சிரிப்பு வருது – அன்புதாசன்

அன்பரசன் – நண்பர்களுக்கு அவன் ‘அன்பு’.
அறிவழகன் – நண்பர்களுக்கு அவன் ‘அறிவு’.
இருவரும் அறைத்தோழர்கள்.
பொதுவாகவே, அறைத்தோழர்கள் என்பவர்கள் அறைப்பகைவர்களாகி, விரைவிலேயே முழுப் பகைவர்களாகி விடுவார்கள்.
ஆனால் அன்பும், அறிவும் அப்படிப்பட்ட நண்பர்களல்ல.
நகமும், சதையும் போல.
சேர்ந்தே இருப்பார்கள்.
சேர்ந்தே வேலை செய்வார்கள்.
சேர்ந்தே சாப்பிடுவார்கள்.
சேர்ந்தே சிரிப்பார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு சர்தார்ஜி குடும்பம்.
அதன் குடும்பத்தலைவர் அரோரா சிங்.
பேசியே தமிழைக் கொலைசெய்வது என்பது அவருக்குச் சோளாப் பட்டுரா சாப்பிடுவது போல சந்தோஷமான செயல்.
‘அறிவழகன்’ என்ற பெயரை அவர் உச்சரிக்கும் அழகைத் தாங்காது, அறிவு திணறினான்.
“சிங்ஜீ, என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்.  ‘அறிவு’ என்றே கூப்பிடுங்கள்” – என்று சர்தார்ஜியிடம் அழாக்குறையாக விண்ணப்பித்துக்கொண்டான்.
“அது போலவே எனது நண்பனையும் ‘அன்பு’ என்று மட்டுமே கூப்பிடுங்கள்” -என்று கூறினான்.
அரோரா சிங் ‘அன்பு இருக்கிறானா?’ என்று கேட்கமாட்டார்.
‘அன்பு இருக்கா’ என்று தான் கேட்பார்.

நம் கதை இனி துவங்க உள்ளது.
அன்று மாலை நேரம்.
அன்பும், அறிவும் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அறிவு, அரோரா சிங் தமிழ் பேசுவது போலவே பேசிக்காட்டினான்.
அன்பு சிரித்தான்.
அறிவு சொன்னான்: “சர்தார்ஜி ஜோக்ஸ் என்று சொல்வார்களல்லவா? இவர் தமிழ் பேசினாலே அது சர்தார்ஜி ஜோக் தான் தெரியுமா?”.
அன்பு சிரித்தான்.
“அன்பு! நேற்று என்ன நடந்தது தெரியுமா? என்னைத் தேடி வந்து நம் அரோகரா சிங் என்ன சொன்னார் தெரியுமா?” என்றான் அறிவு.
“அரோகரா சிங்! என்ன சொன்னார்? “ அன்பின் சிரிப்பு அடங்கவில்லை.
“நம் அறையின் கதவைத் தட்டி விட்டு  
‘ஏய் அன்பு.. அறிவு இருக்கா?” என்று கேட்டார்”
“ஹா.. ஹா..” என்று சிரித்தான் அன்பு.
அறிவும் சிரித்தான்.
“ஹா.. ஹா.. ஹா.. “.
அன்பும் சிரித்தான். அறிவும் சிரித்தான்.
சிரிப்பு ஒரு நெருப்பு மாதிரி.. பற்றிக்கொண்டால் சில சமயம் விரைவில் நிற்பதில்லை.
“ஹா.. ஹா.. ஹா.. ஹா.. “- அன்பு.

ஐந்து நிடங்கள் இருவரும் சிரித்தபின் அறிவு ஓய்ந்தான்.
அன்பு ஓய்ந்தபாடில்லை.
“ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..” என்று தொடர்ந்தது அவன் சிரிப்பு ‘தீபாவளி சரவெடி’ போல.
ஒரு நிமிடம் கழித்து அறிவு சொன்னான்:
“டேய் அன்பு. போதும்டா சிரித்தது – ‘இனிமேல் இன்று ஜோக்ஸ் சமாப்த் ஹோதா ஹை’ என்று அரோரா பேசுவது போலப் பேசினான்.

அன்பின் சிரிப்பு மேலும் பெரிதானது. நிற்கவில்லை. அறிவு சொன்னான்: “டேய் அன்பு .. சிரித்தது போதும்” என்றான்.

நிற்கவில்லை.
நிற்கவேயில்லை.
அறிவு சொன்னான்:
“அன்பு! நிறுத்து“.
நிற்கவில்லை.
நிற்கவேயில்லை.
இது லிமிட்டுக்கு மேல் போவதை உணர்ந்த அறிவு:
“டேய் நிறுத்தடா. போதும் சிரித்தது” என்றான்.
அன்பின் சிரிப்பு ஒருவாறு அடங்கியது.
‘அப்பாடா.’ என்று அறிவு பெருமூச்சு விட்டான்.

மறுபடியும் அறிவு, அன்பைப் பார்த்தபோது அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. சிரிப்புச்சத்தம் தான் அடங்கியிருந்தது.
ஆனால், அவன் முகத்தில் சிரிப்பு இன்னும் இருந்தது.
“என்னடா, இன்னும் சிரிப்பு அடங்கலையா?” என்றான்.
அன்பு பேசவில்லை. ஆனால் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே நிரந்தரமானது போல இருந்தது. ஸ்மைலி எமோஜி போல வாய் மேல்புறம் குவிந்திருந்தது.
‘கண்ணாடியைப் பார்..”என்றான் அறிவு.
அன்பு பார்த்தான். அவன் சிரித்த முகம் அவனைப்பார்த்துச் சிரித்தது.

அறிவு ‘என்னடா பிரச்சனை இது. சரி. பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று போய் 5 நிமிடங்கள் கழித்து வந்தான். திரும்பி வருவதற்குள் அந்த முகத்தில் சிரிப்பு மறைந்திருக்குமல்லவா? ஆனால், அன்பின் முகத்தில் அதே சிரிப்பு நிரந்தரமாக இருந்தது!

“அன்பு, உனக்கு என்னடா ஆச்சு? மூஞ்சியில் சிரிப்பு போகலையே” -என்றான்.
அப்பதான் அன்புக்கு தனது முகத்தில் சிரிப்பு போகவில்லை என்பது விளங்கியது. ‘சரி மூஞ்சியை சோப்புப் போட்டுக் கழுவிக்கொண்டு வா. சிரிப்பு போகிறதா என்று பார்ப்போம்” – என்றான் அறிவு. அப்படியே செய்தான் அன்பு. முகத்தில் அழுக்கு தான் போயிற்றே தவிர புன்னகை போகவில்லை. மேலும் பிரகாசமாக இருந்தது. ஒரு மணி நேரமாயிற்று.
நிலைமையில் மாறுதல் ஏதுமில்லை.
‘டாக்டர் இந்திரனைப் போய்ப் பார்க்கலாம்” – என்றான் அறிவு,

டாக்டர் இந்திரனின் கிளினிக்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
அறிவின் சிரித்த முகத்தைக் கண்ட சக நோயாளிகளுக்கு சற்று மகிழ்ச்சி வந்தது. ஆனால் சிரிப்பு தொடர்ந்து இருக்கவே ‘சரியான இளிச்சவாயன்” என்று அருகிலிருந்தவர்களிடம் முணுமுணுத்தனர்.
டாக்டர் அறையிலிருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்தாள்.
டாக்டரின் உதவியாளராக இருக்கவேண்டும்.
‘அப்பா!’ – என்ன அழகு!
அன்பு அவளைப்பார்த்தவுடன் அவன் இதயத்துடிப்பு ஓரிரு கணங்கள் துடிப்பதை மறந்தது. புன்னகை மட்டும் மாறவில்லை.
அவள் “நீங்கள் தான் அன்பரசனா?”
“ஆமாம்” என்றான்.
அன்பின் முகத்தில் புன்னகை போகவில்லை.
“அடுத்து நீங்கள் டாக்டரைப் பார்க்கலாம்” என்றாள்.
“சரி” – என்றான் – புன்னகை மாறாமல்.
‘இதென்ன, இப்படி இளிக்குது’ என்று நினைத்துக்கொண்ட அந்தப்பெண், டாக்டர் அறைக்குள் மறைந்தாள்.

டாக்டர் இந்திரன் பல சோதனைகளைச் செய்தார்.
‘வாயைத் திற.. மூக்கைத் திற.. காதைத்திற’ என்று பலவாரியாக சோதனை செய்தார். புன்னகை மாறவில்லை. “சரி ஒரு ஊசி போடுகிறேன்” என்றவர் ஊசி போட்டார். வலியினால் முகம் சற்று மாறினாலும் முகத்தில் புன்னகை சற்றும் மங்கவில்லை.
டாக்டர் சொன்னார் “அன்பரசன். இது ஒரு சீரியஸ் நெர்வஸ் கண்டிஷன். நியூரோ டாக்டர் ஆதிமூலத்தைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

டாக்டர் ஆதீமூலத்தின் கிளினிக்.
சிலப்பல டெஸ்ட் செய்தார். அறிவிடம், அன்பிடமும்  சில கேள்விகள் கேட்டார். இருவரும் பதில் சொன்னார்கள்.
டாக்டர்  கேட்டார்: “சிரிப்பு அடங்காமல் போன பிறகு முதலில் என்ன செய்தீர்கள்?”.
“டாக்டர், சிரிப்பு அடங்க என்ன செய்யலாமென்று யோசித்தேன். எப்பவும் நாங்கள் பாசமலர் கிளைமாக்ஸ் பார்த்தால் ‘ஓவென்று’ பெரிதாகக் கண்ணீர் விட்டு அழுவோம். அந்தக்காட்சியை யூட்யூபில் தேடிப்பிடித்துப் பார்த்தோம்.
சிவாஜி ‘கை வீசம்மா கை வீசு’ என்று சொல்லும்போது எப்பொழுதுமே   நாங்கள் சேர்ந்து அழுவோம். ஆனால் இன்று நான் மட்டும் ‘ஓ’வென்று அழுதேன். இவன் கண்ணிலும் நீர் வந்தது. ஆனாலும் முகத்தில் அந்த சிரிப்பு அடங்கவில்லை. உடனே இது சீரியஸ் மேட்டருன்னு தீர்மானிச்சு, புறப்பட்டு டாக்டரைப் பார்க்கவந்தோம்” என்றான்.

“அப்ப, நீங்களே ஒரு ‘ஃபர்ஸ்ட் எய்ட்’ செஞ்சிருக்கீங்க” என்று கொஞ்சம் நக்கலாக நமுட்டுச்சிரிப்பு சிரித்தார் ஆதிமூலம்.
“சரி. ஒரு மயக்க ஊசி போடுகிறேன். 24 மணி நேரத்திற்குப் பின் கண்விழிப்பான். இதன் சைட் எஃபக்ட் என்னன்னா , நிறைய கெட்ட கனவு அதாவது நைட்மேர் வரும்” என்றார்.
“சிரிப்புப் போய் விடுமா  டாக்டர் “ என்று அறிவு கேட்டான் அழாக்குறையாக.
“24 மணிநேரம் கழித்துத்தான் எல்லாம் சொல்லமுடியும்” என்றார் டாக்டர்.

இந்த டாக்டர்களுக்கே இது ஒரு பழக்கமாகிவிட்டது. ‘அடுத்த 24 மணி நேரம் தாண்டினால் தான்’ என்று சொல்லிப் பழக்கமாகிவிட்டது போலும்.
24 மணிநேரம் கடந்தது. பல கெட்ட கனவுகளை அந்த 24 மணிநேரமும் சந்தித்திருந்தாலும், கிரேஸி மோகன் நாடகத்திலிருந்து வெளியே வந்தது போல் புன்னகை மாறாமல் அன்பு கண் விழித்தான்.
டாக்டர் முகத்தில் ஈயாடவில்லை.

“அன்பு.. நான் உனது கேஸ் விஷயமாக நேற்று ஜெர்மனியில் எனது டாக்டர் ஆசானிடம் பேசினேன். அவர் சொன்னது இது தான்.
‘இது ஒரு அபூர்வமான நெர்வஸ் வியாதி. ஆனால் என்ன ஆச்சரியம்! சென்ற வாரம் தான் இதற்கு ஒரு ஆராய்ச்சி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் பனிக் கரடியின் எச்சத்திலிருந்து இது தயாரிக்கப்பட்டது. இதைக் ஹியூமன் ட்ரையல் செய்ய நானும் முயற்சி செய்ய திட்டமிட்டிருந்தேன். இந்தச் சமயம் தான் உங்கள் கேஸ் பற்றி தெரியவந்தது. அந்த மருந்தை, இப்பொழுதே விமானத்தில் அனுப்பி வைக்கிறேன். இன்னும் 16 மணிநேரத்தில் சென்னை வந்து விடும்’ என்றார் என ஆசான்” என்றார் டாக்டர் ஆதிமூலம்.

“மருந்து எப்ப வரும் டாக்டர்?” என்றனர் இருவரும் கோரஸாக!
“மருந்து வந்து விட்டது! இனி நீங்கள் ஆனந்தமாகச் சிரிக்கலாம்”  சொன்ன டாக்டர் பல்லைக் கடித்துக்கொண்டார். டாக்டர் மேலும் சொன்னார்: “இன்னொரு சின்ன மேட்டர். இந்த மருந்தின் விலை ஐந்து லட்சம் ரூபாய்” என்றார்.
அன்பு ஆடிப்போய்விட்டான்.
அவன் முகத்தில் புன்னகை அடியோடு மறைந்தது.
முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது.
“டாக்டர் நீங்க கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இவனுக்குக் குணமாகிவிட்டது போல” – அன்று சொன்னான் அறிவு.
இப்ப, டாக்டருக்கு அது அதிர்ச்சியானது. “அன்பு, அறிவு.. 5 லட்சம் பில் கட்டிவிட்டுப் போங்க” என்ற டாக்டரின் அலறலைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து தப்பித்தோமென்று இருவரும் ஓடினர்.
வீட்டுக்குச்சென்ற நண்பர்கள் மறுநாள் மறுபடியும் ஆதிமூலத்தைத் தேடிவந்தார்கள். “வாங்க! பணம் கொண்டுவந்தீர்களா? இப்ப எப்படி இருக்கு” என்று அவர்களை வரவேற்றார் ஆதிமூலம்.
‘டாக்டர், சிரிப்பு நின்று விட்டது. நேற்றிலிருந்து இவனுக்கு சிரிப்பே வரவில்லை. நேத்து ராத்திரி கண் முழிச்சு நாங்கள் அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதனக்காமராசன் மூன்று படங்கள் பார்த்தோம். ஒரு காட்சியிலும் இவனுக்கு சிரிப்பே வரவில்லை. சிரிப்பு நின்றே விட்டது. கிசுக்கிச்சு மூட்டி கூட பார்த்து விட்டேன். சிரிப்பு வரவில்லை” என்றான்.

“ஜெர்மனிக்குப் போன் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார் ஆதிமூலம்.

  
 
 

 

 

 

 

 
 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.