டாணாக்காரன்

நிறைய முறை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவங்கள் உண்டு. தொழிற்சங்க வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பிலிருந்தே. ஆனால், மிக மிக இளம் வயதில், பேருந்தில் கடந்து சென்ற ஒரு காவல் நிலைய வாசலில் கைக்குழந்தையோடு நின்றிருந்த ஓர் இளம் பெண்ணை, வாசலில் துப்பாக்கியோடு நின்றிருந்த காவலர் ஏதோ கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த காட்சி நெஞ்சில் இன்னும் உறைந்திருக்கிறது. அவர் அவளை அப்புறம் சுட்டு விட்டிருப்பாரோ என்று அப்பாவியாக நான் என் பாட்டியைக் கேட்டதும் நினைவில் இருக்கிறது. கல்லூரிக் காலத்தில், பின்னர் வங்கிப்பணியில் எத்தனையோ முறை செல்ல நேர்ந்ததுண்டு, எந்த அச்சமும் இன்றி.
திரைப்படங்கள் காவல் துறை பற்றி, காவல் துறையினர் பற்றி பொது புத்தியில் விதைத்திருக்கும் விஷயங்கள் நிறைய உண்டு. தங்கப் பதக்கம் சிவாஜி, சாமி விக்ரம், சிங்கம் சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல் என்று வகை வகையான காவல் துறை ஆசாமிகளை மக்கள் திரையில் பார்க்கின்றனர். என்கவுண்டர்களைக் கொண்டாடும் மனநிலையை சமூகத்தின் பிரதிபலிப்பாகப் படங்களும் சாகசத்தோடு கொண்டாடின. விக்ரம் வேதா படம் காவல் துறை என்கவுண்டர்களை மறுவாசிப்பு செய்தது.
காவல் துறையில் இயங்குவோரின் உளவியல் பற்றிய தேடல் அண்மைக்காலங்களில் தமிழ்த் திரையில் முன்னுரிமை பெறுவது முக்கியமானது. பழைய படங்களில் பட்டும் படாமலும் நழுவிப் போன அம்சங்கள் இப்போது பேசுபொருள் ஆவது சமூகத்திற்கும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதை, டாணாக்காரன் படத்திற்கான எதிர்வினைகளில் பார்க்க முடிகிறது. ஒன்றின் இயங்கும் தன்மையை அதன் உருவாக்கத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும் அனுபவத்தை இயக்குநர் தமிழ், காவல் துறை பயிற்சிப் பள்ளியைக் கதைக் களமாகக் கொண்டு படைத்து அளித்திருக்கிறார்.
அவரே காவல் துறையில் சுமார் 12 ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரைத் துறைக்கு விரும்பிக் குடி பெயர்த்தவர், இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர், புத்தக வாசிப்பு உள்ளிட்டு வலுவான அடித்தளத்தை அங்கே பயின்று வந்திருப்பவர் போன்ற செய்திகள் சிறப்பானவை. அதைவிட சுவாரசியமான விஷயம், ஜெய் பீம் படத்தில் முரட்டுக் காவல் அதிகாரி குருமூர்த்தி பாத்திரத்தில் நடித்திருப்பவர் அவர் தான் என்பது!
PRS மற்றும் ED இரண்டும் அதிகம் படம் முழுவதும் தெறிப்பவை. காவல் துறை பயிற்சி பள்ளி (போலீஸ் ரெக்ரூட் ஸ்கூல்), மற்றது கூடுதல் பயிற்சி (எக்ஸ்ட்ரா டிரில்) எனும் தண்டனை பயிற்சி.
பேட்ச் பேட்சாக வந்து இறங்கும் புதிய ஊழியர்களை உற்சாகமாக வரவேற்று, உரிய பயிற்சி கொடுத்துப் பொறுப்புள்ள காவல் துறை அதிகாரிகளாக அவர்கள் தங்களை வளர்த்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் ஒரு பயிற்சி பள்ளியின் தத்துவார்த்தமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது அவர்களை மனித இயல்பு அறவே அற்றுப் போகிறவர்களாக உருமாற்றம் பெறுவதற்கான பட்டறையாக அடித்து நிமிர்த்தும் இடமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையில் ஜனநாயகத் தன்மை இருக்க வேண்டும் என்ற குரல் தான் திரைக்கதையின் அடிநாதம். இருட்டறைக்குள் காற்றும் வெளிச்சமும் கோருகிறது திரைப்படம்.
பெருங்கனவோடு பயிற்சிப் பள்ளிக்கு வந்திறங்குவோரில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் புத்தகத்தை மார்பில் வைத்து வாசித்துக் கொண்டிருக்கிறார் . இன்னொருவர், சட்ட நுணுக்க வகுப்பு எடுக்க வரும் ஆசிரியரின் கேள்வி ஒன்றிற்கு, ஊர்வலம், போராட்டம்னு கொடியெடுத்துக்கிட்டு வர்றவங்கள சுட்டுத் தள்ளணும்னு தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கிறேன் என்று பதில் அளிக்கிறார். பயிற்சியாளர் இந்த இரண்டாமவனைச் செல்லப் பிள்ளையாகவும், முதலாமவனை விரட்டப்பட வேண்டியவனாகவும் முதல் சந்திப்பிலேயே முடிச்சு போட்டு வைத்துக் கொள்கிறார். பயிற்சி என்பது போட்டிகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பயிற்சியாளரின் டீம் தான் வெற்றி பெற முடியும் என்பதை எழுதி வைத்துத் தான் போட்டிகளே நடத்தப் படுகின்றன. எதிர்த்துப் பேசுதல், கேள்வி எழுப்புதல் அறவே தடை செய்யப்பட்ட அந்த பயிற்சிக் களத்தில் அடியும், உதையும், புதிரான மரணங்களும், சக பயிற்சி பெறுபவன் கண் முன்னே செத்து விழுவதும் கூட அமைதியாகக் கடந்து போகும் வண்ணம் மரத்துப் போன மனம் கொண்டவர்களாக மரபணு மாற்றத்தை ஒரு பயிற்சிப் பள்ளி சாதிக்கும் அராஜக வேதியியல் தான் மொத்த திரைக்கதையும்.
எதற்கு போலீஸ் வேலைக்கு வந்தாய் என்ற கேள்விக்கு, மாமூல் வாங்கி நல்லாக் காசு சம்பாதிச்சு பிள்ளை குட்டிகளோடு செட்டில் ஆயிரணும் என்று பெருமையாகச் சொல்கிறார் வகுப்பில் ஒருவர். சேவை என்பதன் பொருளை ஆசிரியர் விளக்குவதை, பயிற்சிப் பள்ளியின் நடைமுறைகள் எதிர்மறையில் அணுகிக் கொண்டிருக்க, பயிற்சிப் பள்ளியிலேயே லஞ்சம் திரட்டப்படும் நேரத்தில் மோதல் உருவாகி விடுகிறது. அதிகாரிக்காக என்று வசூலிக்கப்படும் காசுக்கு ரசீது கேட்ட பாவத்திற்காகக் கூடுதல் பயிற்சி என்ற தண்டனை பயிற்சியில் வேகாத வெயிலில் ஓட முடியாத ஓட்டத்தில் உருக்குலைந்து, கனவுகளும் உடலும் உயிரும் ஒரு சேரச் சிதறி விழுகிறார் வயது கடந்த காலத்தில் பயிற்சிக்கு வந்தவர்.
கந்துவட்டிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத கொடுமையில் தனது பரோட்டாக் கடை மூடப்படுவதைக் காவல் நிலையம் சென்று புகார் செய்யப் போன தந்தை அவமானப்பட்டுத் திரும்ப நேர்வதைக் கண்ணுறும் சிறுவன், அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கும் தந்தை சாகும் முன்பு, நேர்மையான காவல் அதிகாரி இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எழுப்பும் கேள்விக்காகத் தான் காவல் துறையில் சேர விரும்பி வந்தது தான் கதாநாயகனின் பின்கதைச் சுருக்கம். பயிற்சிப் பள்ளி அந்த மனவுறுதியை நிமிடம் தோறும் சிதைக்கப் பார்த்துக் கொண்டே இருக்க, மேலும் உறுதியோடு ஒரு டீம் தயாராகிப் போட்டியில் சிறப்பாகப் பயிற்சி செய்து தங்களை நிரூபித்தாலும், முரட்டுப் பயிற்சியாளர் டீமுக்கே வெற்றி அறிவிக்கப்படுவது படத்தில் முக்கியமான இறுதிக்காட்சி. எந்த விதத்திலும் சீர்திருத்தாமல் கட்டிக் காப்பாற்ற வேண்டிய அமைப்பின் தேர்ச்சியான பிரதிநிதியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அமைப்பின் தேவை என்கிறார் உயரதிகாரி.
1997ல் பயிற்சியில் வந்து சேருவோர் என்று அடையாளப்படுத்தும் திரைக்கதை, 1982ல் காவல் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டும் அரசியல் காரணங்களுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்து நியமனம் பெற்றுப் பயிற்சிக்கு வரும் மூத்த மனிதர்களையும் உள்ளடக்கிய பயிற்சிக் களத்தைப் பேசுகிறது. தங்களது அத்து மீறல்கள், அடாவடி நடைமுறைகள், முரட்டு விதிமுறைகளை இந்தக் கலவையான பேட்ச்களுக்கு இடையே அவர்களுக்குள் இயல்பாக உருவாகும் முரண்பாடுகளுக்கு இடையே இலகுவாக நடைமுறைப்படுத்தும் முரட்டுப் பயிற்சியாளர், அவரை காபந்து செய்யும் அடுத்தடுத்த மட்ட உயரதிகாரிகள், கேள்வி கேட்ட பாவத்திற்காகப் பதவி உயர்வு நிரந்தரமாக மறுக்கப்பட்ட அதிகாரி ஒருவர், நேர்மையான வகுப்பு ஆசிரியர் என்று மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றனர் கதா பாத்திரங்கள்.
தம் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், முந்தைய பேட்ச் பயிற்சி பெற்றவர்களிடம் கேட்டறிந்த உண்மைக் கதைகள் எல்லாம் கலந்து நிறைய நேரமெடுத்து எழுதிய திரைக்கதை என்கிறார் தமிழ்.
‘அதோ அந்த மரத்துக்குக் கீழே அன்றாடம் நிற்கிறானே ஒருத்தன், எதுக்கு?’ என்று கேட்கிறார் பழி வாங்கப்பட்ட அதிகாரி. எப்போதோ எந்த ஆண்டோ அங்கே நடப்பட்ட ஒரு செடியை கால்நடைகள் மேய்ந்து விட்டன என்று விரட்டுவதற்கு நிற்க வைக்கப்பட்ட வழக்கம், அந்தக் கன்று வளர்ந்து மரமாகவே உயர்ந்து நிற்கும்போதும் இன்னும் தொடரும் கோமாளித் தனத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இது மணிமுத்தாறு பயிற்சிப் பள்ளிக்குச் சென்ற யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், உண்மைக் கதை என்கிறார் தமிழ்.
150 வருஷமாகச் சீருடைகள் கூட மாற்றப்படாத துறையில் நீ என்ன புதுசா மாற்றி விடப்போகிறாய் என்று நாயகனை அதே அதிகாரி கேட்கும் கேள்வி, காலகாலாமாகக் காவல் துறையினர் எண்ணற்றோர் மனத்திற்குள்ளும் எதிரொலிக்கும் கேள்வி தான். தன்னை இழிசொல் சொல்லித் திட்டிய அதிகாரியோடு மோதிய குற்றத்திற்காகப் பழி வாங்கப்பட்ட பாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கர் அத்தனை ஒன்றி நிற்கிறார். மனப்போராட்டங்களை அவரது கண்களும் பேசுகின்றன.
‘என் காலை நக்கி இருந்தால் உன்னை உயரத்திற்கு எடுத்துக் கொண்டு போயிருப்பேன், நீ என் மூஞ்சியில் நக்கிட்டே என்ன செய்றேன் பாரு’ என்று வெஞ்சினத்தோடு கேட்கும் முரட்டுப் பயிற்சியாளர் ஈஸ்வர மூர்த்தியாக வெறுக்கத் தக்க பாத்திரத்தில், நடிகர் லால் வெளுத்து வாங்குகிறார். நேர்மையான அதிகாரியாக போஸ் வெங்கட் செதுக்கினாற்போல் செய்கிறார். மனைவி குழந்தைகளோடு வந்திறங்கி வயது காரணமாக சித்தப்பா என்றே அழைக்கப்பட்டு, எக்ஸ்ட்ரா டிரில் செய்யத் திணறிப் பயிற்சி மைதானத்தில் உயிரற்று விழும் வேடத்தில் புதுகை பூபாளம் கலைக்குழு பிரகதீஸ்வரன் உள்ளத்தைத் தொட்டு விடுகிறார். நாயகனின் தந்தையாக லிவிங்ஸ்டன் குறைந்த காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார். நாயகனை வலுக்கட்டாயமாகக் காதல் செய்யும் பெண் காவலர் ஈஸ்வரி (அஞ்சலி நாயர்) பாத்திரம் கதையில் ஒட்டாமல் நிற்பது.
மொத்தக் கதையின் வலுவைச் சுமக்கும் நாயகனாக விக்ரம் பிரபு ஆர்ப்பாட்டம் இன்றி நேர்த்தியாக நடித்திருக்கிறார். முக பாவங்களும், உடல் மொழியும், பயிற்சிக்கான உடலமைப்பும் பாராட்ட வைக்கின்றன. ஒளிப்பதிவு (மாதேஷ் மாணிக்கம்), படத்தொகுப்பு (பிலோமின் ராஜ்) மற்றும் இசை (ஜிப்ரான்) குறிப்பிட்டுச் சொல்ல வைக்கின்றன.
மக்களின் நண்பராகக் காவல் துறை இயங்க வேண்டும் என்பதற்கான விதைகள் பயிற்சியில் ஊன்றப்பட வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே அது எப்படி கருக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார் இயக்குநர் தமிழ். லாக்கப் மரணங்கள், அதை மறைக்கக் குடும்பங்களுக்கு லஞ்சம் என்று பெருகும் உள்வட்டக் குற்றங்கள் ஒரு புறமிருக்க, நேர்மையான மனிதர்களும் உள்ளடக்கியது தான் காவல் துறை. அமைப்பு ஏதன் பக்கம் நிற்கிறது என்பதை அதன் சாதீயத் தன்மை உள்ளிட்டுப் பேசுகிறது படம். வேறு ஒரு மொழியில் இதையெல்லாம் ஒரு திரைப்படம் பேசுமா என்று கேட்டார் நண்பர் ஒருவர்.
நாயகனின் பின் கதை உள்ளிட்டு இன்னும் வலுவான கதையமைப்பு, கூடுதல் அழுத்தம் திரைக்கதைக்குத் தேவை என்று கொஞ்சம் போதாமை உணர்வு தோன்றியதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால், ‘அடுத்த மதத்தவரை வெட்டிக் கொல்லலாம் என்று சொன்னதைக் கூட, தனது மதத்திற்கான பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு, கிரிமினல் குற்றம் ஆகாது’ என்று நியாயப்படுத்தும் காவல் துறையை தேசம் எதிர்கொள்ளும் சூழலில், அடித்தளத்தில் கேள்விகளை வைக்கும் தன்மையில் டாணாக்காரன் திரைப்படம் முக்கியமான வரவு.
நிஜத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் படம்.. விமர்சனம் அதிர வைக்கிறது.. பாராட்டுக்கள்
LikeLike