. ( தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் காவலர் கம்சனிடம் தெரிவித்தனர். தன்னைக் கொல்லப் பிறந்த குழந்தையைக் கொல்வதற்குக் கம்சன் விரைந்தான்)
குழந்தை பிறந்த சேதி கேட்ட கம்சன் நிலை
வீரரும் சேதி சொல்ல,
வெடுக்கெனத் துள்ளிக் கம்சன்
ஆரஞர் உற்றான்; ஓங்கும்
ஆத்திரம் மிஞ்சிக் கெட்டான்;
சாரமே விட்டு வெற்றுச்
சக்கையைக் கொள்ளும் மூடன்,
ஈரமே நெஞ்சில் இல்லான்,
இடியென முழங்க லானான்:
( ஆரஞர் – பெருந்துன்பம்)
“முடிவினைத் தருவ தற்கு
மூண்டதோ வேளை? பிள்ளை
வடிவமோ? உயிரைக் கொள்ள
வந்தவோர் கூற்றம் தானோ?
நெடியதோர் பகையை நானே
நேரினில் சென்று கண்டு,
நொடியினில் கொன்று தீர்ப்பேன்;
நோய்வரும் முன்னே காப்பேன்!”
தலைமுடிக் கற்றை, காற்றில்
தாவிடும் அரவாய் மாற,
உலைக்களத் துருத்தி யாக
உள்ளெழு சினமே மேவ,
நிலைகுலை கம்சன் மூச்சு
நெருப்பென வெம்மை வீசக்
கொலைபுரி நெஞ்சம் கொண்டு
குறுகினான் மிகவெ குண்டு
( அரவு – பாம்பு)
கவிக்கூற்று
மனத்தினில் எரியும் தீயின்
வளரொளி முகத்தில் நீளும்;
வனத்துறு புலியாய்ச் சீறும்
வஞ்சகம் அறிவை மீறும்;
சினத்தினைப் பொருளாய்க் கொள்ளும்
தீமையைப் பயனாய் அள்ளும்
வினைப்பயன் விதியாய்த் துள்ளும்
வீணனை ஒருநாள் கொல்லும்
தேவகி வேண்டுகோள்
புயலெனச் சிறைக்குள் சென்றான்
பூங்கொடி நடுங்கி நின்றாள்
கயலெனும் கண்ணும் நீரைக்
காரெனப் பொழியச் சொன்னாள்,
“செயலினை எண்ணிச் செய்வாய்
சிறியபெண் மகவைப் பாராய்,
அயலவர் இகழ்வர் அன்றோ
அருமரு மகளைக் கொன்றால்”
கம்சனின் கொலை முயற்சி
கதறினாள் தங்கை, கம்சன்
காதிலே கொள்ள வில்லை.
உதறினான் வலிய கையை,
உற்றபெண் மகவின் கால்கள்
மதியிலான் பற்றிக் கொண்டான்
மாய்த்திட எண்ணிக் கல்லில்
சிதறியே போவ தற்குச்
சீறியே ஓங்கி னானே!
மாயை துர்க்கையாய்த் தோன்றுதல்
ஓங்கிய கையை நீங்கி,
உயரமே குழந்தை ஏகி,
ஆங்கொரு துர்க்கை யாக
ஆயுதம் பலவும் ஏந்தித்
தாங்கிய எட்டுக் கைகள்
தாருடன் அணிகள் பூண்டு,
வீங்கிய ஒளியைச் சிந்தி,
விண்ணிலே சிரிக்கக் கண்டான்!
( தார் – மாலை)
( வீங்கிய – மிகுந்த)
( தொடரும்)
அற்புதம் கண்முன்னே காட்சிகள் விரிந்தோடின
LikeLike
Miga arumai. Thiraiyil padam partha unarvu vazhga nalam
LikeLike