“வ வே சு வைக் கேளுங்கள்” என்ற தலைப்பில் ஒரு அங்கதம் (PUN) இருக்கிறது,
ஒன்று அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள் (ASK) என்ற பொருள். மற்றொன்று அவரது குரலைச் செவிமடுத்துக் கேளுங்கள் (LISTEN) என்று பொருள்.
மின்னிதழில் தானே இரண்டையும் தர இயலும்.
கேள்வி பதிலைப் படியுங்கள். விரிவான விளக்கங்களைக் கேளுங்கள் !
(முதல் 25 வினாடிகள் கழித்து நிகழ்வு ஆரம்பமாகிறது )
கேள்வி: தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ! நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ – பாரதியின் இந்த வரிகளுக்குப் பொருள் என்ன? (ராமமூர்த்தி , லாஸ் ஏஞ்சலிஸ் )
பதில்: காக்கைச் சிறகினிலே பாடலின் நாலாவது கண்ணி இது. எனவே அதே உணர்வில் இவ்வரிகளையும் அணுகவேண்டும். “காக்கைச் சிறகைப் பார்த்தால் கண்ணன் உருவம் வரும் என்பதை நம்பினால் இதையும் நம்பலாம். கவிஞர்கள் அதீதக் கற்பனை கொண்டவர்கள். காதலர்களோ கற்பனையில் கவிஞரையும் மிஞ்சுபவர். இங்கோ ஒரு காதல் உணர்வு கவிதையில் எழுதப்பட்டுள்ளது. எனவே தீயைத் தொட்டால் சுடுமே ..இப்படி எழுதுவார்களா எனக் கேட்ககூடாது. காரணம் காதல் இதனினும் சுடும். மேலும் இங்கே காதல் பக்தியாகக் கனிந்துவிட்டது. நீற்றறையில் ( சுண்ணாம்புக் காளவாய்) இருக்கும் போதன்றோ “ மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும்” என்று பாடினார் அப்பர் பெருமான். எனவே பக்தி காதல் இரண்டிலும் இதெல்லாம் சகஜமப்பா !
கேள்வி: முன்பெல்லாம் வாழ்த்துக்கள் என்றுதானே எழுதுவோம். இப்போது வாழ்த்துகள் என்று எழுதுகிறார்களே ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? (கிரிஜா பாஸ்கர்)
பதில்: முன்பெல்லாம் எழுதினா அது சரியா இருக்கணும்னு சட்டமா ? “வாழ்த்துக்கள்’ என்று ககர ஒற்று சேர்த்து எழுதினால் அது எப்போதுமே தவறுதான். மாற்றம் ஏதுமில்ல. இலக்கணப்படி எழுதினா இக்கன்னா கிடையாது. க்- சேர்த்து எழுதினால் “வாழ்த்துக் கள்” என்று பொருள்படும். அதாவது வாழ்த்து என்ற கள்ளைத் தருகிறேன். குடிச்சுட்டு போதை ஏத்திக்கோன்னு அர்த்தம். .இனிமே ஒங்க சாய்ஸ் !
கேள்வி: சிலேடை கவிதை என்றாலே காளமேகப்புலவர் தான் நினைவில் வருகிறார். மற்ற கவிஞர்கள் சிலேடை கவிதை எழுதவில்லையா? (பானுமதி சென்னை )
பதில்: காளமேகம் போல, இன்னும் பல கவிஞர்கள் சிலேடை எழுதியுள்ளனர். சங்ககாலம் தொட்டே பலர் சிலேடை எழுதியுள்ளனர். இதன் இலக்கணம் “தண்டியலங்காரத்தில்” கூறப்பட்டுள்ளது . ஸ்லேஷை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் சிலேடை. இரட்டுற மொழிதல் என்பது தமிழ்ப் பெயர். அப்படீன்னா
ஏதாவது உதாரணம் ?இதோ ஒரு தனிப்பாடல்.
கடகளிற்றான் தில்லை வாழும்
கணபதிதன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பரெலாம் விழித்திருந்தார்; அயில்வேல் செங்கை
.உடையஅறு முகவனுங்கண் ணீரா றானான்;
பம்புசுடர்க் கண்ணனுமோ நஞ்சுண் டான்; மால்
பயமடைந்தான் உமையுமுடல் பாதி யானாள்;
அம்புவியைப் படைத்திடுவ(து) அவம தே என்(று)
அயனுமன்னம் இறங்காமல் அலைகின் றானே!
( பொதுவாக வெண்பாவில் அமையும் சிலேடை இங்கே விருத்தத்தில் உள்ளது -புலவர் பெயர் தெரியவில்லை)
அடுத்த உதாரணம் வெண்பா. எழுதியவர், நியூ ஜெர்ஸியில் வசிக்கும் வி.சுப்பிரமணியன்
சிவன் – சாம்பார் – சிலேடை
தண்ணீரை ஏற்றுச் சமயத்தில் தானாகிக்
கண்ணீர் மிகுமாறு காணுமே – மண்ணோர்க்கு செம்பொருள் ஆகநெருப் பேறுமுகக் கும்சாம்பார்
எம்பெரு மானுக் கிணை.
கொஞ்சம் கஷ்டப்பட்டா அர்த்தம் புரிஞ்சிடும். ஆல் தி பெஸ்ட்.
அப்படீன்னா ஏன் சார் சிலேடை என்றால் காளமேகம் அப்புறம் கி வா.ஜ. என்றுதான் பேசறோம்னு கேட்டால் “ அதுதான் அவர்கள் பெருமை..சிறப்பு.
கேள்வி: தொலைக் காட்சியில் கவியரங்கம் நடத்திய அனுபவத்தில் நீங்கள் பெரிதும் ரசித்தது? (சந்திரசேகர், கோவை)
பதில்: 1980 என்று நினைக்கிறேன். ஒரு நகைச்சுவைக் கவியரங்கம். ”ஆடியன்ஸ்” பங்குகொள்ளும் நிகழ்ச்சி. கவிஞர்களுக்கு தொலைக்காட்சி அப்போது புதிது. நகைச்சுவையோடு கவிதை படித்து கரவொலிகள் வாங்கிய கவிஞரிடம் “ரெகார்டிங்’ சரியாக வரவில்லை மறுபடிப் படியுங்கள்” என்று தயாரிப்பாளர் சொல்ல, அக்கவிஞர் மறுபடியும் படித்தார்; ஏற்கனவே கேட்டுச் சிரித்த கவிதைக்கு மறுபடியும் அதே அளவு சிரிப்பு பார்வையாளர் பகுதியிலிருந்து வரவில்லை. மனமொடிந்து போன கவிஞர் தயாரிப்பாளரிடம் “ அந்த கைதட்டெல்லாம் என் கணக்கில் அப்பறம் சேர்த்துடுவீங்தானே “ என்றார். ஒரு குறும்புக் கவிஞர் “ அப்படீன்னா நான் படிக்கும் போதும் அதையே சேத்துடுங்க என்றார்”
இப்போதெல்லாம் இது போன்ற ஒட்டு வேலைகள் பழைய டெக்னிக்கா ஆகிவிட்டது.
கேள்வி: மிகைப்பாடல்கள் எல்லா இலக்கியங்களிலும் உள்ளனவா? (ராமசுப்பிரமணியன், சென்னை)
பதில்:ஆம் ! இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட பல நூல்களில் மிகைப் பாடல்கள் இருக்கும். காரணம் வெவ்வேறு சுவடிப் பிரதிகளில் இருந்து எடுத்துப் பதிப்பிக்கும் போது ஒருசிலவற்றில் மட்டுமே காணப்படும் செய்யுள்கள், மூலம் என்று ஒத்துக்கொள்ளப்பட மாட்டா. அவற்றை, மிகைப்பாடல்கள் எனக் குறித்துவிடுவார்கள்.
சென்னை கம்பன் கழகப்பதிப்பில் தனியாக ஒவ்வொரு காண்டத்தின் பின்னும் மிகைப்பாடல்கள் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கலாம்.
1930-ல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த “புறத்திரட்டு” என்ற வெண்பா மாலையில் காணும் மிகைப்பாடல் இது:
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?
கேள்வி: ஆப்பிள், காபி போன்ற சொற்களை நாம் தமிழில் ஏற்றுக் கொண்டது போல , பேஸ்புக் (முக நூல்) வாட்ஸ் அப் ( புலனம் ) ஜும் ( குவியம்)…போன்ற சொற்களை அப்படியே எழுதினால் என்ன தவறு? ஏன் புதிய சொற்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும்? (மதுவந்தி )
பதில்: பெயர்ச் சொற்களை மொழிபெயர்த்து எழுத வேண்டிய அவசியமில்லை. ஜூம் போன்ற வகைகளுக்குப் பொதுப் பெயராக “குவியம்” போன்ற புதிய சொற்கள் வரலாம் அதில் தவறில்லை. வாட்ஸப்புக்கு இணையாக சிக்னல், த்ரீமா, டெலெக்ராம் போன்ற செயலிகள் வந்துள்ளன. அவற்றின் பெயரை மாற்றாமல் இவை போன்ற செயலிகளுக்கு “புலனம்” எனப் பொதுப்பெயர் கண்டுபிடிப்பதில் தவறில்லை.
ஒரு புதிய தமிழ்ச்சொல் பொதுப்பெயராக விளங்கினால் அதிலிருந்து பல புதிய சொற்கள் உருவாகும். “பஸ்” என்பதற்கு “பேருந்து” எனப் பெயர்மாற்றம் செய்த பின்னால் பேருந்து நிலையம், பேருந்து முனையம், பேருந்து பயணச்சீட்டு, பேருந்து நடத்துனர் என்று பல சொற்கள் பிறந்துவிட்டன. அதுதான் பயன்
சொற்களின் எண்ணிக்கை அதிகமாவது நிச்சயமாக ஒரு மொழியின் வளர்ச்சிக்குத் தேவை. பல பழைய சொற்கள் வழக்கொழிந்து போகும் போது புதிய சொற்கள் மொழிக்குப் புத்துணர்ச்சி தருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.
கேள்வி:இலக்கியத் தரம் என்பதை நிர்ணயிப்பவர் யார்? (சுந்தரராஜன்)
பதில்: வாசகர் படைப்பாளிகள் இருவருக்குமே அதில் பங்குண்டு. எது இலக்கியம் என்பதில் தெளிவு இருந்தால்தான் தரம் பற்றிய தெளிவு வரும். ”வாசகனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எழுதுவேன் . விரும்பினால் படியுங்கள்” என்று ஒரு பிரபல எழுத்தாளர் பேசியுள்ளார். ( பல தரமான கதைகளுக்குச் சொந்தக்காரர்) . ”வாசகர் விரும்புவதால்தான் நான் இவ்வளவு கீழிறங்கி எழுதுகிறேன் என்கிறார் இன்னொரு படைப்பாளி.
எனக்கு இதுதான் வேண்டும் எனச் சொல்லும் வாசகனும், நான் இப்படித்தான் எழுதுவேன் எனச் சொல்லும் படைப்பாளியும் தரத்தை நிர்ணயம் செய்வதில்லை.
எடைக்கற்களே தராசாகிவிட முடியாது. அப்போ நிர்ணயம் செய்வது யார் என்றால் “காலம்” தான் பதில்.
கேள்வி: வாலிவதம் , அக்னிப் பரீட்சை, கர்ப்பிணி மனைவியைக் காட்டில் விடுதல் – இம்மூன்றும் ராமர் புகழிற்கு மாசு இல்லையா? (ரமணி , பெங்களூர்)
பதில்: நிச்சயமாக இல்லை. ( தெ.போ.மீ, கி,வா,ஜ,நீதியரசர் இஸ்மாயில், நீதியரசர் மகராஜன், பேரா.அ.சா. ஞானசம்பந்தம், கீரன், போன்றோர் பார்வையின் முடிவு இது).
கேள்வி: கொரோனா வின் தயவால் ஜூம் அரங்கில் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்தன. அறவே மறந்து போன “நேரடி நிகழ்ச்சிகள்” மறுபடியும் பழையபடி தலை எடுக்கும் வாய்ப்பு உண்டா? அவை வெற்றி அடையுமா? ( ராய. செல்லப்பா)
பதில்: நிஜத்துக்கு இருக்கும் வரவேற்பு நிழலுக்கு இருக்கமுடியாது. நேரில் நிகழும் கூட்டங்களுக்கு என்றுமே மதிப்புண்டு. ஆனால் கூட்டத்துக்கு வர இயலாதவர்கள் பங்கேற்பு கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அறவே இல்லாதிருந்தது. ஆனால் தற்போது அனைவரும் பங்கேற்கும்படியான “ஹைப்ரிட்” கூட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. குவிகமும் அதை சாதித்துள்ளது. எனவே இனி இந்த “மாடல்” கூட்டங்கள் அதிகம் நிகழ வாய்ப்புண்டு. கண்டம் தாண்டி இருப்போரையும் காண வைக்கும் “அகண்ட” நிகழ்வுகளை அனைவரும் வரவேற்பார்கள் என நான் நம்புகிறேன்.
.கேள்வி: கப்பலோட்டிய தமிழனும் வீரபாண்டியக் கட்ட பொம்மனும் திரைப்படங்களாக வந்திராவிட்டால்? (ஜி.பி. சதுர்புஜன்)
பதில் :விடுதலைப் போரில் ஈடுபட்ட ஒரு மாபெரும் வீரனையும், வெஞ்சிறை கண்ட தேசப்பற்று மிக்க ஒரு தியாகியையும் தமிழகம் அறியாது போயிருக்கும். ( அதற்கு வித்திட்ட சிலம்புச் செல்வரை நான் வணங்குகிறேன்)
கேள்வி: பாரதியார் தம் சமகாலத்து தமிழ் கவிஞர் யாரையேனும் பாராட்டிக் கவிதையோ கட்டுரையோ எழுதியுள்ளாரா ? (கவிஞர் செம்பருத்தி)
பதில்: தேசப்பற்றும் விடுதலை உணர்வும் இல்லாத கவிஞர்களை அவர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாமக்கல் கவிஞர் பாரதியாரோடு நிகழ்ந்த சந்திப்பைப் பதிவு செய்துள்ளார்
பாரதி சந்திப்பு – கானாடுகாத்தான் நண்பர் வீட்டில்
பார்த்தவுடன் “இவர் இராமலிங்கம் பிள்ளை-ஆர்டிஸ்ட் என்பதன் முன் “ ஓ ஓவியக் கலைஞரா ? வருக கலைஞரே..தமிழ்நாட்டின் அழகே கலையழகுதான்..’ எனச் சொல்ல நான் நமஸ்காரம் செய்யக் காலைப் பிடிக்கக் குனிந்தேன். அது பிடிக்காமலோ என்னவோ பாரதியார் என் கையைப் பிடித்து இழுத்து அருகே அமர்த்திக் கொண்டு, “பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும்; நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்.” என்று சொல்லிக் கலகலவெனச் சிரித்தார்.
”ஐயா தங்கள் பாட்டுகளில் ஏதாவது ஒன்றைத் தாங்களே பாடுவதைக் கேட்க வேண்டுமென்று வெகு ஆசை”
“அப்படியா ! என்னைப் பாடச் சொல்லுகிறீரா? பாட்டு “ஆர்டருக்கு” வராது..பாடும் போது கேளும்.
“இவரும் பாட்டுகள் செய்வார்” என்று பாரதியிடம் என்னைப் பற்றிச் சொன்னார் வெங்கடகிருஷ்ண ஐய்யர்.
“எங்கே சொல்லும் கேட்போம் ஏன் கூச வேண்டும் ?” என்றார் பாரதி.
வெங்கடகிருஷ்ணய்யரும் விட்டபாடில்லை “ அந்த ராமன் சோகப்படுகிற விருத்தத்தைச் சொல்லும்”
“தம்மரசைப் பிறராள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்” என்ற அடிகளைக் கேட்டதும் கவனமுடன் கேட்கத் தொடங்கினார். பிறகு” பலே பலே இந்த முதலடியே போதும்.பிள்ளை நீர் ஒரு புலவன் “ ஐயமில்லை” என்றார்.
–
.
பயனுள்ள கேள்விகள் பலே பலே பதில்கள்.சிந்தனையைத் தூண்டும் பதில்கள். முனைவர் வ.வே.சு அவர்களுக்குப் பாராட்டுக்கள்
LikeLiked by 1 person
வ வே சு அவர்களின் கேள்வி-பதில் பகுதி நன்றாகச் சூடு பிடித்து வருகிறது. விரைவில், அக்காலக் கலைமகளில் வந்த கி வா ஜ-அவர்களின் ‘விடையவன்’ பகுதிபோல இதுவும் சிகரமான சிறப்பை அடையும் என்பது உறுதி!
LikeLiked by 1 person
ஒரு சாதாரண கேள்வி கூட , வ . வே. சு போன்ற அறிஞர்கள் பதில் சொல்லும் போது , சிறப்பான கேள்விகளாக மாறிவிடுகின்றன. கேள்வியின் மீது கைவைத்து , தாவி தம் பதில் மூலம் வானுயர தூக்கிச் செல்கிறார். இந்த ஒலிப் பதிவு அபாரம் . கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
LikeLike