இரண்டும் இல்லை  – மும்பை வீ வீ ஜீ

Donkey Marriage - YouTube

காலிங் பெல் சத்தம் கேட்டுக்,  கதவைத் திறந்தாள் காமாட்சி.  மகன் கல்லி . நின்று கொண்டிருந்தான். ஐந்து மணி தான் ஆகியிருக்கு அதுக்குள்ளே ஆபீஸிலிருந்து வந்து விட்டானே என்று யோசித்துக் கொண்டே, ” டிரெஸ் மாத்திண்டு வா. காபி கொண்டு வருகிறேன் என்று சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.

கல்லி காமாட்சியின் ஒரே மகன்.  கணவர் ஐந்து வருடங்களுக்குமுன்பு மாரடைப்பில் இறந்து விட்டார்.  கல்லி என்ற நம் கதாநாயகனுக்கு பெற்றோர் வைத்த பெயர் கல்யாணராமன். இந்த நல்ல பெயரை சுருக்கி கல்லி என்று கூப்பிடுவதால்தானோ, என்னவோ நாற்பது வயது ஆகியும் பிரம்மசாரியாகவே இருக்கிறான். பார்க்க வாட்டசாட்டமாக நன்றாகவே இருப்பான். சிரிக்க சிரிக்கப் பேசுவான். இருந்தாலும் இதுவரை ஒன்றும் தகையவில்லை. அவன் ஆபீஸில்  ஐந்து பெண்கள் வேலை செய்கிறார்கள். எல்லோருமே கல்யாணமானவர்கள். இவனைப் போல கல்யாணமாகாத மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் முப்பதுக்கு கீழே தான். இதுவரை ஐம்பது ஜாதகங்கள் பார்த்து விட்டார்கள். ஒன்றும் அமையவில்லை.

கல்லி கையில் காபியைக் கொடுத்து விட்டு காமாட்சி, பேச ஆரம்பித்தாள். ” நீ சீக்கிரமா ஆபீஸிலிருந்து வந்ததும் நல்லதாப் போச்சு. நானே ஒன்ன போன்ல கூப்பிடணம் என்று இருந்தேன். இன்னிக்கிக் காலை கல்யாணத் தரகர் வெங்கடேசன்,  திருவண்ணாமலை ஜோசியரோடு வந்திருந்தார். ஒன் ஜாதகத்துல தோஷம் இருக்காம்.  ஏழாம் வீட்ல செவ்வாய், சனி, ராகு கேது எல்லாம் சேர்ந்து இருக்காம். அதனாலேயே கல்யாணம் தள்ளிப் போகிறதாம்.  அதனால பரிகாரம் செய்யணும். ஒரு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடுமாம் ” என்றாள்.

கல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. ” கல்யாணம் ஆகிவிட்டால், பிறகு பரிகாரம் எதற்கு என்று யோசித்தான். காமாட்சி விளக்கினாள். கல்லிக்கு ஒரு குட்டி போட்ட கழுதையோடு பொம்மைக்  கல்யாணம் செய்து வைத்தால், இரண்டு மாதத்திற்குள் நிச்சயமாக அவனுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நிச்சயம் ஆகும் என்றார்.  மற்ற நிபந்தனைகள் ;

  1. வரும் வெள்ளிக் கிழமை 12 மணி ராகு காலத்தில் நடக்க வேண்டும்.
  2. சம்பவ தினத்தன்று, இல்லை இல்லை, கல்யாண தினத்தன்று மாப்பிள்ளையும் பெண்ணும் (?) காலையிலிருந்து பச்சை தண்ணி பல்லில் படாமல் விரதம் இருக்க வேண்டும்.
  3. வெள்ளிக் கம்பியில் தாலி செய்து கழுதையின் கழுத்தில் கட்ட வேண்டும். கல்லிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிற வரை அதை கழட்டக் கூடாது.

கல்லிக்கு இதைக் கேட்டு தலை சுற்றியது. சிறு வயதில் ஒரு கழுதையின் வாலில் சரவெடி கட்டப் போய்,   அது உதைக்க, பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று அன்றையலிருந்து கழுதையென்றால் அவனுக்கு பயம். ” அம்மா கழுதைக்குப் பதில் பசு, ஆடு இப்படி ஏதாவது ” , சொல்லி முடிக்கவில்லை, காமாட்சி கண்ணைக் கசக்கிக் கொண்டு , அப்படி எல்லாம் சொல்லாதே. சாமி குத்தம் ஆயிடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோப்பா.  கூடவே வெங்கடேசனும் அவன் மச்சினனும் இருப்பார்கள் ” என்றாள்.  ‘ பிரச்சினையே அது தானே என்று நினைத்த , கல்லி ” நீ நினைச்சா, நடத்தாமல் இருப்பயா. ஏதோ செய் ” என்று கூறி தன் ரூமுக்கு சென்று விட்டான்.

தரகர் வெங்கடேசனின் மச்சினன் கண்ணன் ஒரு மேரேஜ் காண்டிராக்டர். அவனிடமே இந்த கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாட்டை செய்யச் சொன்னாள் காமாட்சி. மொத்த செலவு கிட்டத்தட்ட ஐம்பது ஆயிரம் ஆகுமாம். முக்கியமான செலவு கழுதை வாடகையும் , சாஸ்திரிகள் தட்சிணையும்  தான். வண்ணாரப்பேட்டை பக்கத்தில் ஒரு சின்ன குளம் இருக்கிறது. அங்கே சலவைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நிறைய கழுதைகளும் அங்கு இருக்கும் . கண்ணன் அங்கே போய், கழுதை சொந்தக்காரன்  காபலியிடம் , “ வர வெள்ளிக் கிழமை,  ஒரு, குட்டிபோட்டக் கழுதை இரண்டு மணி நேரம் வாடகைக்கு வேண்டும் ; வெள்ளி தாலி கட்டுவார்கள். மற்றும் கண்டிஷன்கள் எல்லாம் சொன்னான். கபாலி  மப்பில் இருந்தான். ஐந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு, வெள்ளிக் கிழமை கழுதையோடு வருகிறேன் என்றான். அடுத்து, கண்ணன் நாதஸ்வரம் ஏற்பாடு செய்யக் கிளம்பினான்.

திருமணநாள் நெருங்க நெருங்க கல்லிக்குக் கவலை அதிகரித்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று. கண்ணன் போட்டோக் காரனிடம் போன போது அவன் பணம் வேண்டாம். எடுத்த வீடியோவை மீடியாவில் போட அனுமதி வேண்டும் என்று கேட்டான். காசு மிச்சம் என்று கண்ணன் சரி என்றான் . காமாட்சி ,  இனிப்பு காரம் முதலியவைகளை கடையிலிருந்து வரவழைத்து வைத்துக் கொண்டாள். எப்படி இருந்தாலும் வீட்டில் நடக்கும் முதல் கல்யாணம் அல்லவா. ஒன்றும் குறை வைக்கக் கூடாது என்று நினைத்தாள்.  மணப் பெண்ணிற்காக கொஞ்சம் பழைய நியூஸ் பேப்பர் வாங்கி வைத்தாள்.

வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே வீட்டில் கல்யாணக் களை கட்டி விட்டது. கல்லி ஆபீஸில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. சிடியிலிருந்து  தள்ளி இருக்கும் காலனி ஒன்றில் அவர்கள் தனி வீட்டில் இருக்கிறார்கள். அதனால் கல்லி – கழுதை கல்யாணம் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.  பத்து மணிக்கே சாஸ்திரிகளும், தரகர் வெங்கடேசனும் வந்து காலை சிற்றுண்டி காபி எல்லாம் முடித்து விட்டு, இந்த மாதிரி கல்யாணத்திற்கு என்ன மந்திரம் சொல்வது என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தனர்.  கல்லி காலையிலிருந்தே உபவாசம். கொஞ்சம் காபி சாப்பிடலாமா என்று கேட்க, அப்போது தான் உள்ளே வந்த காமாட்சி, சித்த பொறுத்துக்கோடா , எல்லாம் உன் நன்மைக்குத்தான் “ என்றாள்.

நேற்று ராத்திரி அடித்த தண்ணியால் கபாலி பத்து மணிக்கு தான் எழுந்தான் . இன்றைக்குத் தான் கழுதையை கல்யாணத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று ஞாபகம் வந்தது. வெளியே வந்து பார்த்தால் முனியம்மா எல்லா கழுதைகளையும் மூட்டை ஏற்றி குளத்துக்குக்  கொண்டு போய் விட்டாள். கபாலிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கை நீட்டி பணமும் வாங்கிட்டான். வீட்டில் , நடக்க முடியாமல் படுத்துக் கிடந்த கிழட்டுக் கழுதையை தட்டி எழப்பி, அவசர அவசரமாக ஓட்டிச் சென்றான். ஒரு வழியாக 11.30 க்கு மாப்பிள்ளை கல்லி வீட்டை அடைந்தான். கண்ணன் கோபத்தை அடக்கிக் கொண்டு ,” கபாலி , பொண்ணுக்கு சீக்கிரமாக அலங்காரம் பண்ணு. இன்னும் இருபது  நிமிஷத்துக்குள்ள தாலி கட்டணம் “ என்றான்

 கழுதையை சுத்தம் செய்து அதன் மீது மஞ்சள் நீர் ஊற்றி மண்டபத்துக்கு ஓட்டிக் கொண்டு வந்தான் கபாலி. காமாட்சி அதை வாஞ்சையுடன் பார்த்து நெற்றியில் குங்குமம் வைத்தாள். ( என்ன இருந்தாலும் மாட்டுப் பொண்ணாச்சே:  இல்லை கழுதை பொண்ணாச்சே. கபாலி கண்ணனைப் பார்த்து மீதி பணம் எப்போது என்று கண்ணாலேயே கேட்டான். கண்ணன் பதில் சொல்லாமல் எரித்து விடுவது போல அவனைப் பார்த்தான். மணி 11.50

சாஸ்திரிகளுக்கு நேரம் ஆக ஆக சந்தோஷம். கொஞ்ச மந்திரம் சொன்னால் போதுமே.  புது பட்டு வேஷ்டி சட்டையுடன், கல்லி , கில்லி மாதிரி நின்றான். காமாட்சி கையில் வெள்ளிக் கம்பியோடு, அதாவது தாலியோடு நின்றாள். வீடியோ ஆள் நல்ல பொஸிஷன் பார்த்து நின்று கொண்டான். கண்ணன் மாப்பிள்ளைத் தோழனாக அவதாரம் எடுத்து  கல்லியை கழுதைக்கு எதிரே கொண்டு வந்தான். கழுதைக்குப்  பின் பக்கம் கபாலி,  தந்தை ஸ்தானத்தில் நின்று கொண்டான். நாதஸ்வரம் பீ பீ என்று ஓசை எழுப்பியது. தவில் டும் டும் என்று ரீங்காரித்தது. மாங்கல்யம் தந்து நாமேண “…..சாஸ்திரங்களின்  கணீர் குரல்..மணி 12.00..கல்லி கழுதை கழுத்தில் வெள்ளித் தாலியை அம்மாவிடமிருந்து வாங்கிக் கட்டி, மாலை போட்டான் . பெண் பக்கத்திலிருந்து கபாலி கல்லி கழுத்தில் மாலை போட்டான்.  ” மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ” என்று நாதஸ்வரத்தில் பாட்டு களை கட்டியது.  இந்த களேபரத்தில் உதைத்து ஓட வேண்டிய கழுதை வயதான காரணத்தினால் கீழே படுத்து விட்டது. காமாட்சி ஓடி வந்து , பாவம் காத்தாலேந்து பட்டினி. பச்சை ஒடம்பு வேற. கபாலி ஏதாவது சாப்பிடக் குடு என்றாள். கபாலி ஏதோ சொல்ல வந்து , கண்ணனைப் பார்த்து , வாயை மூடிக் கொண்டு தலையாட்டினான். சாஸ்திரிகள் தன் பங்குக்கு , பாலும் பழமும் கொடுக்கலாமே என்றார். கல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு , பலகாரங்களை ஒரு கை பார்க்க ஆரம்பித்தான். கண்ணன் எல்லோருக்கும் செட்டில் செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். தரகர் வெங்கடேசன்,  எல்லாம் நல்ல படியாக நடந்தது என்று பார்ட்னர் திருவண்ணாமலை ஜோசியருக்கு போன் செய்து சொல்லிக் கொண்டிருந்தார் . கபாலி ரொம்ப சிரமப்பட்டு, கழுதையை உதைத்து எழுப்பி கொண்டு போக அல்லாடிக் கொண்டிருந்தான். “ பாருடா, நம்ம வீட்டை விட்டு போறதுக்கு அதுக்கு விருப்பமில்லை போலிருக்கு” என்று சிலாகித்தாள் காமாட்சி. நல்ல வேளை முதலிரவு இல்லை என்ற அல்ப சந்தோஷத்துடன், தன் அறையை நோக்கி நடந்தான் கல்லி . ”   “இன்னும் இரண்டு மாசதுக்குள்ள கல்லி கல்யாணம் நிச்சயம் ஆயிடும் பாருங்கோ” என்று சொல்லி,  வெங்கடேசன், காமாட்சியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

திருமணம் முடிந்து பத்து நாட்களுக்குள்ளேயே, கல்லியிடம் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. புது டிரெஸ் வாங்கிக் கொண்டான். சென்ட் அடித்துக் கொண்டான். ஆபீசுக்குப்  போகும் போது அழகு செய்து கொள்ள அரை மணி அதிகமாக எடுத்துக் கொண்டான். ஆபீஸிலிருந்து லேட்டாக வர ஆரம்பித்தான். வந்த ஜாதகங்களை எல்லாம் பார்க்காமலே பிடிக்க வில்லை என்றான்.  பெற்றவளுக்கா புரியாது. சிரித்துக் கொண்டாள். கல்லிக்கு காதல் துளிர்விட ஆரம்பித்து விட்டது என ஆனந்தப் பட்டது அந்த தாயுள்ளம். திருவண்ணாமலை ஜோசியரை நன்றியுடன் நினைவு கூர்ந்தாள். இன்னும் ஒரு மாதம் ஓடியது. கல்லி தன்னுடைய அறையில் ம்யூசிக் சிஸ்டம் போட்டு ஆட ஆரம்பித்தான்.      “ ஆபீஸில் வேலை செய்யும் மூன்று பேரை வரும் சனிக்கிழமை டின்னருக்கு கூப்பிட்டு இருக்கிறேன். சாப்பாடு எல்லாம் வெளியிலிருந்து வரவழைத்து விடலாம் “ என்றான். வந்தவர்களை காமாட்சிக்கு அறிமுகம் செய்தான். ஆதித்யா , அனுஷ்கா , திவ்யா. அவர்கள் டின்னர் முடிந்து போன பின்பு காமாட்சி கல்லியிடம் கேட்டாள். ” நீ காதலிக்கறவளை வீட்டுக்கே அழைத்து வந்தது சந்தோஷம் தான்.  சீக்கிரமாக கல்யாணம் பண்ணி நிரந்தரமாக கொண்டுவர நாள் பாருடா.  ஆமாம் அனுஷ்காவா இல்ல திவ்யாவா , யாரு ? “ என்றாள்.

கல்லி,  தயங்கிக்கொண்டே கொண்டே, “ இரண்டும் இல்லை. ஆதித்யா “ என்றவுடன் காமாட்சி , அதிர்ச்சியில், உறைந்து போய் நின்று விட்டாள். புட்டி போட்டுவிட்டு , லேட்டாக எழுந்த கபாலியின் , கவனக்குறைவால் ,, குட்டி போட்ட கழுதைக்குப்  பதிலாக தன் மகன், ஒரு கிழட்டு ஆண் கழுதைக்குத் தாலி கட்டிவிட்டதின் விளைவுதான்  இது , என்ற உண்மை அவளுக்கு எப்படித் தெரியும் !!!

 

2 responses to “இரண்டும் இல்லை  – மும்பை வீ வீ ஜீ

  1. சூப்பர் கதை. நகைச்சுவை சரளமாக ஆசிரியருக்குக் கைவருகிறது. கடைசியில் வரும் ட்விஸ்ட் தலைப்பை உண்மையாக்கி விடுகிறது. மும்பை வீவீஜி க்கு எனது பாராட்டுகள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.