அந்த ரயில்வே ஸ்டேஷன் ,அவனைப்போலவே மதுரை ரயிலுக்காகக் காத்திருந்தது . அதை ஸ்டேஷன் என்று சொல்ல முடியாது. அது ஒரு ரயில்வே ஸ்டாப். ஐந்து நிமிடம் நின்று போகும் ரெயில் .ஒரு கேட் கீப்பர் மட்டும் அங்கே தங்கியிருப்பார் டிக்கெட் கொடுக்க . ஊரை விட்டுத் தள்ளி அந்த ஊர்ப் பெயரோடு இந்த ரெயில் ஸ்டாப்.
அங்கும் இங்குமாய் சில ஒத்தைப் பனை மரங்கள் ஏதோ கோபத்தோடு தலை விரித்து ஆடிக் கொண்டு. ‘அவள் எங்கே இருக்கிறாளோ ‘ என்று கேட்டுக் கொண்டு . அந்த நேரத்தில் , வெளுப்பான வெயிலோடு வெறுப்பான வானம்.’ எப்படி அவர்களால் இப்படிச் செய்ய முடிந்தது ‘ என்று வெறுப்பை உமிழ்ந்து கொண்டு. டீக்கடைகள் ஓரத்தில் வரும் ,போகும் .மாட்டு வண்டிகள் ஒன்றிரெண்டு அவ்வப்போது கடந்து போகும். அவரவர் வேலை அவரவர்க்கு . தனியாக நீளமாகத் தகித்துத் தவித்துக் கிடக்கும் தார் ரோடு மட்டும் . உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இவனைப் போல.
அப்போது தூரத்தில் அந்த ஊர்க் கோயில் மணி அடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்டது. தூரத்தில் தெரிந்தது அந்த ஏழு நிலைக் கோபுரம். ‘அந்தக் கோபுரத்தில் வசிக்கும் புறாக்கள் இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்கும். ஜோடி ஜோடியாகச் சேர்ந்து அந்தக் கோபுரப் பொந்துகளில் மகிழ்ச்சியாக. நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களை மட்டும் ஏன் பிரிக்க நினைத்தார்கள் ‘ ‘. ஒரு மணி நேரம் முன்பு அவை சிறகடித்துப் பறந்த காட்சியும் சப்தமும் அவன் கண்களிலும் காதுகளிலும் தேங்கி இருந்தன. .
வடக்கு ,தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பெயரிடப்பட்ட தெருக்களைத் தாண்டி ஒரு மூலையில் பெரிய கண்மாய்.மறு மூலையில் அம்மன் கோவில். பெரிய கண்மாய் சித்திரைத் திருவிழாவில் சாட்டையால் அடித்துக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு வருகின்ற மாயாண்டி தானே அவளைக் காப்பாற்றியதாகச் சொன்னான்.அவன் மதுரை சென்றிருந்தபோது நடந்தது அது. அந்த ஐந்து பேர் அவளைத் துரத்திய போது ,அவள் கால் தடுமாறி விழுந்த போது ஊரே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த போது ,அந்த அரிவாள் வீச்சு அவள் மேல் சரிந்த போது, ‘ எங்க பெரியவர் வீட்டுப் பையன் கேட்குதா உனக்கு ‘ என்று அவர்கள் கேட்டபோது. ரத்தக்குழம்பு தெறித்த போது, அவள் உடல் துடித்த போது , அவள் செத்து விடுவாள் என்று அவர்கள் விட்டுச் சென்ற போது , அவளைக் காப்பாற்றிக் கூட்டிச் சென்ற மாயாண்டி, ‘அவர்கள் குடும்பத்தோடு எங்கோ சென்று விட்டார்கள் ‘என்று அவன் திரும்பி வந்தபோது அவனிடம் சொன்னது.
‘எப்படித் துடித்திருப்பாய், ஒரு சின்னத் தூசி விழுந்தாலே , என்னிடம் கண்ணை விரித்துக் காட்டி ஊதி விடச் சொல்வாயே . எப்படித் தாங்கினாய் அந்த அரிவாள் வீச்சை .என்னை விட்டு விட்டு எங்கே சென்றாய் ‘ .பெற்றோரிடம் சண்டை போட்டு , ஒருவரிடமும் சொல்லாமல் ஊரை வீட்டுக் கிளம்பி பக்கத்துக் கிராமங்களில் எல்லாம் விசாரித்து, அவளைக் கண்டு பிடிக்க முடியாமல் மதுரை சென்று பிழைத்துக் கொண்டு கிடப்பது , அவளை என்றாவது மீண்டும் சந்திப்போம் என்ற நினைப்பில். தன்னால் அவளுக்கு மேலும் துன்பம் வந்து விடக்கூடாது என்று ஊருக்குத் திரும்பி வராமல் இருந்தவன், இப்போது மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் முகம் மறைத்த தாடி மீசையோடு. மீண்டும் அந்த ஊரில் . அந்தக் கோயிலில் ..
முன்பு அந்தக் கோயில் எவ்வளவு அழகாக இருந்தது. அவளோடு சேர்ந்து அந்தப் பிரகாரங்களைச் சுற்றியபோது எவ்வளவு இதமாக இருந்தது. ‘சடையை முன்னால் தள்ளி விரலால் சுற்றிச் சுழற்றிக் கொண்டு , விரிந்த கண்களோடு பிரகாரத்தில் இருக்கும் வாகனங்களை எல்லாம் வியப்பாகப் பார்த்துக் கொண்டு இவனோடு சேர்ந்து சுற்றிச் சுற்றி வந்தவள்’ . இப்போது அந்தப் பிரகாரங்கள் அழகாக இல்லை. அவள் இல்லை.
‘அவள் செய்த குற்றம் என்ன, வேறு சாதியில் பிறந்தது ஒரு குற்றமா,’ அவனது பெற்றோர் மேல் இருந்த கோபத்தில் அவர்களிடம் தொடர்பே இல்லை. அவர்களும் இப்போது மதுரைப் பக்கம் சொந்தங்களோடு சேர்ந்து இருப்பதாகக் கேள்வி. பார்க்க விரும்பவில்லை அவன்.
மாயாண்டி வீட்டுப் பக்கம் போனான் . வீடு இடிந்து சுவர் தான் . வேறு யாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கேட்பது. இன்னமும் சாதி வெறி தணியாத அந்த ஊரில் யாரை நம்பிக் கேட்பது. தன்னை அடையாளம் கண்டு கொண்ட ஓதுவார் யாரிடமும் சொல்லி விடக் கூடாதே என்ற கவலையும் இப்போது சேர்ந்து கொண்டது. மறுபடி கோயில் திரும்பி அவரைத் தனியாகச் சந்தித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது ‘ இந்த ஊரை எனக்குத் தெரியாதா தம்பி ‘ என்று கண் கலங்கிய அவர் குடும்பக் கதை இவனுக்குத் தெரியாது தான்.
திரும்பும் முன் அவனும் அவளும் விளையாடித் திரிந்த அவனது பழைய வீட்டுப் பக்கம் .அந்த வீடும்தான் இடிந்து நின்றபடி இவனைப் பரிதாபமாகப் பார்த்தபடி.அந்த வீட்டின் நடு முற்றத்தில் பெரிய அண்டாவில் நெல் அவித்தவள் அவள். முற்றத்து பிஞ்சுப் புடலைக்குக் கல்லுக் கட்டி விட்டவள் அவள். பக்கத்து வீட்டுக்குக் கொடுக்கல் வாங்கல் எடுத்துப் போனவள் அவள். விறகு அடுப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தவள் அவள். தரையோடு அமுங்கி இருந்த ஆட்டுக்கல்லில் கையால் தள்ளித்தள்ளி இட்டிலி மாவு அரைத்தவள் அவள்.
வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே வளர்ந்தவளைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்கு அவள் செய்த பாவம் என்ன. இவனோடு சிரித்துப் பேசியது. கோயிலில் சேர்ந்து சுற்றியது. மொட்டை மாடியில் அவனோடு சேர்ந்து ரேடியோ ஒலிச்சித்திரங்கள் ரசித்துக் கேட்டது.
வேதனையோடு நின்றவனிடம் ஒரு சிறுமியின் குரல். ‘அவிச்ச மொச்சை, அவிச்ச நிலக்கடலை. ஒரு பாக்கெட் அஞ்சே ரூபாய் சார்.’ பத்து ரூபாய் கொடுத்து இரண்டு பாக்கெட்டுகள் வாங்கியபடியே அவளைப் பார்த்தான். அந்த சிறுமி நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையை அடிக்கடி ஒதுக்கி விட்டுக் கொண்டு முட்டு வாயை அடிக்கடி லேசாக உயர்த்திக் கொண்டு பேசிய அவள் சாயல். ‘செல்வி’ என்று அழைத்தவுடன் ‘ என் பேர் சுமதி சார் ‘ என்றவளை தூரத்தில் இருந்து ஒரு குரல் அழைத்தது .’அங்கே என்ன அரட்டை சீக்கிரம் வித்துட்டு, காசு வாங்கிட்டு வந்துக் கிட்டே இரு’ , என்று அழைத்த குரல்
அங்கே வெள்ளரிக் காய்ப் பிஞ்சுகளின் கூடையோடு , இடுப்பில் ஒரு அரை நிர்வாணக் குழந்தையோடு , வெளுத்த கலர்ச் சேலையோடு , கலைந்த தலையோடு , அவள் செல்விதான். நெருங்கிச் சென்றவனைக் கையெடுத்துக் கும்பிட்டு ‘ விட்டுடுங்க சாமி ‘ என்றாள் . ‘ உனக்கும் உன் குடும்பத்திற்கும் நான் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது ‘ என்று அழுத்தமாகக் கூறிய அவன் குரலை அமுக்கிக் கொண்டு பேரிரைச்சலோடு வந்து நின்ற மதுரை ரயிலில் அவன் ஏறவில்லை.
படிக்கும் போது கதையின் வரிகள் காட்சிகளாய் அப்படியே வாசகர்களின் மனதில் ஓட்டத்தை தருகிறது. சட்டென வந்த முடிவில் அழுத்தம் அதிகமாகவே ஒரு பிராயச்சித்தத்தை நிறைவு செய்கிறது.
கதையின் ஊடே பயணிக்கும் பழைய நினைவுகளின் ஓட்டம் மறந்த கிராம உணர்வுகளை திருப்புகிறது.
அருமை
LikeLike
படிக்கும் போது கதையின் வரிகள் காட்சிகளாய் அப்படியே வாசகர்களின் மனதில் ஓட்டத்தை தருகிறது. சட்டென வந்த முடிவில் அழுத்தம் அதிகமாகவே ஒரு பிராயச்சித்தத்தை நிறைவு செய்கிறது.
கதையின் ஊடே பயணிக்கும் பழைய நினைவுகளின் ஓட்டம் மறந்த கிராமத்து உணர்வுகளை திருப்புகிறது.
அருமை
LikeLike
அவன் ரயில் ஏறவில்லை தான். கதை மனதில் ஏறி நின்று விட்டதே!
LikeLiked by 1 person