பல்லை எடுக்க வாரீயளா? – எஸ் எல் நாணு

அதுல விஷயம் என்னன்னா..

வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு மாசமா..

எனக்கு சாதாரணமாவே டாக்டர் கிட்டப் போகறதுன்னா எதிர்கட்சிக்-காரங்களுக்கு மோடியைப் பிடிக்காததை விட பத்து மடங்கு பிடிக்காது.. முடிஞ்ச வரைக்கும் மருந்து சாப்பிடாம கழிப்பேன்.. மீறிப் போனா ரொம்பக் கஷ்டப் பட்டு வல்லாரைலாம் சாப்பிட்டு யோசிச்சு எங்க பாட்டி சொன்ன ஏதாவது வைத்தியம் நினைவுல சிக்குதான்னு பார்ப்பேன்.. அப்படி பாட்டி எப்பவோ சொன்னது நினைவுக்கு வந்து தான் இந்தப் பல்லு வலிக்கு அடிக்கடி கிராம்பை பல்லுக்கு இடைல வெச்சுக் கடிக்க ஆரம்பிச்சேன்.. ஆனா என்ன.. மாச மளிகை பட்ஜெட்டுல கிராம்புச் செலவு அதிகமாயிருத்துன்னு என் சகதர்மணி கொஞ்சம் விட்டா முதலமைச்சர் கிட்டயே புகார் மனு கொடுத்திருவா போலருந்தது.. அப்புறம் இல்லதரசிகளுக்கு இலவச கிராம்பு வழங்கும் திட்டம்னு அவர் அறிவிக்க வேண்டி வருமேன்னு கரிசனப்பட்டு உடனே கிராம்பைக் கடிக்கறதை நிறுத்தினேன்.. யாரோ சொன்னான்னு கிரம்புத் தைலம் வாங்கி (இது மளிகை பட்ஜெட்டுல சேராது) அதுல கொஞ்சம் பஞ்சை முங்க வெச்சு வலிக்கிற பல்லுல வெச்சிண்டேன்.. அது என்னடான்னா அரசியல் வாதிகள் கொடுக்கிற வாக்குறுதிகள் மாதிரி அந்த சமயத்துக்கு வலி நிவாரணியா இருந்தது.. ஆனா கொஞ்ச நேரத்துலயே மறுபடியும் பல் வலி ஆரம்பிச்சு வலது பக்க மேல் மண்டை வரை எக்ஸ்டெண்ட் ஆகி அநியாயத்துக்கும் வலிச்சுது..

அது பாட்டுக்கு வலிச்சிட்டுப் போறதுன்னு விடலாம்னா.. முடியலை.. எந்த வேலையையும் செய்ய விடாம மூளையே நமுத்துப் போன மாதிரி ஆயிடறது..

“அதென்ன டாக்டர் கிட்டப் போக மாட்டேன்னு அடம்? காலம் முழுக்க இப்படிப் பல் வலிலயே அவஸ்தைப் படப்  போறீங்களா? இதப் பாருங்க..  பிரசவ வலியைக் கூடத் தாங்கிண்டுரலாம்.. ஆனா பல் வலியைத் தாங்கிக்கவே முடியாது..”

என் சகதர்மணி சொன்ன பஞ்ச் டைலாக்.. நான் அவளை “ஞே”ன்னு பார்த்தேன்..

“நான் பிரசவ வலி அனுபவிச்சது இல்லையே.. கம்பேரிஸன் எனக்கு எப்படித் தெரியும்?”

“ரெண்டையும் அனுபவிச்ச நான் சொல்றேன்.. போறுமா? மொதல்ல பல் டாக்டர் கிட்டப் போற வழியைப் பாருங்க”

தீர்மானமாச் சொல்லிட்டா.. இதுக்கு மேல அவ பேச்சை நான் கேட்கலைன்னா.. இனிமே கேஸ் காலியாறதுலேர்ந்து, குழாய் ரிப்பேர் ஆறதுலேர்ந்து, பால் கெட்டுப் போறதுலேர்ந்து, வேலைக்கு ஆள் வராததுலேர்ந்து, மின் வெட்டு ஆறதுலேர்ந்து வீட்டுல என்ன நடந்தாலும் அதுக்கு அவ பேச்சைக் கேட்காம நான் பல் டாக்டர் கிட்டப் போகாதது தான் காரணம்னு அடிச்சு சொல்லிருவா..

எதுக்கு வீண் தலைவலின்னு பல் வலிக்கு டாக்டர் கிட்டப் போறதுன்னு முடிவு பண்ணினேன்..

எங்க ஏரியாவுல யாரு பல் டாக்டர்ன்னு பார்க்க கூகிள்ள தேடினேன்..

அது ரொம்ப நேரம் யோசிச்சு பெருங்குளத்தூர் பக்கத்துல ஒரு டாக்டரை சொல்லித்து.. இல்லைன்னா ரெட்டை ஏறி பக்கத்துல ஒரு டாக்டர்..

ஆனா நான் இருந்ததோ மைலாபூர்ல.. பெருங்குளத்தூரும், ரெட்டை ஏறியும் மைலாபூர் பக்கத்துலயா இருக்கு? ஏன்.. இதுக்கு நடுவுல பல் டாக்டரே இல்லையா? இது கூகிளுக்குத் தெரியலையா? இல்லை என் லேப்-டாப்புல இருக்கிற கூகிளுக்கு என்னைப் பழி வாங்கற நோக்கமா? அடுத்த தடவை சுந்தர் பிச்சையை சந்திக்கும் போது கண்டிப்பா விசாரிக்கணும்..

இந்த சமயத்துல தான் எதிர்த்த வீட்டு பொக்கை வாய் தாத்தா.. டாக்டர் பல்லுண்டராவை.. மன்னிக்கணும்.. டாக்டர் நஞ்சுண்டராவை சஜஸ்ட் பண்ணினார்.. அவர் பல்லையெல்லாம் அதிக செலவு இல்லாம நஞ்சுண்டராவ் தான் பிடுங்கினாராம்..

சொல்லிண்டே ஈன்னு தன் ஈரை வேறக் காட்டி அவர் ரொம்ப நல்ல டாக்டர்ன்னு மருத்துவ பல்கலைக் கழகத்தை மீறின சர்ட்டிபிகேட் கொடுத்தார்..

ஆனா என்ன.. பல் இல்லாததுனால அந்தத் தாத்தா தமிழை ஆப்ரிகா பாஷைல பேசினார்.. அதைப் புரிஞ்சுக்கறது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது..

சகதர்மணி கிட்ட இதைச் சொன்ன உடனேயே  என்னை டாக்டர் நஞ்சுண்டராவ் கிட்ட கிளம்ப வெச்சிட்டா..

“உங்களுக்குப்  போறாது.. என்ன ஏதுன்னு விவரம் எதுவும் சரியாக் கேட்டுக்க மாட்டீங்க.. நானும் கூட வரேன்”

“ஐயையோ.. அதெல்லாம் வேண்டாம்.. உனக்கு ஆன் லைன்ல ஸ்லோக கிளாஸ், சான்ஸ்க்ரிட் கிளாஸ், பாராயணம்லாம் இருக்குமே.. நானே போய் டாக்டர் கிட்ட எல்லாம் விவரமாக் கேட்டு வந்து சொல்றேன்.. காட் பிராமிஸ்”

அப்படின்னு அவசர அவசரமா அவளைக் கழட்டி விட்டுட்டேன்..

அவ வந்தா எங்க டாக்டரைப் பேச விடுவா? எப்.எம். ரேடியோ ஜாக்கி மாதிரி இவளே விடாமப் பேசி என் பல் வலியைக் குணப்படுத்தரதுக்கு முன்னால டாக்டருக்கு தலைவலியைக் கொடுத்துருவா..

டாக்டர் நஞ்சுண்டராவ் க்ளினிக்கில கொஞ்சம் சுமாரா இருந்த ரிசப்ஷனிஸ்ட் என் பேர் முகவரி போன் நம்பர் எல்லாம் கேட்டு எழுதிண்டு ஒரு டோக்கனைக் கொடுத்தா..

டோக்கன் 75..

ஐயையோ.. நமக்கு முன்னால எழுபத்தி நாலு பேர் இருக்காங்களா? உகும் என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு நினைச்சுண்டே திரும்பிப் பார்த்தேன்.. அங்க என்னைத் தவிற வேற யாருமே இல்லை..

“ஏம்மா.. எனக்கு எழுபத்தஞ்சாம் நம்பர் டோக்கன் கொடுத்திருக்கியே.. மீதி எழுபத்தி நாலு பேர் எங்க?”

”சார்.. டாக்டர் நாலு மாசம் முன்னால தான் இந்த இடத்துல க்ளினிக் ஆரம்பிச்சார்.. நீங்க தான் எழுபத்தஞ்சாவது பேஷண்ட்.. கங்ராட்ஸ்.. இந்தாங்க”

அப்படின்னு ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட்டை நீட்டினா..

“எதுக்கு இது?”

”நீங்க எழுபத்தஞ்சாவது பேஷண்ட் சார்.. செலிப்ரேஷன்.. எடுத்துக்குங்க”

சாக்லேட்டை வாங்கிண்டே..

“இதுக்கான விலையை என் மொத்த பில்லுல சேர்த்துருவீங்களா?”

மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் வாய் திறந்து நான் கேட்கலை..

“அந்த ரூம் சார்.. போங்க”

அப்படின்னு ஒரு ரூமைக் காட்டினா..

அதோட முகப்புலயே “டாக்டர் நஞ்சுண்டராவ், பி.டி.எஸ்.” அப்படின்னு தங்க நிற பிளேட்டுல எழுதியிருந்தது..

கதவை லேசாத் தட்டிட்டு உள்ளே போனேன்..

சில்லுன்னு ஏ.ஸி. காத்து தாக்கித்து..

எதிர ஆஜானு பாகுவா.. ஆறடி உசரத்துக்கு.. உச்சிலேர்ந்து பாதம் வரை தார் ட்ரம்மை கவுத்தின மாதிரி கலர்ல.. கிட்டத்தட்ட பெருமாள் கோவில் மூலவர் சிலை மாதிரி ஒருத்தர் நின்னுண்டிருந்தார்.. இருக்கலாம் ஒரு அம்பது வயசு.. முன் மண்டை வழுக்கை.. பின் மண்டைல சுமாரான முடி.. அவர் முகத்துல பளிச்சுன்னு இருந்தது தங்க பிரேம் போட்ட கண்ணாடி மட்டும் தான்.. அந்தக் கண்ணாடியை கூர்ந்து பார்த்தா அவர் பார்வைல அரை குறைச்சலா இருக்கறது தெரியும்.. வெள்ளை டாக்டர் கோட், அதுக்குள்ள நீல கலர் சட்டை, கருப்புப் பேண்ட், கருப்பு ஷூ.. கையில ஏதோ புஸ்தகத்தை வெச்சுக்கிட்டு தன் உதவியாளி (!) கிட்ட ஏதோ சொல்லிட்டிருந்தார்.. இல்லை சொல்ற மாதிரி பாவ்லா காட்டிட்டிருந்தார்.. (ஒரு வேளை நான் வரேன்னு தெரிஞ்ச உடனே ஒரு பில்ட்-அப்போ?)

அவரை நிமிர்ந்து பார்க்கும் போது அவர் முகம் முதல் மாடில இருக்கற மாதிரியும் நான் கீழ் தளத்துல இருக்கற மாதிரியும் எனக்குப் பட்டது.. (ஹி..ஹி.. நான் கொஞ்சம் குள்ளம் தான்.. கவாஸ்கர் மாதிரி, விஸ்வநாத் மாதிரி.. ஏன் சச்சின் டெண்டுல்கர் மாதிரின்னு கூட வெச்சுக்குங்களேன்)

அவர் முதல் மாடிலேர்ந்து என்னைப் பார்த்தார்..

“ம்.. பல்லு வலியா?”

“பின்ன கால் வலியா?.. என்ன மடத்தனமான கேள்வி? பல் வலிக்குத் தானே இங்க வருவாங்க”

கரெக்ட்.. இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான்.. எதையும் வெளிப்படையாச் சொல்ல நமக்கேது தைரியம்.. (எல்லாம் வீட்டுப் பழக்கம் தான்)..

“உட்காருங்க”

நாற்காலி மாதிரி ஒரு வஸ்துவுல என்னைப் பிடிச்சுத் தள்ளினார்..

“நல்லா சாஞ்சுக்குங்க”

சொன்னதைப் பண்ணினேன்.. ஒரு பட்டனைத் தட்டினார்..

திடீர்னு அந்த நாற்காலி பின்னால சாஞ்சுது.. அதுவரை உட்கார்ந்திருந்த நான் திடீர்னு அனந்த சயனன் மாதிரி அரை குறை சயனனானேன்..

உடனே ஸ்விட்ச் போட்டு போகஸ் லைட், ஹேலோஜன் அது இதுன்னு வித விதமா லைட்டுகளை எறிய விட்டார்.. அந்த இடமே திருவிழா நடக்கற இடம் மாதிரி ஜகத் ஜோதியா மாறிடுத்து.. போதாத குறைக்கு கூட இருந்த உதவியாளி கிட்ட டார்ச் லைட் வெளிச்சத்தை வேற காட்டச் சொன்னார்..

சாதாரண நாற்பது வாட் வெளிச்சத்துக்கே என் கண்ணு கூசும்.. இந்த வெளிச்சத்துக்கு நான் கண்ணையேத் திறக்கலை.. ஆனா அதை டாக்டர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு..

“பயப்படாதீங்க.. ஒண்ணுமில்லை.. ஜஸ்ட் செக் பண்றேன்.. கண்ணைத் திறங்க”

“மொதல்ல லைட்டையெல்லாம் அணைய்யா”

நான் மைண்ட் வாய்ஸ்ல சொல்றது அவருக்கு எப்படிக் கேட்கும்?

சட்டுன்னு ஒரு பீச்சாங்கோலால என் வாய்க்குள்ள ஏதோ ஒரு திரவத்தைப் பீச்சினார்..

”ம்.. கொப்பளிங்க”

பக்கத்துல வாஷ்பேஸின் மாதிரி இருந்த பீங்கான் கோப்பையைக் காட்டினார்..

ஒரு நீள எவர்சில்வர் குச்சி.. அதோட அடில மைரோஸ்கோப் மாதிரி லென்ஸ்..

“இப்ப நல்லா வாயைத் திறங்க.. ஆ.. ஆ…”

நான் வாயைத் திறந்த உடனே அந்தக் குச்சியை என் வாய்குள்ள நுழைச்சார்.. உடனே டாக்டர் கண்ணுல ஆச்சர்யம்..

ஒரு வேளை வெண்ணை தின்ன குட்டிக் கிருஷ்ணர் வாயில யசோதா உலகத்தையேக் கண்ட மாதிரி என் வாயிலயும் டாக்டர்..

அப்படின்னு நான் புளங்காகிதமாகறதுகுள்ள..

”என்னய்யா இது.. பல்லா இல்லை பாதாள சாக்கடையா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் நடுவுல பிளை ஓவர் கட்டி டிராபிக் விடலாம் போலருக்கு.. அவ்வளவு பெரிய கேவிட்டி.. எதுக்கு இவ்வளவு பெரிய கேவிட்டியை வளர்த்துண்டே?”

“ம்.. வேண்டுதலை”

மைண்ட் வாய்ஸ் தான்.. கடுப்புல வாய் திறந்து சொல்லணம்னு நினைச்சாக் கூட முடியாதே.. ஏன்னா என் வாய் இன்னும் “ஆ” வாத் தான் இருந்தது..

“இதுல பல்லுக்கு நடுவுல கோடோன் மாதிரி ஏதேதோ பதுக்கி வேற வெச்சிருக்கே.. உகும்.. மொதல்ல பல்லை ஒரு எக்ஸ்ரே எடுத்திட்டு வா.. அதைப் பார்த்துத் தான் எதுவும் முடிவு பண்ண முடியும்”

அப்படின்னு என்னை எழுந்திருக்கச் சொல்லி..

“இதே தெருவுல “அன்பு எக்ஸ்ரே க்ளினிக்” இருக்கு.. கண்டிப்பா அங்கயே எக்ஸ்ரே எடு..”

ஒரு சீட்டுல எழுதிக் கொடுத்தார்..

“ஏன் டாக்டர்.. அங்க தான் உங்களுக்கு கமிஷன் கிடைக்குமா?”

சத்தியமா மைண்ட் வாய்ஸ் தாங்க..

மறுநாளே எக்ஸ்ரே எடுத்து (சாதாரண எக்ஸ்ரேயை விட தம்மாத்தூண்டு பல்லை எக்ஸ்ரே எடுக்க ரேட் அதிகமா இருக்கு.. என்ன கொடுமை இது  சரவணன்?) அதை டாக்டர் நஞ்சுண்டராவ் கிட்ட காட்டினேன்..

காதலியோட போட்டோவை காதலன் பார்க்கிற மாதிரி வெவ்வேற ஆங்கிள்ள என் பல்லு எக்ஸ்ரேயைப் பார்த்தார் டாக்டர்..

“கண்றாவி.. கண்றாவி.. இப்படிப் பல்லை வெச்சிட்டிருக்கிறதுக்கு நீ பிறந்த உடனேயே பல் செட் மாட்டிட்டிருக்கலாம்”

மைண்ட் வாய்ஸைக் கொஞ்சம் அடக்கி வெச்சதுனால இதுக்கு கௌண்டரா எதுவும் சொல்லலை..

“உகும்.. ரூட் கெனால் ஸ்டேஜ்லாம் தாண்டியாச்சு.. வேற வழியில்லை.. பல்லை புடுங்கிரவேண்டியது தான்.. எக்ஸ்ட்ராக்‌ஷன்”

நான் சம்மதம் சொல்றதுக்கு முன்னாலயே என்னை மறுபடியும் அரை குறை சயனத்துக்குத் தள்ளி.. இருக்கிற விளக்கையெல்லாம் போட்டு.. மேல் தாடைல ஒரு இஞ்செக்‌ஷனைப் போட்டு.. நிமிஷத்துல மரத்துப் போன உடனே ஒரு கொரடாவை வெச்சு என் பல்லைப் புடுங்க ஆரம்பிச்சார்..

அதுவும் சாதாரணமாப் புடுங்கினாப் பரவாயில்லை..

“பல்லு போகப் போவுதய்யா சின்னக் கௌண்டரே – உன்னை

பொக்கை வந்து சேருதய்யா சின்னக் கௌண்டரே”

அப்படின்னு பாடி முடிச்சு புடுங்கின பல்லை ஏதோ புதை பொருள் ஆராய்ச்சில கண்டு பிடிச்ச பொக்கிஷம் மாதிரி காட்டினார்..

அப்புறம் வாயில பஞ்சை அழுத்தி..

“இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எச்சத் துப்பக் கூடாது.. எதுவும் சாப்பிடக் கூடாது.. அப்புறம் கோல்டா ஜூஸ் சாப்பிடலாம்.. சாலிடா வேண்டாம்..  நான் எழுதிக் கொடுக்கிற மருந்தை மறக்காம சாப்பிடணும்.. மருந்தை கண்டிப்பா க்ளினிக்குக்கு முன்னால இருக்கிற பார்மஸிலயே வாங்கிரு”

இந்தக் களேபரம்லாம் முடிஞ்சு வீட்டுல உட்கார்ந்திருந்தேன்..

சும்மாச் சொல்லக் கூடாது.. டாக்டர் ஒரு மாதிரி பேசினாலும் நல்ல வேலைக்காரர்..

அப்படின்னு என் மனசுல ஓடிண்டிருக்கும் போதே காலிங் பெல் அடிச்சது..

என் சகதர்மணி தான் போய் கதவைத் திறந்தா..

எதிர்த்த வீட்டு பொக்கை வாய் தாத்தா..

“என்ன.. பழ்ழு புழுங்கியாச்சா?”

என்னைப் பேசாதீங்கன்னு அடக்கிட்டு என் சகதர்மணி தான் பதில் சொன்னா..

“ஆமா.. இப்பத் தான் வந்தார்.. உங்களுக்குத் தான் தேங்ஸ் சொல்லணும்.. நல்ல டாக்டரைக் காட்டினீங்க.. இல்லைனா இவர் பல் வலியோடயே உட்கார்ந்திருப்பார்”

தாத்தா என் பக்கத்துல வந்து..

“சழியான பல்லைத் தானே டாக்டர் பிழுங்கினார்?”

எதுக்குக் கேட்கறார்? என் குழப்பைத்தை சகதர்மணி புரிஞ்சுகிட்டு..

“எதுக்குக் கேட்கறீங்க தாத்தா?”

“இல்லை.. நழ்ழ டாக்டர் தான்.. ஆனா அவழுக்கு அரை பார்வை கம்மி.. அதனால அவசரத்துல தப்பான பல்லைப் பிழுங்கிருவார்.. இப்பழித்தான் எனக்கு ஒவ்வொழு தழவையும் தப்பான பழ்ழைப் பிழுங்கிப் பிழுங்கி.. கழைசில வலி இருக்கிழ பழ்ழு தான் மிஞ்சித்து.. அப்ப அதை சழியாப் பிழுங்கிட்டார்”

ஆப்ரிக்க பாஷைல சொன்னாலும் தாத்தா சொன்னது புரிஞ்சு அவசர அவசரமா என் வாய்க்குள்ள விரலை விட்டுத் தடவிப் பார்த்தேன்..

“ஐயையோ.. வலி கொடுக்கற என் பல்லு அப்படியே இருக்கே”

 

One response to “பல்லை எடுக்க வாரீயளா? – எஸ் எல் நாணு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.