அந்த விமான நிலையமே களைகட்டி இருந்தது.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் சாரை சாரையாக அந்த எக்ஸிட் கேட் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
வெளியே வருகின்ற பயணிகளை வழிமறித்து.’ஸார்.. டாக்ஸி வேண்டுமா.. எங்கே போகணும்..’ என்று நச்சரித்துக் கொண்டிருந்த டாக்ஸி டிரைவர்கள் ஒரு புறம்…
வருகின்ற பல பயணிகளை வரவேற்கக் குழுமியிருந்த உறவுகளின், ‘ஹாய்’…’ஹே’.. ‘ஹான்ட்ஸம்’… ‘ஆஸம்’.. ‘பெர்·பெக்ட்’.. ‘பியூட்டி·புல்’… ‘சான்ஸே இல்லே’.. ‘இப்படி
இளைச்சுட்டியே’.. என்ற பலவாறான ஆவேசக் கூச்சல்கள்.. கைகுலுக்கல்கள்… அணைப்புக்கள்.. அன்பு முத்தங்கள்..’ ஒரு பக்கம்…
வருகின்ற விருந்தினர்களின் முகம் தெரியாமல், அவர் பெயரோ., அவர்களை அழைக்க அனுப்பிய கம்பனியின் பெயரோ.., முதலாளிகளின் பெயரோ.., கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட அட்டைகளை வருபவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ப்ரைவேட் கார் டிரைவர்கள் ஒரு பக்கம்….
அந்த விமான நிலையத்தின் எக்ஸிட் கேட் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.
அந்த ப்ரைவேட் டிரைவர்கள் மத்தியில், ஒரு புத்தகத்தை (வருகின்ற விருந்தாளி எழுதி இருக்கக் கூடும்) உயரப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் டிரைவர் மாணிக்கம். வருகின்ற ஒவ்வொரு பயணியின் முகத்தை ஆவலோடு
பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு ப்ரீ·ப் கேஸை சுமந்து கொண்டு ஸ்டைலாக நடந்து வந்த இளைஞன் ஒருவன், ப்ரைவேட் டிரைவர்கள் இருந்த பக்கமாக ஒவ்வொரு போர்டாக பார்த்துக் கொண்டே
வந்து, மாணிக்கம் உயரத் தூக்கிப் பிடித்திருந்த புத்தகத்தைப் பார்த்து சில விநாடிகள் நின்றான் தயங்கியபடியே..
‘நாம் வரவேற்க வந்த பயணி இவராகத்தான் இருக்க வேண்டும்’ என்று அனுமானித்த மாணிக்கம் சிறிது முன்னால் வந்து.. ‘ஸார்… நீங்க… மிஸ்டர் பிரபாகரன்தானே..’ என்றான்.
வாயின் கடைக் கோடியில் வழிந்த ஒரு புன்முறுவலோடு தலையை மெதுவாக ‘ஆம்’ என்று அசைத்தான் அவன்.
‘வாங்க ஸார்.. பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா..’ என்றபடியே அவன் ப்ரீ·ப் கேஸை வாங்க கை நீட்டினான்.
‘நோ..நோ.. பரவாயில்லே..’ என்றபடியே மாணிக்கத்தின் பின்னால் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு நடந்தான்.
‘டிரைவர்.. உங்கள் பெயர்..?’
‘என் பெயர் மாணிக்கம் ஸார்…’ என்றபடியே அந்த இளைஞனுக்குக் கார்க் கதவைத் திறந்து விட்டான்.
இளைஞனும் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு, ‘ரொம்ப வெயிலா இருக்கு இல்லே…’ என்றான்.
‘ஆமா.. ஸார்… நைட் நல்ல மழை இருக்கும்னு நினைக்கிறேன்’
கார் புறப்பட்டது.
‘இன்னிக்கு காலையில் இருந்து பரந்தாமன் ஐயா உங்களைப் பற்றியேதான் பேசிட்டிருந்தார். வீட்டு உள்ளுக்கும் வெளிக்குமா இருப்புக் கொள்ளாமல் நடந்துட்டே இருக்காரு..சீக்கிரம் போகலாம்.. அவர் வெயிட் பண்ணிட்டிருப்பாரு..’
‘நம்ம வீடு இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்..?’
‘என்ன ஸார்.. ஒரு நாப்பது கிலோ மீட்டர் இருக்கும்..’
‘இப்பல்லாம் ஏர்போர்ட்டை ஸிடிக்கு வெளியிலே வெகு தூரத்துலே வெச்சுடறாங்க… இந்த டிரா·பிக்லே ஸிடிக்குள்ளே போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடுது.. ஹாரிபிள்..’
‘என்ன ஸார் செய்யறது..’ என்றான் மாணிக்கம்.
‘ மாணிக்கம் நாம வீட்டுக்குப் போற வழியிலே ஒரு மால் இருக்கு இல்லே… ‘
‘ஆமா ஸார்… பிக் பஸார்..’
‘அங்கே ஒரு ஐந்து நிமிஷம் நிறுத்தணும்.. வர அவசரத்துலே ஸாருக்கு ஒண்ணுமே வாங்காம வந்துட்டேன்.. கை வீசிட்டுப் பொனா நல்லா இருக்காது இல்லே’
‘சரி ஸார்.. அங்கே நிறுத்தறேன்..’ என்றான் மாணிக்கம்.
இளைஞனின் கைபேசி சிணுங்கியது.. ‘ஆமா.. ஒரு ஐந்து நிமிடம் பிக் பஸாரிலே இறங்கிட்டு அப்புறம் உடனே வந்துடறேன்’ என்றான் இளைஞன்.
‘பரந்தாமன் ஸாராகத்தான் இருக்கணும்.. அப்பப்பா.. அப்படி ஒரு பற்றுதலா இவர் மேல்..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மாணிக்கம்.
விமான நிலையத்திலிருந்து ஒரு முப்பது கிலோ மீட்டர் ஓடியபின், மெதுவாக அந்த ‘பிக் பஸார்’ காம்ப்ளக்ஸில் காரை நிறுத்தினான் மாணிக்கம்.
‘ஸார்.. சீக்கிரம் வந்துடுங்க.. ஐயா வெய்ட் பண்ணிட்டிருப்பாரு..’
‘ஐந்தே நிமிடம்தான்.. கவலைப்படாதே.. இதோ வந்து விடுகிறேன்..’ என்று கார் கதவைத் திறந்து கொண்டு அந்தக் காம்ப்ளக்ஸ¤க்குள் நுழைந்தான் ப்ரீ·ப் கேஸ¤டன்.
ஐந்து நிமிடம் ஆயிற்று.. பத்து நிமிடம் ஆயிற்று… அரை மணி நேரம் ஆயிற்று.. அந்த இளைஞனின் சுவடே தெரியவில்லை..
‘ஐயோ.. என்னாச்சு அவருக்கு..எங்காவது வழி தவறி காரைத் தேடிக் கொண்டிருக்கிறாரா.. ‘ என்று கார்க் கதவை பூட்டிக் கொண்டு அந்தக் காம்ப்ளக்ஸில் நுழைந்து அவரைத் தேடலானான் மாணிக்கம்.
அந்தக் காம்ப்ளக்ஸ் முழுதும் தேடியும் அவனைக் காணவில்லை..
‘அடப் பாவமே.. ஐயாவுக்கு என்ன பதில் சொல்றது..? கூட்டிட்டு வந்தவரை இப்படித் தவற விட்டுட்டோமே..’ என்று செய்வதறியாது திகைத்து நின்றான்.
அவன் கை பேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்தான். பரந்தாமன்..
‘மாணிக்கம்.. எங்கே இருக்கே.. என்ன பண்ணிட்டிருக்கே?’
‘ஸார்.. பிரபாகரன் ஸார் பிக் பஸாருக்குப் போய் ஏதோ வாங்கணும்னு சொன்னாரு.. அவரை பஸாருக்குக் கூட்டிட்டு வந்தேன்.. அவர் உள்ளே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகுது.. ‘ஏண்டா.. இன்னும் காணோமே என்று நானும் எல்லா இடத்துலேயும் தேடிப் பார்த்துட்டேன்.. அவர் ஆளையே காணோம்..’ என்றான் மாணிக்கம் சிறிது பயந்த குரலில்.
‘என்ன.? பிரபாகரனைக் கூட்டிட்டு வந்தியா.. அவர் வெளியிலே வர கொஞ்சம் நேரம் ஆயிடுத்து.. வெளியிலே வந்து பார்த்தா யாரையும் காணம். அப்புறம் ஒரு டாக்ஸி
பிடிச்சிட்டு வந்தார். அவர் வந்து அரை மணிக்கு மேலே ஆயிடுச்சு. நீ யாரைக் கூட்டிட்டு வந்தே.. யாரோ உன்னை ஏமாத்தி லி·ப்ட் வாங்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன். நீ இப்போ எங்கே இருக்கே.. அட்லீஸ்ட் நம்ம காராவது
இருக்கா.. இல்லே அதையும் அடிச்சிட்டுப் போயிட்டானா’
‘இல்லே ஸார்… நான் கார்லதான் உட்கார்ந்திருக்கேன்’
‘சே… இப்படி சொதப்பிட்டியே.. சரி நீ கூட்டிட்டு வந்த ஆளு இப்ப அவன் வீட்டுக்குப் போய், நீ ஏமாந்த விஷயத்தைச் சொல்லி ·பாமிலியோட சிரித்தபடியே சாப்பிட்-
டிட்டிருப்பாரு.. நீ பத்திரமா வீட்டுக்கு வந்து சேரு.. இதுக்குத்தான் நீ கிளம்பும்போது, அவரைக் காரிலே ஏத்தறதுக்கு முன்னாலே ‘உங்க பெயர் என்ன’ன்னு கேட்டு கன்·பர்ம் பண்ணிட்டு, கூட்டிட்டு வான்னு திரும்பத் திரும்பச் சொன்னேன். அப்படியும் கோட்டை விட்டுட்டியே.’ என்றார் பரந்தாமன்.
சுருக்கென்றது மாணிக்கத்திற்கு. எப்படி அவர் பெயரைக் கேட்பது என்று ‘நீங்க.. பிரபாகரன்தானேன்னு..’ கேட்டான். ‘நீங்க..’ என்று நிறுத்தி அவரை பெயரைச் சொல்ல விட்டிருக்க வேண்டும்.. அப்படிச் செய்திருந்தால் இந்தத் தவறு
நடந்திருக்காது. அவனுடைய தயக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் அந்த இளைஞன்.
தன் மடமையை நினைத்து தன்னையே நொந்தவாறு காரை ஸ்டார்ட் செய்தான் மாணிக்கம்.