அங்காடித் தெரு
உண்மைக்கு மிக நெருக்கமான பார்வை

பெரிய பெரிய நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் போன்றவற்றில் பணியாற்ற, காலை நேரத்தில் சீருடையில் இளவயது பெண்களும் ஆண்களும் அணிவகுத்துச் செல்வதை, இரவு குறிப்பிட்ட நேரத்தில் அப்படியானவர்கள் சோர்ந்து திரும்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். கடைகளில் வாடிக்கையாளரைப் புன்னகையோடு எதிர்கொள்ளும் அவர்களது வாழ்க்கையின் உண்மைக் கதை என்ன?
அங்காடித் தெரு, தமிழ்த் திரைக்கதையில் ஓர் அசாத்திய முயற்சி என்றே சொல்ல வேண்டும். மூலதனம் எத்தனை ஈவிரக்கம் அற்றது என்பதை எழுத்தில் எத்தனை வாசித்தாலும், புரிந்து கொள்ள முடியாது. தொழிலாளி என்னும் ஜீவிக்கு ஐம்புலன்கள் உண்டு என்ற உணர்வைக் கழற்றி வைத்துவிட்டுத் தான் கல்லாப் பெட்டிமுன் அமர்கிறது வர்த்தக உலகம்.
மனிதர்களைப் பார்த்துக் கடவுள் சிலைகளை வடிக்கத் தொடங்கியது போலவே, கடுமையாக உழைக்கும் தொழிலாளியை, எந்த எதிர்ப்பேச்சும் பேசாத, நோய் நொடி என்று விடுப்பு எடுத்துவிடாத, கூலியோ போனசோ இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் பிறழ்ந்துவிடாத தன்மையில் உருவாக்க முதலாளித்துவத்தின் தேவைக்கு ஏற்ப யோசித்துத் தான் ரோபோக்களைப் படைத்து இருக்கின்றனர் போலும்! கூலியடிமை என்றால் என்ன என்பதைக் காட்சிப்படுத்தியதில் முக்கியமான திரைப்படம் அங்காடித் தெரு.
எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றலாம் என்று நம்புவோரை ரசவாதிகள் என்று சொல்வார்கள். எதைப் பிழிந்தால் தங்கம் எடுக்க முடியும் என்ற ரகசியத்தைக் கண்டடைந்த முதலாளித்துவம் செய்வதுதான் ரசவாதம். உழைப்பாளியை எந்தத் தணலில், எந்த அனலில் எப்படி புரட்டிப்போட்டு அந்த வேலை நடக்கிறது என்பதைத் தொடும் முக்கியமான கதை இது.
தொண்ணூறுகளில் தொழிற்சங்க அலுவலகத்திலும் சரி, வெளியே கடையில் போய் நிற்கும் போதும் சரி, தேநீர்க் குவளையைக் கொண்டு வந்து நீட்டும் சிறுவர்களை ‘எந்த ஊர்’ என்று கேட்டால் தவறாமல் ஒலிக்கும் ஊர் அரியலூர். வறுமையின் துரத்தலில் புலம் பெயர்தல் ஏதோ இந்த நூற்றாண்டில் தான் நடப்பதுபோல் இப்போதைய தலைமுறையினர் பார்க்கின்றனர். ஒட்டுமொத்தப் புலம் பெயர்தல் ஒரு சோகம் எனில், படிக்கும் வயதில் இருக்கும் பிள்ளைகளைக் குடும்பத்தைக் கரையேற்றும் பெரும்பொறுப்பைச் சுமத்தி அதற்கான உள்ளீடாகப் பசிக்கும் வயிற்றோடு கிராமத்தை விட்டுத் தொலைதூரம் வேலை பார்க்க அனுப்பி வைக்கும் தன்மைகள் துயரப் பெருங்கோப்பை அன்றி வேறென்ன…அங்காடித் தெரு இதைத் தான் பேசுகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும், கட்டுமானத் தொழிலாளித் தந்தையை விபத்தில் பறிகொடுத்து, மாநகரத்தின் துணிக்கடைக்கு வேலைக்கு வரும் விடலைப் பருவத்து நாயகன் ஜோதிலிங்கம் (மகேஷ்). அவனது ஊர்த் தோழன், பின்னர் கடைத் தோழனாகவும் சேர்ந்துவிடும் மாரிமுத்து (பாண்டி). அவர்களிடம் வம்புக்கு நின்று பின்னர் ஜோதியின் காதலைப் பெறும் கனி (அஞ்சலி). இவர்களை மட்டுமல்ல, மாட்டுத் தொழுவம் போல் இயங்கும் இந்தத் தொழிலாளிகளின் தங்குமிடம், அவர்கள் தலையில் கொட்டப்படும் மட்டமான உணவு, அதற்கான நேரம், வேலையில் நேரம் தவறினால் பறிபோகும் விகிதாச்சாரக் கூலி, எதிர்த்துப் பேசினால் அல்ல, சிந்தித்தாலே என்ன நடக்கும் என்ற பயங்கர நேரடி, திரை மறைவு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அங்காடித் தெரு.
ஆணுக்கு நடப்பதைப் போலவே பெண் தொழிலாளிக்கும் அடியும் உதையும் மட்டுமே கிடைக்கும் என்று நம்பும் கதையின் நாயகன் ஜோதி, முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கண்காணிப்பாளன் கனியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தனியே அழைத்துப் போய் என்ன செய்தான் என்று அவளையே கேட்கிறான். ‘ரொம்ப தெரியணுமோ, மாரைப் பிடிச்சுக் கசக்கினான், போதுமா’ என்று குமுறியபடி, வயிற்றுப்பாட்டுக்காகக் கடையில் வாடிக்கையாளருக்குத் துணிமணிகள் எடுத்துப் போட்டபடி இருக்கிறாள் கதாநாயகி. கொதித்துப் போகிறான் அவன்.
‘கூலித் தொழிலாளிக்குக் காதல் என்ன கேடு’ என்பது படத்தில் பலவேறு இடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் எதிரொலிக்க வைக்கிறது சந்தையின் மனசாட்சி. காலணா அரையணாக் கூலியில் மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்பி அங்கே உலை பொங்கக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விடும் சாமானியத் தொழிலாளியின் கண்களுக்குத் தெரிவதில்லை காதல் தடை செய்யப்பட்டது என்று.
துணை பாத்திரமாக வரும் பெண் தொழிலாளி, காதலனுக்கு எழுதும் கடிதத்தில் கூடவா, கண்காணிப்பாளனைக் கருங்காலி என்று குறிப்பிடுவாள், அவனிடமே சிக்கும் கடிதத்தால், அவனிடம் சிக்கிக் கொண்டு கிழிபட்டுக் காலில் நசுங்கிச் சின்னாபின்னமாகிறது அந்தக் காதல். அவனது அடாத மிரட்டலுக்கு அஞ்சிக் கையைத் தூக்கித் தான் எழுதிய கடிதம் தான் என்று தானாக அகப்பட்டுக் கொள்ளும் அவள் கை காட்டும் அந்தக் காதலனோ குடும்ப வறுமையின் நிமித்தம், தானில்லை அது என்று மறுத்துவிடுகிறான். அது மட்டுமின்றி, வேசை மகள் என்ற வார்த்தையை அவளை நோக்கி வீசவும் செய்துவிடுகிறான் – வேலையை இழப்போமோ என்ற அச்சத்தில்! எல்லாப் பிடிமானமும் இழந்து நிற்கும் அந்தப் பெண், அந்த அடுக்குமாடிக் கட்டிட தளத்தில் கண்ணாடிச் சுவரை நோக்கி ஓடிப்போய்க் குதிக்க, அது அவள் காதலைப் போலவே வேகமாக நொறுங்கி, அவளை இவ்வுலகக் கவலைகள் எல்லாவற்றில் இருந்தும் விடுவிக்கும் பொருட்டு அவளைத் தரையில் விழச் செய்து தானும் அந்தக் கவலையில் சிதறிப்போய் விழுகிறது. அந்தக் காதலன் பித்துப் பிடித்துத் தரையோடு பேசத் தொடங்கிவிடுகிறான். எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது மாதிரி அடுத்த நாளைக்குள் காலடி வைக்கிறது அங்காடி.

அதற்குப் பிறகும் வாழ்க்கை அவர்கள் பக்கம் அத்தனை கருணையாக இருப்பதில்லை. சாலையோரத்தில் படுத்துறங்கும் இப்படியான தொழிலாளிகளது கால்களைப் பதம் பார்க்கவென்றே தறிகெட்டு ஓடிவரும் லாரியொன்று, நாயகியைக் காலத்திற்கும் ஊனப்படுத்திவிட்டுப் போகிறது. ஆனால், காதல் அவளைக் கைதாங்கிப் பிடித்துக் கொள்கிற இடத்தில் நிறைவு பெறுகிறது படம்.
மாநகரத்திற்கான உழைப்பாளிகளை எப்படி தென் கோடி கிராமங்களில் இருந்து பத்திக் கொண்டு வருகிறது சந்தை (அப்பன் செத்தவன், அக்கா தங்கச்சி இருக்கறவங்களாப் பாத்து எடுங்க லே, அப்படிப்பட்டவனுவ தான் பொத்திக்கிட்டு வேலை பாப்பானுவோ) என்பதை விளக்கும் திரைப்படம்,. தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு சாகவே சரியாக இருக்கும் சூழலில் இந்தத் தொழிலாளிகள் எப்படி விடுதலையைச் சிந்திக்கவே முடிவதில்லை என்பதையும் காட்சிப்படுத்துகிறது. திரை மோகத்தில் சினேகா ஆல்பத்தை உருவாக்கி வைத்திருக்கும் மாரிமுத்துவுக்கு, கடையின் விளம்பரப்படத்தில் நடிக்கவரும் அந்த நடிகையின் உதவியாளராக வேலை கிடைத்துவிடும் அதிசயமும் நடக்கிறது. அங்காடித் தெருவில் இவர்கள் மட்டுமல்ல, அந்த நெரிசலில் மூசசுத் திணறிவிடாமல் வாழ்க்கையைக் குனிந்து எப்படியோ பொறுக்கியெடுத்துவிடத் துடிப்போரையும் காட்டுகிறது படம்.
துயரமிக்க திரைக்கதையில், இயல்பான நகைச்சுவைக்கும் பஞ்சம் இருப்பதில்லை. ஜோதியும், கனியும் பரஸ்பரம் தோற்றுப்போன தங்கள் முந்தைய காதல் அனுபவங்களைப் பேசிக் கொள்வது, கடையில் காதலிக்குக் கடிதம் எழுதத் தெரியாமல், ஒன்பதாம் வகுப்பு கடவுள் வாழ்த்துப் பாடலை எழுதிக் கொடுத்து மாரிமுத்து கேலிக்கு உள்ளாவது போன்று சில இடங்கள் உண்டு.
மகேஷ், அஞ்சலி இருவருக்குமே முதல் படம். கடையில் குறும்பான காட்சிகளில், ஒடுக்குமுறைக்கு ஆளாகும் தருணங்களில், எல்லாக் கொடுமைகளுக்கும் இடையே குளிர்ச்சியான ஒரே நம்பிக்கையாக வளர்த்துக் கொள்ளும் காதல் பார்வை பரிமாற்றங்களில் இருவருமே அபாரமான நடிப்பை வழங்கி இருப்பார்கள். நகைச்சுவையும், உருக்கமும் இயல்பாகச் செய்திருப்பார் பாண்டி. பெரிய ஜவுளி மாளிகையின் நிறுவனராக பழ கருப்பையா. கடை சூப்பர்வைசராக வெங்கடேஷ், ரங்கநாதன் தெருவோர வியாபாரிகளாக வருவோர் உள்பட ….எல்லோருமே கதைக்களத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்று சொல்ல முடியும்!
படத்தின் பாடல்கள், அருமைக் கவிஞர் நா முத்துக்குமார்! ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ (இந்தப் பாடலும் மற்றொன்றும் மட்டும் இசை: விஜய் ஆண்டனி) பாடல் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. ‘உன் பேரைச் சொல்லும் போதே’ உள்பட மற்றவை ஜி வி பிரகாஷ் இசையில் சிறப்பாக அமைந்தவை.
ஒரு வேலை நாளில், விடுமுறை நாளில், அதிகாலையில், நண்பகலில், மாலையில், இரவில் மற்றும் நள்ளிரவு நேரத்தில் ரங்கநாதன் தெரு எப்படி இருக்கும், எந்த மாதிரியான மனிதர்கள் வந்து போகின்றனர் என்பதை, முழுவதும் அடைக்கப்பட்ட வாகனம் ஒன்றில் காமிராவுக்கு மட்டும் திறப்பு வைத்து, குறுக்கும் நெடுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஓடவிட்டுப் பதிவு செய்து எடுத்துத் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்து, காட்சிப்படுத்தி இருக்கிறார் வசந்த பாலன். அதை விடவும், வர்த்தக உலகத்தின் இதயமற்ற இதயத்தின் கணக்கீடுகளுக்கு உள்ளேயும், கடை வேலையாட்களின் மனங்களுக்கு உள்ளேயும் கூடத் தேர்ச்சியான பயணம் நடத்தாமல் உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதையை, அதன் காட்சிப்படுத்தலைச் செய்திருக்க முடியாது. திரைக்கதை எழுதி இயக்கமும் செய்திருக்கும் வசந்த பாலன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.
பிரபலமான கடைகளின் உரிமையாளர்கள் சிலர் படத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள் என்று தோன்றியது. இலேசாக எச்சரிக்கை மணி கூட ஒலித்த நினைவு. ஆனால், அப்படிக் கூட இந்தப் படத்திற்கு விளம்பரம் கிடைத்துவிடக் கூடாது என்றோ, பெரிய பாதிப்பு வந்துவிடாது என்ற எண்ணத்திலோ கண்டனங்கள் எதுவும் பெரிதாக வெளிப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு குறிப்பிட்ட வர்த்தக உலகத்தினுள் நிகழும் கதையைப் பேசினாலும், சம காலத்தில் தொழிலரங்கில் நடக்கும் மோசமான நடைமுறைகளை உருவகமாக எடுத்துச் சொன்ன படம் என்றே தோன்றுகிறது. மிகவும் பேசப்பட்ட படம் என்றாலும், இன்னும் உரக்கப் பேசப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் வலுவான உரையாடல்களைப் பொதுவெளியில் உருவாக்கி இருக்க வேண்டும்.
திரைப் படங்களையும் திரைப் பாடல்களையும் பிரேமுக்கு பிரேம் ரசித்து எழுதும் நமது இந்தியன் வங்கி நண்பர் வேணுகோபால் அவர்களின் திரை ரசனை பகுதியில் இந்த முறை அவரின் மூச்சாக விளங்கும் தொழிலாளர் பிரச்னை பற்றிப் பேசும் படம் என்றால் எவ்வளவு உணர்ச்சிகரமாக எழுதுவார் என்று சொல்லவே வேண்டியதில்லை .
ஆம் , அவரே உணர்வு பூர்வமாக உபயோகித்து இருக்கும் அந்த வார்த்தையான ‘ கூலி அடிமைகள் ‘ பற்றிப் பேசும் படமான ‘அங்காடித் தெரு ‘ பற்றிய திரை ரசனைக் கட்டுரை தான் இது .
கண்ணீரும் ரத்தமும் கலந்த வார்த்தைகளில் , விம்மலும் கோபமும் வெடித்துக் கிளம்பும் படி வேணுவால் தான் எழுத முடியும் என்று காட்டியிருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்
LikeLike