கவிஞர் திலகம் மருதகாசி
காலத்தால் அழிக்க முடியாத வரிகள் தந்த காவியக் கலைஞர். பார்வையில் உறுதி, கம்பீரம், தன்னம்பிக்கை, மிடுக்கு, புலமை –
இவர்தான் மருதகாசி.
நேரிடையான எளிமையான சொல் அமைந்த பாடல்கள், இவரது தனித்துவம்.
அடிப்படையில் கிராமத்து விவசாயி. எனவே, பட்டுக்கோட்டைக் கவிஞர் போலவே, இவரது பாடல்கள் எல்லாம் ஜனரஞ்சகமானவை மட்டுமல்ல, கிராமங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. .
தமிழின் மரபு – தமிழின் அழகு – தமிழின் மிடுக்கு – இவற்றைப் பாடல்களில் தந்தவர். விலைக்கு எழுதும் வியாபாரியாக இல்லாமல், கலைக்கு எழுதும் கவிஞராக இருந்தார்.
மருதகாசி மிகப் பெரிய சாதனையாளர் மட்டுமல்ல – சுய மரியாதை மிக்கவர். சொந்தப படம் எடுத்து பண இழப்பு மற்றும், கண்ணதாசன், வாலி என திரையுலகம் மாறியபோது, மீண்டும் கிராமத்திற்கு வந்து விவசாயம் பார்த்தார். தேவையான நேரம் மட்டும் வந்து பாடல்கள் எழுதிக் கொடுத்தார். பின்னாட்களில், சிவகுமார், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலர் நடித்த தேவரின் படங்களுக்கு, பாடல்கள் எழுதினார்.
இவரது வரிகளில், சொல்லவந்த கருத்தின் அழுத்தம், அருவியாய் வந்து விழும் வார்த்தைகள் என பிரமிக்கவைக்கும். மெட்டுக்குப் பாட்டு என்றால், இவரின் வேகத்திற்கு யாரும் எழுத முடியாது என்பார்கள். நல்ல மனிதர் – எல்லாக் கவிஞர்களிடமும் நட்பு கொண்டவர். ஆரம்பத்தில், உடுமலை நாராயண கவியிடம் உதவியாளராக இருந்தார். அந்தக் காலத்தில், பல படங்களில், இந்தி மெட்டிற்குப் பாடல் எழுதவேண்டிய நிர்பந்தம், குறிப்பாக 1960 வரை இருந்தது. அப்படி ஒரு படம், உடுமலையாருக்கு வந்தபோது, அவர், அசல் பாட்டு மட்டும் நான் எழுதுகிறேன், மெட்டுக்கு, இவன் எழுதுவான் என்று மருதகாசியை காண்பிக்க, 1950களில் தொடங்கியது இவரின் பயணம். அந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகின. அவற்றில் ஒன்று தான்,
‘மாசிலா உண்மைக் காதலே’ (அலிபாபாவும் 40 திருடர்களும்)
ஜி இராமநாதன், ஏ பி நாகராஜன், கே வி மகாதேவன், இவர்களுடன் மிக நல்ல புரிதல் இருந்ததால், பல அற்புத பாடல்கள் இவரால் தரமுடிந்தது.
சாரங்கதாராவில்,
“வசந்த முல்லை போலே அசைந்து ஆடும் வென் புறாவே “
இன்றைக்கும் அனைவரும் விரும்பும் சாருகேசி ராகப் பாடல்.
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே, என்றும்,
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே , என்றும்,
இன்றிரவில் நீயே – சந்திர ஒளி நீயே,
என்று TMS பாட, சிவாஜி நடிக்க, இந்த வரிகள் கண்ணில் நிற்கும்.
காவியமா இல்லை ஒவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
அன்பின் அமுதமே! அழகின் சிகரமே!
ஆசை வடிவமே! அழகின் அதிசயமே!
எந்நாளும் அழியாத நிலையிலே-காதல்
ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே!
என்ற பாவை விளக்கு பாடலின் வரிகள் நிலையான காதலைக் கூறும்.
இன்னொரு பாடலில்,
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
என்றும்,
தென்றல் உறங்கியபோதும்
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா என்பார்.
இப்படியெல்லாம் காதலைப் பாடியவர், கற்புடன் விளங்கும் காதலை,
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமா
மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்,
என்று ஒரு காதல் திருமணம் , மரபுப்படி எப்படி நடக்கவேண்டும் என்பதை எப்படிக் கூறுகிறார்.
( நல்லவேளை, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போவோமா – ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா, என்ற பாடலை கேட்க அவர் உயிருடன் இல்லை)
அடுத்து, சம்பூர்ண இராமாயணம் என்ற ஒரு காவியப் படத்தில் இருந்து ஒரு பாடல். கவிஞரின் இலக்கிய அறிவு, அதை திரைப்படத்தில் கொண்டு வரும் நேர்த்தி – அடடா !
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும்
நிலை இன்றே ஏன் கொடுத்தாய்..’
சிவபெருமான் முன்னால் கசிந்துருகி தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறான் ராவணன். ஒரே வார்த்தையில் இருபொருள் தொனிக்கும் சிலேடை வகையில் மருதகாசி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார். சாதாரணமாக ‘மண்மகள்’ என்ற வார்த்தை பூமாதேவியைக் குறிக்கும். ‘நிலம் நோக்கி தலை குனிந்து வரும் நிலையை எனக்கு ஏன் கொடுத்தாய்?’ என்று ராவணன் குமுறுவதாகப் பொதுப்படையாகப் பார்த்தால் அர்த்தம் தொனிக்கும்.
ஆனால் கம்பன், ராவணன் நாணத்தால் வருந்தக் காரணம் என்று சொல்வது எதைத் தெரியுமா? ‘வானவர் சிரிப்பார்கள். மண்ணில் உள்ள அனைவரும் நகைப்பார்கள். தனது கட்டுப்பாட்டில் உள்ள பகைவர்கள் எல்லாரும் தனது தோல்வியைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார்களே’ என்று அதற்கெல்லாம் ராவணன் வருந்தவில்லையாம்.
‘வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் – நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்’
தான் கவர்ந்து வந்த சீதை ராமனிடம் தான் தோற்றதை அறிந்தால் சிரிப்பாளே’ என்றுதான் அவமானத்தால் புழுங்கினான் ராவணன் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இப்போது மருதகாசியின் பாடல் வரியை மறுபடி பார்த்தால், மண்மகள் என்ற வார்த்தைக்கு ‘மண்ணின் மகள்’ அதாவது பூமாதேவியின் மகளான சீதா தேவி என்ற அர்த்தம் கிடைக்கிறதல்லவா? அதாவது ‘மண்ணின் மகளான சீதாதேவியின் இளக்காரமான நகைக்கும் முகத்தைக் கண்டு மனம் அவமானத்தால் கலங்குகிறதே. இந்த நிலையை ஏன் கொடுத்தாய்?’ என்று கலங்குகிறான் ராவணன்
பொதுவாக, உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அவமானம் ஏற்பட்டால் அவன் தனக்குள் எப்படி மறுகிப்போவான், தனது சாதனைகளைப் பட்டியல் போடுவதில் தொடங்குவான் அல்லவா? இதில் சரணத்தில் முதல் இரண்டு அடிகளில் அப்படி ராவணன் பட்டியல் போடுவதாகத் தொடங்குகிறார் மருதகாசி.
‘எண்திசை வென்றேனே -( இந்த இடத்தில் பெரும் PAUSE இருக்கும்) அன்று
இன்னிசை பொழிந்துன்னைக் கண்டேனே’
அதற்கு மேல் பேச முடியாமல் அவனது தற்போதைய நிலை மனத்தில் உறுத்த மீண்டும் ‘மண்மகள் முகம் கண்டே’ என்று குமுறத் தொடங்கி விடுகிறான் அவன். அந்தக் குமுறலைப் துல்லியமாகக் கேட்பவரை உணரவைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் என்றால் அதுதான் கே.வி. மகாதேவன்.
‘எண்திசை வென்றேனே…’ என்ற வார்த்தைகளை அவனது உயர்வைக் காட்டும் விதமாக உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், மெல்ல மெல்லக் கீழிறங்கி கடைசியில் ‘மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய் ஈசா ’ என்ற வரிகளுக்கு மீண்டும் வந்து முடிக்கும் போது, அவனது மனக்குமுறலைப் பிரதிபலிக்கும் வண்ணம் மறுபடி உச்சத்துக்கே கொண்டுபோய் நிறுத்திப் பாடலை அப்படியே முடித்திருக்கிறார் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். ‘திலங் ராகம் தான் எத்தனை பொருத்தமானது ? ஜாம்பவான்கள் !
அதே படத்தில், இராவணனை புகழ்ந்து பாடும் பாடலாக, பல்வேறு ராகங்களை இணைத்து எழுதிய அழகு. அதற்கேற்ப, திரை இசைத்திலகம் இசை அமைத்த அற்புதம்.
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது
காலையில் பாடும் ராகம் பூபாளம்
உச்சியில் பாடும் ராகம் சாரங்கா
மாலையில் பாடும் ராகம் வசந்தா
இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி
மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி
யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை
வெண்பா பாட சங்கராபரணம்
அகவல் இசைக்க தோடி
தாழிசைக்கு கல்யாணி
என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறார்.
தமிழில முப்பரிமாணச் சொல் என்று ஒன்று உண்டு. ஆண்டாள், திருப்பாவையில், ‘சிற்றம் சிறு காலை’ என்றும், மணிவாசகர், திருவெம்பாவையில், ‘வண்ணக் கிளி மொழியாள்’ என்றும், பாரதி , கண்ணம்மா கவிதையில், ‘பேசும் பொற் சித்திரமே’, கண்ணதாசன், பூ முடித்தாள் என்ற பாடலில், ‘வண்ணத் தேன் அருவி’ என்றும் பாடிஉள்ளர்கள்.
மருதகாசி, பாவை விளக்கு படப் பாடலில், பெண் அழகு. தமிழ்ப்பெண் அழகு. வண்ணம் சேர்ந்த தமிழ்ப்பெண் இன்னும் அழகு. என்று,’ வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள், என்று தொடங்கி, கண் எதிரே கோடிக் கோடி கற்பனைகள் தந்தாள் என்பார்.
அதேபோல, குழந்தைகளுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிக அருமை.
தாலாட்டில், (பாலசரஸ்வதி குரலில் இதைக் கேட்டால், எந்த மனமும் மயங்கும்)
நீல வண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
பிள்ளை இல்லாக் கலியும் தீர
வள்ளல் உண்டன் வடிவில் வந்தான்
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திரப் பிம்பம்
கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
இன்னொரு பாடல் – கைதி கண்ணாயிரம் படத்தில் இடம்பெற்ற,
கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பேரப் படித்து
உலகினில
பெரும்புகழ் சேர்த்திடடா
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எதுவந்தபோதும் எதிர்த்து நில்லு
நீலமலத் திருடன் படத்தில் இந்தப் பாடல் –
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
என்று பாரதியின் ஆத்திசூடியைபோல எழுதி இருப்பார். ( மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் இந்த முதல் வரிதான் ஓபனிங் பாடலாமே , உண்மையா?)
அதேபோல, ஒரு படத்தில், குறிப்பிட்ட காட்சிக்கு ஏற்ப, மெட்டிற்கேற்ப, வரிகள் வராதபோது, இந்தப் பாடல் அண்ணன் மருதகாசி எழுதட்டும் என்று கூறியவர், கவியரசு கண்ணதாசன். அந்தப் பாடலும் படு ஹிட். அந்தப் பாடல் தான் , லதாங்கி இராகத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும்,
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
என்று இலக்கியத்தை பிழிந்து தந்திருப்பார்.
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சிவாஜி நடித்த ராஜாராணி படத்தில் , சிரிப்பு பற்றி எழுதவேண்டும் என்றபோது, மருதகாசி எழுதிய பாடல் தான் , ‘சிரிப்பு சிரிப்பு’ என்ற பாடல் .
“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே,
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே”
என்ற பாடலில், குற்றாலத்து அத்தனை அருவிகளின் அழகை வர்ணித்து எழுதியிருப்பார், கவிஞர்.
எத்தனையோ பாடல்களை இவர் படைத்திருந்தாலும், இவர் எழுதிய ஒரு பாடல், மிகப்பெரிய சாதனைப் பாடல் என்றே கூறலாம். இதிகாச காவியத்தை, இவ்வளவு நேர்த்தியாக ஒருவர் எழுதுவது என்பது மிகவும் அதிசயம். லவகுசா படத்துக்காக, கண்டசாலா இசையில், முழு ராமாயணத்தையும் 12 நிமிடப் பாடலில் கொண்டு வந்திருப்பார். அந்தக் காலத்தில், மாணவனாக இருக்கும்போது, வானொலியில் கேட்டிருக்கிறேன். இரண்டு தடவை , அந்த இசைத்தட்டை மாற்றி போடுவார்கள். 4 பக்கங்கள் கொண்ட இசைத் தட்டு.
“ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே செவி குளிரப் பாடிடுவோம் -கேளுங்கள் இதையே,”
என்ற இந்தப் பாடல், சுசீலா, லீலா பாட, அற்புத ராகமாலிகையில் அமைந்த பாடல். படத்தில், ராமர்-சீதை இருவரின் மகன்கள் – லவனும் குசனும் போடுவதுபோல. வரிகளின் அழகு அப்படியே ராஜபாட்டையாய் போகும் –
மந்திரிகுமாரி படம் முடியும்போது, கிளைமாக்ஸ் பாடல் வேண்டாம் , மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று தயாரிப்பாளர், டிஆர் சுந்தரம் கூற, இயக்குனர், இசையமைப்பாளர் ஜி ராமநாதன் மற்றும் மருதகாசி மூவரும் இந்தப்பாடலைச் சேர்த்து, இரண்டுநாள் இந்தப் பாடலை மக்கள் ரசிப்பதைப் பார்ப்போம் – இல்லாவிட்டால் எடுத்துவிடுவோம் என்று கூறியபின், அப்படியே படம் வெளிவந்தது. ஆனால், அந்தப் பாடல் தான் – இன்று வரைக்கும், அல்ல அல்ல, என்றைக்கும் ரசிக்கப்படும் பாடலானது.
வாராய் நீ வாராய் பாடல்.வாராய்
நீ வாராய்…
போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்…
இந்தப் பாடலில் இரண்டு அர்த்தம் – இருவரும் ஒருவரை ஒருவர் உயிர் இழக்கச் செய்வதை, மறைமுக வார்த்தைகளுடன் எழுதிருப்பது அழகு. இந்தப் பாடல், கவி காமு ஷெரீஃப் மற்றும் மருதகாசி இணைந்து எழுதியது.
அதேபோல தேவரின் துணைவன் படத்தில், கண்ணதாசனும் , மருதகாசியும் இணைந்தே எழுதிய பாடலும் மிகப்பெரிய ஹிட்..
‘மருதமலையானே ! நாங்கள் வணங்கும் பெருமானே’
என்ற பாடல் தான் அது.
மருதகாசி அவர்கள், விவசாயத்தை வலியுறுத்தி, பல படங்களில், பல பாடலகள் தந்துள்ளார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் என்றும்,
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏர் பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு
கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
இதுபோன்ற பல பாடல்களில் , வேளாண்மையின் பெருமையைப் பாடி உள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ எம் ராஜா, நடந்துகொண்ட முறை பிடிக்காததால், விடிவெள்ளி படத்தில் இருந்து வெளிவந்ததுடன், ஸ்ரீதரின் அடுத்த படமான தேன் நிலவு படத்தில் 3 பாடல்கள் எழுதிஇருந்தும், அவைகளை பயன்படுத்தவேண்டாம் என்று வந்துவிட்டார் , மருதகாசி.
அதேநேரம், கவிஞர் வாலி திரையுலகில் காலடி எடுத்து வைக்கத் துவங்கிய நேரம் – நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் வாலி பாட்டு எழுத, இரண்டு மூன்று முறை ஒலிப்பதிவில் தடை ஏற்பட, அதை அபசகுனம் என்று படக்குழு நினைத்து, வாலி என்ற புதுமுகம் வேண்டாம்,மருதகாசியை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தார்கள். மருதகாசி , வாலியின் பாடலைப் பார்த்துவிட்டு, இதுவே நன்றாக உள்ளது – நான் எழுதத் தேவையில்லை என்று கூறிவிட்டார். அந்தப் பாடல் தான் ‘சிரிக்கிறாய் இன்று சிரிக்கிறாய் சிந்திய கண்ணீர் மாறியதாலே’
சொந்தப்படம் எடுக்கிறேன் என்று 4 பேர் சேர்ந்த கூட்டணி – 4M (மருதகாசி, மகாதேவன்(KV),மகாதேவன் (வயலின்),முத்துராமலிங்கம் (VKராமசாமி சகோதரர்) SS ராஜேந்திரனை வைத்து அல்லி பெற்ற பிள்ளை என்று படம் எடுத்து, இவரும் அதிகமாக மற்ற நிறுவனப் பாடல்களில் கவனம் செலுத்தாமல், தாமதமாகி, படம் தோல்வி. பொருள் நஷ்டம். சில வருடங்கள் கழித்து, இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், மருதகாசியை அழைத்து, ஒரு நல்ல கதை உள்ளது, தயாரிக்கலாம், ஜெமினி , சாவித்ரி, மெல்லிசை மன்னர்கள் படம் என்கிறார். மருதகாசி வேண்டாம் என்று கூறிவிட, அந்தப் படம் தான் பின்னாளில் கற்பகம் என வெளிவந்து, வெற்றிபெற்று, கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு, கற்பகம் ஸ்டுடியோ என்ற சொத்தை வாங்க வைத்தது.
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு .
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,
நீயே கதி ஈஸ்வரி,
ராதே உனக்கு கோபம் ஆகாதடி,
கண்ணை நம்பாதே,
வாய்மையே வெல்லுமடா,
சமரசம் உலாவும் இடமே,
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ,
மனுஷனை மனுஷன் சாப்பிடராண்டா,
சித்தாடை கட்டிகிட்டு,
மாமா மாமா,
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு,
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது,
அடிக்கிற கை தான் அணைக்கும் ,
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
ஒற்றுமையாய் வாழ்வதாலே கோடி நன்மையே,
போன்ற பாடல்கள் இவரின் திறமைக்குச் சில சான்றுகள்.
அடிப்படையில் விவசாயம் மற்றும் மண்ணின் மாண்பு இவற்றை நேசித்த கவிஞராக இருந்தாலும், காதல், தத்துவம், வாழ்வுநெறி, நகைச்சுவை, இசை , இறைநெறி, குடும்பம், என எல்லாவற்றையும் தனது பாடல்கள் மூலம், இந்த சமுதாயத்திற்கு, அள்ள அள்ளக் குறையாமல் தந்தவர், கவிஞர் திலகம் மருதகாசி அவர்கள்.
நாலாயிரம் பாடல்களுக்குமேல் எழுதிய மருதகாசி அவர்களின் பாடல்களில் சிலவற்றை இந்த வீடியோவில் கேட்டு மகிழுங்கள்!
அடுத்த மாதம், இன்னொரு கவிஞருடன் சிந்திப்போம்…
மறக்கமுடியாத வரிகள்… மறக்கமுடியாத கவிஞர்
LikeLike
இந்த தென்காசி கணேசனிடம் இருக்கும் மிகக் கெட்ட குணமே, எல்லா நல்ல பாடல்களையும் அவரே எடுத்துக்காட்டி விடுவதுதான். மற்றவர்கள் எல்லாம் என்னதான் செய்வதாம்? அடுத்த மாதமாவது திருந்துவாரா என்று பார்க்கலாம்.
LikeLike