(சென்ற மாத தொடர்ச்சி )
5
“அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருந்தால் என்னுடைய நிச்சய தார்த்தம் அவனுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் அவனிடம் சொல்வதற்கு இனி எனக்குத் தயக்கமில்லை.”
“ஜார்ஜ், நான் சொல்வதைக் கேள்.இந்த விஷயத்தை விவாதிக்கத்தான் என்னிடம் நீ வந்திருக்கிறாய்.அது உன்னுடைய நல்ல இயல்புதான்.ஆனால் நீ இப்போது முழு உண்மையையும் சொல்லவில்லையென்றால் அதனால் எந்தப் பயனுமில்லை.பொருத்தமில்லாத விஷயங்களை பேச எனக்கு விருப்பமில்லை.அம்மாவின் மறைவிற்குப் பிறகு இங்கு சில மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதைப் பற்றி பேசுவதற்கான நேரம் நாம் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாக வந்திருக்கிறது. தொழிலில் எந்தப் பிரச்னையும் இல்லை, அது என்னைக் காப்பாற்றுகிறது. என்னிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை —அதே சமயத்தில் எனக்குப் பின்னால் நடக்கிறது என்று சொல்லவும் நான் தயாரில்லை— எனக்கு பலமில்லை, என் ஞாபகசக்தி குறைந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலான விஷயங்க ளில் கவனம் செலுத்த முடியவில்லை.முதலாவதாக ,இயற்கை தன் வேலையைச் செய்கிறது, இரண்டாவதாக அம்மாவின் மரணம் உன்னைவிட எனக்குப் பெரிய அடி.ஆனால் நாம் இப்போது இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசுவதால் ஜார்ஜ் ,உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை ஏமாற்ற வேண்டாம்.இது ஓர் அற்பமான விஷயம், பேசக் கூடிய பெரிய விஷயமில்லை. அதனால் என்னை ஏமாற்றாதே. உனக்கு நிஜமாகவே பீட்டர்ஸ்பெர்க்கில் இந்த நண்பன் இருக்கிறானா?” அப்பா கேட்டார்.
ஜார்ஜ் சங்கடத்தோடு எழுந்து நின்றான்.”நாம் என் நண்பனை மறந்துவிடு வோம்.ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும் என் அப்பா ஸ்தானத்தை மாற்ற முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கவனமாக உங்களைப் பார்த்துக் கொள்ளவில்லை.முதுமை தன் வேலையைக் காட்டுகிறது. தொழிலில் நீங்கள் எனக்கு மிக முக்கியமானவர்–உங்களுக்கும் அது நன்றாகத் தெரியும்.-ஆனால் தொழில் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்குமென்றால், அதை நான் நாளையே அதை மூடி விடுவேன்.உங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கைச் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.முழுவதும் வித்தியாச மானதாக மாற்ற வேண்டும்.நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கி றீர்கள். ஹாலில் நல்ல வெளிச்சமிருக்கிறது. உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பதிலாக நீங்கள் காலை உணவைச் சரியாகச் சாப்பிடுவதில்லை.காற்று வரும் ஜன்னலின் அருகே உட்கார்ந்துகொண்டால் உங்கள் உடலுக்கு நல்லது.அப்பா! நான் மருத்துவரை அழைத்து வருகிறேன்.அவருடைய அறிவுரைப்படி நடப்போம்.உங்கள் அறையை மாற்றி விடலாம்.நீங்கள் முன்னறைக்கு வந்து விடுங்கள்.நான் இங்கு வந்துவிடுகிறேன்.உங்களுக்கு எந்தச் சிரமும் இருக்காது.ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு நேரமிருக்கிறது.நான் இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்குப் படுக்கை போடுகிறேன் .உங்களுக்கு முழு ஓய்வுதேவை. வாருங்கள்,உடை மாற்ற உதவுகிறேன்.அல்லது இப்போதே முன்னறைக்குப் போக விரும்புகிறீர்களா?இப்போது என் படுக்கையில் நீங்கள் படுத்துக் கொள்ளலாம்.அது சரியாக இருக்கும்.” அப்பாவின் மிக அருகில் நின்றான்.
“ஜார்ஜ்,” அழுத்தமாக அசையாமல் அப்பா கூப்பிட்டார். ஜார்ஜ் உடனே அவரருகில் மண்டியிட்டு உட்கார்ந்தான்.அவருடைய பெரிய கூர்மையான விழிகள் தன்னை வெறிப்பதை உணர்ந்தான்..
“உனக்கு நண்பனென்று யாரும் பீட்டர்ஸ்பெர்க்கில் இல்லை.எப்போதும் கேலி பேசுபவனாகவே இருக்கிறாய். என்னிடம் கூட உன்னால் விளையாடாமலிருக்க முடியவில்லை.எப்படி உனக்கு ஒரு நண்பன் அங்கிருக்க முடியும்? என்னால் நம்பவே முடியவில்லை.”
6
“ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், அப்பா” ஜார்ஜ் சொன்னான்.அப்பாவை சாயும் நாற்காலியிலிருந்து எழுந்து நிற்க வைத்து அவர் இரவு ஆடையை களைந்தான்.அவர் வலிமையற்றுப் போய் நின்றிருந்தார்.”என் நண்பர்கள் என்னைப் பார்க்க வந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன.குறிப்பாக அவனை உங்களுக்குப் பிடிக்காதென்பது எனக்கு இன்னமும் நினவிலிருக்கிறது.என் அறையில் இரண்டுமுறை அவன் உட்கார்ந்திருந்த போதும் நான் நீங்கள் அவனைச் சந்தித்து விடாதபடி பார்த்துக் கொண்டேன்.அவனை நீங்கள் வெறுப்பது எனக்கு நன்றாகத் தெரியும்.பின்னொரு நாளில் நீங்கள் அவன் பேச்சைக் கவனித்தும், கேள்விகள் கேட்டும் அவனிடம் நன்றாகப் பேசினீர்கள்.எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. நினைத்துப் பார்த்தால் அது உங்களுக்கு ஞாபகம் வரலாம்.அப்போதுதான் ரஷ்யப் புரட்சி பற்றிய வியப்பான கதைகளை அவன் நமக்குச் சொன்னான்.உதாரணமாக ,கீவியில் அவன் தொழில் பயணம் மேற்கொண்டபோது ஒரு கலவரத்தைப் பார்க்க நேர்ந்தது.மாடியில் நின்று கொண்டிருந்த பாதிரியார் ஒருவர் சிலுவையைத் தன் உள்ளங்கையில் வைத்து அறுத்துக்கொண்டு கூட்டத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டதைச் சொல்லலாம். நீங்கள் கூட அந்தக் கதையை அடிக்கடி சொல்வீர்கள்.
இதற்கிடையே ஜார்ஜ் கவனமாக அப்பாவை உட்காரவைத்து அவருடைய ஆடைகள்,காலணி எல்லாவறையும் மெதுவாகக் களைந்தான்.அவருடைய உள்ளாடைகள் அவ்வளவு சுத்தமாக இல்லாமலிருப்பதைப் பார்த்து தான் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தான். அப்பாவை இது மாதியான விஷயங்களில் கவனித்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்றுணர்ந்தான்.தன் காதலியிடம் அப்பாவின் எதிர்காலம் பற்றி இன்னமும் அவன் விவரமாக எதுவும் பேசவில்லை.அவர் தனியாக இங்கேயே தங்கிக் கொள்வாரென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் இப்போது அவரைத் தன்னுடனே வைத்துக் கொள்ளும் உறுதியான முடிவுக்கு வந்து விட்டான்.மிகக் கூர்மையாக கவனித்தால் இப்போது எடுத்துக் கொள்ள விரும்பும் கவனம் எப்போதோ எடுக்கபட்டிருக்க வேண்டுமென்பது புரியும். அவரைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குப் போன போது அப்பா தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இறுக்கப் பிடித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் படுக்கையில் அவரைக் கிடத்தியவுடன், எல்லாம் இயல்பாகத் தெரிந்தது.அவர் தானாகவே தோள்வரை போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஜார்ஜைப் பார்த்தார்.
“உங்களுக்கு அவனை ஞாபகமிருக்கிறதில்லையா?’அவரை உற்சாகப் படுத்தும் பாணியில் தலையை ஆட்டியபடி ஜார்ஜ் கேட்டான்.
“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”தன் பாதங்களைச் சரியாக மூடமுடியாதது போலக் கேட்டார்.
“படுக்கையில் படுத்தவுடன் தெம்பாகத் தெரிகிறதல்லவா?”கேட்டபடி போர் வையைச் சரிசெய்தான்.
“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”அந்தக் கேள்விக்குத் தனக்கு கண்டிப்பாக பதில் கிடைக்க வேண்டுமென்பது போல மீண்டும் கேட்டார்.
“உம். இப்போது ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”
’இல்லை,” ஜார்ஜின் பதிலைத் தடுப்பது போலக் கத்தினார்.
7
போர்வையை முழு வேகத்தோடு இழுத்து படுக்கையின் மீது விழும்படி எறிந்தார். கம்பியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு“நீ மூடி மறைக்கப் பார்க்கிறாய்–நான் சிறுபிள்ளை போலாகி விட்டேன் என்றெனக்குத் தெரியும்— ஆனால் இன்னும் மோசமாகிவிடவில்லை.இவ்வளவுதான் எனது பலமென்றாலும் அது உனக்குப் போதும், உனக்கு அதிகமானதும் கூட. ஆமாம்,எனக்கும் உன் நண்பனைத் தெரியும்.என் மனதுக்கு நெருக்கமான வன் என்று உனக்குத் தெரியும்.அதனால்தான் பல வருடங்களாக அவனுக்கு நீ துரோகம் செய்கிறாய்.ஏன்? நான் அவனுக்காக அழவில்லை என்று நினைக்கிறயா? அதனால்தான் உன் அறையை சாத்திக்கொண்டு முடங்கிக் கிடக்கிறாய்—யாரும் உன்னைத் தொந்திரவு செய்யக் கூடாது. முதலாளி எப்போதும் பிஸி—அந்த வழியில்தான் இரண்டு முகம் கொண்ட நீ ரஷ்யாவுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாய்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு தந்தைக்கு தன் மகனை உற்று நோக்கக் கற்றுத்தர வேண்டியதில்லை.அசைய முடியாத அளவுக்கு அவன் மேல் நீ அழுந்த உட்கார்ந்து விட்டதாக நினைத்து, அந்தத் தருணத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டாய்!”
அப்பாவின் பயம்தரும் மாயத் தோற்றத்தை ஜார்ஜ் பார்த்தான். பீட்ட்ர்ஸ் பெர்க்கிலுள்ள நண்பனைப் பற்றி திடீரென்று அப்பா நன்றாகத் தெரிந்து கொண்ட விவரம் அவன் கற்பனைக்கு எட்டமுடியாததாக இருந்தது. ரஷ்யாவைப் பற்றிய விரிவான எண்ணத்தில் அவர் தொலைந்து போயிருப்பது தெரிந்தது. இழந்து விட்ட தொழிலில் அவரைப் பார்க்க முடிந்தது.சிதைந்த அவரது அலமாரிகளில் தகர்ந்து கிடந்த பொருட்கள், உடைந்து சிதறிய பொருட்கள் எல்லாம் கிடக்க வெறுமையாய் நின்று கொண்டிருந்தார். ஏன் அவர் அவ்வளவு தூரம் போக வேண்டும்!
“ஆனால் என்னைப் பார்”அப்பா கத்தினார்.ஜார்ஜ் அவரருகில் தன்னை மறந்து ஓடத் தொடங்கிய போது அவர் பேச்சில் திக்கல் வந்தது.”அவள் உன்னைத் தன் வசப்படுத்தியதால் நீ மயங்கி யாருடைய இடையீடுமின்றி அவள் வசமானாய்–அம்மாவின் நினைவை மறந்தாய். உன் நண்பனுக்குத் துரோகம் செய்தாய், அசைய முடியாதபடிக்கு அப்பாவைப் படுக்கையில் கிடத்தினாய். ஆனால் அசையமுடியும்.,முடியாதா அவரால்?”அவர் எந்த ஆதரவுமின்றி எழுந்து நின்று கால்களால் உதைத்துக் கொண்டார். உள்ளொளியால் பிழம்பு போல இருந்தார்.
ஜார்ஜ் தன்னால் இயன்ற வரை அவருக்கு வெகு தொலைவில் நின்றிருந் தான். நீண்ட நாட்களாகவே எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக உற்று நோக்க அவன் முடிவு செய்திருந்தான்.அதனால் பின்னால், மேலிருந்து தொடர்பில்லாமல் கூட ஏற்படுகிற தாக்குதல் அவனை ஆச்சர்யப்படுத்தாது. பல காலத்திற்கு முன்பு எடுத்திருந்த –மறந்து போன முடிவு இப்போது ஊசியின் காதில் சிறிய நூலை வைத்திழுப்பது போல நினவுக்கு வந்தது.
“ஆனால் இப்போது உன் நண்பனுக்கு துரோகம் செய்யப்படவில்லை. அவ்வப் போது நடப்பவற்றைச் சொல்லிவிடுகிற பிரதிநிதியாக நான் இங்கிருக்கிறேன்.” தன் ஆட்காட்டிவிரலை முன்னும் பின்னும் அசைத்தபடி உறுதியாகச் சொன்னார்.
நீங்கள் நகைச்சுவை நடிகர்தான்!” ஜார்ஜால் அப்படி அழைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. அது எவ்வளவு தவறானது என்று அவன் உடனே உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டான்.,ஆனால் அது மிக காலதாமதமான உணர்வு என்று தெரிந்து அவன் கண்கள் வலியில் உறைந்தன.
8
“ஆமாம்,சரிதான் நான் நகைச்சுவையாளனாகத்தான் இருக்கிறேன்! நகைச் சுவை! சரியான வார்த்தை!வயதான துணையற்ற அப்பாவிற்கு வேறு என்ன ஆறுதல் இருக்க முடியும்? சொல்—பதில் சொல்லும் என்னுடைய அருமை மகன் நீ— என் அறையில் என்ன மீதமிருக்கிறது ?துன்பப்படுத்தும் விசுவாச மில்லாத ஊழியர்கள் ,என் நரம்புகளில் இவை ஊடுருவி இருக்க எனக்கென்று என்ன மீதமிருக்கிறது? நான் உருவாக்கித் தந்த தொழிலை வைத்துக் கொண்டு என் மகன் உலகம் முழுவதும் மகிழ்ச்சியாகச் சுற்றி வருகிறான், தந்தையிடமிருந்து வெகுதூரம் விலகி இறுகிய நிலையில்! என்னிடமிருந்து வந்த உன்னை நான் நேசிக்கவில்லை என்று நீ நினைக்கிறாயா?”
“இப்போது வளைந்து அவர் முன்னால் வருவார்” என்று ஜார்ஜ் நினைத் தான். அவர் இப்போது கீழே விழுந்து சிதறி விட்டாலென்ன ஆகும்!” இந்த வார்த்தைகள் அவன் மண்டைக்குள் பரவிக் கொண்டிருந்தன.
அவன் அப்பா முன்னால் வளைந்தார் ,ஆனால் விழவில்லை.ஜார்ஜ் அவர் எதிர்பார்த்தது போல அருகில் வராததால் அவர் தானாகவே நிமிர்ந்து நின்றார்.
“நீ இருக்குமிடத்திலேயே நில். எனக்கு உன் உதவி தேவையில்லை!உனக்கு இங்கு வந்து நிற்க இன்னமும் பலம் இருப்பதாக நீ நினைக்கிறாய். அது தான் உன் விருப்பமும் கூட. ஆனால் உன் எண்ணம் தவறாக இருந்தால் ! நான் இப்போதும் உன்னைவிட பலமானவன்.நான் பின்வாங்குபவனாக ஒரு வேளை இருந்தாலும் உன் தாய் கொடுத்த பலமெனக்கு அதிகமென்பதால் உன் நண்பனுடன் அற்புதமான உறவுத் தொடர்பிலிருக்கிறேன். உன் வாடிக்கையாளர்களும் என் சட்டைப் பையில்தான்!”
“அவர் சட்டையில் பாக்கெட் கூட வைத்திருக்கிறார்!” ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.தன்னுடைய இந்த அபிப்பிராயத்தால் அவரை உலகின் முன் கேலிக்குரியவாராக ஆக்கிவிடமுடியும் என்று நினைத்தான். இந்த நினைவு ஒரு கணம்தான் ஏனெனில் அவன் எல்லாவற்றையும் தொடர்ந்து மறந்து கொண்டிருந்தான்
“உன் காதலியுடன் சேர்ந்து என் வழியில் நீ குறுக்கிட்டுப் பார்!நான் அவளை உன்னிடமிருந்து விசிறியடித்து விடுவேன்-எப்படி என்று உனக்குத் தெரியாது.”
ஜார்ஜ் அதை நம்பமுடியாதவன் போல முகத்தைச் சுளித்தான்.அவர் ஜார்ஜின் முகத்தைப் பார்த்துவிட்டு தான் சொன்னது உண்மை என்பது போல ஜார்ஜின் முகத்தைப் பார்த்தார்
“உன் நண்பனுக்கு நிச்சயதார்த்தம் குறித்து எழுத வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு இன்று எப்படி என்னிடம் வேடிக்கை காட்டுவது போல வந்தாய். முட்டாளே,அவனுக்கு எல்லாம் தெரியும்,முன்பாகவே தெரியும்!அவனுக்கு நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்,ஏனெனில் நீ எழுதும் பொருட்களை என்னிடமிருந்து வாங்க மறந்து விட்டாய். அதனால்தான் அவன் வெகு காலமாக இங்கு வரவில்லை.உன்னைவிட அவனுக்கு எல்லாம் நூறு மடங்கு தெரியும். படிப்பதற்காக அவன் என் கடிதங்களை வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையால் உன் கடிதங்களைப் படிக்காமல் சுருட்டிக் கசக்குகிறான்.”
உற்சாகத்தின் வேகத்தில் தன் முழங்கையை தலைக்கு மேல் வைத்து “அவனுக்கு ஆயிரம் மடங்கு விஷயங்கள் நன்றாகத் தெரியும்”என்றார்.
“பத்தாயிரம் மடங்கு” தன் அப்பாவை முட்டாளாக்கும் பாணியில் அவன் சொன்னான்.
“இந்த மாதிரியான கேள்வியோடு வருவாய் என்று தெரிந்து பல ஆண்டு களாக நான் உன்னை கவனித்து வருகிறேன்.எனக்கு வேறு எதிலோ கவனம் இருக்கிறதென்று நினைத்தாயா?நான் செய்தித்தாள் வாசிக்கிறேன் என்று நினைத்தாயா? பார் !”அவனை நோக்கி அவர் செய்திதாளைத் தூக்கி எறிந்தார்—அது ஜார்ஜ் கேள்விப்பட்டிராத மிகவும் பழைய ஒரு செய்திதாள்.
“பக்குவம் அடைவதற்கு எவ்வளவு காலமாக காத்திருந்தாய்! உன் தாயின் மரணம் வரைக்கும். இந்த மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க அவளில்லை.
9
’உன் நண்பன் ரஷ்யாவில் அழிந்து கொண்டிருக்கிறான்—மூன்று ஆண்டுக ளுக்கு முன்பே தூக்கி எறியப்பட வேண்டியவன். நான்—என் விஷயங்கள் எப்படியாகி விட்டன பார். நீ அதன் மீது கண் வைத்துவிட்டாய்”
“அதனால் எனக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் ”ஜார்ஜ் கேட்டான்.
“முன்பே நீ அதை மறைமுகமாகச் சொல்ல நினைத்தாய். ஆனால் இப்போது அது பொருத்தமற்றது.” என்று சிறிது யோசனைக்குப் பிறகு இரங்கலான தொனியில் சொன்னார்
“வெளியுலகில் என்ன நடக்கிறதென்று இப்போது உனக்குத் தெரிந்து விட்டது. இதுவரை உன்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியும்! அடிப்படையில் நீ அப்பாவிக் குழந்தையாகத்தான் இருந்திருக்கிறாய், ஆனால் அடிப்படையில் நீ கொடுமையான மனிதனாகவும் இருக்கிறாய். அதனால் இதைப் புரிந்து கொள்: தண்ணீரில் மூழ்கி இறக்கும் தண்டனையை நான் உனக்கு அளிக்கிறேன்!”
அந்த அறைக்குள்ளேயே தான் துரத்தப்படுவது போல ஜார்ஜ் உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் அப்பா படுக்கையில் விழும் பெரும் சத்தம் காதில் கேட்க அவன் போய்விட்டான். சாய்ந்த நிலையிலிருந்த படிக்கட்டுகளில் மோதும் வேகத்தில் அவன் இறங்கிய போது வீட்டைச் சுத்தம் செய்ய வந்த வேலைக்காரியைப் பார்த்தான்.
யேசுவே!”கத்திவிட்டு தன் முகத்தை துணியால் மூடிக்கொண்டாள். ஆனால் அவன் அதற்குள் அவளைக் கடந்துவிட்டான்.வெளிகேட்டைப் பாய்ந்து, திறந்து சாலையின் எதிரிலிருந்த தண்ணீரை நோக்கி ஓடினான். பசியான மனிதன் உணவை வெறியோடு பறிப்பது போல வேலியை இறுக்கிப் பிடித்தான். இளமையில் உடற்பயிற்சி வல்லுனன் போல் இருந்து பெற்றோர்களுக்கு மிகப்பெருமை சேர்த்தவன். வேலியின் அருகே வரும் மோட்டார் வண்டி கண் ணில்பட அதன் ஒலியில் தான் விழும் சப்தம் ஒடுங்கி விடும் என்ற எண்ணத்தில் தன்னுடைய பிடியை மெல்லத் தளர்த்தினான்.” அன்பான பெற்றோர் களே,நான் எப்போதும் உங்களை நேசிக்கிறவன் “என்று சொல்லிக் கொண்டே மூழ்கினான்.
பாலத்தின் மேல் அந்த நேரம் முடிவில்லாத நீண்ட போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது.
———————————————-
பிரான்ஸ் காஃப்கா இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்க ளில் ஒருவர் என விமர்ச்கர்கள் மதிப்பிடுகின்றனர். நனவிலி நிலை, அந்நியமாதல், உடல் மற்றும் மன ரீதியிலான கொடூரம் உள்ளிட்டவை அவர் கதையின் கருப்பொருள்களாகின்றன.The Metamorphosis, The Trial, The Judgement ,The Castle ஆகியவை அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகும்.
இந்தக் கதை குறும்படமாக வந்துள்ளது.. அதனை இங்கே பார்க்கலாம் !