( தேவகிக்கு எட்டாவதாய்ப் பிறந்த ஆண் குழந்தையைக் கோகுலத்தில் விட்டு விட்டு அங்கு யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையான மாயையை எடுத்து வர வசுதேவன் புறப்பட்டான்)
குழந்தையுடன்.வசுதேவன் புறப்படுதல்
மந்திர மயக்கில் ஆழ்ந்து
மதுரையும் நந்தன் ஊரும்
முந்தியே உறங்கிப் போக
மூண்டவை அறிய வில்லை.
தந்தையும் மகனை ஏந்தித்
தாங்கியே சுமந்து கொண்டான்
சிந்தையின் உறுதி யாலே
தெளிவுடன் நடந்து சென்றான்.
( மதுரை – வடமதுரை)
(நந்தன் ஊர்– கோகுலம்)
மழை பெய்ய, ஆதிசேஷன் குடைபிடித்தல்
எழுகின்ற ஒளிக்கொடிபோல் மின்னல் வெட்ட
இடியோசை நடுவானில் மேளம் தட்ட
விழுகின்ற பெருமழையின் துளிகள் கொட்ட
விளங்கரவு பைவிரித்துக் குடைபி டிக்க
வழுவறுநல் வசுதேவன் முன்ந டக்க
வானவரும் ஞானியரும் வியந்து நிற்கத்
தொழமவரின் துயர்நீக்கும் குழந்தைக் கண்ணன்
தூயோர்வாழ் கோகுலத்தை நோக்கிச் சென்றான்
( விளங்கரவு- ஆதிசேஷன்)
( பை – பாம்பின் படம்)
கவிக்கூற்று
மையின் நிறத்து முகில்வண்ணன்
வனப்பு மிகுந்த சிறுகண்ணன்
ஐயன் நனைய அவன்படுக்கும்
அரவும் விடுமோ? படம்விரித்துப்
பெய்யும் மழைக்குப் பெருங்குடையைப்
பிடித்துப் பிள்ளை பின்னொருநாள்
வெய்ய மலையைக் குடையெடுக்கும்
விந்தைச் செயலை முன்னுரைக்கும்
( வெய்ய — விரும்பத்தக்க).
வழியில் யமுனை ஆறு குறுக்கிடுதல்
தங்குபுகழ்க் காவியங்கள் போற்றிப் பாடும்
தண்ணருள்செய் பெருமுனிவர் வந்து கூடும்
பொங்குநுரை சுழித்தோடும் யமுனை ஆறு
புண்ணியம்செய் பூமிக்குக் கிடைத்த பேறு
பொங்கருடன் பூங்காவும் இரும ருங்கும்
பொலிவுடனே வளர்ந்திருக்கச் செழிப்பே எங்கும்
அங்கவர்கள் போம்வழியில் குறுக்கே செல்ல
அதைக்கடக்கும் முறைதேடும் உள்ளம் மெள்ள.
( பொங்கர் – மரங்கள் அடர்ந்த சோலை)
யமுனை ஆறு வழி விடுதல்
பாய்ந்து பெருகும் யமுனைநதி,
பணிவு, பக்தி, கொண்டவரின்
ஓய்ந்த மனம்போல் உள்ளொடுங்கி,
ஊடே வழியும் விட்டதம்மா!
ஆய்ந்த அறிவு வசுதேவன்,
அந்த இறைவன் செயலுணர்ந்தான்.
தோய்ந்த மறையின் முழுமுதலைச்
சுமந்து நதியைக் கடந்துசென்றான்
கவிக்கூற்று
யாரே அறிவார் இறைவழியை
யாவும் வகுத்த நெறிமுறையே
ஊரே உறங்கி மயங்கவைத்தான்
உலகைச் சுழற்றி இயங்கவைத்தான்
நீரை நிறுத்தி யமுனைநதி
நெகிழ்ந்து வழியை விடவைத்தான்
சேரும் இடத்துச் சொந்தமெனத்
தேர்ந்தான் ஆயர் குடியைத்தான்
கோகுலத்தின் சிறப்பு
மயிலணைந்து சோலைகளில் தோகைகளை விரிக்கும்
வண்பசுக்கள் வள்ளலெனப் பாற்குடங்கள் நிறைக்கும்
குயிலிணைந்து குக்குவெனக் கொஞ்சுகுரல் கொடுக்கும்
கோதையரின் கோற்றொடிகள் குலுங்கியிசை படிக்கும்
எயிலணைந்த குடுமிதொறும் துகிற்கொடிகள் பறக்கும்
இன்முகத்து விருந்தினரை வருகவென உரைக்கும்
அயிலணைந்த கூர்வேலன் நந்தகோபன் புரக்கும்
அழகுமிகு கோகுலத்தில் கலையனைத்தும் சிறக்கும்
( கோற்றொடி – வேலைப்பாடமைந்த வளையல்)
(எயில் – கோட்டை / மதில்)
( குடுமி – உச்சி)
( அயில் – இரும்பு)
( துகிற்கொடி- துணியாலான கொடி)
( புரக்கும் – காக்கும்)
குழந்தைகளை மாற்றுதல்
ஊருறங்க உயிருறங்கக் கோகு லத்தின்
உயர்மனைக்குள் வசுதேவன் சென்று சேர்ந்தான்
பேருயர்ந்த நந்தனவன் மனைவி யான
பெண்ணரசி யசோதையன்னை அருகில் அந்தச்
சீருலவும் கருமுகிலை மெள்ள வைத்துத்
திகழ்சிறுபெண் மகவெடுத்துத் திரும்பும் போது
நீருலவும் விழிமுகத்தைத் துடைத்துக் கொண்டான்
நெஞ்சமது விம்முவதால் புடைக்கக் கண்டான்
சிறை திரும்புதலும் காவலர் விழித்தலும்
வடமதுரை நகருக்குள் மீண்டும் வந்த
வசுதேவன் சிறைச்சாலை புகுந்த பின்னர்
மடமங்கை தேவகியின் அருகில் அந்த
மயிலனைய பெண்மகவைப் படுக்க வைத்தான்
உடனடியாய்க் கதவுகளும் மூடிக் கொள்ள
உயிர்பெற்றார் போலெழுந்தார் காவ லர்கள்
கிடக்கின்ற குழந்தையழும் குரலைக் கேட்டார்
கிடுகிடுவென்(று) ஓடினரே சேதி சொல்ல.
( தொடரும்)
Arumaiyana padivu anna.
LikeLike
மிக அருமை நல்ல கவி நயம் புகழ் வார்த்தைகள் இல்லை
LikeLike