பொருள் தேடுவதற்காக இனிய மனையாளான தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். “இவள் அவனுடைய பிரிவைத் தாங்கிக் கொள்ளும் வலிமையற்றவள் எனத் தோழி நினைக்கிறாள். இவ்வாறு தோழி எண்ணுவது தலைவிக்குத் தெரிகின்றது. உடனே தன் எண்ணத்தைத் தோழிக்கு உணர்த்த, தனக்குத்தானே பேசிக்கொள்வது போலக் கூறுகிறாள்:
“என் கவலை என்னவென்று தெரியாமல் இவள் (தோழி) இருக்கிறாளே!
“தலைவர் சென்ற கொடிய வழியானது, பலவகைப்பட்ட வழிகளை உடையது. உலைக்கல்லைப்போலச் சுட்டெரிக்கும் பாறை மீதேறிக் கொடிய வில்லினை ஏந்திய எயினர்கள் அம்பினை எய்யும் வழிகளை உடையது. கைகளில் வில்லேந்திய அந்தக் கானகத்து மறவர்களை ஆறலைக்கள்வர் என்பார்கள். அவ்வழியானது எறும்பின் வளைகளைப்போல குறுகலாகவும் பலவாகவும் இருந்து அதன்வழியாகச் செல்பவர்களைக் குழப்பும். என்னுடைய கவலையெல்லாம் அதைப்பற்றியது தான். இந்த ஊர்மக்களோ (அதாவது தன் தோழியைப் பற்றித்தான் இவ்வாறு கூறுகிறாள் தலைவி) அந்த வழியின் கொடுமையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தலைவருடைய பிரிவினைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் வருந்துவதாகக் கூறுகிறார்கள்.
செல்லும் வழியின் மிகுதியான வெம்மையும், ஆறலைக் கள்வர்களால் படும் தொல்லையும், எறும்புகளின் வளை போலும் பலவான வழிகள் செய்யும் குழப்பமும் ஏற்படுத்திய கலக்கத்தால் தனக்குத்தானே பேசியவண்ணம் இருப்பவளின் எண்ணச் சிதறல்களை இந்த அழகான குறுந்தொகைப் பாடலாக வடித்துக் கொடுத்துள்ளார் புலவர் ஓதலாந்தையார் என்பவர்.
இன்னும் சிறிது உள்வாங்கிப் பொருள் கொண்டோமென்றால் இந்தக் கலக்கங்களே தலைவி பிரிவினால்படும் வருத்தத்திற்குக் காரணம் என உணரலாம். எத்தகைய நுட்பமான மன ஓட்டங்களை அழகான பாடலாக்கி நாம் ரசிக்கப் பதிவுசெய்து வைத்துள்ளார்!!
எறும்பின் அளையை இவ்வாறு பிறர் கூறக்கேட்டே தலைவி அறிந்திருக்கிறாள். இந்த வழக்கு அகநானூற்றிலும் காணப்படுகின்றது.
மிகுந்த வெம்மை பொருந்திய கோடைகாலத்தில், வறண்டுபோன நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் சிறிய புல்லரிசியை சின்னஞ்சிறு எறும்புகள் ஒழுங்காக எடுத்துச்சென்று தமது வளைகளில் அடுக்கித் தொகுத்து வைக்கும். தாம் விதைவிதைத்து விளைவிக்காத அந்த உணவை வில்லையுடைய இரக்கமற்ற மறவர்கள் எடுத்து உண்பார்கள், எனக் கோடைக்காலத்தின் கொடுமையையும் தலைவன் செல்லும் வழியின் அச்சத்தையும் இப்பாடல் விளக்குகிறது.
‘கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்’
– மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் (அகநானூறு-377)
இதில் புலவரின் கவிநயம் மட்டுமின்றி மற்றொன்றும் என்னைக் கவர்ந்தது. என்ன தெரியுமா? எறும்புகள் தம் வளைகளை பல நுணுக்கங்களைக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அமைக்கும் எனும் செய்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் விரிவாக அறிந்து வைத்துள்ளனர் என்னும் ஆச்சரியகரமான உண்மைதான் அது!
தற்காலத்தில் இந்த எறும்பு வளைகளைச் சேர்த்து வைப்போர் ஒரு பொழுதுபோக்காகவே இதனைச் செய்கிறார்களாம். எறும்புகள் வெளியேறி, விட்டுவிட்டுச் சென்ற வளைகளுக்குள் உருக்கின உலோகங்களைச் செலுத்திப் பின் அது உறைந்து குளிர்ந்ததும் அதனை எடுத்து வளைகளின் அமைப்பைப் பற்றி அறிகின்றார்கள். அற்புதமான வடிவமைப்புக் கொண்டது இந்த எறும்பு வளை. இதனை அமைக்கும் எறும்புகளின் புத்திசாலித்தனத்தையும், அவை அமைக்கப்படுவதற்கான காரணங்களையும் பற்றி அறிந்தால் பிரமித்து விடுவோம்.
அதன்முன்பு எறும்புகள் பற்றிய சில புள்ளிவிவரங்களைக் காணலாமே!
– உலகில் 12,000 வகை எறும்பினங்கள் உள்ளன.
– சில ராணி எறும்புகள் பல ஆண்டுகள் வாழ்ந்து கோடிக்கணக்கான எறும்புகளைப் பெற்றெடுக்கும்.
– எறும்புகள் சண்டையிட்டால், அது இறக்கும்வரை நடக்கும்.
– ராணி எறும்புகளுக்கு இறக்கை உண்டு. ஒரு புதுக் கூட்டை அமைக்கும்போது அந்த இறக்கைகளை அது கழித்து விடும்.
– எறும்புகள் பல்லாயிரக் கணக்கானவை சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழும்.
– ஒரு எறும்பு தனது உடலின் எடையைப்போல 20 மடங்கு எடையைத் தூக்க வலிமை கொண்டது.
ஒரு எறும்புப்புற்றில் மூன்றுவகை எறும்புகள் உண்டு: ராணி எறும்பு, பெண் வேலைக்கார எறும்புகள், ஆண் எறும்புகள். ராணிக்கும் ஆண்களுக்கும் இறக்கை உண்டு. ராணி எறும்பு மட்டுமே முட்டையிட வல்லது. ஆண் எறு
ம்புகள் இனப்பெருக்கத்திற்கு உதவிய பின் விரைவில் இறந்துவிடும். இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் ராணி எறும்பு, தன் வாழ்நாள் முழுதும் முட்டையிடுவதிலேயே கழிக்கும்!
படைவீரர்களான எறும்புகள் ராணியைக் காப்பாற்றுவது, புற்றினைக் காப்பது, உணவு சேகரிப்பது, எதிரி எறும்புகளை அழிப்பது எனப்பல வேலைகளைச் செய்யும். ஒரு எதிரிப் புற்றினை வென்றால் அதிலுள்ள முட்டைகளை எடுத்துக்கொண்டுபோய்ப் பொரித்து அந்தப் புது எறும்புகளை அடிமை வேலைக்குப்பழக்கும். இந்த அடிமைகள், முட்டைகளைக் காப்பது, சிறு எறும்புகளைப் பாதுகாப்பது, உணவு சேகரிப்பது, எறும்புப்புற்றினைக் கட்டுவது ஆகிய வேலைகளில் ஈடுபடும்.
எறும்புகளின் உணவு இறந்துபோன மற்ற பூச்சிகள், மாமிசம், எண்ணை, சர்க்கரை இவற்றாலான உணவுகள், பூவிலுள்ள தேன் முதலியனவாகும்.
எறும்பு வளைகள், அல்லது புற்றுகள் அனைத்து எறும்புகளும் வசிக்குமிடமாகும். இவை தரைக்குக் கீழோ, மரங்களிலோ, பாறைகளுக்கடியிலோ, அல்லது ஒரு சிறு உலர்ந்த காய்களுக்குள்ளோ இருக்கலாம். புற்று என்பது தரைக்குக் கீழே தோண்டிய வளையின் மண்ணை எறும்புகள் ஒரு குவியலாக வளையின் வாயிற்புறத்தில் குவித்திருப்பதன் பெயர்.
எத்தனை எறும்புகள் ஒரு வளையில் உள்ளன என்பதும் பல விஷயங்களைப் பொறுத்தது. ஒவ்வொரு விதமான எறும்பினமும் வளையில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கையில் அதிசயமாக வேறுபடும். சிலவகைகள் பல கோடி எறும்புகளைக் கொண்டிருக்கும். சில, ஒரு மரக்கிளையில் சில நூறு எண்ணிக்கையே இருக்கும்.
சூப்பர் காலனி என்பது ஒரு பெரிய பரப்பளவில் (பல மைல்கள்) பல எறும்புவளைகள் சேர்ந்திருப்பதனைக் குறிக்கும். ஜப்பான் நாட்டில் ஹொக்கைடோ எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்த எறும்புவளையே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட வளைகளுள் மிகப்பெரிதென்று அறியப்படுவது. இதில் 306 மில்லியன் வேலைக்கார எறும்புகள், ஒரு மில்லியன் ராணி எறும்புகள் ஆகியன 45,000 வளைகளுக்குள் இருந்தன. இவ்வளைகள் தரைக்குக் கீழான பாதைகளால் தொடர்பு கொண்டவையாக இருந்தன. இதுபோல எத்தனையோ ஆய்வுகள், கண்டுபிடிப்புகள். உலகிலேயே மனிதனுக்கு அடுத்தபடியாக, அதிகமான எண்ணிக்கை கொண்டு சேர்ந்து வாழ்வன எறும்புகளே!
எறும்புகளின் சமுதாய அமைப்பு பல படிகளைக்கொண்டது. எறும்புகளின் பணியானது வரையறுக்கப்பட்டது; ஆனால் அது வயதிற்கேற்ப மாறும். வயதாக ஆக, எறும்புகளின் வேலைகள் ராணி எறும்பின் அருகாமையிலிருந்து மாறும். இளம் எறும்புகள் ராணியைக் காப்பதையும், பொரித்த குஞ்சுகளை வளர்ப்பதிலும் ஈடுபடும். சில சமயங்களில் ராணி எறும்பு இல்லாவிட்டாலோ, இறந்துவிட்டாலோ வேலைக்கார எறும்புகளே முட்டையிடும்! ஆனால் வேலைக்கார எறும்புகளின் இந்தச் சந்ததி இனப்பெருக்கம் செய்ய இயலாதவையாகவே இருக்கும். ராணி எறும்பு மற்ற வேலைக்கார எறும்புகளுக்கு வேலை ஒன்றும் செய்யக் கட்டளையிடுவதில்லை! எறும்புகள் தாங்களே சூழ்நிலைக்கேற்றவாறு தங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளும். ஒரு வளையிலுள்ள எறும்புகள் அதிபுத்திசாலித்தனமாக வேலை செய்யும். ஒன்றையொன்று தொடர்பு கொண்டே உணவு பற்றிய செய்திகள், வளை அமைக்குமிடங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும். சில வகை எறும்புகளில், அடிமைகளை உண்டாக்கும் எறும்புகள் என ஒருவகை கூட உண்டு. இவை பக்கத்து வளைகளிலிருந்து புழுக்களைத் திருடிக்கொண்டு வந்து அடிமை எறும்புகளாகப் பழக்கும்!!
சரி! எவ்வாறு இவை வளைகளை அமைக்கின்றன என்பதுதான் மிக சுவாரசியமானது. மண், மணல், மரங்களிலிருந்து உதிரும் ஊசி போன்ற சிறு குச்சிகள், உரம், சிறுநீர், களிமண் இவற்றின் கலவையால் வளைகள் அமைக்கப்படும். வளைகளை ஒரு தேர்ந்த கட்டிட நிபுணனின் சாமர்த்தியத்துடன் அமைக்கும் எறும்புகள், தாம் தோண்டி எடுக்கும் மண்ணை வளைகளின் வாயிலில் அது வளைக்குள் சரிந்து அதனை மூடிவிடாமல் ஒரு பக்கமாகக் குவிக்கும். சிலவகை எறும்புகள் இந்த மண்ணைப் பலவிதமான வடிவங்களில் உருவமைத்து அந்தக் குவியலுக்குள் அறைகள் போன்ற அமைப்பினையும் உருவாக்குமாம்.
எறும்புகளைப் பற்றிப் பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டவன் படைப்பில் இவை மிக அற்புதமான ஜீவராசிகள் எனலாம். வேண்டுவோர் ‘E. O. Wilson, Anthill: A Novel’ எனும் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
அறிவியலிலிருந்து ஆன்மீகத்திற்குத் தாவுவது நம் வழக்கமாயிற்றே!
திருச்சி பக்கம் உள்ளதொரு ஊர் திருவெறும்பூர் எனப்படும் திரு எறும்பியூர். இது ஒரு சிவத்தலம். இங்குள்ள சிவன் எறும்பீசர் எனப்படுவார். தேவேந்திரனும், தேவர்களும் தாரகாசுரனால் தொல்லை படுத்தப்பட்டபோது ப்ரம்மாவை வேண்டி நிற்கின்றனர். அவர் இங்குள்ள ஈசனை வணங்குமாறு கூற, தாரகாசுரன் அறியாமல் வந்து வழிபட வேண்டி, எறும்புருவம் கொண்டு இங்கு வந்து வழிபட்டனராம். எறும்புகள் தொழ சிரமப்பட்டதால் ஈசன் தனது உறைவிடத்தை ஒரு எறும்புப் புற்றாகவே மாற்றிக் கொண்டார்; ஆகவே எறும்பீசுவரர் என அழைக்கப்பட்டார். இது நாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
என்பது நாவுக்கரசர் பாடல். இதன் பொருள்:
சிறிது சிறிதாக நம்மைத் தின்று ஊர்ந்து கொண்டிருப்பன ஐம்பொறிகள். இவையுள்ள உடலில் மனத்தொடு மாறுபட்டுச் செல்வன அந்தக்கரணங்கள் முதலியன. பல அழுக்குகள் பொருந்தியதொரு கூடுபோன்ற உடலிடத்துள் என்னை அடைத்துவைத்து எறும்பியூர் அரன் செய்த செயல் இதுவே!
எறும்புகளும் அந்த இறைவன் போலவே எங்கும் உள்ளவை! ஆகவே அவன் ஒரு கட்டத்தில் எறும்பீசனாக மாறியதில் என்ன விந்தை!
மேலும் ஒரு சங்கப்பாடல் – அறிவியல் உண்மைகள் – ஆன்மீகப் பதிவுகளுடன் விரைவில் சந்திப்போம்.