உலக இதிகாசங்கள் – இலியட் எஸ் எஸ்

Ilias Picta – Wikipedia

ஹோமர் எழுதிய இலியட் கதையைப் படிக்கும்  போது  இலியட் என்பதற்கான அர்த்ததைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிராய் என்ற நகரம் தற்போதுள்ள துருக்கிப் பகுதியைச் சேர்ந்தப் பழமையான  நகரம். ஹோமர் கதை சொன்ன காலத்தில் அது அனைவராலும் டிராய் என்றே அறியப்பட்டது. ஆனால் அதற்கும் முந்திய காலத்தில் -அதாவது ஹோமரின் கதை நடந்த காலத்தில் அந்தப் பகுதி இலியோஸ் , இலியம்  என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரைப் பற்றி – அங்கு நடந்த போரைப் பற்றி எழுதப்பட்டதால் இந்தக் காவியம் ‘இலியட்’ என்று அழைக்கப்படுகிறது. ஹோமர் கதையிலேயே இலியம் -டிராய் என்ற  இரண்டு பேரும் மாறி மாறி வரும். இரண்டும் ஒரே நகரத்தைக் குறிப்பவைதான்.

சுருக்கமாக இலியட் என்றால்  இலியோஸ் நாட்டின் கதை என்று பொருள்.

இது எப்படி என்றால் ராமர்+ அயனம் சேர்ந்து ராமாயணம் ஆனது போல. அயனம் என்றால் பாதை -பயணம் என்று பொருள். ராமரின் வாழ்க்கைப் பாதை , ராமர்  சென்ற நீண்ட பயணம்   ராமர் காட்டிய வாழ்க்கை நெறி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

இன்னொரு முக்கிய செய்தி.  இலியட் கதைக்குள் நுழையும் முன் கிரேக்கக்  கடவுள்கள் பற்றிய சில உபகதைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் ராமாயணத்தை  மகாவிஷ்ணு, சிவன், பிரும்மா,  இந்திரன், சூரியதேவன், சமுத்திரராஜன், வாயு, குபேரன்,பரசுராமர், போன்ற தேவர்களைத் தெரியாமல் படிப்பது   போல இருக்கும்.

இலியட் காவியத்தின் நாயகனான அக்கிலிஸ் பிறப்பு எப்படி நடைபெற்றது என்பது முதல் கதை.

கிரேக்க இதிகாசத்தில் தலைமைக் கடவுள் ஜீயஸ். அவனது தம்பி பொசைடன். இருவரும் திட்டீஸ் என்ற கடல் தேவதை  மீது மோகம் கொள்கிறார்கள். இருவரும் அவளுக்காக சண்டை போட்டுக்கொள்ள இருந்தார்கள். அப்போது கடவுள்களில்  முக்காலமும் அறிந்த ஞானி ஒருவர் ‘இவளுக்குப் பிறக்கும் மகன்  அவன் தந்தையை விட மிகமிக  சக்திவாய்ந்தவனாக இருப்பான் ‘ என்று கூறுகிறார்.  அண்ணன் தம்பி இருவருக்கும் தங்களைவிட தன் மகன் உயர்ந்த இடத்தில் வந்தால் தங்கள் கடவுள் பதவிக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து  திட்டீஸ் மீது கொண்ட காதலைத் தியாகம் செய்ய முன் வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவளுக்கு பீலியஸ் என்ற அரசனுடன்  திருமணம் செய்து வைக்கின்றார்கள். அதிலும் அவர்கள் சுயநலம் கலந்து இருக்கிறது. மானுடன் ஒருவன் மூலம் திட்டீஸுக்குப் பிறக்கும் மகன் மனிதன் தானே! அவன் எப்படியும் இறந்துவிடுவான், தங்கள் பதவியை யாரும் அசைக்க முடியாது என்பதில் கருத்து ஒருமித்து இருந்தார்கள்.

பீலியஸ் -திட்டீஸுக்கு பிறந்த மகன்தான் இலியட்டின் நாயகன் அக்கிலிஸ். நமது பீமனைப் போல் வீரமும் வலிமையும்  கொண்ட  மாபெரும் போர் வீரனாகத் திகழப் போகின்றவன்!

கடல் தேவதை திட்டீஸ்  தன் மகன் அக்கிலிஸ் மீது உயிரையே  வைத்திருந்தாள்.  அதனால்  அவன் அழிவே இல்லாத மானிடனாக  இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினாள். பாதாள உலகில் உள்ள சிறிய நதியின்  தண்ணீரில் எந்த மனிதனின் பாகங்கள் படுகின்றனவோ அவை அழியாமல் இருக்கும் என்ற ரகசியத்தைத் தெரிந்துகொள்கிறாள்.  குழந்தையாய் இருக்கும் தன் மகன் அக்கிலிஸைக் குதிகாலைப் (Achille’s heels)  பிடித்து அவன் உடல் முழுவதையும்  அந்த பாதாள நதித்  தண்ணீரில்  முக்கி  எடுக்கிறாள். 

அவள் நம்பிக்கை வாழ்ந்ததா அல்லது மகாபாரத காந்தாரி மாதிரி பொய்த்ததா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

அது என்ன மகாபாரதக் காந்தாரி  கதை?

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் நடக்கும் 17 வது நாளில்  காந்தாரி தன் மகன் துரியோதனன் கதாயுகப் போரில் எந்த இடத்தில் அடிபட்டாலும் இறந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறாள்.  கண்ணைக் கட்டிக் கொண்டு அவள் அத்தனை நாள் சேமித்து வைத்த நேத்ர சக்தியை  தன் மகனின் உடலில் செலுத்தினால் அது அவன் உடலை  வஜ்ரமாக்கிவிடும் என்பதை அறிந்திருந்தாள்  காந்தாரி! அதனால்  அவனைப்  பிறந்த மேனியுடன் வரச் சொல்கிறாள்.  தனக்கு நித்திரத்துவம்  தரும் அந்த நேத்ர சக்தியைப் பெற அவனும் வெட்கத்தைவிட்டுப் பிறந்த மேனியுடன் சென்றான்.  ஆனால் எதிரில்  கிருஷ்ணன் வருவதைப் பார்த்து அவன் இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டான். . காந்தாரி தன்  கண் கட்டை அவிழ்த்து அவன் முழு உடலைப் பார்க்கையில் தன் உடல் வஜ்ரம்போல் மாறுவதை  அவனும் உணர்ந்தான். ஆனால் இடுப்பில் மர்ம பாகத்திற்கு கீழ் தொடை வரை அவன் ஆடை அணிந்திருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.  இனி அவளால் மீண்டும் நேத்ர சக்தியைப் பிரயோகிக்கமுடியாது. இது கிருஷ்ணன் செய்த சதி என்பதை உணர்ந்து கோபம் கொள்கிறாள்.

‘கவலைப்படாதே அம்மா! கதாயுத்தத்தில் தொடையில் யாரும் அடிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது ” என்று துரியோதனன் கூறுகையில் கண்ணன் எங்கோ சிரிப்பது அவன் காதில் விழவில்லை. இறுதிப்போரில் பீமன் அவனது தொடையில் அடித்தே அவனைத் தோற்கடிக்கிறான். அதுவும் கண்ணன் அர்ஜுனன் மூலம் துரியோதனனின்   தொடைதான் அவனது பலவீனம் என்பதைத் தொட்டுக் காட்டிய பிறகே அது நிகழ்கிறது.

பீலியஸ் -திட்டீஸ் திருமணத்தின் போது நடந்த இன்னொரு நிகழ்வு இலியட் கதைக்கு அடிகோலிய உப கதை !

நம் நாரதர் போல கிரேக்க இதிகாசத்திலும் எரிஸ் என்ற தேவதை இருந்தாள்.  செல்லுமிடமெல்லாம் ஏதாவது கலகம் செய்வது  அவள் வழக்கம். அதனால்  அவளை பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அழைப்பில்லாமலே  அவமானப்படுத்தப்பட்ட  எரிஸ் யாருடைய  கண்ணுக்கும் தெரியாமல் திருமணத்திற்கு  வந்தாள்.

வந்தவள் சும்மா இருக்கவில்லை. அவளால் அது முடியாது. அங்கிருந்த ஒரு மேடையில் ‘உலகில் மிகச் சிறந்த அழகிக்கு இது சொந்தம்’ என்று ஒரு தங்க ஆப்பிளில் எழுதிவைத்துவிட்டுச்  சென்று விட்டாள்.  பிறந்தது கலகம். 

அங்கிருந்த முப்பெரும் தேவியர் மூவருக்கும் போட்டி!  தங்களில் யாருக்கு அந்த தங்க ஆப்பிள் சொந்தம் என்பதற்காக! தங்க ஆப்பிள் மீது ஆசையினால் அல்ல.  அதன் மூலம் ‘தான்தான் அகிலாண்டகோடி உலகுக்கும் அழகி என்பது நிரூபணம்  ஆகும் ; ஆகவேண்டும்’  என்ற கொலைவெறி !

( இரண்டாம் நூற்றாண்டு ஓவியம்  இந்தப் பிரபஞ்ச அழகிப்போட்டியைப் பற்றியது)

அவர்கள் ஹீரா, அதினி, அப்ரோடைட்டி என்ற மூன்று தேவதைகள். ஹீரா திருமணங்களின் தலைவி. அதினி அறிவிக்கு அதிபதி. அப்ரோடைட்டி  காதல் தேவதை ! அவர்களுக்குள்தான் அப்போது அழகுப் போட்டி துவங்கியது. அழகில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.

பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்துத் தேவர்களும் தங்களில் யார் அந்த பிரபஞ்ச அழகி என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மூவரும் ஆணையிட்டார்கள்.  அவர்களில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது ? அதனால் பிறக்கும்  மற்ற இரண்டு பேரின் கோபத்தை எப்படி சமாளிப்பது ?    இதற்கான விடை  தெரியாமல்  எல்லாக் கடவுளர்களும் திணறினார்கள்.

ஜீயஸ் கடவுளுக்கு ஒரு யுக்தி உதித்தது.

“இந்தப் பிரபஞ்ச அழகிப் போட்டியின் நடுவராக டிராய் என்ற நகரத்தின் இளவரசன் பாரிஸ் என்பவனை நியமிப்போம். அவன் பிரபஞ்சத்தின் பேரழகன்! அவன் கூறினால் மூன்று தேவியரும்  ஒப்புக் கொள்வார்கள், அதுமட்டுமல்ல அவன் ஒருமுறை சிறந்த காளைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் அவனுடைய காளை கலந்துகொண்டபோதும் மற்றவருடைய காளையைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தான். அந்த அளவு நியாயமானவன். ”  அனைவரும்  ஒப்புக் கொண்டனர்.

Eve Holden on Twitter: "Depictions of The Judgement of Paris. Paris must judge a beauty contest between Hera, Athena & Aphrodite. This could be war… 🎨 Henry Justice Ford, Eduard Veith, Walter

பாரிஸ் அங்கு வரவழைக்கப்பட்டான். அவனுடைய அழகு தேவ உலகத்து மாதர்களை உரித்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. இருப்பினும் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதை நன்றாகப் புரிந்துகொண்டான் பாரிஸ் . தன்னால் மறுக்கவும் முடியாது. ஒருவரை சிறந்த அழகி என்று கூறினால் மற்ற இருவரின் கோபம் எந்த அளவிற்குப் போகும் என்பதையும் உணர்ந்திருந்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.

பிரபஞ்ச அழகி போட்டி துவங்கியது. மூன்று பெரும் தங்கள் அழகுகள் தெறிக்க அங்கே நடனமாடினார்கள். பாடினார்கள். ஒய்யாரமாக நடந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அழகு.   தனித்தனியே அவர்கள் வரும்போது அவள்தான் பிரபஞ்சப் பேரழகி என்று அனைவரும் நிச்சயமாகக் கூறினார். ஆனால் மூவரும் சேர்ந்து வரும் போது யார் பேரழகி என்று சொல்ல முடியாமல் திகைத்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஏன் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஏரிஸ் தேவதையும்   பாரிஸ் எப்படித் தீர்ப்பு வழங்கப் போகிறான் என்று இதயத்தைக் கையில்  பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.

பாரிஸ் எழுந்து நின்றான்.

“இந்த இடத்தில் மூவரும் சேர்ந்து இருக்கும்போது என்னால் சரியான தீர்ப்பு  வழங்க முடியாது. அதோ இருக்கும் ஈடா மலை உச்சியில் நான் காத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவராக மலை உச்சிக்கு வந்து அருகிலிருக்கும்  ஈடா  அருவியில் குளித்துப் பின்னர் பிறந்த மேனியாக என்னிடம் வரட்டும். நான் ஒவ்வொருவரையும் அவர்களின் உண்மையான அழகினைப் பார்த்து அவர்களில் யார் பேரழகி என்ற தீர்ப்பை வழங்குகிறேன்.” என்று கூறினான்.

அனைவருக்கும் அது சரி என்றே பட்டது. பாரிஸ் மலை  உச்சிக்குச் சென்றான். முதலில் வந்தவள் ஹீரா. திருமணத்தின் தேவதை அல்லவா ? அவள் அருவிக்கு வர வர அவளது  ஆடைகள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. அவள் அருவியில் குளித்து மெல்ல மலை உச்சிக்குச் செல்லும் படியில் ஏறி நடந்த வரும்போது சந்தனக் காற்று  அவளிடமிருந்து பரவி பாரிஸை மயக்கியது. அவன் அருகில் அவனை முத்தமிடுவது போல பக்கத்தில் வந்த ஹீரா ” என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் டிராய் என்னும் சிறிய ஊரில் இளவரசனாக இருக்கும் உன்னை இந்தக் கண்டத்துக்கே  அரசனாக்குகிறேன்”      என்று மயக்கும் குரலில் மற்றவர் கேட்காதவாறு கூறினாள். பாரிஸ் அவளிடம் ” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில்  முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.

அடுத்து வந்தவள் அதினி ! புத்திக்கு அதிபதி அல்லவா? அவள் அப்படியே காற்றில் மிதந்து வந்தாள். அவளது ஆடைகள் மெல்லிய திரைச்சீலை போல அழகை மறைப்பதற்குப் பதிலாக அதிகப் படுத்திக் காட்டியது.  அருவியில் அவள் குளிக்கும்போது அந்த ஆடை மெல்ல மறைய அவள் தேகம் பனிக்கட்டிபோல கண்ணாடி போல மின்னத் தொடங்கியது. அவளும் மெதுவாக பாரிஸ் இருக்கும் உச்சிக்கு வந்து அவனைக் கட்டிப் பிடிப்பதுபோல  அருகே வந்து .” அழகா! நீ என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் எந்தப் போரிலும் நீயே வெல்லும்படி உனக்கு புத்தி  சாதுரியத்தை வழங்குவேன்! உன்னை வெல்ல உங்கள் உலகத்தில் யாரும்  இருக்க மாட்டார்கள்! அதனால நீ பெறப்போக்கும் பொன்னும் பொருளும் அளவில்லாதபடி இருக்கும்” என்று ஆசை வார்த்தைகளைத் தேன் ஒழுகுவது போலக் கூறினாள். அவள் அருகாமை பாரிசுக்கு மயக்கத்தைத் தந்தது. மிகவும் தடுமாறி,” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில்  முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.

மூன்றாவதாக வந்தவள் அப்ரோடைட்டி! காதல் தேவதை ! முதலிரவுக்கு வரும் பருவப்பெண்  போல நாணத்தையும் வெட்கத்தையும்  இதழிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்துக் கொண்டு தலையிலிருந்து கால் வரை முழுதும் போர்த்திய தங்க உடையில் நடந்தே அருவிக்கு வந்தாள். நடை பழகும் அவளது ஒவ்வொரு அடியும் பார்ப்பவர் உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டிக்கொண்டே இருந்தது. மறைந்த அழகே  இவ்வளவு அழகு என்றால் முழுவதும் தெரிந்தால் என்ன அழகோ என்று பாரிஸை முற்றிலும் மயக்கியது அவளது தவழும் நடை. அருவியில் குளிக்கும்போது அவளிடம் புன்னகையைத் தவிர வேறு உடை இல்லை. பாரிஸ் அவள் அழகைப் பார்த்து மூச்சு விடாமல் அப்படியே சிலை போல நின்றான். அதே மயக்கும் புன்னகையுடன் பாரிஸ் அருகே  வந்து அவன் மடியில் விழுந்தாள். ” இப்போது சொல்! நான் தானே பேரழகி? ” பாரிஸால் ஒன்றும் பேச முடியவில்லை. ” எனக்குத் தெரியும் மற்ற இருவரும் உனக்கு அதைத்  தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள் ! ஆனால் நான் தப் போகும் சுகத்திற்கு அது ஈடாகாது. அதுதான் பெண் சுகம்! என்னைப் பிரபஞ்சப்  பேரழகியாக்கு! உனக்கு என்னைப் போலவே இருக்கும் உலகப் பேரழகியின் சுகத்தைத் தருகிறேன்! அதோ பூவுலகில் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்த அழகியை என் கரத்தில் பார்! ” என்று அவளது கைவிரல்களை விரித்துக் காட்டினாள். அவள் கையில்     கிரேக்கப் பேரரசின்   ஸபார்ட்டா நாட்டு அரசன் மெனிலியஸ்  மனைவி ஹெலனின் முகம் தெரிந்தது!

Judgement of Paris (Photos Prints, Framed, Posters, Puzzles, Cards, Housewares,...) #593801அந்த முகம் ஆயிரக் கணக்கான கப்பல்களை அழித்த முகம்!

அந்த முகம்  இலட்சக்கணக்கான போர் வீரர்களைக் கொன்ற முகம்!

அந்த முகம் ஒரு நாட்டையே அழிக்கும் ஆற்றல் படைத்த அழகு முகம்!

ஹீரா மண்ணாசை காட்டினாள் ! அதினி  பொன்னாசை காட்டினாள்! அப்ரோடைட்டி  பெண்ணாசையைத் தூண்டுகிறாள்!

முடிவில் பெண்ணாசையே வெல்கிறது! இதிகாசம் தரும் பாடம் அதுதானே!

காதல் தேவதை அப்ரோடைட்டியையே பேரழகியாக தீர்ப்பு கூறி தங்க ஆப்பிளைக் கொடுக்கிறான் பாரிஸ்!

அப்போது விதிக்கப்பட்டது இதிகாச வித்து!

இராவணன் சீதையத் தூக்கிக்கொண்டு செல்லப் பிறந்தது ராம -ராவண யுத்தம்

தங்க ஆப்பிள் ( Apple of discard ) பாரிஸ் ஹெலனைத் தூக்கிக் கொண்டு செல்லப் பந்தாய் உருண்டது!   

கிரேக்கர்களுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே பத்தாண்டு டிரோஜன் யுத்தம் வரக் காரணமாயிற்று! !

(தொடரும்)

 

 

 

 

2 responses to “உலக இதிகாசங்கள் – இலியட் எஸ் எஸ்

  1. எவ்வளவு தெளிவான உரைநடையில் கடினமான ஓர் இலக்கியத்தின் விளக்கத்தைக் தொடங்கியிருக்கிறார் சுந்தர்ராஜன்! குமுதம் எஸ் ஏ பி அவர்களின் முன்னுரையில் இலியாட்- ஒடிஸி மொழிபெயர்ப்பை நான் முழுப்புத்தகமாகப் படித்திருக்கிறேன். ஆசிரியர் பெயர் மறந்துவிட்டது. ஆனால் அதைவிட மிகவும் சுலபமாக மனதில் பதியும் வண்ணம் குவிகம் ஆசிரியர் அளித்திருப்பது மிகவும் போற்றத்தக்கது.

    Like

  2. ஹோமரின் இலியட்டை இவ்வளவு எளிமையாக. இனிமையாக. மறக்க இயலாத வகையில் தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளத்தக்க. சரளமான நடையில் ராமாயாண மகாபாரத காவிய ஒப்பு நோக்கி சொல்லியுள்ள திரு.சுந்தர்ராஜன் அவர்களுக்கு மனம் கனிந்த. பாராட்டுகள்.இப்படி ஒரு கட்டுரையை வாசிக்க. வாய்ப்பளித்த குவிகம் தளத்திற்கு கைககுவித்து நன்றியை தெரிவிக்கிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.