
“ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டான் ” என்று முடியும் சொற்றொடரில் எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தோம்.
அடேயப்பா மொத்தம் 75 கதைகள் !
பரிசு பெற்ற கதைகள் கீழே தரப்பட்டுள்ளன!
முதல் பரிசு – நாத்திகன் – அருணா கதிர்
“அவனும் நம்ம சாதிக்காரன் தாம்ல. கோவில் விசேஷமின்னு கெஞ்சறேன். ஆனாலும் கூட அனுமதி தரமாட்டானோ?” என்று ஆத்திரமாக வினவினான் மணி.
“அந்தாள பத்தி தான் தெரியும்ல. சாமியாவது, பூதமாவதுண்ணு திரிவான். சரியான இம்சை புடிச்சவன். விடுங்க பங்காளி” எனச் சமாதானம் செய்தான் செந்தில்.
“அவனுக்கும் அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே சென்றான் மணி.
இருவரும் சென்றதும், பெருமூச்சு விட்டு, சற்றே ஆயாசமாக இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ” ஊரெல்லாம் கொரானா கோர தாண்டவம் ஆடுது. இதுல திருவிழான்னு கூட்டம் சேர்த்து இன்னும் பத்து பேர்த்துக்கு பரப்புவானுக. ஆண்டவனே! இந்த கொரானா முடியற வரைக்கும் என்னை நாத்திகனாவே இருக்கவிடு!” என்று கண்ணில் நீர் மல்க மானசீகமாக வேண்டிக் கொண்டான்.
இரண்டாம் பரிசு – மக்கள் சேவை மகேசன் சேவை. சாந்தி ரசவாதி
“காக்க காக்க கனகவேல் காக்க”
“எல்லோரும் சாமியை வேரோடு பிடித்து இழுக்க நமக்கு மட்டும் லயிப்பு இல்லை?” நீலாவின் சுயபரிசோதனை. அலுவலகம் ,வீடு ஓடி, பணி ஓய்வு தான்.
.” அம்மா ஜீ எச் போய் மருந்து வாங்கி வீட்டுக்குப்போகணும்”- முனியம்மா. “இரு தோசை தரேன் கையில் கொண்டு போ” தண்ணீர் பாட்டிலுடன் டப்பா வந்தது. “காக்க காக்க ” தொடர் முயற்சி. ” மாடில கட்டிட வேலை பாக்குறவங்க ,தண்ணீர் வேணுமாம்” சபேசன் குரல். ” நீர் மோர் பானகம் கரைச்சி வைச்சிருக்கேன் குடுங்க நல்ல வெயில்””. “காக்க காக்க” “நந்தினி ஃபோன் ” சுரேஷ். அறிவிப்பு. தெரிந்தவர் மகள். குடிகாரக் கணவன் குழந்தைகள். ” ரெசுயூம் மெயில் அனுப்பியாச்சு. இண்டர்வீயு நல்லா பண்ணு. வாழ்த்துக்கள்”. மீண்டும்
” சஷ்டியை நோக்க ” ஆரம்பிக்க வேதனையும் திருப்தியும் கலந்த உணர்வு. மக்கள் பாசம் நிரம்பிய உள்ளத்தில் மகேசனை வரவழைப்பது கடினமோ? “ஆண்டவனே என்னை நாத்திகனாகவே இருக்க விடு ” கண்ணீர் மல்க வேண்டினாள்”
(2nd prize)
மூன்றாம் பரிசு – நான் ஆத்திகனா? நாத்திகனா? – கோவில்பட்டி மாரியப்பன்
பண்ணையார் வீட்டுக்கு வந்ததிலிருந்து இராஜ உபசாரம் தான். மாலை நேரத்தில் ஊர் மந்தையில் நடைப்பயிற்சி . பண்ணையார் கவனிப்பில் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டதுபோல் உணர்வு. எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்வு? புரியவில்லை. ஊரில் கோவில் கொடை விழா ஆரம்பமாயிற்று.
தெருவில் வேப்பம் கொத்து வைத்து வைக்கோலால் தோரணங்கள் கட்டி இருந்தார்கள். பண்ணையார் வீட்டில் சொந்தக்காரர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. காப்பு கட்டிய நாளிலிருந்து விரதமிருந்து மத்தியானம் மட்டும் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகுதான் எனக்கு சாப்பாடு. கோவில் கொடை விழா நாள். பண்ணையார் பக்கத்தில் வர ஊர் மக்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தோம்.
பூசாரி வந்து பண்ணையாருக்கும் எனக்கும் கற்பூரம் காட்டி விபூதி பூசினார். நான் மட்டும் பூசாரி உடன் அனுப்பப்பட்டேன்.மலங்க மலங்க விழித்துக் திரும்பிப்பார்த்தேன். பண்ணையார் வரவில்லை. மனம் திகில் அடைந்தது. மஞ்சள் தண்ணீர் ஊற்றி மாலை போட்டார்கள். என் முன் நின்ற பூசாரி கையில் தீட்டப்பட்ட அரிவாள். பெண்கள் குலவைச்சத்தம் கூட்டத்தை அதிரவைத்தது. கிடாய் நல்ல வளர்ப்புதான் என்று யாரோ பேசிக் கொண்டார்கள். முடிவு தெரிந்தது. ம்மேய்… ம்மேய்.. அலறினேன். மரண பயம். காட்டிலே ஆட்டோடு ஆடாகச் சுற்றித்திரிந்து இருந்தால் இந்த கதிக்கு ஆளாகி இருப்பேனா? என்னைக் கொன்று சாமிக்கு படைப்பது தான் ஆத்திகம் என்றால் விரத சாப்பாடு போட்டு வளர்த்தது இதற்குத்தானா? குலவை சத்தம் தொடர்ந்தது. திடீரென்று மின்சாரம் நின்றது. ஒரு வினாடிதான். பிடியில் இருந்து தப்பித்து சிட்டாய் பறந்தேன். “ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டேன்”. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.
(3rd prize)