“அப்பா! கோகிலம் மாமி காலமாயிட்டாளாம்”
நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்தித்தாளில் மூழ்கியிருந்த ரங்கநாதன், விச்சு ஏதோ சொல்வதைப் புரிந்து கொண்டு பேப்பரை விலக்கித் தலையை நிமிர்த்தினார்.
“கோகிலம் மாமி செத்து போயிட்டாளாம்” என்று மீண்டும் சற்று உரக்கவே சொன்னான் விச்சு.
கேட்டதும் ரங்கநாதன் முகம் ஒரு மாதிரி இறுகிக் கொண்டது. நாக்கை வெளியே நீட்டி தன் காய்ந்த உதடுகளை நனைத்துக் கொண்டார். சற்று நிதானித்துக் கொண்டார்.
“எப்போ? யார் சொன்னா?”
“மாமியோட பொண்ணு ஃபோன் பண்ணிச் சொன்னா. இன்னிக்கி பொழுது விடிய அஞ்சு மணிக்கு ஆயிடுத்தாம்”
மீண்டும் சிறிது நேரம் மௌனம். எங்கோ சுவர் மூலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் திரும்பி, “அவளுக்கு என்ன ஆச்சு?”
“ஒரு வாரமாகவே கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்ததாம். நேத்திக்கு ரொம்ப மோசமாயிடுத்தாம். எழுபது வயசுக்கு மேலே ஆயிடுத்தில்லையா?”
“எழுபத்தெட்டு! இந்த தை மாசம் வந்தா எழுபத்தொன்பது. என்னைவிட இரண்டு வயசுதான் சின்னவள்.” ரங்கநாதனின் வயசுக் கணக்கு விச்சுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் தொடர்ந்து, “சரி! அவ இப்போ எங்கே இருக்கா?”என்று கேட்டார்.
“எங்கோ கூடுவாஞ்சேரி பக்கத்திலே நந்திவரமோ என்னவோ ஊர்ன்னு சொன்னா. அட்ரஸ் கொடுத்திருக்கா.”
சிறிது நேரம் ஏதோ எண்ணத்தில் மூழ்கி இருந்த ரங்கநாதன் சட்டென்று தீர்மானித்தவராய், “சரி! மணி ஒன்பதுதானே ஆறது. வண்டியை எடு! கிளம்பு, போவோம்”
விச்சு அதிர்ந்தான். “அப்பா! நீங்க எப்படி இந்த நிலைமையிலே? பேசாம இருங்கோ. வேணும்னா மாமியோட பொண்ணுகிட்டே ஃபோன்லே பேசி துக்கம் கேட்டுடுங்கோ”
“இல்லை. நான் நேர்லே போகணும். நான் வரேன். நீ கிளம்பு”. ரங்கநாதனின் வார்த்தையில் இருந்த அழுத்தமும், தீர்மானமும் விச்சுவுக்கு சற்று பயமாகவே இருந்தன.
“இல்லை, உங்களாலே நடக்கவே முடியலை. இப்போ அங்கே போகணும்னு என்ன அவசியம்?”
“விச்சு, சொல்றதைச் செய். போய் வண்டியை எடு. அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லிடு”
“அப்பா, எனக்கு இன்னிக்கு ஹைகோர்ட்லே ஹியரிங் இருக்கு”
“ஜூனியரை விட்டு வாய்தா வாங்கிக்கச் சொல்லு. நீ என்னோட உடனே கிளம்பு”
சொல்லிக் கொண்டே ரங்கநாதன் நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ளத் தொடங்கினார். விச்சு அவரின் தோள்களைப் பிடித்து எழுப்பி விட்டான். பக்கத்தில் இருந்த “வாக்கரை” அருகில் நகர்த்தி வைத்தான். அவர் அதனை இருபுறமும் பிடித்து முன்னால் இழுத்துக் கொண்டு தானும் மெதுவாக தன் கால்களைத் தூக்கி முன்னால் வைத்து நகரத் தொடங்கினார்.
விச்சு சிறிது நேரம் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். பிறகு “அம்மா!” என்று கத்தினான். சிறிது நேரத்தில் உள்ளிருந்து வெளியே வந்த மங்களம் ரங்கநாதன் மெதுவாக நடந்து வாசலை நோக்கிப் போவதைப் பார்த்து விட்டு, “இப்போ எங்கே கிளம்பிப் போயாறது?”என்றாள்.
ரங்கநாதன் பதில் ஒன்றும் பேசாமல் இருக்கவே விச்சு, “கோகிலம் மாமி இன்னிக்கு காலம்பற செத்துப் போயிட்டாளாம். மாமியோட பொண்ணு ஃபோன் பண்ணிச் சொன்னா. அதைக் கேட்டவுடனே எங்கோ கூடுவாஞ்சேரியிலே அவா வீட்டுக்குப் போகணும்ங்கிறா அப்பா” என்று சொல்லி முடித்தான்.
மங்களம் அவசரமாக ரங்கநாதனின் முன்னால் வந்து பாதையை மறித்து நின்று கொண்டாள்.
“இப்போ அங்கே போகாட்டா என்ன? சொந்தக்காராளா, ஒட்டா, உறவா? என்ன துக்கம் வேண்டியிருக்கு?” கோபத்தோடு கேட்டாள் மங்களம்.
ரங்கநாதன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் ஒன்றும் பேசவில்லை.
“கால் இரண்டும் முடங்கிப் போயிருக்கு. இங்கே வீட்டுக்குள்ளே நடக்கறதுக்கே வாக்கர் வேண்டியிருக்கு. ஒரு தடவை பாத்ரூம் போயிட்டு வரதுக்கு ஒரு மணி நேரம் ஆறது. இதிலே கஷ்டப்பட்டுப் படியிறங்கிப் போய், அம்பது மைல் தாண்டி அப்படி அந்தத் துக்கத்திலே கலந்துக்கலைன்னா என்ன இப்போ?”
ரங்கநாதன் தரப்பில் மீண்டும் மௌனம்.
“போன வருஷம் என் அண்ணா போன போது இதோ அடி நிலத்திலே இருக்கிற அடையாருக்கு வரமுடியலை. இப்போ பழைய சினேகிதி போயிட்ட உடனே கால்லே புதுசா சக்தி வந்துடுத்தா என்ன?” மங்களத்தின் குரலில் ஆத்திரம் கொப்பளித்தது.
ரங்கநாதன் மீண்டும் பதில் சொல்லாமல் தன் பார்வையை அவளை விட்டு விலக்கினார்.
“அவ புருஷனுக்கு எல்லாம் செஞ்சு அவனை ஜெயிலுக்குப் போகாம காப்பாத்திக் கொடுத்தாச்சு. அவமானம் தாங்காம அவன் செத்தே போனான். அப்பவே அவளையும் உங்களையும் சேர்த்துப் பேசி ஊரே சிரிப்பாச் சிரிச்சது. ஏதோ என் நல்ல காலம், காலை சுத்தின பாம்பு காலைக் கடிக்காம விட்டது. இப்போ முப்பது வருஷம் கழிச்சு வெக்கங்கெட்டுப் போய் அந்த ஜென்மத்தை நேர்லே போய் பார்க்கலேன்னா என்ன குறைஞ்சு போயிடும்?”
ரங்கநாதனின் வாய் ஏதோ வார்த்தைகளை முணுமுணுத்தது.
“என்ன சொல்றேள்?”
தொண்டையை ஒரு முறை செருமிக் கொண்ட ரங்கநாதன் நிதானமாகத் தன் மனைவியைப் பார்த்து, “இப்போ நீ இருக்கற இடத்திலே இருக்க வேண்டியவள் அவள். அந்த இடத்தை தியாகம் பண்ணி விட்டுக் கொடுத்தவள் அவள். நீ என்ன வேணாம்னாலும் நினைச்சுக்கோ, பேசிக்கோ. எனக்குக் கவலை இல்லை. நான் கடைசியா ஒரு தடவை அவள் முகத்தைப் பார்க்கப் போயிண்டிருக்கேன். என்னைத் தடுத்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றார்.
சொல்லிக் கொண்டே ரங்கநாதன் மெதுவாக வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். விச்சு பயந்து கொண்டே அவரைப் பின் தொடர்ந்தான்.
ஐம்பது அறுபதுகளில் மைலாப்பூரில் “சீனியர் அட்வொகேட்” விஸ்வேஸ்வரன் மிகப் பிரபலம். அவர் கேஸ் எடுத்து நடத்தினால் தோல்விங்கிறதே கிடையாதுன்னு பிரசித்தம். வடக்கு மாட வீதியில் அவரின் பெரிய மாடி வீடும் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. விஸ்வேஸ்வரனின் ஒரே புதல்வன் ரங்கநாதன். பி.ஏ. முதல் வகுப்பில் முடித்துவிட்டு, சட்டப் படிப்பில் சேர்ந்து கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்பாவின் வக்கீல் குமாஸ்தா வைத்தியநாதனின் ஒரே புதல்வி கோகிலத்தின் மீது கொள்ளை ஆசை. சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள். சேர்ந்து விளையாடியவர்கள். கோகிலம் சங்கீதம் கற்று கொண்டிருந்தாள். பருவம் வந்தவுடன் வசதி இல்லாததால் கோகிலத்தின் படிப்பு “ஸ்கூல் ஃபைனலோடு” நின்று போனது. பள்ளிப் படிப்போடு அவளின் பாட்டுப் படிப்பும் நின்றது.
வாலிபனான ரங்கநாதன் ஆசை இப்போது அவள் மீது காதலாக மாறியது. அவளுக்கும் “ரங்கு”வின் மீது அதே உணர்வுகள்தான். ஆனால் முன்போல இருவரும் தன் வீட்டிலோ இல்லை மற்றவர் வீட்டிலோ சுதந்திரமாகப் பார்த்துப் பேச முடியாத நிலைமை. அதனால் இப்போது இருவரது சந்திப்புகளும் கபாலி கோவிலிலோ ஏதேனும் பார்க்கிலோ சிலசமயம் கடற்கரையிலோ நடக்கத் தொடங்கின.
ஒரு வருடம் நவராத்திரியின் போது மழையில் நனைந்து ரங்கநாதனுக்குக் காய்ச்சல். அவன் வீட்டுக் கொலுவுக்கு வந்திருந்த கோகிலம், சுற்றும் முற்றும் பார்த்து அவனைக் காணாமல் தவித்தாள். ரங்குவின் அம்மா ஜகதாம்பாள் அவளைப் பாடச் சொன்ன போது சிறிதும் தயங்காமல், “ஏன் பள்ளி கொண்டீரய்யா, ரங்கநாதா” என்று பாட ஆரம்பித்தாள். பாட்டைக் கேட்டு விட்டு வீட்டில் தன் அறையில் படுத்துக் கிடந்த ரங்கநாதன், மெதுவாக எழுந்து கூடத்துக்கே வந்து விட்டான். ரங்குவின் அம்மா உட்பட எல்லோருக்கும் ஆச்சரியம்.
“அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதன் எழுந்துண்டானோ என்னமோ, கோகிலத்தோட பாட்டைக் கேட்டுட்டு இந்த ரங்கநாதன் ஜுரம் விட்டுப் போய் படுக்கையிலிருந்து எழுந்து வந்துட்டான்” என்றாள் ரங்குவின் அத்தை. கோகிலம் வெட்கப்பட்டு எழுந்து தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டே, “நான் வரேன் மாமி” என்று அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள். ரங்கநாதன் உடனே, “எனக்காக பாட்டை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து பாடட்டும்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான். அவளும் நிறையப் பாடினாள். அன்றே தீர்மானித்தான் சீக்கிரமே தான் கோகிலத்தைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றி பெற்றோரிடம் பேசி விடுவது என்று.
“இதிலே என்ன தப்பு ஜகதா? ஏழையாய் இருந்தாலும் நல்ல குடும்பம். பொண்ணு நமக்கு நன்னா தெரிஞ்ச நல்ல பொண்ணு. அழகான அடக்கமான பொண்ணு. படிச்சிருக்கா. நன்னா பாடறா. எல்லாத்துக்கும் மேலே ரங்குவுக்கு அவளைத்தான் ரொம்ப புடிச்சிருக்கு. அப்புறம் என்ன?” என்றார் விஸ்வேஸ்வரன் தன் மனைவியிடம் கெஞ்சாத குறையாக.
“வீட்டுக்குத் தெரியாம ஒரு ஆம்பளையை வெளியிலே, பார்க்கிலே, பீச்சிலே பார்க்கிற வயசுப் பொண்ணு நல்ல பொண்ணா?” கோபத்தோடு கேட்டாள் ஜகதாம்பாள்.
“அம்மா நான்தான் அவளை அங்கேயெல்லாம் வரச் சொன்னேன்” என்றான் ரங்கநாதன்.
“நீ கூப்பிட்டா வெங்கங்கெட்டுப் போய் அவளும் அங்கே போயிடறதா?” என்றவள் தொடர்ந்து, “நல்ல பணக்கார இடம்னு பார்த்து தன் பொண்ணை அனுப்பி ரங்குவை மயக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கான் அந்த பிராமணன். இவனும் ஏமாந்து போயி மாட்டினுட்டான்”
“இப்படியெல்லாம் பேசாதே ஜகதா! வைத்தா ரொம்ப நல்லவர். நான் இந்தக் கல்யாணத்துக்கு அவர்கிட்டே சம்மதம் கேட்கப் போறேன். கல்யாணச் செலவைக் கூட நாமே ஏத்துக்கலாம்”
“உங்க புத்தி ஏன் இப்படிப் போறது? அவ ஜாதகத்தைப் பார்த்தேளா? அதுக்கு பூராட நக்ஷத்ரம்”
“அதனாலே என்ன?”
“அதனாலே என்னவா? அவ கழுத்திலே தாலி ஏறின உடனே என் கழுத்திலே தாலி இறங்கிடும்”
“உளறாதே ஜகதா! எல்லாம் மூடநம்பிக்கை. நீ அனாவசியமா வேண்டாததையெல்லாம் நினைச்சு பயப்படறே. அதெல்லாம் ஒண்ணும் நடக்காது”. கோபத்தோடு உறுமினார் விஸ்வேஸ்வரன்.
“இல்லை! இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. நடக்க விடமாட்டேன்”
சுமார் ஒரு மணி நேரம் நடந்த வாக்குவாதத்திற்குப் பின் ரங்கநாதன் பொறுமை இழந்தான்.
“அம்மா! நீ ஒத்துக்கலைன்னாலும் நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அழைச்சிண்டு போய் நம்ம கற்பகாம்பாள் சன்னதியில் அவ கழுத்திலே தாலி கட்டுவேன்”
“நீ அப்படி கட்டிட்டு வெளியே வந்ததும், இதோ இந்தக் குளத்திலே என் பொணம் மிதக்கும்”
ஜகதாவின் கடைசி அஸ்திரத்தில் தந்தை, மகன் இருவரும் தங்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்து வீழ்ந்தார்கள். அம்மாவை மீறி ரங்குவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரண்டே மாதத்தில் அவன் திருமணம் ஜகதாம்பாளின் தூரத்து உறவில் இருந்து வந்த மங்களத்தோடு நிச்சயம் ஆனது. கோகிலத்தைப் பார்த்து அவன் மன்னிப்புக் கேட்கக் கூட அவனுக்குத் துணிவில்லை. ஆனால் கோகிலம் அவன் திருமணத்திற்கு தன் வாழ்த்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினாள். அதைப் படித்துவிட்டு பதில் கடிதம் எழுதக் கூட ரங்குவிற்குத் தோன்றவில்லை.
ரங்கநாதனின் கல்யாணம் மிக விமர்சியாக நடந்தது. கல்யாணத்துக்கு கோகிலமும் வந்திருந்தாள். அவள் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தான் ரங்கு. மாலையில் நலங்கு வைபவத்தின் போது, கூட்டத்தில் யாரோ கோகிலத்தைப் பாடச் சொன்னார்கள். முதலில் தயங்கிய கோகிலம், பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு பாடினாள்.
“ஆசை முகம் மறந்து போச்சே….இதை யாரிடம் சொல்வேனடி தோழி”
ரங்கு மனத்துக்குள் கண்ணீர் விட்டு அழுதான்.
ரங்கநாதன் தன் தந்தையைப் பின்பற்றி அவரிடமே ஜூனியராகச் சேர்ந்து வக்கீல் தொழில் செய்ய ஆரம்பித்தான். சில வருடங்களிலேயே சிறந்த வக்கீல் என்று பெயர் எடுத்தான். ஐந்து வருடம் கழித்து பிறந்த தன் மகனுக்கு அப்பாவின் பெயரையே சூட்டினான்.
பல காலம் கல்யாணத்தை மறுத்துக் கொண்டு வந்த கோகிலம், கடைசியில் அப்பாவின் ஆசைக்காக கல்யாணம் செய்து கொண்டாள். மாப்பிள்ளை சௌகார்பேட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். சொற்ப சம்பளம். ஆனாலும் கோகிலம் சமாளித்துக் குடும்பம் நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.
ஒரு நாள் அவள் கணவன் வேலையை உதறிவிட்டு வந்து கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து புதிதாக ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தான். முதலில் நன்றாக நடந்த கம்பெனி பின்னர் கூட்டாளிகளின் தவறான வழிகாட்டுதல்களால் தடுமாறத் தொடங்கியது. வெளியில் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை. பணம் போட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்க போலீஸ் கேஸாகப் போய் அவனை சிறையில் தள்ளும் நிலை வந்தது. கோகிலம் ரங்கநாதனிடம் ஓடி வந்தாள். இருபது வருடங்களுக்குப் பின் சந்திப்பு. தன் கணவனை எப்படியாவது காப்பாற்றும் படி காலில் விழுந்தாள். ரங்கநாதன் தன் சட்ட அறிவைப் பயன்படுத்தி கோகிலத்தின் கணவன் சிறைக்குச் செல்லாமல் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தினான். கேஸ் பல வருடங்கள் நடந்தது. முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு எந்த வழியும் புலப்படாத நிலையில், கடைசியில் அவனை “திவால்” நோட்டீஸ் கொடுக்க வைத்து கேஸை முடித்து வைத்தான்.
கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது பல முறை கோகிலம் ரங்குவை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் தொடர்பைப் பற்றி பலர் வேறு விதமாகப் பேசும் பேச்சுக்களும் மங்களத்தின் காதில் அடிக்கடி விழுந்தன. அவள் ரங்குவிடம் பல முறை சண்டை பிடித்தாள். ரங்கு அதைப் பற்றி கவலையே படவில்லை. கேஸ் முடிந்து ஒரு வருடம் கழித்து கோகிலாவின் கணவன் ஒருநாள் திடீரென்று இறந்து போனான். ரங்கு கோகிலத்தைக் கடைசியாகப் பார்த்தது அன்றுதான்.
விச்சுவுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ரங்கநாதன் உள்ளத்தின் ஒரு மூலையில், அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாகக் கடல் அலை போல வந்து வந்து மோதித் திரும்பின. ஒரு மணி நேரப் பயணம் ஒரு யுகமாகத் தோன்றியது அவருக்கு.
கூடுவாஞ்சேரி வந்து சேர்ந்து விலாசத்தை விசாரித்துக் கொண்டு கோகிலத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, அவளுடைய பெண்ணும் மற்றும் சிலர் மட்டுமே அங்கு இருந்தார்கள்.
“அம்மா நேத்திக்குக் கூட உங்களைப் பத்திச் சொல்லிண்டிருந்தா. அதான் விஷயத்தை உங்களுக்குச் சொல்லச் சொன்னேன். ஆனால் நீங்க வருவேளான்னு தெரியாது. வேறே உறவுக்காரா யாரும் வரத் தேவையில்லைங்கிறதாலே காத்திண்டு இருக்காம, சீக்கிரமே எல்லாத்தையும் முடிச்சுட்டோம்” என்றாள் கோகிலத்தின் பெண் அழுதுகொண்டே.
“நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.” ரங்கநாதனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. விச்சுவைப் பார்த்து “போகலாம்” என்று கையை அசைக்க விச்சு அவரைக் கைத்தாங்கலாக மீண்டும் கார் அருகே நடத்தி அழைத்துக் கொண்டு சென்றான்.
“போயிட்டு வந்தாச்சா? போய் அந்தத் தெய்வத் திருமுகத்தைப் பார்த்துட்டு வந்தாச்சா?”
கேட்டுக் கொண்டே வந்த மங்களம், ரங்கநாதன் பதில் ஏதும் சொல்லாமல் கையில் ஒரு ஃபோட்டோவை வைத்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, அவர் பின்னால் வந்து எட்டிப் பார்த்தாள். அந்தப் படத்தில் பதினாறு வயது கோகிலம் ஒரு ஸ்டியோவில் தாவணி போட்டுக் கொண்டு கறுப்பு வெள்ளையில் நின்றிருந்தாள்.
“ஓ! ஆசை முகம் இன்னும் மறக்கலையோ?”
ரங்கநாதனின் பார்வை ஃபோட்டோவை விட்டு விலகவில்லை.
“ஆசை முகம் என்னிக்கும் மறக்காது. ஆனால் இன்னிக்கு மறைஞ்சு போச்சுடி” என்று ரங்கநாதனின் வாய் முணுமுணுத்தது மங்களத்தின் காதில் விழவில்லை.
அநேகமாக சிறுகதை படிக்கும் போதே நடந்த கதை போல் தெரிகிறது. அருமையான கதை
LikeLike