(இந்தக் கட்டுரையைப் படிக்குமுன் இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் படியுங்கள்! எழுதியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஹோலியின் ஜோஷ் புலப்படும்)
இந்தியாவில் பண்டிகைகள் அநேகம். நமது முன்னோர்கள் மிகவும் பயனுள்ளதாகவும், காலத்துக்கேற்றவாறும் அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் பற்றியும், அதற்கேற்றவாறு பட்சணங்களை செய்வதைப் பற்றியும் வரையறுத்து வைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. பங்குனியில் ஸ்ரீராமநவமி அன்று வெயிலுக்குத் தகுந்தவாறு பானகம், நீர்மோர். சித்திரையில் கிடைக்கும் மாங்காய், வேப்பம்பூ போன்றவற்றை வைத்து பச்சடி என்று சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு நைவேத்யம். இதில் வட நாடு, தென்னாடு என்ற பிரிவிலேயும் அந்தந்த காலம், ருது, சமையல் என்று ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளன. எல்லோருக்கும் இந்தப் பண்டிகைகளைப் பற்றி தெரிந்திருந்தாலும் நான் இந்த வருடம் வட நாட்டில் கொண்டாடி ஆச்சர்யப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றித்தான் கூறப் போகிறேன்.
பத்து வருடங்களாக எனக்கு ரொம்ப ஆச்சர்யத்தைத் தந்த விஷயம் என்னவென்றால் பொதுவாக வடநாட்டுக்காரர்கள் எதையும் எளிதாக எடுத்துச் செல்வதும், வயது வித்யாசம் இல்லாமல் பாடுவதும், ஆடுவதும் தான். சென்னைக்கு தன் பெண் கல்யாணத்திற்கு வந்தவர்கள் தங்கள் அதிகப் பொருட்களுடன் ஒரு டோலக்கும் எடுத்து வந்து பாட்டும், டான்ஸுமாக ஜாலியாக இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எல்லாக் கவலைகளையும் தலை மேல் சுமந்து கல்யாண வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னையும் ஆட வைத்த அவர்களது அந்தப் பாங்கு எனக்கே பிடித்திருந்தது! எத்தனையோ பண்டிகை இருந்தாலும் அவர்களுக்கு முக்கியமான பண்டிகை இந்த ஹோலி. அவர்கள் இதனை சுமார் பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். தெற்குப் பக்கம் ஹோலி என்றால் வண்ண வண்ண பொடிகளைத் தூவுவதுதான். அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் 1993 என்று ஞாபகம். இரவு 8 மணிக்கு என் இரு குழந்தைகளும் அடையாளம் தெரியாதபடி வண்ணப் பொடிகள் மேனி முழுவதும் படர வந்தனர். அவர்களை அர்ச்சனை செய்தபடி குளிக்க வைத்தேன். இதுதான் எனக்கும் ஹோலிக்குமான முதல் இரவு (உறவு). அதற்கப்புறம் இந்த கலர் பொடிக்குப் பயந்து ஹோலி அன்று வெளியில் செல்வதையே விட்டு விட்டேன்.
பிறகு என் பையனால் இந்த ஆர்மி வாழ்க்கையில் இணைந்து வேறு வழி இல்லாமல் ஹோலிப் பொடியை மேனி முழுவதும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன்.அன்று எல்லோரும் நீல வண்ணக் கண்ணன் அல்லது செக்கச் சிவந்த ராதே தான். ஆனால் இந்த வருடம் இந்தப் பண்டிகையை முழுமையாக அனுபவித்து இரசித்தேன்.
நாங்கள் விடுமுறை கழிப்பதற்காக வடநாடு சென்றோம். சரியாக அப்போது ஹோலிப் பண்டிகை நேரம். எங்களது மூட்டையை இறக்கியவுடனே அந்த வீட்டுப் பெண்மணி ‘குளித்து சீக்கிரம் கிளம்புங்கள்’ என்றார். ஹோலிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்ததால் ‘எங்கே’ என்றோம். ‘பார்வதி வீட்டு ஹோலிக்கு’ என்றார். இதென்ன பார்வதி வீட்டு ஹோலி ஹேமா வீட்டு ஹோலி. புரிபடாமலேயே கிளம்பினோம். அப்போதுதான் புரிந்தது ஹோலியை பத்து நாட்கள் முன்பே வரவேற்கிறார்கள் என்று. இருந்த பத்து நாட்களும் ஹோலி கொண்டாட்டம்தான். உங்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியுமோ, எனக்கு இது ரொம்பவும் புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
‘பாட்டுப் பாடும் ஹோலி’ என்று பத்து நாட்கள் ஒவ்வொரு வீட்டிலேயும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழைப்பு வந்தவுடன் காலை பத்து மணி அல்லது மதியம் மூன்று மணியளவில் எல்லோரும் சேருகிறார்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுதல் ஆடுதல். அச்சச்சோ வயது ஒரு பொறுட்டேயில்லை. ஒவ்வொரு பாட்டிற்குப் பிறகும் ‘ஹோலி வந்தாச்சு ஹோலி வந்தாச்சு’ என்று சந்தோஷமாகக் கூவுகிறார்கள். பாட்டுக்கேற்ற மாதிரி டான்ஸ். அதுவும் கேலியும் கிண்டலும். மேல் சால்வையை தலையில் கட்டிக் கொண்டு சிலர் ஆண் மாதிரியும், பெண் மாதிரியும் உடனே மாறி டான்ஸ் ஆடுகிறார்கள். டான்ஸ் ஆடக் கூப்பிடணும் என்று எதிர்பார்க்காமல் அவரவர் எழுந்து நின்று டான்ஸ் ஆடுகிறார்கள். சில சமயம் அதற்கு வரிசையில் நின்று தம் முறை வந்தவுடன் ஆடுகிறார்கள். இப்படி அவர்கள் ஆட்டம் பாட்டம் என்று தம் மனத்தை ஒருமைப்படுத்தி எல்லோருடனும் சகஜமாக சிரித்துப் பேசி தம் மனத்தையும் இலகுவாக்குகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
நடு நடுவில் தொண்டையை நனைக்க ஏலக்காய், முந்திரி, கல்கண்டு என்று தரப்படுகிறது. பாசிப்பருப்பு ¾ பங்கு, உளுந்து பருப்பு ¼ பங்கு என்று அரைத்து சின்ன சின்ன போண்டா சுட்டு எடுத்து தயிர், வெல்ல புளித் தண்ணீர், புதினா கொத்தமல்லி சட்னி போட்டு அது ஒரு கப், வித வித நிற வடாம், சமூஸா, குடிக்க ஜூஸ் அல்லது அவர்களுக்கே உரித்தான சாய் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் முடிய கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரம் ஆகிறது. பிறகும் வீட்டிற்குச் செல்ல வேண்டும், வீட்டிலுள்ளவர்களை கவனிக்க வேண்டும் என்று அவசரம் எல்லாம் படாமல் பேசி சிரித்து மகிழ்கின்றனர். இந்த பாட்டு, ஆட்டம், நிதானம் நிச்சயமாக வட நாட்டவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹோலிக்கு முதல் நாள் நமது போகி மாதிரி ஹோலிகாவை எரிக்கிறார்கள். இரண்யகசிப்புவின் தங்கைக்கு ஒரு வரம் தீ அவளை எரிக்காது. ஆகையால் பிரகலாதனை எரியூட்ட தன் மடியில் அவனை இருத்துக்கொண்டு தீயில் உட்காருகிறாள். ஆனால் விஷ்ணு பெருமாள் பிரகலாதனை விடுத்து ஹோலிகாவை எரித்து விடுகிறார். இதுதான் ‘ஹோலிகா தகனம்’. இதனைத் தான் முதல் நாள் எரியூட்டி கொண்டாடுகிறார்கள்.
மறு நாள் எல்லோரும் மற்றவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை வித வித கலர் பொடிகளைப் பூசி, அந்த சின்ன போண்டா, பக்கோடா, சோமாசி (குஜியா), ஜூஸ், ஆண்கள் பீர் என்று சாப்பிட்டு எப்போதும் போல டோலக், பாட்டு, டான்ஸ் என்று மதியானம் வரை சந்தோஷமாக இருக்கிறார்கள். கல்யாணமான பிறகு வரும் முதல் ஹோலி என்றால் கூடுதல் சந்தோஷம்தான்!
தெற்கு பக்கமும் நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தாலும் எனக்கு இந்த மனதை லேசாக்கும் வித்தை மிகவும் பிடித்துள்ளது. ஹோலி என்றில்லை, திருமணம், கர்ப்பம் தரித்தல், குழந்தை பிறத்தல் இப்படி எந்த விசேஷத்திற்கும் இந்த பாட்டும், டான்ஸும் கட்டாயம் உண்டு. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தவாறு இந்தப் பாட்டுக்கள் இருக்கும். சில சமயம் என்னையும் ஆடக் கூப்பிடுவார்கள். ஆனால் நான் ஆட்டுவித்திருக்கிறேனே தவிர ஆடினதில்லையே! இப்பப்ப இதனால் மனசு சந்தோஷம் மட்டுமல்லாமல் லேசாகி இறக்கைக் கட்டிப் பறக்கிறது கண் கூடாகிறது. பாட்டும் பரதமும் நமது வாழ்க்கை என்ற நாடகத்தில் இணைந்ததல்லவா!