தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே…..
இரவின் அமைதியில் ஆலயமணி படப் பாடல் ஜானகியின் குரலில் குழைந்து வந்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசனின் பாடல். கேட்டபடியே, தூங்கிவிடக் கூடிய மெல்லிசை! இருந்தாலும், தூக்கம் வந்தால்தானே? தூக்கமின்மை (Insomnia) ஒரு நியூசென்ஸ்!
“ராவிக்கெல்லாம் சுத்தமாத் தூக்கமே கெடையாது சார். நெல்லாத் தூங்கி ரொம்ப நாளாச்சி சார்” என்னும் முதியவரிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.
“எவ்வளவு நாளாக அல்லது மாதங்களாகத் தூக்கம் இல்லை?”
“படுத்தவுடன் தூக்கம் வராமல், லேட்டாக, 12 மணி, ஒரு மணி போல தூக்கம் வருகின்றதா?” (கவலை, மன அழுத்தம், ரீயாக்டிவ் டிப்ரஷன்)
“படுத்தவுடன் தூங்கி, அதிகாலையில் மூன்று, நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடுகின்றதா?”(என்டோஜினஸ் டிப்ரஷன்)
“தூக்கத்தின் நடுவில் அவ்வப்போது விழித்து, நேரமாகாமல் திரும்பத் தூங்க முயற்சிக்கிறீர்களா?”
“வேறு ஏதாவது நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா?”
முந்தைய இரவு தூங்காமல், என் கேள்விகளைக் கேட்டதும், ‘கொட்டாவி’ விடும் ஆத்மாக்களும் உண்டு – கேள்விகளில் குற்றம் இல்லை – தூக்கம் போதாமல், மறுநாள் பகல் நேரத் தூக்கத்தின் நுழைவாயில் அந்தக் கொட்டாவி!
“தூக்கமே வருவதில்லை சார்” – அடிக்கடி கேட்கும் வருத்தம் தோய்ந்த குரல்கள்!
60. வயதுக்கு மேல் முதியவர்களுக்கு(10-30%)த் தூங்குவதில் சிரமங்கள் இருப்பதாக அறிவியல் குறிப்பு ஒன்று சொல்கிறது. தூக்கமின்மை ஒருவித மன உளைச்சலைத் தரவல்லது. தூங்காமல் இருப்பதைவிட, தூக்கம் வராமல், கடிகாரத்தை முறைத்தபடி, படுத்திருப்பது அதிக மனச் சோர்வையும், துயரத்தையும் தருகின்றது.
நாற்பது வயதுக்கு மேல், மனிதன் வாழும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும், சுமார் 27 நிமிட இரவுத்தூக்கம் குறைந்து விடுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் – அவர்கள் தூக்கம் வராமல் புரண்டு படுத்தவாக்கில் கண்டுபிடித்திருக்கலாம்! வயதானவர்களுக்கேயான சில வியாதிகளிலும், மனோவியாதிகளிலும் தூக்கம் குறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். சில வியாதிகளுக்கென எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் தூக்கம் கெடும் அபாயம் உண்டு.
தூக்கத்தின் நான்கு நிலைகள் – விழிப்பு, மேலோட்டமான உறக்கம்( light sleep), ஆழ்ந்த உறக்கம்(deep sleep), REM (rapid eye movement) உறக்கம் – இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் அதே வரிசையில் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு சுழற்சியும் 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு வருவது அரிது. (கும்பகர்ணன் இந்த ஆழ்ந்த நிலை உறக்கதில் ஆறு மாதம் கூட இருந்திருக்கிறானே – அது என்ன மாதிரி ஸ்லீப் சைக்கிள் என தூக்கம் வராதவர்கள் ஆராயலாம்!). REM உறக்க நிலையில்தான் கனவுகள் வருகின்றன. இதில், “அடிச்சுப் போட்டா மாதிரி தூங்கினேன்யா!” என்கிற ஆழ்ந்த உறக்க நிலைதான், நமக்குத் தேவையான ஓய்வையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது.
தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவது அவசியம். மறுநாளின் சுறுசுறுப்புக்கும், புத்துணர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது! இரவில் தூக்கம் குறைந்தால், மறுநாள் பகல் பொழுதில் தூக்கம் வரும் வாய்ப்புகள் அதிகம். பலஹீனம், எளிதில் கோபம் அடைதல், மன உளைச்சல் ஏற்பட்டு, பகல் பொழுதில் ஒரு வித இறுக்கமும், எரிச்சலும் தோன்றுவதும் சாத்தியமே! பல வாகன விபத்துகள், இந்தப் பகல் நேர துக்கத்தினால் ஏற்படுபவையே. இரவு முழுதும் லாரி ஓட்டுபவர்கள், விடியற்காலையில் தங்களையறியாமல், சில நொடிகள் தூங்கிவிடுவதுதான் அதிகாலை சாலை விபத்துகளுக்குக் காரணம் என்கிறது ஓர் ஆய்வு.
தூக்கம் வராமல் அவஸ்தைப் படுவோரின், ‘இத்தனை மணி நேரமா தூங்கவில்லையே’ என்கின்ற கவலையே அவர்களது தூக்கத்தைத் துரத்திவிடும்! சிறிது நேரத்திற்கொருதரம் – 10.00, 10.30, 10.38, 11.15 என – டைம் பார்த்து, தூங்கும் நேரத்தைக் கணக்கிடுவதிலேயே இரவு முழுதும் கழிந்துவிடும். (சரியாக கணக்கு வராதவர்கள், கால்குலேட்டர்களை உபயோகிக்கலாம்!). தூங்கி, விழித்துக் கடிகாரம் பார்த்தால், ‘சே.. அப்படியே இருக்கு…’. ! சிலர், காலை சீக்கிரம் எழுந்திருக்க அலாரம் வைத்துவிட்டு, தூங்காமல், ‘எப்போது அடிக்கும்’ எனக் காத்திருப்பதும் உண்டு!
ஏதாவது ஒரு பொசிஷனில் – கை கால்களை மடக்கியபடி, ஒருக்களித்துப் படுத்தபடி, நேராக சீலிங் ஃபானைப் பார்த்தபடி, குப்புறப் படித்தபடி (பெரிய தொந்தி இல்லாதவர்கள் மட்டும் முயற்சிக்கலாம்!) – தூக்கம் வருகிறதா என்று அலைபாய்வதில், அருகில் இருப்பவர் தூக்கத்தைக் கெடுத்த புண்ணியம் கிடைக்கலாம்!
ஒல்லித் தலகாணி, குண்டுத் தலகாணி, ஒரு பக்கம் மட்டும் மேடான ‘சர்வைகல் ஸ்பாண்டைலோசிஸ்’ ஸ்பெஷல் தலகாணி, கழுத்தைப் பக்கவாட்டில் அசைக்கமுடியாதபடி, அரைச் சந்திர வடிவ தலகாணி, ஒத்து ஊதுபவர் போல ஊதிப் பெருக்கிய ‘ஏர்’ பில்லோ எனப் பலவகையான தலையணைகளுக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, நம்மைத் தழுவ மறுக்கும் தூக்கம் துயரமானது!
தூக்கம் வராமல், அடிக்கடி எழுந்து சென்று பாத்ரூம் செல்வது ஒரு தொல்லை என்றால், “மெதுவா, பார்த்து… பிடித்துக்கொண்டு உட்கார்ந்து போங்கள்” என்னும் மனைவியின் அரைத்தூக்க எச்சரிக்கை ஒலி, அதைவிட எரிச்சலூட்டுவது!
தூக்கத்தில் கை கால்களை வேகமாக ஆட்டுவது ஒரு வகை வியாதி – அனிச்சையான இவ்வகை ஆட்டங்களினால், தன்னையோ, அருகில் படுத்திருப்பவரையோ காயப்படுத்திவிடும் அபாயம் உண்டு! முதல்நாள் கோபத்தின் தொடர்ச்சியாக, தூக்கத்தில் அடிபடும் கணவர்களோ அல்லது மனைவிகளோ கவனமாக இருக்க வேண்டி, பொது நல சேவையாக இது சொல்லப்படுகின்றது!
தூக்கத்தில் நடக்கிற வியாதி – சோம்னாம்புலிசம் – என்பது, தூக்கம் கலையாமல், தன் சுய நினைவு இல்லாமல், தூக்கத்திலிருந்து எழுந்து நடப்பது! அந்த சமயத்தில் அவர்கள் செய்வது எதுவும் அவர்களுக்கு நினைவில் இருக்காது.
பொதுவாக 8 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளையே இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்.
சில குடும்பங்களில், மரபணு சார்ந்து இந்நோய் வரக்கூடும். அத்துடன், தூக்கமின்மை, அசதி, மன அழுத்தம் ஆகியவற்றாலும் வரக்கூடும். சில ஜுரங்கள், சில மருந்துகளாலும் தூக்கத்தில் நடப்பது சாத்தியமே. சோம்னாபுலிசம் அடிப்படையில், பல திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் தூக்கத்தில் நடப்பது மட்டுமே உண்மை, மற்ற சம்பவங்கள் எல்லாம் கதாசிரியரின் கற்பனையே!!
அருகில் மறுபாதி அமைதியாகத் தூங்குவதும், கல்யாண வீட்டில் சத்தத்துக்கிடையில் தூங்குவதும், ரயில், பஸ் பயணங்களில் ஏறி அமர்ந்தவுடன் தலை சாய்த்து (பெரும்பாலும் அருகில் முழித்துக்கொண்டிருக்கும் நம் தோள் மீதாக இருக்கும்!) தூங்கி விடுவதும், ப்ளாட்ஃபாரத்தில் டிராஃபிக் இரைச்சலில் சலனமின்றித் தூங்குவதும், அவரவர் வாங்கி வந்த வரம்! காது, மூக்கு வழிப் புகை விடுவதில் பலனில்லை!!
இரண்டு பக்கமும் ஆழ்ந்த நித்திரையில், ‘ஜுகல்பந்தி’ குறட்டை ஒலி, நம் நித்திரைக்கு ஊதப்படும் சங்கொலி!
சரியான தூக்கத்துக்கு, ஓரளவுக்கு உதவக்கூடிய சில ‘டிப்ஸ்’:
- காப்பி, டீ போன்ற ஸ்டிமுலேடிங் பானங்களை மாலை 6 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள்.
- டி.வி., செல் போன், லேப் டாப், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் நண்பர்களுக்குத் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக விடை கொடுத்துவிடுங்கள். (முக்கியமாகப் பாம்புக் கண்களுடன் வரும் ஹீரோயின், வில்லிகள் பயமுறுத்தும் சீரியல்களைத் தவிர்த்தல் நலம். செய்திகள், முகநூல் அக்கப்போர்கள், கட்சி, ஜாதி சார்புடைய விவாதங்கள் போன்றவற்றைப் படுக்கப் போகுமுன் தவிர்ப்பது அவசியம்!)
- தூங்காவிட்டால் வரும் உடல்நலக் கேடுகளை – obesity, strokes, heart attacks, anxiety, depression போன்றவைகளை எண்ணித் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!
- கூடிய வரையில், படுக்கும் நேரத்தையும், காலையில் விழிக்கும் நேரத்தையும் சரியாகக் கடைபிடிக்கவும்.
- படுக்கையறை அதிக குளிரூட்டப்பட்டதாகவோ அல்லது அதிக வெப்பமுடனோ இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
- படுப்பதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உடற்பயிற்சிகளை முடித்துக்கொள்ளவும்.
- தூங்குவதற்காக ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்க்கவும் – ஆல்கஹால் தூக்க வியாதிகளையும், தூக்கமின்மையையும் தரவல்லது!
- இனிமையான இசையை – வீணை, ஃப்ளூட் போன்ற instrumental இசையை – மெல்லியதாகத் தூங்கும் அறையில் கசிய விடுங்கள்!
அப்படியும் தூக்கம் வரவில்லையா? பால்கனியில் அமர்ந்து, வானத்து நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குங்கள்!
70 வருடங்களுக்கு முன் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் “திகம்பர சாமியார்” (வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய துப்பறியும் நாவல் – த்ரில்லர் – 11 வேடங்களில் நம்பியார் கதாநாயகனாக நடித்த சூப்பர் படம்; இன்றும் வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்!) படத்தில், ஒருவர், நான்கு நாட்கள் தூங்காமல் இருந்தால், ஐந்தாம் நாள் அவரிடமிருந்து ரகசியங்களை வாங்கி விடலாம் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பார்கள்! டி.பாலசுப்ரமண்யத்தை நாட்டியம், பாடல் என ஆசைகாட்டி, தூங்கவிடாமல் செய்து, அவரிடமிருந்து உண்மைகளை வாங்கி விடுவார்கள்! ஜாக்கிரதை, தூங்காமல் இருந்து, ரகசியங்களையெல்லாம் சொல்லிவிடாதீர்கள்!
தூக்கமே வரவில்லையென வருத்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு டாக்டர் ஒரு வழி சொன்னார். ”கண்ணை மூடிப் படுத்து, ஒன்று, இரண்டு என எண்ணிக்கொண்டிருங்கள் – தானாகத் தூக்கம் வந்துவிடும்”. மறுநாள் காலை மருத்துவமனை வந்த டாக்டர், நர்சிடம் அந்த நோயாளி பற்றி கேட்க, ‘ஒன்றும் குழப்பமில்லை. ஏதோ மந்திரம் முணு முணுத்தபடி அவர் படுத்திருந்தார்’ என்றார் நர்ஸ். நோயாளியின் படுக்கையருகே சென்ற டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது….. கண்ணை மூடியபடி அந்த நோயாளி எண்ணிக் கொண்டிருந்தார் ..’ பதினோரு இலட்சத்து, எண்பத்தி மூணாயிரத்து, அறுநூற்றி இரண்டு….’ – தூக்கம்தான் வரவில்லை!
இரவு 10 மணிக்கு ஒரு சூடான காபி அருந்திவிட்டு, எழுத்து வேலைகளை கவனித்துவிட்டு, கடைசியாகக் கொஞ்சநேரம் WION tv பார்த்துவிட்டு சுமார் 12 மணிக்கு நான் உறங்கப் போகிறேன். உடனே தூக்கம் வந்துவிடும். காலை 5.30 க்கு எழுந்து விடுவேன். பகலில் ஒருமணி நேரம் தூங்குவேன். என்னைப் போன்றவர்களைப் பற்றி டாக்டர் ஒன்றுமே கூறவில்லையே!
LikeLike