மடாலென கதவைத் திறந்தவாறே முகவாய்க் கட்டை துடிதுடிக்க, “நீங்கதானே ஸைக்கெட்ரிக் ஸொஷியல் வர்கர்?” என வினவினான் அவன். தலையாட்டினேன். கண்ணீர்த் தளும்ப, தன் கையில் வைத்திருந்த அத்தனை பரிசோதனைத் தாள்களையும் என் முன்னால் இருந்த மேஜைமீது தடாலென வைத்து விட்டு உட்கார்ந்து என்னைப் பார்த்தான் இளம் வயதான பிராண்.
தழுதழுக்கும் குரலில், “நீங்களே சொல்லுங்கள், எனக்கு வந்த உபாதையைக் கூகிளில் (googleல்) முழுக்க ஆராய்ச்சி செய்தே வந்திருக்கிறேன். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்றார். அது எப்படி சாத்தியம்? உங்களைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்” என்றான்.
பிராணைச் சமாதானம் செய்து, தாள்களைப் பிறகு பார்வையிடலாம் என்று தனக்கு நேர்ந்ததை விவரிக்கச் சொன்னேன். அனுபவத்தைக் கேட்டபின் இத்யாதியைப் பார்ப்பது என் பழக்கம். விவரித்தான்.
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முதுகலைப் பட்டதாரி. முடித்த கையோடு கல்லூரியிலிருந்தே நேரடியாக எடுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை அமைந்தது. சிறந்த வேலை, கைநிறைய சம்பளம்.
பிராண் ஆச்சரியப் படவில்லை. படிப்பில் இதுவரை இவனே முன்னோடி. எல்லாம் பிராணுக்கு மிகச் சிறந்தவையாகவே நடந்தது. இன்னாள் வரை தோல்வி, வருத்தம் இவன் அகராதியில் தென்பட்டதே இல்லை என்று கர்வம் பூசிய பெருமையுடன் சொன்னான்.
இந்த வர்ணனை முடிப்பதற்குச் சரியாக யாரோ கதவைத் தட்ட, திறந்தேன். பிராணின் தந்தை எனக் கூறி, உள்ளே வர அனுமதி கேட்டார். க்ளையன்டை முதல்முறையாகப் பார்க்கும் போது அவர்களுடன் வருவோரை நாங்கள் பார்ப்பதுண்டு. தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் தீனதயாள். சொந்தமான பண்ட சாலை வைத்திருப்பதை விவரித்து, பிராண் மிகப் புத்திசாலி, எப்போதும் முதல் மதிப்பெண் மட்டுமே வாங்குபவன் எனப் பெருமை பொங்கக் கூறினார்.
மகன் ஆராய்ச்சி செய்ததை டாக்டர் மறுப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றதும் பிராண் அவர் கையை இருக்கப் பிடித்துக் கொண்டான். இவை அவர்களின் உறவை, சிந்தனையை வெளிப்படையாகக் காட்டியது.
பிராணுக்குப் பத்து நாட்களாகக் கண்கள் சுருங்கியது போல், பேசினால் வாய் வலி, எப்போதும் ஏதோ அனாயாசமாக இருப்பது போலத் தோன்றியதாம். தனக்கு என்னவென்று இணையதளத்தில் தேடினான். முதலில் ஏதேதோ பொதுவான பிரச்சினைகள் தென்பட்டன. அலசிப் பார்த்து, தனக்கு உள்ளது மிக அபூர்வமாக வரும் ஒரு தசை பிரச்சினை தான் என முடிவு செய்தான். இதற்குத் தீர்வு ஏதும் கிடையாது என்றது இணையதளம்.
தீனதயாள், தாயார் சுமதி, தன் பிள்ளை எப்போதும் அலாதியான ஒருவன் எனப் புகழ்வதைப் போல நோயிலும் அலாதியானது எனப் பிரமித்துப் போனார்கள்!
அன்றிலிருந்து பிராண் மருத்துவர்களைப் பார்த்தான். தனக்கு வந்திருப்பது இதுதான், அதனால் இன்னின்ன பரிசோதனைகள் செய்யலாமா எனக் கேட்க, அதன் முடிவுகளிலிருந்தாவது உண்மையைப் புரிந்து கொள்வான் என ஒப்புக்கொண்டார்கள். அதைப் பார்த்து அவர்கள் எல்லாம் நார்மலாக உள்ளதாகச் சொன்னதும் வேறொரு மருத்துவரிடம் போவான். அப்படித்தான் இங்கேயும் வந்தான். டாக்டர் அவன் நார்மல் எனச் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றான்.
கண்ணீர் கொட்ட, தன் வேலைகளைச் செய்து கொள்ளக் கடினமாக உள்ளது என்றான். தந்தை தாயிடம் அடிக்கடி தசைகள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியதைச் சொல்ல, தாய் சாப்பாடு ஊட்டி, தந்தை ஷவரம் செய்தார். பிராண் தலையை வருடிக் கொடுத்து தீனதயாள் அவனுடையப் பரிதாப நிலையைப் பார்க்கக் கடினமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் சொன்னார். பிராண் அவர்களின் ஒரே பிள்ளை.
பிராண் வேலையைப் பற்றி விசாரிக்க, கடந்த இரு வாரங்களாக அவனை மீறி தவறுகள் நேர்வதே இந்த இன்னல்களால் தான் என்று தீர்மானித்ததைக் கூறினான். இதனால், இருமுறை பெரிய பொறுப்புகள் அவனுக்கு அளிக்கப் படவில்லை என்றான். தீனதயாள் இவனுடைய அருமை வேலை அதிகாரிகளுக்குப் புரியாததால்தான் எனக் கூறினார். இருவருக்கும் தனித்தனியாக ஸெஷன்கள் தேவை என உணர்ந்தேன்.
இருவரிடமும் சில ஸெஷன்கள் தேவை என்றதை எடுத்துக் கூறினேன். அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்களை, குழப்பங்களைத் தெளிவு செய்யவே என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.
பிராண் நேரத்தைக் குறித்துக் கொண்டு வர ஆரம்பித்தான். அவனை முதல் முதலில் வேலையைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். வேலையில் சேர்ந்ததும் படிப்பு போலவே வெற்றி பெற்று வந்தான். பெற்றோரும் அவனை உச்சி முகர்ந்தனர். தன் அலாதியான அறிவே முன்னேற்றத்திற்குக் காரணி என முடிவு செய்து கொண்டான்.
எல்லாம் நன்றாக இருந்த போது தான் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு, பிராண் வரைபடத்தில் செய்த தவற்றை வாடிக்கையாளர் மீட்டிங்கில் வெளிப்படுத்தினார். பிராணால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தானாவது தவறு செய்வதாவது, சான்ஸே இல்லை. இந்த மனோபாவத்தை அறிந்த அவனுடைய மேலதிகாரி அவனிடம் பேசினார்.
இது, பிராண் வாழ்வில் புதிய முதல் அனுபவம். இதுவரை அவனை யாரும் திருத்தியதே இல்லை. மனதில் இதே ரீங்காரம் செய்தது. அன்றைய தினம் அடைந்த சோர்வைக் கவனித்தான். கண்களைப் பார்க்க, சின்னதாக விட்டதோ என நினைத்தான். வீட்டிற்குச் சென்றதும் உடைகளை அணியும் போது, தொளதொளவென இருப்பதாகத் தோன்றியது. “அடடா, என்னவாயிற்று?” என நினைத்தான். அன்றிலிருந்து உடல் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தான்.
வேலையில் நாட்டம் குறைந்தது. நேரம் அதிகம் மிஞ்சியது. கிடைத்த நேரத்தில் இணையதளத்தில் தேடி ஆராய்ந்தான். தேடத் தேட வெவ்வேறான நோய் இருக்குமோ என நினைத்தான். மேலும் தேடத் தேட இதெல்லாம் தனக்கு இல்லை என்றும், மிக அரிதான நோய் ஒன்றுதான் என முடிவு செய்து பெற்றோரை வரப்போகும் நிலைக்குத் தயார் செய்தான். மகனை முழுமையாக நம்பியதால் அவர்களைப் பயம் கவ்வியது.
இந்த விவரணை தர, இதைப்பற்றி சற்று ஆராயலாம் என பிராணிடம் சொன்னேன். அவனுடைய மனோபாவம், சமூக உறவு எனப் பல விஷயங்களை அலசி ஆராய வேண்டிய அவசியம் இருந்த பின்னும்,அவனுடைய தனக்கு இந்த நோய்தான் என்ற முடிவு, வேலையில் தற்போது நிகழும் சங்கடங்களை முதலில் ஆராயலாம் எனத் தேர்ந்தெடுத்தேன்.
பிராணின் அறிவு பலமடங்கு பலமாக இருந்ததால் அதையே உபயோகிக்க முடிவெடுத்தேன். இதுவரை விவரித்த அனைத்தையும் கணக்கு வடிவத்தில் எவை கூடின, எவை தொடராமல் கழிந்தது என வரிசையில் எழுதப் பரிந்துரை செய்தேன்.
ஒப்புக்கொண்டான். ஆரம்பித்தான். ஆரம்பித்ததும் தடுமாற்றம் கண்டான். தனக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது. நிறுத்தி வைக்கப்பட்டது. ஸெஷனுக்கு வந்தான். இதை எதிர்பார்த்தேன். பிராண் வாழ்வில் முதல் சரிவு அனுபவமாயிற்றே! இவனுக்குப் புதிது! குழப்பமான நிலை.
தனக்கு இது நடக்கின்றது என்றதை ஏற்றுக்கொள்ள பிராண் படும் அவஸ்தையை விலாவாரியாக விவரிக்கச் செய்தேன். பல கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தான். முக்கியமாக, கல்லூரியில் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளில் பிராணைப் போல நல்ல மதிப்பெண் எடுப்போருடன் மட்டுமே கலந்துரையாடல் வைத்துக் கொள்வான். குறைந்த மதிப்பெண்கள் பெறுவோர் பேச முயன்றாலும் மறுப்பான்.
படித்த நான்கு வருடமும் அவனுடன் ப்ராஜெக்டுகளில் மீண்டும் மீண்டும் நான்கு நபர்கள் இருந்தார்கள். பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விவரித்தான். பெயரைத் தவிர அவர்களுக்கும் கேம்பஸ் ப்ளேஸ்மேன்ட் கிடைத்தது என ஞாபகம்.
நான்கு ப்ராஜெக்டில் நடந்த ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பின் நோக்கி அந்த கடந்த காலத்தை ஃப்ளாஷ்பேக்காக முழுக்க ஞாபகப்படுத்திக் கொண்டு குறிக்கப்பட்டது. முதல்முதல் செய்தவற்றை நினைவு கூறுகையில் தானாக எல்லாவற்றையும் நடந்தபடி எடுத்து வைத்தான்.
இந்த பணியை பிராண் ஏற்றுக் கொண்டதும் அவர்கள் ப்ராஜெக்ட் செய்த முறையை படிப்படியாக எழுதச் சொன்னேன். இந்தமுறை திரைக்கதை போல. ஒவ்வொருவரின் பங்கேற்பு ஸெஷனில் மெதுவாகத் தென்பட்டது. நினைவில் நின்றதை எழுதும் போது ஞாபகங்களும் எழுந்தன. முதல் பாகத்தை எழுதுகையில் ஒரே ஒரு பெயர் எட்டிப் பார்த்தது, பரத் உள்ளே நுழைந்தான்.
காத்திருந்த நாழிகை வந்துவிட்டது. செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி, அந்த இன்னொருவர் பெயர் கூறியதை ஸெஷனில் எடுத்துக் கொண்டேன். அதை விவரிக்க, அலசி ஆராய்ந்ததில் பிராண் ப்ராஜெக்ட் முழுமையாகத் தான் மட்டும் செய்யவில்லை, தான் செய்யாததும் உண்டு என்பதை உணர்ந்தான். அப்படி உணருவது இதுவே முதல் தடவை. வியந்தான். “எப்படிச் சாத்தியமாகும்?” என நினைக்க, மேற்கொண்டு செய்தால் விளக்கம் வரலாம் எனத் தொடர்ந்தான்.
நடுநடுவே அவன் தன் உடலில் கவனித்து வந்த மாற்றத்தைப் பற்றியும் எடுத்துக் கொண்டோம். இப்போதைக்கு அவனுடைய சிந்தனை, உணர்வுகள் செய்து கொண்டிருந்த செயலின் மீது இருந்ததால் கண்களில், தசைகள், மாற்றம் ஏதும் தெரியாததைக் கவனிக்க வைத்தேன். இது மிக முக்கியமான ஒன்று. பிராணுக்கு பிரச்சினைகளைச் சந்திக்க, அவற்றை எதிர் கொள்ளத் தெரியாததால் உள்ளூர பாதிக்கப்பட்டு, அதன் விளைவான உடலின் அசைவுகளை வேறு விதமாகச் சித்தரிக்க, அது நோய் எனத் தான் நினைத்து விட்டோம் என்று புரிய ஆரம்பமானது. இதன் இன்னொரு விளைவாக, ப்ராஜெக்டில் நடந்ததை மேலும் நினைவு செய்ய, சுபா, முரளி, அப்துல் பங்கைக் கூற ஆரம்பித்தான்.
பரத், சுபா, முரளி, அப்துல் எதைச் செய்தார் என ஒவ்வொரு பாகத்திலும் ஓர் வரியில் எழுதி வரச் சொன்னேன்.
நால்வரின் குணாதிசயங்கள், நடத்தை தீனதயாள், சுமதி புகழ்வது போல் இல்லை என்றதும் பெற்றோரை ஸெஷனுக்கு அழைத்தேன். என் சார்பில், செயல்திட்டம் உருவாகும் விதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள நான்கு ஐந்து நிறுவனங்களில் அனுமதி கேட்டு, சில ப்ராஜெக்ட் மீட்டிங்கில் நான் பங்குகொள்ள ஏற்பாடு செய்து கொண்டேன். மேலாளர்களுடன் கலந்துரையாடி இவற்றிலிருந்து அறிந்த செயல்திட்டங்களின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன்.
பிராண் நால்வர் பிராஜெக்டில் செய்ததைக் குறித்து வந்தான். அவர்கள் தத்தளித்ததும் அதில் இடம் பெற்றிருந்தது. அவர்கள் எவ்வாறு தத்தளிப்பிலிருந்து மீண்டு வந்தார்கள் எனக் கேட்டதற்குப் பிராணால் பதில் தர முடியவில்லை. அவர்களிடமே கேட்டால் தெரியும் என அவன் நக்கலாகச் சொல்ல, அவ்வாறே அழைத்து வரப் பரிந்துரைத்தேன். அவர்கள் எதிர்ப்புகளைக் கையாளும் விதத்தை இவன் கேட்டு, உபயோகிக்கவே.
அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்து வர சில நாட்கள் தேவைப் பட்டதால் தீனதயாள்-சுமதியைப் பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் பிராணிடம் மாற்றங்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். முன்னைவிட உடலைப் பற்றிய கவலை குறைந்தது என்றும் சொன்னார்கள். அவர்களுக்குப் புரிய வைக்க, பிராணின் பிரச்சினைகள், காரணியை அலசினோம்.
இரு பெற்றோரும் பிராண் செய்வதைச் சிறுவயதிலிருந்து புகழாரம் போற்றுவார்கள். செய்யும் போது அக்கம் பக்கத்தில் உள்ள அவன் ஈடு குழந்தைகளை ஒப்பிட்டுப் பிராண் மட்டுமே சிறந்தவன் என்பார்களாம். இதை மேற்கொண்டு விவரிக்க, இப்போது இருவருக்கும் புரிய வந்தது, இதனால் அவனுக்கு இன்று வேலையில் டீம்முடன் இணைய முடியாமல் போகிறது என்று. ஏற்பட்ட மனப்பான்மையினால், தான் செய்ததை நிராகரிக்கப்பட்டதும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதை மேலும் ஆராய்ந்து பார்த்ததில் தீனதயாள்-சுமதியும் இப்போது தான் சிறுவயதிலிருந்து அவனிடம் சொன்னதை நினைவு கூறினார்கள். பிராணைப் போல இல்லாதவர்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்றதை வலியுறுத்தி இருந்தார்கள். பிராண் இதைக் கடைப்பிடித்தான். பிராணின் சமூகத் திறன் (மற்றவரோடு பழகும் திறன்) பற்றிய விவரணை செய்யச் செய்ய, இதனால் எந்த அளவிற்கு அது தடைப் பட்டது என்றதை உணர்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்தத் திறன்களின் பயன்பாட்டை விவரிக்கச் செய்தேன். மகனுக்கும் தேவை என உணர ஆரம்பித்தார்கள்.
இவற்றைப் புகட்டப் பல வழிமுறைகளைப் பட்டியலிட்டோம். பிராண் ஒரே பிள்ளை கவனம் முழுவதும் அவன் மேல் இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் அவனைப் பாதுகாக்கச் செய்தார்கள். பிரச்சினைகள் அவன் சந்திக்க நேராமல் போனது. அளவுக்கதிகமான பாசம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழி போல ஆனது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். தீனதயாள், சுமதி அதைச் செய்ய முயன்றார்கள். கடினமான மாற்றம் என்றாலும் விளைவைக் கண் எதிரிலேயே தங்களுக்கு பிரியமானப் பிள்ளையின் மீது பாதிப்பு காட்டுவதால், மாற்றம் செய்ய அது அங்குசம் ஆனது.
தானாக பரத், சுபா, முரளி, அப்துல் அழைத்துக் கொண்டு பிராண் வந்தான். எதையும் சொல்லவில்லை என்றான். பிராணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, வந்ததற்கு நன்றி தெரிவித்து அவர்கள் வகுப்புத் தோழன் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதைக் கூறி அவர்களின் பங்கேற்பு, ஒத்துழைப்பை வழங்க வேண்டுகோள் செய்தேன். தயக்கம் இல்லாமல் தங்களால் முடிந்த வரை உதவுவது முடியும் என்றார்கள். அவர்களால் சனிக்கிழமை வரமுடியும் என்று நேரம் குறித்து வைத்தோம். இதைக் கேட்டதும் பிராண் அவர்களைத் திடுக்கிட்டுப் பார்த்தான்.
வந்தவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் எளிமையான நிலையில் வளர்ந்தவர்கள், அதிக பொறுப்புடன்.அதனால்தானோ அவர்களிடம் மனோ முதிர்ச்சி தூக்கலாக இருந்தது? ஊக்குவிக்கும் விதத்தில் பிராணிடம் பேச, அவன் அவர்களை ஏறெடுத்துப் பார்த்துத் தலை அசைத்தது மனதிற்குச் சந்தோஷமானது.
அடுத்த சில ஸெஷ்ன்களில் அவர்கள் பிரச்சினைகளோடு எதிர்நீச்சல் போட்ட சூழலை, எதிர்கொண்ட பாதையை விவரிக்கப் பரிந்துரை செய்தேன். ஒருவருக்கொருவர் ஆதரவு காட்ட இவர்கள் இடையே பிணைப்பு அதிகரித்தது. வேலையிடத்தில், வீட்டில், எவ்வாறு செய்தார்கள் என மேலும் சொல்ல, பிராண் தனக்கு நேர்ந்ததை ஒரு வாரத்திற்குப் பிறகு பகிர்ந்தான்.
இந்த தருணத்தில் நான் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அவர்களாக இயங்க விட்டேன். மெதுவாக ஒவ்வொருவரும் பிராணை அவன் சிந்தனை, பிரச்சினைகள் பற்றிப் பேச ஊக்குவித்தார்கள். தோல்வியடைந்த நிலையில் நிலைக் முனிந்து இருப்பதைப் பற்றிப் பேசும் போது, அவர்கள் தங்களது வாழ்நாளில் நடந்த அவமானத்தைப் பற்றிப் பேசி அவற்றிலிருந்து மீளச் செய்த விடாமுயற்சி, பரிபூரணமான உணர்வுகள், தடைகள், விவரித்ததில், பிராண் பூரண கவனமாக அவர்களுடன் மெய்மறந்து மனம் திறந்து உரையாடினான்.
இந்த நால்வரும் அவர்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள எளிய இடங்களில் வசிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதை அறிந்ததும், பிராண் சேர்ந்து கொண்டான்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்கிய நிலையில் சுபா, பரத் இருவரும் பிராணை அவன் தவறு செய்த ப்ராஜெக்டில் மறுபடியும் அவனாகப் பார்த்து எங்கு, எதை விட்டான் என பரிசோதிக்கப் பரிந்துரைத்தார்கள். பிராண் அவ்வாறே செய்தான். என் பங்கை மேலும் குறைத்துக் கொண்டேன். பியர் க்ரூப் அதாவது அதே வயதினரை உரையாட வைத்தால் அதனால் வரும் தெளிவு, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இங்கேயும் தென்பட்டது!
பிராண் மற்றவர்கள் தந்த சில குறிப்புகளைத் தவிர்க்க விட்டதை ஒப்புக் கொண்டான். இதைப் பற்றி அவனுடைய டீம்முடன் பேசியதைச் சொன்னதுடன் அறையில் கைதட்டல். அப்துல் மெதுவாகக் கேட்டான் “இப்போ உன் உடலில் எந்த விதமான நோய் இல்லை என்றதை நம்புகிறாயா?” என. முரளி, பரத், சுபா மூவரும் அவனுடன் சேர்ந்து பிராண் உடல் நலத்தைப் பற்றி அவர்கள் கவனித்ததைச் சொல்ல, பிராண் தானும் அவ்வாறே எண்ணுவதைக் கூறினான்.
ஒற்றையாக வந்த பிராண் முடித்துக் கிளம்பும் போது பாசம் பற்றுடைய கூட்டமாகக் கிளம்பினான்.