வேண்டியே வரவேற்போம்– கோவை சங்கர்
கொரொனா வைரஸால் வாழ்வதுவும் சீரழிய
வாராதோ விடியலென தவித்துநின்ற நம்முன்னே
வருகின்றாள் சுபகிருது கொடியிடை யசைந்தாட
தீராத துன்பங்கள் தீர்த்திடவே வருகின்றாள்
வருணனவ னாசியினால் விளைச்சலும் பெருகிடவே
உழவர்க ளில்லினிலே பொன்மாரி பொழிந்திடுவாள்
ஆர்ப்பரிக்கு மாலைகள் வணிகமும் விண்முட்ட
நாட்டுவள மோங்குமென கட்டியம் கூறுகிறாள்!
ஜாதிபல இருந்தாலும் மதங்கள்பல இருந்தாலும்
மொழிகள்பல இருந்தாலும் கருத்துபல இருந்தாலும்
கெத்தாக நின்றிடுவோம் இந்தியர்நாம் ஒன்றாக
பாரினிலே பாரதத்தை முதலாக ஆக்கிடுவோம்
சித்தத்தில் நல்லெண்ணம் நலமாக நிறைந்திடவே
எண்ணிய எண்ணியாங்கு சுபமாக முடிந்திடவே
புத்தாண்டு தேவியவள் சுபகிருது நங்கைதனை
பாசமொடு நேசமொடு வேண்டியே வரவேற்போம்!
புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா – ராஜாமணி பாலாஜி
இயற்கையின் மலர்ச்சி ஆதவனைக் காண
இரவின் மாற்றம் புலர்ந்தது பொழுது
புள்ளினங்கள் ஓசை இனிமையாக கேட்க
தூரத்தே அருவி சப்தம் தாலாட்டு போட்டது – (1)
மலர்களின் மகிழ்ச்சி மலர்ந்தன மொட்டுக்கள்
மரத்தின் அசைவாய் கிளை(இலை)களின் நடனம்
சில்வண்டின் ரீங்காரம் சுருதியாக மாறிட
பல்வகை விலங்குகள் தம்மொழியில் ஆர்த்தன – (2)
ஹே மனிதா !! இன்னும் ஏன் உறங்குகிறாய்..
எழுந்திரு.. இன்றைய நாள் பிறந்துவிட்டது…
எங்களைப் பார்த்தாவது விழித்திடு இனிமேல்
ஏற்றம் கண்டிடவே வீறுகொண்டு எழுவாய்.. – (3)
இன்று புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா
தூக்கத்தை விலக்கிடு காலைக்கடன் முடித்திடு
தூயநீராடிடுவாய் புத்தாடை உடுத்திடுவாய்
இறைவணக்கம் அவசியமே இனிதாக வாழ்ந்திடவே
இயன்ற தருமம்நன்று – இல்லாதவர்க்கு ஈந்திடுவாய் – (4)
மாம்பூவும் வேம்பூவும் இணைந்த தித்திப்பு
மானிடர்க்கு கூறிடும் பொருளை அறிந்திடுக
துவர்ப்பு கசப்புடன் வாழ்வில் இனிப்புமுண்டு
துவளாதே மனமே துயர்வந்து சேர்ந்தால் – (5)
புத்தாண்டு சூளுரை
அலைகளைப் போலே முயன்றிடவேண்டும்
துணிந்து நின்றால் பாதைகள் தெரியும்
கருத்தினில் ஊன்றி தொடர்ந்திட வேண்டும்
கனிந்திடும் காலமே – நம்துயர்களும் மறையும் – (6)
பகல்கனவு காணாதே கற்பனையில் வாழாதே
பசியால் வாடினாலும் மதிமயங்கி செல்லாதே
”முயலாமை” கதையல்ல சோம்பித் திரியாதே
முயன்று பார்க்காமல் முடியாதென சொல்லாதே – (7)
மூங்கில் போலின்றி நாணலாய் இருத்தல்நன்றே
மூத்தோர் வழிகாட்டல் நல்வாழ்விற்கு அவசியம்
உற்றவர்தம் துயர்களைய உனக்கும் பங்குண்டு
பெற்றவரை மறந்தாலே ஏதுபயன் உன்வாழ்க்கை – (8)
பொறாமை கோபம் பொய்மைதனை விட்டொழிப்போம்
பொறுமையினைக் கைகொண்டு ஏமாற்றத்தை தவிர்ப்போம்
அறிவாற்றல் தேவையில்லை அதிகாரம் நிலையில்லை
அன்பாலே அரவணைப்போம் பகுத்துண்டு வாழ்ந்திடுவோம் – (9)
புத்தாண்டு பிறக்கையிலே சூளுரை ஏற்றுக்கொள்
புன்னகைக்கு ஈடான பொருளேதும் இங்கில்லை
புரியாத இடத்திலும் புன்னகையே வழிகாட்டும் – பின்
புரிந்துகொண்ட உறவுகளாய் நம்மை உருமாற்றும் – (10)
இன்று புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா
இருவரின் பாடல்களும் நன்றாக உள்ளது. திரு இராஜாமணி பாலாஜி அவர்களின் கவிதை மிக நன்றாக உள்ளது.படிப்பதற்கும் பொருள்தெரிந்து கேட்பதற்கும் சுவையாக உள்ளது. நன்று… அவர் பணி மென்மேலும் ஓங்கட்டும்.
LikeLike
எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் கவிஞர் ராஜாமணி பாலாஜி தன் புத்தாண்டு வாழ்த்துக்களை அழகான முறையில் கவிதையாக தந்துள்ளார். வாழ்த்துக்கள்… அவர் பணி தொடரட்டும்…
வேதபுரீஸ்வரன்
LikeLike
எனது கவிதையை ஒரு மாத இதழில் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி உண்டாகின்றது. நன்றி.
LikeLike
இரு கவிஞர்களும் புத்தாண்டை நன்றாக வரவேற்றுள்ளனர். எனது நண்பர் ராஜாமணி பாலாஜியின் புத்தாண்டு சூளுரை நம் ஒவ்வொருவரின் மனதிலுள்ள கோவம், பொறாமை, ஏமாற்றம் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்றும் புன்னகையே சிறந்த ஒன்று. மக்கள் அதிகாரம் பார்த்தும், அறிவாற்றல்கொண்டும் இருப்பதை விட, நல்ல குணங்களை பெற வேண்டும் என்று சூளுரைப்பது இந்தக் காலத்திற்கு தேவையான ஒன்று. வாழிய உம் பணி… தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே…
LikeLike