அந்தக் கல்வி நிலையத்தில் எல்லாவிதமான குழந்தைகளையும் பார்க்க முடியும். அதாவது, அங்கங்கள் நன்றாக இருப்போருடன், ஏதோவொரு அங்கங்களிலோ, அல்லது மூளை வளர்ச்சியிலோ குறைபாடு உள்ளவர்களும் சேர்ந்திருப்பார்கள். இந்த கல்வி ஆலயத்தைப் பொருத்தவரை, பிள்ளைகள் ஆரம்பக் காலத்திலேயே வித்தியாசமானவர்களோடு ஒருவருக்கொருவர் கூடிப் பழகப்பழக, மனிதநேயத்தோடு வளருவார்களே தவிர. குறைபாட்டைப் பார்த்து வேறுபடுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த வகையான கல்விக்கூடமே “இன்க்ளுஸிவ் ஸ்கூல்” (Inclusive School) எனப்படும்.
அதனால் தான் இங்கே கிரி, உத்திரா சகோதர-சகோதரியைப் பார்க்க முடிந்தது. வெளி உலகத்தினர், இருவரின் மூளை வளர்ச்சி குன்றி இருப்பதையே பார்த்தார்கள். அங்கு நான் கல்வி மற்றும் மனநல ஆலோசகராக இருந்ததால் எனக்கு இவர்களைக் கண்டு பழக வாய்ப்பு கிடைத்தது..
எந்நேரமும் புன்னகை பூத்த முகங்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைப் பார்த்தால் கிரி-உத்திரா இரட்டைக் குழந்தைகளோ என்று தோன்றும். ஒருவேளை உத்திரா ஒன்பது வயது, கிரி எட்டு வயது என்பதினால் இந்த நெருக்கமோ? ஒருவருட வித்தியாசம் உள்ள குழந்தைகள் இவ்வாறு இருப்பார்கள் எனச் சொல்வதுண்டு. இங்கு வேறொரு அம்சமும் உண்டு. சட்டென உத்திரா தடுக்கி விழுந்து விடுவாள். அக்காவைப் பாதுகாக்க, கூடவே கிரி இருப்பான். உத்திரா தன் தம்பியின் வலிப்பு நோய் மருந்தைக் கையோடு வைத்துக் கொள்வாள். கிரியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என இவளுடைய நோக்கம்.
இருவரையும் பார்ப்பதிலேயே ஒரு அலாதியான சுகம்!
இவர்களின் தந்தை அச்சகம் வைத்திருந்தார். கோபக்காரர். அதுவும் அவர் கணித மேதை, இருப்பினும் இதுபோன்ற மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள். அவருக்குக் கணிதத்தை மேற்கொண்டு படிக்கவோ பயிலவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மாறாக, குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்த அச்சகத்தை அவர் நடத்தி வந்தார்.
அம்மா பாட்டு டீச்சர். வீட்டில் ஏதேனும் நல்லது, உயர்வானது என்றால் அது கணவனால் தான் என்பாள். தாழ்வு, குறைபாட்டைத் தன் தோளில் சுமந்து கொள்வாள். ஊர் உலகத்திற்குத் தான் செய்த ஏதோ தவறால் தான் கிரி, உத்திரா இவ்வாறு பிறந்தார்கள் என்பாள்.
நான் பெற்றோருக்கென, இதுபோன்ற பலரை உள் அடங்கிய கல்வி நிலையத்தின் தேவைகள், அதனால் உருவாகும் மனப்பான்மை பற்றிய உரையாடல்கள் நடத்துவேன். ஆசிரியர்கள் மட்டுமின்றி செவிலியர், பிஸியோதெரபிஸ்ட், ஆக்கேப்பேஷனல் தெரப்பிஸ்ட், ஸ்பெஷல் எட்யூக்கேட்டர், மற்றும் மன நல ஆலோசகராகிய நான் அனைவரும் இணைந்து உருவாக்கும் கல்வித் திட்டங்களை வர்க்ஷாப்பில் கண்ணோட்டமாகக் காட்டினோம். அப்படி ஒரு உரையாடலுக்கு கிரி-உத்திராவின் பெற்றோர் வந்தபின், அவர்களை இங்குச் சேர்க்க முடிவெடுத்தார்கள்.
இதுவரை கிரி-உத்திரா இணைந்து இருந்ததால், அவர்களிடையில் வயது வித்தியாசம் இருந்த போதிலும், அவர்களை நாங்கள் பிரிக்க விரும்பவில்லை. இருவரும் நல்ல உயரம். அவர்களின் மனநிலை ஆறு-ஏழு, உயரமோ அதற்கு மேற்பட்ட நிலை. அதனால் ஒன்றாம் வகுப்பு சரிவராது என்று இரண்டாவது வகுப்பில் அமர்த்தினோம்.
மற்ற வகுப்பு போலவே இங்கேயும் கிரி-உத்திரா போல் வகுப்பில் மற்றும் மூன்று பேர் இருந்தார்கள். அவர்களின் தேவைகளைப் பார்த்துக் கொள்ள, ஆசிரியருடன் ஸ்பெஷல் எட்யூகேட்டரும் இணைந்து செயல்பட்டார். வகுப்பின் ஒவ்வொரு குழந்தையின் திறன்கள், வளர்ச்சி விகிதம் என எடுத்துக் கொண்டு அவர்களின் பிரத்தியேக பாடத்தின் தாள்கள் தயாரிப்பார்கள். தினந்தோறும் கலந்துரையாடி இந்தத் தயாரிப்பு நடந்துவரும். ஒவ்வொரு வகுப்புக் குழந்தையைப் பற்றிய முழு தகவல்கள், நிலைமையைப் புரிந்து வைத்திருந்ததால் என்னுடைய பங்களிப்பும் எப்போதும் இருக்கும்.
வீட்டைப் பொருத்தவரை கிரி-உத்திரா உதவுவது மிகச் சிறிய அளவில் மட்டுமே. தந்தைக்கு இருவரைப் பார்த்தால் வெறுப்பு தட்டும். தாயாருக்கு வீட்டு வேலை, பாட்டு வகுப்பில் நேரம் ஓடி விடும். அதனால் இவர்களுக்கு பியர் ஷெடோயிங் (Peer Shadowing) அதாவது நிழலைப் போல மற்றொரு சமவயதினரோடு கூடிச் செய்து, அதிலிருந்து கற்றுக் கொள்வது – கற்றுத் தருவது என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். இதில் என்ன அழகு என்றால், எந்த மாணவரை கிரி-உத்திராவுடன் அவ்வாறு அமைத்தோமோ, அவர்களுக்கும் இந்த இருவரைப் போல முகம் புன்னகை பூக்க ஆரம்பித்தது!
கிரி-உத்திரா தாங்கள் கற்பதில் மற்ற மாணவர்களை விடப் பின்தங்கி இருப்பதை உணர்ந்தார்கள். இருவரும் முயற்சி செய்வதில் கொஞ்சமும் சலித்துக் கொள்ளாமல் செய்பவரே. எதைப் படித்தாலும் அதற்குக் கூடுதலான பயிற்சி செய்பவர்கள். அவர்கள் ஆர்வத்தைப் பார்த்து, சில புது மார்க்கத்தை உருவாக்கப் பரிந்துரை செய்தேன்.
அவற்றை உபயோகிக்க, மற்றும் இந்த “இன்க்ளுஸிவ் ஸ்கூல்” அமைப்பின் தேவையைப் புரிந்து பணிபுரிய, மாதாமாதம் ஆசிரியர்களுக்குப் பல வகையான நிபுணர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் ஆராய்ச்சி விதிவகைகளை அறிந்து உபயோகிப்பது என்று வடிவமைத்தேன்.
வகுப்பில் உள்ள நளன், சம்யுக்தா குறிப்பாக உத்திரா விழும்போது நகைப்பதுண்டு. பல முறை அவளைச் சீண்டுவதற்காகத் தள்ளி விடுவதும் நடந்துகொண்டு இருந்தது. அன்றொரு தினம் அவர்கள் வகுப்பில் எனது பயிற்சி இருந்ததால் இதைப் பார்க்க நேர்ந்தது. விசாரித்ததில், நளன்-சம்யுக்தா இருவரின் பெற்றோரும் இவ்வாறு நடக்கும் போது சிரிப்பதால் குழந்தைகள் இருவரும் இது தவறில்லை என்றே எடுத்துக் கொண்டார்கள் என்று தெரிய வந்தது.
இதைத் திருத்தி அமைக்க, நளன்-சம்யுக்தா இருவருக்கு மட்டும் இல்லாமல், அதேபோல் கிரி-உத்திராவை மையமாக வைக்காமல், முழு வகுப்பிற்கு இதைப் பற்றிய பல தரப்பு விஷயங்களைச் சொல்லித் தரத் தேவை எனத் தொடங்கினேன். குறிப்பாக, இவ்வாறு செய்கையினால் நேரும் உணர்வுகள், விளைவுகளை, பாதிப்பை எடுத்துச் சொன்னேன். இவற்றைப் புரியவைக்கப் பல விளையாட்டுகள், கலந்துரையாடல்கள், விளக்கங்கள் மூலமாக மற்றவரைப் புண்படுத்தும் என்று உணர்த்தி, முழு வகுப்புக்கும் பல ஸெஷன்கள் செய்தேன்.
பலன் தென்பட மெதுவாகக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பிறகு, மீண்டும் நளன், சம்யுக்தா அதே மாதிரி செய்ய ஆரம்பித்தார்கள். வேறு எங்கேயோ பிரச்சினை உருவாகிறது என யூகித்து அவர்கள் இருவரின் தாய்மாரை அழைத்துப் பேசினேன். என் கணக்கு சரியாக இருந்தது. அவர்கள் இருவரும் பலகாலமாகத் தோழிகள். இருவரும் தான் படிக்கும் காலத்தில் வகுப்பில் மற்றவரைக் கேலி-கிண்டல் செய்து வந்ததைப் பெருமையாகப் பகிர்ந்தார்கள். பிள்ளைகள் செய்வதை ஊக்குவித்தார்கள்.
இவர்களைப் போல வேறு யாரெல்லாம் இருக்கக் கூடுமோ என்ற எண்ணத்தில், பள்ளி ப்ரின்ஸிபாலுடன் உரையாடி அனைத்துப் பெற்றோரையும் ஸெஷனுக்கு அழைக்கச் செய்தேன். இது மட்டுமில்லாமல், முழு பள்ளியும் இதில் கலந்து கொள்ள ஒரு திட்டம் தீட்டி பள்ளி நிர்வாகிகளுக்கும் காட்டுவதற்குத் தயார் செய்தேன். எங்கள் துறையில் மிக மேதாவியும் நிபுணருமான மைக்கேல் ரட்டர் (Michael Rutter) அவர்களுக்குச் செய்தி அனுப்பி வைத்தேன். அந்தக் காலத்தில் கடிதம் தான். பரப்பாக இருப்பவர்கள் எப்போதுமே காக்க வைக்க மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணம் இவர். எழுதியதைப் படித்து, செயலைப் பாராட்டி, தன்னுடைய அபிப்பிராயம் கூறி பதிலளிக்க, மனநிறைவுடன் ஆரம்பித்தேன்! பல மாதங்களுக்கு இதைச் செய்ய, ரட்டரின் அறிவுரையுடன், பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது.
இனி வரும் பெற்றோருக்குப் புரிதல் இருக்க ஒரு கற்றல் குழுவை உருவாக்கினேன். வாரம் ஒரு முறை சந்தித்துப் படித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இதை வரவேற்றேன். என்னுடைய குறிக்கோள் எப்போதுமே, என்னை அணுகுவோரைத் தானாக இயங்கச் செய்வதே! நான் நினைத்ததைவிட நன்றாக வளர்ந்ததால் நாளடைவில் கல்வி நிலையத்தில் இந்த பகிர்தலுக்கு ஒரு மூலையை ஒதுக்கி விட்டேன். பகிரப் பகிர, நாளடைவில் ஆசியர்களும் பங்கு கொள்ள ஆரம்பித்தார்கள். தீட்டிய திட்டம் கண்ணெதிரில் உருவெடுத்தது.
நளன்-சம்யுக்தா பெற்றோரின் மாறுதல் பிள்ளைகளிடமும் தென்பட ஆரம்பித்தது. இப்போதெல்லாம் இவர்கள் கிரி-உத்திரா இருவருடனும் மட்டும் அல்லாமல் மற்றவருடனும் சுமுகமான முறையில் நடந்து கொண்டார்கள்.
நளன், சம்யுக்தா சுதாரித்தது ஒரு பாதி. மறு பாதி, சிரிக்கும் பூக்களான கிரி உத்திரா பெற்றோரிடமும் மாறுதல் தென்பட்டது! குழந்தைகள் இருவரும் ஆசிரியர் வகுத்த வகுப்பு மாணவர்களுடன் எழுதுவது, படிப்பது, கைவேலை எனக் கூடிச் செய்தார்கள். இதனால் சுகாதாரம், சமூகத்தில் நடந்து கொள்வது எனப் பல வகையான கற்றல் நேர்ந்தது.
இதன் எதிரொலியாக வீட்டிலும் கிரி-உத்திராவிடம் மாற்றத்தைப் பெற்றோர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். தேர்ச்சி பெற, அவர்களுடன் உரையாடத் தயாரானார் அப்பா. அம்மாவும் தன்னால் முடிந்தவரை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசனைகளுடன் முன் வந்தாள்.
கிரி-உத்திரா பக்கத்தில் உள்ள கோயில் சென்றால், அங்கிருந்து அழைத்து வருவது கடினமாக இருப்பதாகப் பெற்றோர் கூறினார்கள். அங்கு கன்றுக்குட்டிகளுக்குப் புல் தருவதை இவர்கள் ஆசையாகச் செய்வதைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
இதையே மையமாக வைத்து இருவரும் அந்த வயதில் என்ன உதவு முடியும் என்பதைப் பெற்றோரிடம் கவனித்துக் குறித்து வரப் பரிந்துரைத்தேன். செய்து வந்தார்கள். அதிலிருந்து பூக்களை விற்பனை செய்பவர்களுக்கு பூ, பழம், வெற்றிலையை அன்றைய கணக்குப் பாடத்தில் எந்த எண்ணை கற்றுத் தந்தாரோ அவ்வாறே அடுக்கி வைப்பது என்ற பழக்கும் உருவானது. பக்கத்திலுள்ள ஐவருக்கும் குழந்தைகள் இவ்வாறு செய்து கொடுத்தார்கள். பெற்றோரையே அவர்களிடம் பேசி விவரிக்கச் செய்தேன்.
அது வாரத்தில் நான்கு முறை. மற்ற நாட்களில் தந்தையின் அச்சகத்தில் இது போன்ற சேகரிப்பு, வருவோரை உட்காரச் சொல்வது, என்று செய்தார்கள். முதலில் அவர்களால் செய முடியுமோ என்ற சந்தேகம் இருந்தாலும், போகப் போகக் குழந்தைகளுக்குப் பொறுப்பு கொடுத்தால் எத்தனை நேர்த்தியாகச் செய்கிறார்கள் என்பதைத் தந்தை மட்டும் அல்ல ஊழியர்களும் பார்த்தார்கள்.
இத்துடன் நிறுத்தி விடாமல் வளர்ச்சி அடைய வேறு எவற்றை இவர்களைச் செய்ய வைக்கலாம் எனப் பட்டியல் தீட்டப் பரிந்துரை செய்தேன். கிரி-உத்திராவின் பல திறனைக் கவனிக்க நேர்ந்தது.
வீட்டில் பல உதவிகளைச் செய்வதைக் கவனித்தார்கள். தானாகச் சாப்பாடு எடுத்து வைக்க உதவுவது, சாப்பிட்டு எழுந்திருக்க உத்திரா-கிரி ஒருவரையொருவர் உதவத் தட்டுகளைச் சுத்தம் செய்து வந்து வைப்பது. தூசி தட்ட முயல்வது, காய்ந்த துணிகளை மடிக்க முயல்வது, வாசலில் கோலம் போடுவது எனப் பல. கிரி-உத்திரா போன்ற பிள்ளைகள் செய்யச் செய்யத் தேர்ச்சி பெறுவார்கள். அதற்குப் பல திட்டங்களை வகுத்து அதனைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்தேன். பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை வழங்க, கல்வி நிலையத்திலும் தீட்டிய திட்டங்களை எடுத்துச் செல்ல, அதை நான் மைக்கேல் ரட்டருடன் பகிர்ந்து கொண்டேன். இனிமேல், என் பங்கு பின்னணியில் தான்!