கனிதல் – ஜனநேசன்

மனைவியை அடக்க பரிகாரம் !

மனைவியிடம்   தோற்றுக் கொண்டிருக்கிறேன்.   – “பெருமையா சொல்றீங்களா,  இல்ல ,பொறாமையால், ஆற்றாமையால் சொல்றீங்களா” ன்னு  நீங்க  முணங்குறது  கேட்குது. இந்தத் தோல்விக்கு பூர்வகதையும்   உண்டு. அந்தப் புள்ளியிலிருந்து  சொல்றேன். நீங்களே புரிஞ்சிக்குவீங்க.

 

வருசந்தோறும்  போகி வருமுன்னே ,  எங்க வீட்டில புகை கசிந்து கனன்று  பகையாகவும்  வெடிக்கும்.  வீட்டில் வராந்தா, வரவேற்பறையில்  தொடங்கி படுக்கை அறை வரை அங்கங்கே மூலைகளில் மினியேச்சர் அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டிடமாக நிற்கும் புத்தக அடுக்குகள் ; பழைய ஆங்கில,தமிழ் செய்தித்தாள்கள் ,வாராந்திர, மாதாந்திர இதழ் அடுக்குகள்  ; அவற்றை சுவரோடு இணைத்து வலைபின்னி கொசுக்களை ,சிறுபூச்சிகளை சிக்கவைத்து உண்டுவாழும்  சிலந்திகளை,  குறுக்கும் மருக்குமாக ஓடித்திரியும்  பல்லிகளையும், அதன் வயிற்றில் முத்துபோல மின்னும்  முட்டைகளோடு பார்க்கும்போது   மனைவி மனதில் ஆவேசம் பொங்கும்.

”ஏங்க  நாம வீட்டில  மனுசராத்தான் வாழ்றமா .இல்ல பல்லி ,சிலந்தி, கரப்பான்களோட குடித்தனம்  நடத்துறமா ?பாவம், அந்த வேலைக்காரம்மா ஒட்டடை களைஞ்சு ,கூட்டி சுத்தம் பண்ணி துணிமணிகள் துவைச்சு காயப் போட்டுட்டு  வர்றதுக்குள்ள சிலந்தி மறுபடியும் வலையை விரிச்சு ஊஞ்சலாடுது. பல்லிக பூச்சிகளுக்காக  நாக்கை நீட்டித்  தவம் கிடக்குதுக! அந்தம்மா நொந்து புலம்புது  “

பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடும்  என்னை விசித்திரப்பிறவி  போல பார்ப்பாள்; பல்லி எங்கிருந்தோ உச் கொட்டும். நின்று பேச நேரமில்லாமல் தலையில் அடித்துக்கொண்டு   பணிக்கு விரைவாள். அவள் அடக்கிய கோபம் போகி சுத்தத்தின் போது வெடிக்கும்.

வார, மாத இதழ்களை  எடைக்குப்போட்டு கிடைக்கும் தொகையை  சிறுவாட்டு கணக்கில்  சேர்த்துக் கொள்ளும்போது மட்டும் மனைவி , என்னை  எதோ பயனுள்ள ஜீவனாக  பார்வையால்  வருடியவாறே ,                    ” ஏங்க, இந்த புத்தகக் கட்டுகளையும்  கொஞ்சம் ஒதுக்கிக்  கொடுத்தா  எடைக்குப் போடலாமில்ல? இடத்தை அடைக்காம வீடாவது சுத்தமாகும்  பூச்சிகள் அடையாமலிருக்கும் !“  விநயமா  கேட்டாள்.

“ கொஞ்சம் பொறு; இதில சில முக்கியமான புத்தகங்களை  எடுத்து புத்தக அலமாரியில வச்சிட்டு, மீதியை  யாராவது படிக்கிறவங்களுக்கோ , நூலகத்துக்கோ கொடுத்துறலாம். இடம் சுத்தமாயிரும். “

“ யாருக்கோ ஓசியா கொடுக்கிறதுக்கு , எடைக்குப் போட்டாலும்  சில்லறைச் செலவுக்கு  ஆகுமில்ல. “

“ சரி, இப்போ உனக்கு என்னக் கொறைச்சல் ?  தேவையான எல்லா சாமான்களையும் வாங்கிப் போட்டுர்றேன். கைசெலவுக்கு பீரோவில வச்சிருக்கிற காசை எடுத்து செலவு பண்ணிக்கலாமே .நான் ஒளிச்சா  வைக்கிறேன்  , உன்கிட்ட கணக்கா   கேட்கிறேன்  ? “

“ ஆமாம், இந்த தேனொழுகிற  பேச்சுக்கு கொறைச்ச இல்ல .என்னோட எ.ட்டி.எம் . கார்டைக் கொடுத்திற வேண்டியது தானே  “

“அந்த கார்டை பாதுகாப்புக்காகத் தானே நான் வச்சிருக்கேன்; இந்தக் காலத்தில கொஞ்சம்  அசந்தா   எல்லாத்தையும்  முழுங்கி ஏப்பம் விட்டுருவான்களே ; அதுக்காகத்தானே பத்திரமா வச்சிருக்கேன். நீ கேட்டு என்னைக்காவது  பணம் கொடுக்காம இருந்திருக்கேனா “                                       “ இந்த மகாபாரதமெல்லாம்  வேணாம். அந்த மூலையில இருக்கிற புத்தகங்களை  எடுத்து ஒட்டடை  அடிச்சு சுத்தம் பண்ணிக் கொடுங்க. “

இப்படி ஊடலும் உரசலுமா புகையற போகிப் புகை பழையபேப்பர்காரன் கொடுக்கிற பணத்தில்தான் கொஞ்சம் தணியும். ஆனாலும்  புத்தகங்களைப் பார்க்கும்போது எல்லாம் கனரும். இந்தக் கங்கை  நிரந்தரமா அணைக்க யோசிக்கலானேன்.

அந்த வருசம்பூரா  வாங்கிய புத்தகங்களில் , வைத்திருந்து  திரும்பத் திரும்ப  எடுத்து வாசிக்க  சில புத்தகங்களை மட்டும் எடுத்து துடைத்து புத்தகஅலமாரியில் வைத்து மூடினேன் ; மீதியை  உள்ளூர் நூலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

நூலகர் ; “ நன்றி சார். ரெண்டுவருசமா  புத்தகம் எதுவும் வாங்க ஒதுக்கீடு இல்லை. கொரோனா காலத்தில் வாசகர் யாரும் வரலை. லைப்ரரி  திறக்கும் நாள்களில் பராமரிப்பு வேலை மட்டுமே பார்க்கிறோம். பேப்பர்களும் வரலை; பேப்பருக்கான தொகையில மாவட்ட அலுவலர் ஒப்புதலோடு பத்து பனிரெண்டு மாதநாவல்களைத் தான் வாங்கிப் போட்டுருக்கோம். அதைத்தான் பெண்கள் விருப்பமா வாங்கிட்டுப்போய்  படிக்கிறாங்க. “

அந்தப் புத்தகங்களை  வாங்கிப் பார்த்தேன்; பெண்களைக் கவரும்  ஈர்ப்பான தலைப்புகளில் மேலட்டையில் கவரும் பெண்கள் படத்துடன் புத்தகம்; திறந்தால் உள்ளீடில்லா லகுவான நடையில் பக்கங்கள் நகர்கின்றன. நெருப்பை நெருப்பால்  அணைக்கலாமுனு  யோசனை வந்தது. பேருந்துநிலையக் கடையில்  ரெண்டு குடும்பநாவல்களை வாங்கினேன்.

வீட்டில்  மனைவி  பழைய சேலைகளை எனது மேஜைமீது அடுக்கிக் கொண்டிருந்தாள் .    

 “என்ன பழைய சேலைகளைப் போட்டுட்டு புதுப்  பாத்திரங்கள் வாங்கப் போறீயா “                                                       

“இல்லங்க ,உங்ககிட்ட காமிச்சிட்டு வேலைக்காரம்மாவுக்கு கொடுக்கணும் ; பழசைக் கழிச்ச்சாத்தானே புதுசு வாங்கலாம் “ என்று  சிரித்தாள்.     

 “சரி, யாருக்காவது பயன்படட்டும் . நான் தான் இனி எச்சரிக்கையா சேலையை பார்த்து பேசாம ஆளைப்பார்த்து பேசணும் “                             “என்ன முணங்கிறீங்க. உங்களுக்கு இஷ்டமில்லையா ? “                               “ யாருக்காவது பிரயோஜனப்பட்டா சரிதான்.”                                     வாங்கிவந்த புத்தகங்களை மனைவியிடம் கொடுத்தேன். அட்டைப்படமே நல்லா இருக்கே !.என்று பக்கங்களைப் புரட்டினாள்;  வாசிக்கவும்  ஈசியா இருக்கே  என்றவள்   அரைமணியில்  ஒரு நாவலை  முடித்துவிட்டாள்.

அப்புறம்  இரண்டுநாள்  கழித்து வேறு  வேறு தலைப்புகளில்  இன்னும் நாலு நாவல்களை வாங்கிக் கொடுத்தேன். மனைவி உட்காரும் இடமெல்லாம்  புத்தகங்கள் கிடந்தன. வீட்டில் டிவி சீரியல்கள் ஓடவில்லை . ரெண்டு நாள்கள் கழித்துப்   பார்த்தேன் , மனைவி அருகில் புத்தகங்களைக் காணோம். எங்கே என்று கேட்டேன்; பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு வாசிக்கக் கொடுத்ததாகச் சொன்னாள்.

புரிபடாத புத்தகங்களை எப்படி வாசிப்பது? | book reading - hindutamil.in

மனைவிக்கு வாசிப்பு ருசி ஏற்பட்டதும் , ஓய்ந்த வேளைகளில்  எனது  அலமாரியிலிருந்து  புத்தகங்கள்  எடுத்து வாசித்தாள் . நான்  மாதநாவல்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டேன். அவள்  எனது புத்தக அலமாரியில்  அவளது ரசனைக்கான  புத்தகங்களை தேடி படிப்பதை  மேஜை மேலிருந்த  புத்தகங்களைப் பார்த்து புரிந்து கொண்டேன். மனைவியின்  வாசிப்பு  தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஐம்பதுவயசுக்கு மேல் மாதவிடாய் நிற்றலில் வரும் வலியும் சலிப்பும் அலுப்பும் முகத்தில்  தென்படவில்லை. முன்புபோல கடுகடுத்து பேசுவதுமில்லை. ஏதாவது  சொல்வதென்றால் புன்னகை பூசிய முகத்தோடு  அளவாகப் பேசுகிறாள். சரி எதோ மாற்றம் நடக்குது  என்று மனதுக்குள்  நகைத்துக் கொண்டேன்.

இந்நிலையில் கொரோனா  இரண்டாவது  அலையின் கொடுந்தொற்று  தாக்குவதாக அச்சுறுத்தலும் மீண்டும்  ஊரடங்கு அறிவிப்பும்  வந்தது. வேகமாகப் பறந்து புதிய தலைப்புகளில்  நான்கு நாவல்கள் வாங்கித்  தந்தேன். மனைவி ஓய்ந்த வேளையில்  அந்த புத்தகங்களை  புரட்டிய பத்தாவது நிமிடம் என்னிடம்  வந்தவள்                                           

“ஏங்க இந்த புத்தகங்களின் தலைப்பும் அட்டைபடமும் தான் வேற வேற  ; உள்ளே கதை ஒரேமாதிரிதான்   இருக்கு. அந்தக் காலத்து தேவர்பிலிம்ஸ் படங்கள் பார்த்தமாதிரி தான் . வேற நல்ல புத்தகங்களாகக் கொடுங்க.” என்று  அவளே என் புத்தக அலமாரிக்குப் போய்  வேறுவேறு எழுத்தாளர்களின் நாலு புத்தகங்களை   எடுத்து வந்து ,  காட்டினாள். நல்லா இருக்கும் வாசித்துப் பாரு என்றேன்.

ஊரடங்குகாலத்தில்  புத்தகங்களில்  முடங்கிக் கிடந்தோம். ஒவ்வொரு புத்தகத்தின்  சாரத்தையும் , படைப்பாளியின் தனித்துவத்தையும் சில வாக்கியங்களில் சொன்னாள். பாராட்டினேன் . அவளது புன்னகை அழகாக மிளிர்ந்தது.

கண்கள் சோரும்போது ,ஒரு மாறுதலுக்காக தொலைக்காட்சி பார்க்கலாமென்றால் கொரோனா தொற்று  அரசியலாகவே  இருந்தன. பார்க்க சகிக்கலை. எப்பவாவது பழைய நல்ல படங்கள்  போடும்போது  சேர்ந்து பார்ப்போம். இருவரும் அந்தந்தக்கால  நினைவுகளில் மூழ்கி  , கடந்தகால  சம்பவங்களை அசைபோடுவோம் . புதுப்பிறவிகளாக உணருவோம் . தொலைதூரங்களில் வாழும் பிள்ளைகளுடன் பேசுவோம்.   மனைவி அவர்களிடம் முன்னைவிட பதற்றம் குறைந்து   பக்குவமாக பாசமொழுகப்  பேசுவாள்.

ஓரளவு பழைய எழுத்தாளர்களை வாசித்தபின்   அலமாரியிலிருந்து  புதியவர்களின் புத்தகங்களைத்  தேடி   புரட்டினாள். மனைவியின்  வாசிப்பு வேகம்  என்னிலும்  முந்தியது . பழைய படைப்பாளிகளுக்கும்  தற்போது எழுதுபவர்களுக்கும்  ஒற்றுமை வேற்றுமைகளை பட்டியலிட்டாள். பழையவர்கள் வாழ்க்கைச் சூழலில் பிரச்சினைகளின்  தீர்வைக் கோடிட்டுக் காட்டுவார்கள்.புதியவர்கள்  தீர்வை வாசகரின் யோசனைத் திறனுக்கு  விட்டுவிடுகிறார்கள் “ என்று முத்தாய்ப்பாக  சொன்னாள். எனக்கு தலையில்  கர்வம் கூடியது. உச்சியை முகர்ந்து முத்தமிடும்  வயது தாண்டி விட்டது. நவீனமாக ஹைபை செய்து கொண்டோம்.

மனைவி, “ஏங்க இந்த எழுத்தாளர்கள் எல்லாம் உங்கள்  நண்பருகன்னு  சொல்லுவீங்க .ஏன் ஒருத்தரைக் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வரலை.?”                           

“எழுத்து ரசனை இப்பத்தானே உனக்கு வந்திருக்கு ;கொரோனா ஓயட்டும் ; இனிமே  ஒவ்வொருத்தரையா கூட்டிட்டு வர்றேன். வர்ற  சென்னை புத்தகத் திருவிழாவுக்குப்  போவோம். அங்க எல்லாரையும்  பார்க்கலாம்; பேசலாம் .”

சில எழுத்தாளர்களின் விவரிப்பையும் ,உவமைகளையும், பாத்திரங்களின்  உணர்வுகளை காட்சிப்படுத்தும் திறனையும் அடிக்கடி  சொன்னாள். எனக்கு  மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எழுத்தாளர்களை  கைப்பேசியில்  அழைத்து  எனது மனைவியை அறிமுகப்படுத்தி, பேசச் செய்தேன். என் மனைவியின் நயமான சுருக்கமான மதிப்பீடு கேட்டு அந்த எழுத்தாளர்கள் பேருவகை  யில் திளைத்தார்கள். ’ கொரோனாவில்  முடங்கிக் கிடந்த  எங்களுக்கு உங்க பேச்சு புத்துணர்ச்சி ஊட்டுது ‘ என்று அவரவர்  பாணியில்  சொன்னார்கள். வீட்டில் சந்தோஷ வெளிச்சம் பளிச்சிட்டது .

இப்போது எழுத்தாள நண்பர்களது பட்டியலோடும்  அவர்கள் வெளியிட இருக்கும் புத்தகங்களை வாங்க ரெண்டு பெரிய ‘பிக் ஷாப்பர்’ பைகளோடும்   தயாராக  இருக்கிறோம். மூன்றாவது கொரோனா அலை, ஒமிக்கிரானோடு  தாக்கப்போகிறது  என்ற எச்சரிக்கையில்  சென்னை புத்தகத் திருவிழா தள்ளிப் போனது. ஏமாற்றத்தைத்   தந்தது.

அரசுகளின் தடுப்பூசி நடவடிக்கைகளில்  முடக்கத்தில் கொஞ்சம்  தளர்வும்  தைரியமும் வர புத்தகத் திருவிழா  தேதியும்  வெளிவந்தது. முடக்கத் தளரவில்  அவரவர் அலுவலகம்  போய் வந்தோம். முதல் சனி,ஞாயிறில் புத்தகத்திருவிழாவுக்குச்   செல்ல  இரயிலுக்கும் பதிவு பண்ணி ஆயிற்று.

அந்தவார வியாழனன்று மனைவிக்கு  தலைவலி காய்ச்சல்னு துடித்தாள் . மருத்துவசோதனை செய்ததில்   தொற்று தாக்கியது தெரிந்தது  . அது கொரோனாவா, திரிபா, ஒமைக்கிரானா  என்பதை மருத்துவ சோதனையில் தெளிய நாளாயிற்று. என்றாலும் வயதானவர்களுக்கான  பக்கவிளைவுகள் தாக்காமலிருக்க அனைத்துவித தற்காப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டோம். நோயுற்ற மனைவிக்கு  பக்கத்தில் இருந்து முகக்கவசம் அணிந்தபடி   பண்டுதம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் . மனைவி அரைத்தூக்கத்தில் முணுமுணுத்தார்                     

 “ இனி அடுத்த புத்தகத் திருவிழா தான்….”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.