திருப்புகழ் கிடைத்த கதை
அதிகாலை நான்கு மணிக்கு எழும் இந்திய (மனித) பறவைகளுக்கு திருப்புகழ் வகுப்புகளை குவிகம் ஆசிரியர் திரு. சுந்தர் சிபாரிசு செய்திருந்தார்.
அவரது வழக்கமான குசும்பாக அல்லாது நல்ல எண்ணத்தில்தான் கூறியிருப்பார். ஆனால் என் உள்மனது அதற்கு வாய்பே இல்லையே ராஜா என பறையறிவித்தது. அது எனக்கு நடு ஜாமம் ஆயிற்றே.
இருந்தாலும் மனது கிடந்து அடித்துக் கொண்டது. திருப்புகழை கேட்கத் துவங்குமுன், பாடத் துவங்குமுன், தேடத் துவங்கினேன். என் தேடலில் எனக்குத் தெரிந்தது திருப்புகழை தேடித் தேடி நமக்களித்தவர் 1846-1909 ஆண்டுகளில் வாழ்ந்த திரு. வ.சு. சுப்பிரமணிய பிள்ளை என.

எதிர் வரும் சந்ததியருக்கும் நாம் தேடி விட்டுச்செல்லும் பொருட் செல்வம் பயன் தருகிறத்தோ இல்லையோ அறமும் கல்வியும் அவர்களை என்றும் கை விடாது. அது போலவே இலக்கியமும், அருட் பாக்களும் பல தலைமுறை கடந்தும் எந்த மண்ணில் வசித்தாலும் நம்மை இணைக்கும் என உணர்ந்து அழிவிலிருந்து அவைகளை காப்பாற்றி நமக்கு விட்டுச் சென்ற சான்றோரும் வணங்கப்பட வேண்டிய கடவுளரே.
இராச இராச சோழன் நம்பியாண்டார் நம்பியை வேண்டினார். நம்பி தான் வணங்கும் தோழன் திரு நாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வேண்டினார். பிள்ளையார் வழிகாட்ட நம்பி நமக்குத் தேடிக் கொடுத்தது மூவர் தேவாரம். தேடியிருக்க இல்லையெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவில்களில் பாடப்பட்டு வந்த பாடல்களுடன் தேவாரத் திரட்டு முடிவடைந்திருக்கும்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் தேடிக் கொடுத்திரா விடின் இன்று நம்மை இணைக்கும், நாம் மகிழும் சங்க இலக்கியங்கள் பல காவிரி ஆற்றிலோ தாமிரபரணி ஆற்றிலோ மிதந்து கடலில் கலந்திருக்கும்.
அதுபோலவே தமிழ்த் தாத்தா காலத்தில் வாழ்ந்த திரு. வ.த. சுப்பிரமணிய பிள்ளை தமிழகமெங்கும் தேடித் தொகுத்திரா விடின் அருணகிரியார் எழுதிய 16000 பாடல்களில் நமக்கு கிடைத்த 1307 பாடல்கள் கூட கிடைத்திராது. படை வீடுகளிலும், வயலூர், விராலிமலை போன்ற கோவில்களிலும் பாடப்பட்ட ஒரு சில பாடல்களுடன் தொகுப்பு முடிந்திருக்கும்.
பிள்ளையவர்கள் தமிழ்த் தாத்தாவின் சம காலத்தவர் என்றேன். இருவருக்கும் உள்ள மற்றுமொரு ஒற்றுமை, இருவரும் இளவயதில் வறுமையில் வாடியவர்கள். பசியோ, பட்டிணியோ, பல மைல் தூர நடையோ இருவரும் சலிக்காமல் தேடியது, பல நூறு ஆண்டுகளில் உதிக்கப் போகும் சந்ததியருக்கு அவைகளை கொண்டு சேர்க்க வேண்டுமென்ற வைராக்கியமே.
சுப்ரமணிய பிள்ளை செங்கல் பட்டில் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் தன் பதினோராவது வயதில்தான் பள்ளிக்கூடத்தை மிதிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். அந்த மிஷன் பள்ளியிலும் ஆறு ஆண்டுகளே கல்வி. வயதான பெற்றோர், வேலையில்லாத அண்ணன், படித்த பள்ளியிலேயே மாதம் ஆறு ரூபாய் சம்பளத்தில் பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் கல்வியில் ஆர்வம் குறைய வில்லை.
சென்னையிலிருந்து பள்ளி ஆய்விற்கு வந்த Dr. மில்லர், இவரின் திறமையையும் ஆர்வத்தையும் கண்டு எட்டு ரூபாய் ஸ்காலர்சிப்பில் சென்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். மாதம் நான்கு ரூபாயை தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் அளித்துவிட்டு தன் செலவு போக மூன்று ரூபாய்களை பெற்றோருக்கு அனுப்புகிறார். விடுமுறைக்கு பையை தலையில் சுமந்து சென்னையிலிருந்து செங்கல் பட்டு பொடி நடையாக சென்று வருகிறார். தான் சென்னை செல்ல நண்பரிடம் வாங்கிய அரை அணா கடனையும் திருப்பிக் கொடுக்கிறார்.
பள்ளிக் கல்வியை சிறப்புற முடித்து அன்றைய FA ஐயும் முடிக்கிறார். மேலே BA படிக்க வழியில்லை. படித்த பள்ளியிலேயே மாதம் 40 ரூபாயில் பணி. ஆசிரியர் பணியில் ஈடுபாடில்லை. நீதித்துறையில் அடிப்படை ஊழியராய் நுழைந்து நீதிபதி பதவி வரை உச்சம் தொடுகிறார். அந்தக் கால கட்டத்தில்தான் திருப்புகழில் மயங்கி பாடல்களை தேடத்துவங்குகிறார்.
தமிழ் நாட்டின் பல் வேறு ஊர்களில் பணி புரியும் வாய்ப்பை திருப்புகழ் தேடலில் பயன் படுத்திக் கொள்கிறார்.
இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் தினசரி தணிகை முருகன் மேல் ஒரு பாசுரம் எழுதுவதையும், ஒரு தேவார பதிகம் படிப்பதையும் நிறுத்த வில்லை.
தேடலில் அவருக்கு கிடைத்த 1307 பாடல்களை அச்சாக்கி பார்த்து மன நிறைவடைந்தார். 1909 ம் ஆண்டு தனது 63 வது வயதில் இரண்டாம் பதிப்பை அச்சிட்டு புத்தகக் கட்டுகளை அடுக்கி வைத்து பார்த்த வண்ணம் மன நினைவோடு தணிகை முருகனை சென்றடைந்தார்.
பல சிரமங்களுக்கிடையே வறுமையிலும் பிந்தைய தலை முறைக்கு, நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை தேடிக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களை நம் மனதில் இன்று வரை நிறுத்தி வைத்துள்ளது.
தேடல் அவர்களோடு நின்று விடவில்லை. இன்றும் தொடர்கிறது. நாம் கூட பார்க்கிறோமே அவர்களை!
சுட்டெரிக்கும் கோடையிலும் சென்னையில் இன்று கனத்த மழை!
மேலே கூறிய அனைவரும்தான் காரணமோ?
சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் கடினமான திருப்புகழின் ஒன்றான ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாடலைப் பாடுவதைக் கேளுங்கள்!