ராஜராஜன்- மும்முடிச்சோழன்
இராஜராஜன் நமது நாயகனாக இருக்கும் போது எழுதுவதற்கு நமக்கு என்ன குறை? சரித்திரத்துடன், சொந்த சரக்கையும் சேர்த்து ஒரு கலக்குக் கலக்குவோம்.
முன்கதை:
காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம். இந்த இடத்துக்குப் பயணப்பட்டு திரும்பிய அருண்மொழி, மாறன் என்ற மாவீரனை தன்னுடன் அழைத்து வந்தான்.
இனித் தொடர்வோம்.
உத்தம சோழன் சோழ மன்னனாக இருந்த போது, அருண்மொழிவர்மன் சும்மா இருக்கவில்லை. சோழப்படையைப் பலப்படுத்தினான். மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் பயின்ற போர்க்கலையை போதித்து, நல்லப் பயிற்சியைக் கொடுத்து, சோழர் படையைப் பலப்படுத்தினான். சேரனின் கடற்படை ஒரு தகர்க்கமுடியாத பலமாக இருப்பது அறிந்து – அதை விட பலமான கப்பற்படையை அருண்மொழி சிருஷ்டித்தான்.
வருடங்கள் 8 உருண்டோடின.
கி பி 985.
மதுராந்தகன் மறைந்தான்.
ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985.
அருண்மொழி பட்டாபிஷேகம் செய்து சோழ மன்னனானான் – ராஜராஜனானான்.
அந்நாளில், சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலை. ‘தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல’ என்று ராஜராஜன் கருதினான். தனது மூதாதையர் பாண்டியர்களை பல முறை வென்றும் – திரும்பத் திரும்ப முளைத்து எதிர்க்கும் பாண்டியரின் பலத்தை ஆராய்ந்தான். அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்தில் பயிற்சி பெற்றவர்களே என்று தெரிய வந்தது. அதனால்தான் 8 வருடமுன்பு, காந்தளூர்ச்சாலையைத் தானே பார்வையிட வந்தான். போட்டியிலும் கலந்து கொண்டான்.
அதை நாமும் பார்த்தோம். ரசித்தோம்!
ராஜராஜன் சேர, பாண்டிய, ஈழக் கூட்டணியின் வலுவை நன்கு அறிந்திருந்தான். இவற்றை ஒவ்வொன்றாக அழிக்கவேண்டும்.
காந்தளூர்ச்சாலை சேரனின் நேர் ஆளுமையில் இருந்தது.
வந்தியத்தேவருடன் ஆலோசனை செய்தான்.
முடிவு செய்தனர்.
சேரனுக்குச் செய்தி அனுப்புவோம்.
செய்தி இதுதான்:
“காந்தளூர்ச்சாலை உடனடியாக மூடப்படவேண்டும்”
ராஜராஜன் மாறனை அழைத்தான்.
“மாறா! நீதான் சேரனிடம் தூது செல்லவேண்டும்” – என்றான்.
“இக்கணமே புறப்படச் சித்தம் சக்கரவர்த்தி” என்றான்.
வஞ்சி மாநகரில் மாறன், சேரன் மன்னன் பாஸ்கரனை அவன் அரண்மணையில் சந்தித்தான்.
சேரனின் முகத்தில் லேசான புன்சிரிப்பு.
‘அன்று, உன்னை நான் வென்றேனே’ என்பது போல பாவனை.
மாறனின் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு வந்தது.
‘அன்று, நீ என் தலைவனிடம் தோற்றவன் தானே’ என்பது போன்ற ஒரு பாவம்.
சேரனுக்கும் அந்த தோல்வி நினைவுக்கு வந்து அவன் முகம் சற்றுச் சுருங்கியது.
சேரன் சொன்னான். “மாறா! அன்று, என்னுடன் சேருமாறு நான் உன்னை அழைத்தேன். நீயோ – அந்த சோழனிடம் போய்ச் சேர்ந்துவிட்டாய். மதுராந்தகனுக்குப் பயந்து அடங்கிப்போய் ஆட்சியைக் கைவிட்ட அருண்மொழியிடம் நீ சேர்ந்தாய்!” என்று ராஜராஜன் மீது தன்னிடம் இருந்த வெறுப்பைக் காட்டினான்.
மாறன் கோபத்தை அடக்கிக்கொண்டு:
‘மன்னரே! மாமன்னர் சோழதேவர் ராஜராஜர் தங்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்” என்று சொல்லி “கழகம் மூடப்படவேண்டும்” என்றான்.
“என்ன கழகத்தை மூடவேண்டுமா?” என்றான் சேரன்.
மாறன் தொடர்ந்தான்:
“காந்தளூர்ச்சாலையின் போர்க்கழகம் மூடப்படவேண்டும் என்பது சோழச்சக்கரவர்த்தியின் விருப்பம்” என்றான்.
சேரன் கோபித்து, “ஆஹா.. காந்தளூர்ச்சாலையின் மகிமை அருண்மொழிக்கு பயம் கொடுத்தது போலும். உன்னைப்போல ஓரிரு துரோகிகள் காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்திலிருந்து பகைவன் பக்கம் சென்றிருக்கலாம். ஆனால் காந்தளூர்ச்சாலையின் ஏனைய வீரர்கள் எல்லோரும் சேரநாட்டைக் காக்க சூளுரைத்துள்ளனர். உலகிலேயே சிறந்த கடற்படை – அது எங்களது. அது சோழனுக்கு ஒரு சிம்ம சொப்பனம் ஆகும். ஆம். புலிக்கு அது ஒரு சிம்ம சொப்பனம்! நீயும் ஒரு புலியின் வால்! அருண்மொழிக்குச் சொல். காந்தளூர்ச்சாலை மூடப்பட மாட்டாது.” என்ற சேரன் ராஜராஜனைப் பற்றி இழிவாகப்பேசினான்.
மாறன் பொங்கிவிட்டான்.
“சரியாகத்தான் சொன்னீர்கள் சேரமன்னரே! நான் புலியின் வால் தான். ஆனால், புலியின் கரங்கள் எத்தகையது என்பதைத் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்” என்றான். இதைச் சொல்லும் போது மாறனின் முகத்தில் கோபம் மறைந்து, இகழ்ச்சி கலந்த ஒரு புன்முறுவலும் விளைந்தது.
‘மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் 8 வருடமுன் போட்டியில் அருண்மொழியின் கரங்களில் தோற்றதைத் தான் குறிப்பிடுகிறான்’ என்பதை சேரன் உணரத்தவறவில்லை.
கொதித்தான்!
‘மாறா! புலியின் வாலை ஒட்ட நறுக்குகிறேன். உன்னைச் சிறையில் பிணைத்து வைக்கிறேன். புலி என்ன செய்கிறது என்று பார்ப்போம்” என்றான்.
“புலியின் வாலைப் பிடித்தவன் கதி என்னவாகும் என்பது தாங்கள் அறியாததா?” என்றான் மாறன்.
சேரன், மாறனை உதகைக்கோட்டையில் சிறை வைத்தான்.
ராஜராஜன் மாறனிடமிருந்து செய்தி வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். செய்தி வந்தவுடன் – ராஜராஜன் கோபத்தின் உச்சத்தை அடைந்தான்.
அந்தக் கோபத்தை சிவாஜி கணேசனாலும் காட்டியிருக்க முடியாது!
“பஞ்சவன் மாறாயனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அது வேறு யாருமல்ல – ராஜராஜன் மகன் ராஜேந்திரன் தான்.
“ராஜேந்திரா! பாஸ்கரன், மாறனைக் கைதுசெய்து கட்டிவைத்து உதகைக் கோட்டையில் காவலில் வைத்திருக்கிறானாம். என் உடலெங்கும் தீ பரவியுள்ளதுபோல எரிகிறது. நாம் உடனே படையெடுத்து சென்று உதகையை அழித்து அதை முழுதும் தீக்கிரையாக்கி, மாறனை சிறை மீட்டு வரவேண்டும். நமது கடற்படை இன்றே குமரிமுனையைச் சுற்றி காந்தளூர்ச்சாலைத் துறைமுகம் நோக்கிப் பயணப்படட்டும். சேரன் கடற்படை அழிக்கப்பட வேண்டும். வழியில் பாண்டியன் அமர புயங்கனையும் ஒடுக்கவேண்டும். நீதான் இந்தப் படையெடுப்பின் தலைமை. நானும் வருகிறேன்” என்றான்.
ராஜேந்திரன் சொன்னான்: “தந்தையே! அவ்வண்ணமே செய்வோம். சேர நாடு செல்ல இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று கொங்குநாட்டு வழியாகச் சென்று – பாலக்காட்டுக் கணவாய் ஊடாகச் – சேர நாட்டிற்குள் புகுந்து திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) வழியாகவோ, பரதப்புழை ஆற்றங்கரையிலுள்ள திருநாவாய் வழியாகவோ செல்லலாம்.
மற்றொன்று, பாண்டியநாடு வழியாக நெல்வேலி கடந்து நாகர்கோயில் வழியாக சேர நாடு செல்லலாம். வழியில் பாண்டியர்களையும் வென்று – அமர புயங்கனையும் வென்று – சேர நாட்டுக்குச் செல்லலாம். அமர புயங்கனுக்கு அடங்கிய சில குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆளுகின்றனர். அவர்களையும் வெல்வது அவசியம்” என்றான்.
ராஜராஜன் – “நல்லது. பாண்டியனை வென்று பின் சேரநாடு செல்வதே உத்தமம்” என்றான்.
படை புறப்பட்டது.
சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். ராஜராஜ சோழன் எப்பொழுதும் போருக்கு செல்வதற்கு முன்பாக பட்டீஸ்வரன் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டுத்தான் தன் படையெடுப்பைத் துவங்குவான். அவ்வாறே இந்த முதல்படையெடுப்பையும் துவங்கினான்.
கோவிலில் துர்க்கை அம்மன் – ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் மலர் மாலை அணிந்து, எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் இருந்தாள். சாந்த சொரூபிணியாக புன்னகை தவழும் முகத்துடன், சிம்ம வாகன முகத்துடன் இருந்தாள்.
ராஜராஜன், அக்கா குந்தவை, வந்தியத்தேவர், ராஜேந்திரன் அனைவரும் துர்க்கையை வழிபட்டனர். படைகள் புறப்பட்டன. சோழப்படைகள் பாண்டியரைப் புறங்கண்டது. ராஜராஜன், பாண்டிய மன்னன் அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்தான். சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் ராஜராஜன், பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. இந்தப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது.
பாஸ்கர ரவிவர்மனின் ஆட்சி, சேரநாடு, குடமலைநாடு, வேணாடு, கொங்குநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அதாவது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. அதில் காந்தளூர்ச் சாலை ஒரு கடற்கரை நகரம். இங்கு, போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்தது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் சோழப்படை சேரர்களின் கப்பல்களை வீழ்த்தின- எரியூட்டின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி என வழங்கும் உதகை என்று சிலர் சொல்கின்றனர். உதகை என்னும் இடம் ஊட்டியும் அல்ல; உதயகிரியும் அல்ல; அவ்விடம் வடகேரளத்திலுள்ள மகோதயபுரம் என்றும் சிலர் சொல்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் உதகைக் கோட்டையின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது. மலையின் முகட்டில் – 18 காடுகள் சூழ்ந்து, கம்பீரமாக இருந்த கோட்டை அது. எதிரிகள் நெருங்க நினைக்கவே அஞ்சும் அந்த மலைக்கோட்டை, அழகுடன் பலமும் நிறைந்திருந்தது. 18 காடுகளை தாண்டி எதிரிகள் வந்தால் கோட்டையிலிருந்த விற்கூடங்களும், வேற்கூடங்களும் எதிரிகளை தாக்கி அழித்து விடும். இப்படி ஒரு கோட்டை இருக்கும் போது எந்த எதிரிக்கும் அஞ்சாமல் சோழனையும் பகைக்கத் துணிந்தான் சேரன் என்றே சொல்ல வேண்டும்.
உதகைக் கோட்டைக்கு வெளியே இருந்த அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான், அதன் விளிம்பில் சோழர் படை முகாமிட்டிருந்தது. ராஜராஜன், “ராஜேந்திரா! உதகையைத் தாக்குவதில் நமது திட்டமென்ன?” என்றான்.
“தந்தையே! இந்தக் கோட்டையின் வலிமையை நாம் குறைவாக எடை போடக்கூடாது. நமது படையின் பெருவலிமை எதற்கும் குறைந்ததல்ல. ஆயினும் நேரடித் தாக்குதலில், நமது படைக்கு நிறைய சேதம் ஏற்படும். அதைத் தவிர்க்க, அக்னி பகவானை நமது படையில் சேர்த்துள்ளேன்” என்றான்.
ராஜராஜன் சிரித்துவிட்டான்: “அக்னி பகவான் என்ன செய்யப்போகிறார்?” என்றான். ராஜேந்திரனும் சிரித்துக்கொண்டே: “தந்தையே! பொதுவாக குதிரை, அல்லது யானைப் படையை முதலாக வைத்து போர் தொடங்குவோம். இந்தப்போரில், தீயை முதலில் வைத்து போரிடுவோம்” என்றான்.
ராஜராஜன் : “மேலும் சொல்” என்றான்.
ராஜேந்திரன்: “காடுகளை தீயால் எரித்து அழித்துக் கொண்டே நாம் முன்னேறுவோம். கோட்டை நெருங்கியவுடன், கோட்டை மதிலைத் தாண்டி உள்ளே பாயும் எரியம்புகளால் கோட்டைக்குள் தீ மூட்டுவோம். தீ முற்ற முற்ற, கோட்டை வீரர்கள் கோட்டையின் கதவைத் திறந்து சரணாகதிக்கு வருவர். அப்படி வராவிடில், நமது யானைகள் கோட்டைக் கதவை உடைக்கும். கோட்டைக்குள் நமது வேளக்காரப்படை முதலில் நுழையும். சிறைச்சாலையில் தவிக்கும் நமது மாறனை விடுவித்து நம்மிடம் கொண்டு வரும். அதன் பின்னர், உதகை முற்றிலும் எரிக்கப்படும். இது, தங்கள் தூதனை அவமதித்ததற்காக சேரனுக்கு நாம் வழங்கும் தண்டனை” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
‘நன்று. தீயனைத் தீய்த்திடவேண்டும். தொடங்கட்டும் நமது தாக்குதல்” என்றான் ராஜராஜன்.
திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்தது. பன்னிரண்டு மணிநேரத்தில் பதினெட்டுக் காடுகள் கடந்து சென்றனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட வேகம், வெறி கொண்ட சோழர் படை என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
வெந்து தணிந்த காடுகள் இடையே அந்த மலைக்கோட்டை – தங்கத்தட்டில் வைக்கப்பட்ட முத்துப்பேழை போல ஜொலித்தது. உதகையும் எரியூட்டப்பட்டு – மூன்று தினங்கள் எரிந்தது. கோட்டைக் கதவுகள் உடைக்கப்பட்டன.
ராஜராஜசோழன் குதிரையின் மீது ஏறி உதயகிரிக் கோட்டையின் (உதகை) உள்ளே நுழையும் காட்சியை உதயசூரியன் எழுவது போல் இருந்தது. (ஜெயங்கொண்டார் தமது கலிங்கத்துப்பரணியில் இதை அழகுபடக் கூறியுள்ளார்).
மாறன் விடுவிக்கப்பட்டான்.
கோட்டையில் இருந்த சேரமன்னன் பாஸ்கரன் – ரகசியப் பாதை வழியாக தப்பியோடி, குதிரைமீது பயணம் செய்து – கடற்கரையை அடைந்தான். அங்கு தயாராக இருந்த கப்பலில் ஏறித் தப்பித்து ஓடினான். உதகை அழிக்கப்பட்டது. சேரநாட்டு அதர்ம வேதபாடசாலைகள் அழிக்கப்பட்டன. மேலும் சேரமன்னனின் வலிமைமிக்க யானைப்படைகளைக் கவர்ந்து, உதகைக் கோட்டையை வெற்றிகொண்ட செய்தியுடன், இவ்வெற்றியின் நினைவாக ராஜராஜசோழன் தமது பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளன்று சேர மண்டலத்தில் விழாவெடுத்தான். (கலிங்கத்துப்பரணி இதைச் சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது). உதகைக் கோட்டையின் சிறப்பு, அது எரியூட்டி அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, சேர மன்னன் கடல் வழியே ஓடிய செய்தி இவற்றை திருக்கோயிலூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
காந்தளூர்ச்சாலை, முன்பே சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகு ராஜராஜசோழன் மூவேந்தர்களின் முடியையும் தரித்தவர் என்ற பொருளில் மும்முடிச்சோழன் என்ற பட்டம் புனையத் தொடங்கினான். சேர நாட்டு அரசியல் நடைமுறைகளை மாற்றி அமைத்த நிகழ்வுதான் ராஜராஜன் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனைவதற்கான முகாந்திரத்தை உருவாக்கித்தந்தது.
மாறன் கூறினான்:
“சக்கரவர்த்தி. இந்தக் காந்தளூர்ச்சாலைக் கழகம் நான் படித்த பாடசாலை. இதன் பெருமைகளை நாம் அனைவரும் அறிவோம். இதை மூடாமல்- இதை சோழநாட்டுப் பயிற்சிக்கு உபயோகப்படுத்தலாமே” என்றான் தயங்கி.
ராஜராஜன்: “மாறா! உனது கருத்துக்கு மாற்று உண்டா? அப்படியே ஆகட்டும்” என்றான்.
ஆக, காந்தளூர்ச்சாலை கலமறுத்து ராஜராஜசோழன் மும்முடிச்சோழனாக முடிசூடிய பின்னரும், காந்தளூர்ச்சாலைப் பயிற்சிக்கூடம் மூடப்படவில்லை. திருநாவாய்த் திருத்தலத்தில் நிகழ்ந்துவந்த மகாமக விழாவையும் அவ்விழாவின்போது நிகழ்ந்த போட்டிகளும் மீண்டும் தொடர்ந்தன.
மும்முடிச்சோழன் ராஜராஜன் பார்வையை வடக்கே உயர்த்தினான்.
சாளுக்கிய, இராட்டிரக்கூட, வெங்கி ராஜ்யங்கள் விரிந்து கிடந்தன.
பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்ததற்குப் பாடம் சொல்லும் நேரம் வந்தது. மேலும் தென்னிந்தியாவிலேயே இன்னொரு ராஜ்யம் துள்ளிக்கொண்டிருந்தது.
ஈழம்.
அதற்கும் ஒரு பாடம் புகட்டவேண்டும்.
ராஜராஜனுக்கு நிறைய வேலைகள் காத்துக்கிடக்கிறது.
அவை விரைவில்…
விரைவில் ஈழப்பிரச்சினை க்கு முடிவு கட்ட வேண்டும். படைகள் விரையட்டும்!
LikeLike