்பர் பாடுகிறார்:

“மோதிரம் வாங்கித் தன் முகத்தின் மேலணைத்து

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா

ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்

தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்.”

என்ன ஒரு காட்சி! இராமரைப் பிரிந்ததால் மெலிந்த உடலாகி, அவர் வரும்போது அந்த மகிழ்ச்சியை இவரால் தாங்க முடியுமா எனப்  பேசியவர்கள் நாணும் படியாக பரதனின் உடல் பூரித்தது. இராமரின் மோதிரத்தை தன் முகத்தில் அணைத்துக் கொள்கிறான்; தன்னைத் தொழும் அனுமனை மீள மீளத் தொழுது துள்ளுகிறான்.

அரசு வேண்டாம், அதன் அதிகாரமும் வேண்டாம் என்ற உன்னத எண்ணம் கொண்ட பரதன் அதற்கு உடையவர் வருகையில் பெறும் மகிழ்ச்சி பொருளாசை மிகுந்த இந்த உலகிற்குச் சிறந்த படிப்பினை.

இராமர் காட்டிற்குப் போவதற்கு விடை பெறுகையில் அவன் குணநலன்களை அறிந்து தான் கௌசலை பேசுகிறாள் ‘இராமா, மூத்தவனுக்கு உரியதுதான் பட்டம். ஆயினும் பரதனோ மும்மையின் நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லவன்.’

‘முடி ஒன்றி மூவுகங்களும் ஆண்டு உன் அடியேர்க்கு அருள் செய்து அவன் பின் தொடர்ந்து படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற, அயோத்திய கோமானைப் பாடிப் பற.’-பெரியாழ்வார்.

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.