திருவாரூர்- வீதியுலா
திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள திருவாரூர் கிளம்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம் பார்த்துதானா அந்த நண்பர் வரவேண்டும். வந்தவர் “என்ன திருவாரூரா! தியாக ராசரை தரிசித்து வாருங்கள்” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி” எனக் கூறி வைத்தார். நாம் திருவாரூரில் பிறக்கவில்லை, காசி போகவே வாய்ப்பில்லை. அப்ப முக்தியே கிடையாதா என்ற கவலை.
நல்ல வேளை உடன் இருந்தவர் ‘ தில்லையை காண முக்தி திருவண்ணாமலையை நினைக்க முக்தி’ என்றதோடு அல்லாது திருவெண்காடு தலத்திற்கு இந்த நான்கு சக்தியும் உண்டு என முடித்தவுடன்தான் முக்தி பெற்ற நிம்மதி. நினைப்பதற்கென்ன சிரமம். தினசரி அண்ணாமலையாரை நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் திருவண்ணாமலை சென்ற அப்பர் பெருமானோ “ இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்து மகிழ்தலே முத்திப் பேறு அடைதலை விட சிறந்தது” என்கிறார்.
அதுவும் சரிதான். இங்கு இன்னும் காண, கேட்க, கற்க உலகளவு நல்ல விஷயங்கள் உள்ளன. முக்தி பற்றி பின்னர் யோசிக்கலாம்.
ஓரு சில தடவைகள் ஆரூர் சென்றுள்ளேன். நினைத்தாலே ‘உடம்பு சிலிர்க்கும்’ என்பார்களே அந்த உணர்வு திருவாரூர் என்ற பெயர் கேட்டால் உண்டாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பெருமைகள் இருக்கும். ஆனால் ஊரே பெருமை பெற்றது என்றால் அது திருவாரூர்.
என் சிலிர்ப்புக்கு முதல் காரணம், ஆரூர் சென்றால் சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் நள்ளிரவில் நடந்து தூது சென்ற வீதியை மிதிக்கும் புண்ணியம் கிடைக்கும்.
அன்றே நட்புக்கு இலக்கணம் வகுத்தான் ஈசன். நட்பிற்காக, நண்பனை மனதிற்கினியவளுடன் சேர்த்து வைக்க பரவையாரிடம் முதல் தடவை தனியனாய் இரண்டாவது தடவை பூத கணங்களுடன் தூது சென்றான்.
சுந்தரரும் இறைவனை நண்பனாக பாவித்து வேலை வாங்கினார். சுந்தரர் நண்பனாய் அன்பு காட்டி பாடிய தேவாரத்திற்கு ‘ஸக மார்க்கம்’ என்பது பெயராம்.
பிள்ளை போல் அன்பு காட்டி ஞான சம்பந்தர் பாடியது ‘புத்ர மார்க்கம்’
ஊழியனாய் அன்பு காட்டி அப்பர் பாடியது ‘தாச மார்க்கம்’.
மாணாக்கனாய் அன்பு காட்டி மாணிக்க வாசகர் பாடியது ‘சிஷ்ய மார்க்கம்’ என்றனர் பெரியோர்.
சுந்தரரை நண்பனாய் உலகிற்கு காட்ட திருமணத்தை நிறுத்தி, பொய் சாட்சியாக ஏடுகளை உண்டாக்கி ஆடிய நாடகத்தை நினைத்து அசை போடலாம்.
ஈசன் தன் நண்பனாகிய சுந்தரர் சங்கிலியாரை ( அநிந்திதையார்) திருவொற்றியூரில் மணம் செய்து பின் நீங்குவதை தடுத்து நிறுத்த கருவறையிலிருந்து மகிழ மரத்தடியில் வந்தமர்ந்த விளையாட்டை நினைந்து மகிழலாம்.
சுந்தரர் சேகரித்த பொற்குவியலை பத்திரமாக விருதாசலத்திலிருந்து ஆரூர் கொண்டு செல்ல, ஈசன் விருதகிரி மணிமுத்தாற்றில் வீச வைத்து திருவாரூர் கமலாலயம நீரில் கொண்டு சேர்த்த அற்புதம் கொண்ட தெப்ப குளத்தை தரிசிக்கலாம். கோவிலின் பரப்பளவு 32 ஏக்கர் நிலமெனில், கமலாலயம் திருக்குளத்தின் பரப்பும் 32 ஏக்கராம். “ கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி” என பெருமையாக கூறுகிறார்கள்
நண்பர்கள் மட்டுமல்ல தன் தொண்டர்களும் என் உயிரே என உலகிற்கு உணர்த்த சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு மூல நூலான திருத்தொண்டத்தொகை பாட ஈசன் தன் வாயால் “ தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்து அடியவர்களின் பெருமையை பாட வைத்த ஊர் ஆரூர்.
உமையவளின் தோழிகளான அநிந்திதை, கமலினி என்ற இருவருள் பரவை நாச்சியார் என்றரியப்பட்ட கமலினியார் அவதரித்த ஊர்.
சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம், பெரிய கோவில் என்றால் திருவாரூர். கோவில் தோன்றி 5000 ஆண்டுகளுக்கும் மேல் என்கின்றனர். இறைவன் வந்தமர்ந்தது எப்பொழுது என ஞான சம்பந்தாராலேயே கூற முடியாமல் பாடல்களில் ‘நீ எப்பப்பா இங்கே கோவில் கொண்டாய்’ என கேட்கிறார். அங்கு பாடும் தேவாரத்தில் “திருச்சிற்றம்பலம்” கூறப்படுவதில்லையாம், காரணம் சிதம்பரத்திற்கும் முன்னர் ஈசன் அமர்ந்த இடமாம். நாம் யார் கோவிலின் வயதை அளப்பதற்கு. பெரியவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வோம்.
பஞ்ச பூத தலங்களில் பூமிக்கு உரியது ஆரூர். காஞ்சிபுரம் என்று எங்கோ படித்த ஞாபகம்.
இங்கும் ஈ்சன் ஆடினார். அவர் ஆடும் நடனத்திற்கு ‘அஜபா நடனம்’ என்பது பெயராம். இன்றும் விஷேச காலத்தில் ஆடி மகிழ்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க ஆசை.
திருவாரூரில் அதிசயங்கள் பல நிகழ்த்திய ‘ தியாகராசர்’ ஊருக்கே ராஜாவாம். அந்த ராசருக்கு ஆசியாவிலேயே பெரிதான ‘ஆழித் தேர்’. திருவாரூர் தேரழகு என படித்துள்ளோம், தேர் ஆடி அசைந்து வரும் அழகு மேனி சிலிர்த்தலுக்கு மற்றொரு காரணம்.
அவர் நகர் வலம் தனியே வரமாட்டார். அனைத்து பரிவாரங்களுடன்தான் வருவார். கண்கொள்ளா காட்சி.
வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
திருவடை மருதூர் தெருவழகு
மன்னார்குடி மதிழலகு
என அனைத்தையும் அனுபவித்தவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
ஈசன் அரசாட்சி செலுத்துமிடம்.
வேறென்ன பெருமை? இசை அரசர்களான மும்மூர்த்திகளும் அவதரித்த ஊர் திருவாரூர். ஒருத்தர் திருச்சியிலும் அடுத்தவர் கோவையிலும் பிறந்திருக்க கூடாதா, இல்லையே. மூவரும் அவதரித்த மண். அதுதான் திருவாரூர் மண்ணின் பெருமை.
தன் வாரிசுகளுக்காக எதையும் தியாகம் செய்யும் ஆட்சியரை நாம் இன்று காண்கிறோம். ஆனால் நீதி காக்க மனு நீதிச்சோழன், தன் வாரிசையே தியாகம் செய்தது திருவாரூர் வீதியில்.
ஈசன் பீடு நடைபோட்டு நடந்த வீதி,
சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் கால் தடம் பதிந்த வீதி.
எந்தை அருணகிரி நாதர் வலம் வந்த வீதி.
சங்கீத மும்மூர்த்திகள் பரமன், திருமால் புகழ் பரவசத்துடன் பாடி நடமாடிய வீதி.
நீரில் விளக்கேற்றிய நமிநந்தியடிகள் முதலான நாயன் மார்கள் ஓடியாடி தொண்டு செய்த வீதி.
மனுநீதிச் சோழன், அமைச்சர் தயங்கியதால் தானே தன் மகனை தேரேற்றி கொன்ற வீதி.
தேவேந்திரனும், தேவர்களும் ஈசனை காண நடந்த வீதி.
உமையவளின் உன்னத தோழி கமலினி அவதரித்த மாளிகை கொண்ட வீதி.
இவ்வளவு புண்ணியம் பெற்ற வீதியில் நான் வீதியுலா செல்ல உள்ளேன்.
‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன் யான்” என ஞான சம்பந்தரே கூறும் பொழுது, திருவாரூர் மண்ணை மிதித்தால் மேனி சிலிர்ப்பது நியாயம்தானே.