சித்திரை பற்றி திரைச்சித்திரப் பாடல்களில்…
புது வருடம் பிறக்கும் போது புத்துணர்வு பொங்குவது இயல்பு தானே !
திரையிசையை நினைக்காமல்… பாடாமல்…புத்துணர்வு பற்றிச் சொல்வது மாங்காய் பச்சடி வேப்பம்பூ ரசமில்லா புதுவருஷ விருந்து போல அல்லவா ?
சித்திரை பற்றிய திரையிசைப் பாடல்களைப் பற்றி சிந்திக்கும் போது
“சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் ….” பாடல் தான் முழுநிலவாய் மனதில் வியாபிக்கும்.
தண்டவாளத்தின் மேல் புகைவண்டி பயணிக்கும் சத்தம், ரயிலின் விசில்,கவியரசரின் வரிகளுக்கு, மெல்லிசை மன்னர் இசையில், பி.சுசீலாவின் இனிய குரலில் புன்னகையரசியின் காந்தப் புன்னகையுடன்….
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் ம்… ம்… ம்…
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்…..
“எஸ்..எஸ்… சொர்க்கத்துக்குப் போகும் உணர்வு தான் …. கேட்போருக்கு ..”
ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் அப்பாடலை எத்தனை முறை கேட்டாலும், சித்திரை நிலவாய் நம் மனம் பளிச்சிடும் !
“சித்திர…. சித்திரைப்பூ….” போன்ற சொற்களுடன் அநேக பாடல்கள் உண்டு என்றாலும் அது ஓவியத்தையோ அல்லது அழகிய பூக்களையோ குறிக்கக் கூடும்.
சித்திரை மாத அழகை வருணிக்கும் பாடல்களின் வரிசையில்
1963ஆம் ஆண்டு வெளியான ”துளசிமாடம்” படத்தில் இடம் பெற்ற
‘சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்”
பாடலைக் குறிப்பிட வேண்டும்.
கவிஞர்.கா.மு.ஷெரிஃப் அவர்களின் வரிகளை, மெல்லிசைத் திலகம் மகாதேவன் இசையமைப்பில் ,டி.எம்.எஸ் அவர்கள் பாடியிருப்பார். கண்ணியம் மிகுந்த பாடல் வரிகள் ( அத்தகைய திரைச்சூழலுக்கு, பிற்காலத்தில் முனகல்களே பாடல் வரிகளாக இருந்ததுண்டு ), ஏவி..எம்.ராஜனின் கம்பீரமும் கண்ணியமும் கலந்த முகபாவம் ! மிகச் சிறப்பான பாடல் அது !
மக்கள்திலகம் பற்றிக் குறிப்பிடாமல் திரையிசைப் பாடல் கட்டுரையா ?
சித்திரை வெயிலைப் பற்றி ஒரு பாடலின் இடையில் வருகிறது,”கணவன் ” திரைப்படத்தில் வாலி அவர்களின் வைர வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில் வரும் “என்னப் பொருத்தமடி” என்ற பாடலில் வரும்.
“உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..
பாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி”
எனத் துள்ளலாக வரும் அப்பாடல் !
சித்திரை மாத வெயிலைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் “ஜோடி” திரைப்படத்தில் எழுதியிருப்பார்.
“வெள்ளி மலரே, வெள்ளி மலரே
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலர் நீ என்றே சொல்வாயோ ?”
என இலக்கிய நயத்துடன் மலரைக் கேட்டிருப்பார்.
“சிவப்பதிகாரம்” படத்தில், வித்யாசாகர் இசையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள பாடல், “அப்படியோர் ஆணழகன்” எனத் துவங்கும் அப்பாடலில்,
“சித்திரையில் என்ன வரும்?
வெயில் சிந்துவதால் வெக்க வரும்.
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்.
கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்.”
இது மட்டுமல்ல ! கோடை மழை என்பது அனைவரும் அறிந்த இயற்கை நிகழ்வு என்றாலும், சித்திரை என்றால் வெயில் தான் என்பதை, ”அவர்கள்” திரைப்படத்தில், எம்.எஸ்,வி இசையில் வரும்
”ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்”
எனும் பாடலின் வரிகளும் சித்திரை நிலவு பற்றிய அழகிய கவிதைகள், பாடல் வரிகள் எத்தனையோ இருந்தாலும், சித்திரை மாதத்து வெயிலும் கவிஞர்கள் மனதை விட்டு அகலுவதில்லை போலும் !
சித்திரை மாதம் என்பது புதுவருஷத்தின் முதல் மாதம் !
முதல் மாதம் பற்றிய பாடல்களைப் பற்றி யோசிக்கும் போது, எல்லா மாதங்களையும் உள்ளடக்கிய பாடலைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்ல முடியுமா ?
மிகப் பிரபலமான, வரலாற்றுப் பின்னணி கொண்ட “ராஜ ராஜ சோழன்” படத்திலிருந்து தான் அந்தப்பாடல் :
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்,டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.விஜயா ஆகியோர் பாடிய பாடல் :
”மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு
தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ
வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே
ஆனி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே
புரட்டாசி திங்களில் ஒரு மனம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
நம் திருமணம் ”
தோழியின் கவிதை வரிகள் பள்ளி நாட்களில் காவேரி ஆற்றில் குளித்த குளிர்ச்சியை அள்ளித் தெளித்த உணர்வை கொடுத்தது.
வாழ்த்துகள்
LikeLike
Super.
LikeLike