பழந்தமிழ் நாட்டில், சங்ககாலக் கவிதைகளில் தலைவன் பொருள் தேடப் பிரிந்து செல்வதும், அன்பு மனையாள் அவன் பிரிவையும் அவன் சொன்னவாறு திரும்ப வாராததையும் குறித்து வருந்துதலும் வழக்கு. பொருள் தேடுவதென்பது அவன் தனது பணி நிமித்தம் மன்னனுடன் போருக்கோ, அல்லது அரச தூதுவனாக அயல்நாட்டுக்கோ, வாணிபம் செய்யவோ, இன்னபிற காரணங்களுக்காகவோ இருக்கலாம்.
அகநானூற்றில் காணும் பல பாடல்கள் தலைவியின் பிரிவாற்றாமையைப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடல்களே! அப்படி ஓர் பாடலைப் பார்ப்போம்.
பிரிந்து சென்ற தலைவன் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என வருந்துகிறாள் தலைவி. தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்: “தோழி! இருண்ட கார்கால மேகங்கள் விண்ணதிர முழங்குகின்றன. துள்ளிவிழும் கடுமையான பெருமழையையும் பெய்தன. அந்த மழைக்காலம் கழிந்தபின்னர் புகைபோன்ற பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறையும்வண்ணம் பனிபெய்யும் பனிக்காலமும் வந்துவிட்டது.
“அவரைப்பூக்கள் பூத்துள்ளன. வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலைசாய்த்துக் கிடப்பது காண இனிமையாக உள்ளது. வண்டுகள் மரக்கிளைகளில் அசைந்து கொண்டுள்ளன. இந்த முன்பனிக்காலத்தின் நள்ளிரவிலே என் தலைவரானவர் சினம்கொண்ட தம் வேந்தனின் பாசறையில் நீண்டகாலம் தங்கியுள்ளார்; எனது பிரிவின் வருத்தத்தை அறியாதவராக இருக்கிறார். என் இந்த நிலையினைப் போக்க அவர் விரைவில் வருவாரோ?” என்கிறாள்.
முல்லைத்திணையில் அமைந்த இப்பாடலைப் பாடியவர் கழர்க்கிழான் எயிற்றியார் என்னும் புலவர்.
மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுற
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம்நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்? என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமை யானே!
அழகான கருத்துச் செறிந்த பாடல். இலக்கிய நயம், வாழ்வியல் எனப்பல நயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கும் பாடல். இக்காலத்தவருக்கு, இன்னும் பல சிந்தனைகளை எழுப்பும் பாடலும் கூட!
இலக்கிய நயமாவது: முல்லைத்திணையில் முன்பனி வந்தது கூறப்படுகிறது. இங்கு நிலமும் கருவும் மயங்கி வந்ததனால் இது திணை மயக்கம் எனும் கருத்தைக் கொண்டு அமைந்தது.
வாழ்வியல் வகையில் பார்த்தால், போர் பற்றிய சிந்தனைகள் கொண்டு அரசனுடன் பாசறையில் இருப்போர் தம் குடும்பம், மனைவி, மக்கள் பற்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளி இருப்பர் என்ற நியதி.
மழையைப் பற்றிப் படித்தபோது எனது சிந்தனை வேறொரு இலக்கில் பயணித்தது.
மழை வாசனையை உணர்ந்திருக்கிறோம் அல்லவா?
புதுமழை பெய்யத் தொடங்கும்போது மண்ணிலிருந்து ஒரு தனி வாசம் எழுமே! என்னவென்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? மண்வாசம், மழைவாசம் என்று தள்ளிவிட்டுப் போய் விடுவோம். ஆனால் அதில் எத்தனை அறிவியல் செய்திகள் பொதிந்துள்ளன தெரியுமா?
^^^^^^^^^^^^^^^^^^
The smell of the wet earth in the rain
rises like a great chant of praise from the
voiceless multitude of the insignificant.
Tagore in Stray Birds – 311.
மழைக்காலத்து ஈரமண்ணின் வாசனை
அற்பமான, குரலற்ற ஒரு பெரும் கூட்டம் பாடும்
சிறந்த புகழுரை போல எழுகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாகூர் ஒரு தீர்க்கதரிசிதானோ என்னவோ; குரலற்ற பெருங்கூட்டம் பாடும் புகழுரைதான் மண்வாசம்! அந்தப் பெருங்கூட்டம் என்பதே இவற்றை உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் கூட்டம்! தாகூரின் காலத்தில் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் சுத்தமாக இல்லை!! எது அவரை இவ்வாறு எழுதத் தூண்டிற்று என வியக்கிறேன்.
ஆம், நம் கண்களால் காணவியலாத சின்னஞ்சிறு நுண்ணுயிரிகள்தாம் (Microbes) இந்த வாசனைக்குக் காரணம் என்றால் நம்புவீர்களா? ஸ்ட்ரெப்டோமைசீட் (Streptomycetes) எனும் ஒருவிதமான நுண்ணுயிரிதான் ‘பெட்ரிகார்’ (Petrichor) எனும் இவ்வாசனைக்குக் காரணம். ஜியோஸ்மின் (Geosmin) எனும் ஒரு வேதிப்பொருளை அவை மண்ணில் உண்டுபண்ணுகின்றன. மழைநீர் பட்டதும் உடனே எழும் இந்த வாசனைதான் நாம் அறிவது!! இந்த மண்வாசனை காலகாலங்களாக 440,000,000 வருஷங்களுக்கு முன்பிருந்தே மற்ற உயிரினங்களால் அறியப்பட்டுள்ளது. மண்ணில் இருந்து வருவது. ஜியோஸ்மினைத் தயாரிக்கும் இந்த நுண்ணுயிரிகள் அறிவியல் மருத்துவ மேடையில் பெரியதோர் இடத்தை வகிக்கின்றன. என்ன தெரியுமா? இந்த நுண்ணுயிரிகள்தான் பலவிதமான ஆன்டிபயாடிக்குகளை உற்பத்தி செய்கின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin) நாமனைவரும் அறிந்தது. ஸ்பைராமைசின் (Spiramycin) இன்னொன்று. இன்னும் பல உண்டு!!
ஸ்ட்ரெப்டோமைஸிஸைத் தவிர இன்னும் சிலவகை நுண்ணுயிரிகளின் – மிக்ஸோபாக்டீரியா (Myxobacteria), பெனிசில்லியம் (Penicillium), ஏன் நாமுண்ணும் பீட்ரூட்டின் லேசான சுவையான மண்வாசனைகூட இந்த ஜியோஸ்மினால்தான்!
மிக்ஸோபாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகள் வெவ்வேறு வேதிப்பொருட்களை (Chemicals) உற்பத்தி செய்கின்றன. எபிதிலோன் (Epithelon) என்ற ஒருவகை வேதிப்பொருள் புற்றுநோய் வைத்தியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் இக்சாபேபிலோன் (Ixobabilon) எனும் மருந்திற்கு மார்பகப் புற்றுநோய் வைத்தியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல.
எனது ஆராய்ச்சிக்காலத்தில், மிக்ஸோபாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியை எங்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்கு அழைத்து, எங்களில் சிலருக்கு இந்த பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிலிருந்து வேதிப்பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சிதர வேண்டினோம். அவருடனான மூன்றுவாரப் பயிற்சிக் காலத்தில் அவர் எங்களை நுண்ணுயிரிகளின் புதியதொரு உலகிற்கே அழைத்துச் சென்று விட்டார்.
தாவரங்கள், காளான்கள் (Fungus), நுண்ணுயிரிகள் இவற்றிலிருந்து கிடைக்கும் இயற்கையான வேதிப்பொருள்கள் மருந்து கண்டுபிடிப்புத் துறையில் கடந்த நூற்றாண்டிலிருந்து பெரும்பங்கு வகிக்கின்றன. கடந்த சிலவாண்டுகளில் மிக்ஸோபாக்டீரியாக்களும் இதில் சேர்த்தி!! தொற்றுநோய்கள் (Infectious diseases), தொற்றல்லாத புற்றுநோய் போன்றவைகளுக்கும் இவை பயன்படுகின்றன எனக் கண்டோம். இவை மண்ணில் இருப்பவை! ஆனால் கூட்டங்களாகச் சேர்ந்து வாழ்பவை! என்ன? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை வழுவழுப்பான ஈரப்படலங்களாக கூட்டமாக இரைதேடி நகரும். இரைகிட்டாதபோது, ஒரு கூடு (Fruiting body) போன்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு அதனுள் பாதுகாப்பாக (Spores) இருக்கும்! இதையெல்லாம் செய்வதற்காக இந்த அமைப்பு பலவகைப்பட்ட புரதங்களையும் வேதிப்பொருட்களையும் உண்டுபண்ணிக் கொள்கின்றது. அது பெரியதோர் ஆராய்ச்சி! இந்தப் புரதங்களும் வேதிப்பொருள்களும்தான் நமக்கு பலவகை நோய்களுக்கும் மருந்தாக அமைகின்றன! இது எப்படி இருக்கு? அற்புதம் இல்லை?
நாங்கள் இந்த நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப் மூலமாக ‘செல் செல்’லாகக் கண்டு களித்து, கண்படைத்த பயனைக் கொண்டாடினோம்! பல நிறங்களிலும் வண்ணங்களிலும் அவை வலம் வரும் அதிசயத்தைக் கண்டு ரசித்தோம். சில படங்களை உங்கள் பார்வைக்கு விருந்தாக அளித்திருக்கிறேன். இவை வளருவதையும், முதிர்வதையும், கண்டு அவற்றிலிருந்து சரியான சமயத்தில் வேதிப்பொருட்களை எடுப்பதுமாக எங்கள் நாட்கள் இனிதே கழிந்தன.
இதிலிருந்து விளங்கியது ஒரு பேருண்மை! இயற்கை, தொற்றுகள் மூலமும் நோய்கள் மூலமும் தொல்லைகள் தந்தாலும், தானே அதற்கு மருந்துகளையும் நிவாரணிகளையும் எங்காவது எதிலாவது வைத்திருக்கிறது. அவற்றைக் கண்டறிவதே நம் சமர்த்து!
***************************************************************************************************
அடுத்து நமது தத்துவக் கதைகளுக்குள் புகலாம். இடிக்கும், மழைக்கும் கடவுள் இந்திரன்! ரிக் வேதப்படி அவனே மிகப்பெரிய கடவுள். மிகுந்த பலசாலி. மும்மூர்த்திகளுக்கும் முற்பட்ட கடவுளாம்!
வாழ்விற்கு ஆதாரமான கடவுளாதலால் மழையோடும், அமிர்தத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறான். வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமிர்தத்தைத் தன் ஆட்களுக்காக சாமர்த்தியமாகக் கவர்ந்து செல்கிறான்.
மற்றபடி இந்திரனைப்பற்றிய பல கதைகளை நாமறிவோம். பெண்கள் மீதான சபலம் அவனுடைய அற்பகுணம் என்கிறார்கள்! அவன் கௌதம முனிவரின் அழகிய மனைவியான அகலிகைமீது தவறான எண்ணம் கொண்டு சாபம் பெற்றது நம் அனைவருக்குமே தெரியும். கோவர்த்தன கிரியைக் குடையாய்த் தூக்கிய கிருஷ்ணன் மீதும், இடையர்கள் மீதும் பெருமழை பொழிந்து பின் தவறை உணர்ந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டதையும் நாமறிவோம்.
எது எப்படியானால் என்ன? இனி மழைபெய்யும்போது, நாம் மண்வாசனையை உணரும்போது கட்டாயம் மிக்ஸோபாக்டீரியா பற்றிச் சிந்திப்போம். பெருமழை பெய்யும்போது (சங்ககாலத் தலைவிபோல) பணிக்குச் சென்ற நாம் மட்டுமின்றி கணவர், மகன், மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்று கவலைப்படுவோம். குழந்தைகள் பள்ளியிலிருந்து வரவேண்டுமே, அவர்கள் வரும் சமயம் நாமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப வேண்டுமே என்றெல்லாம் நம் எண்ணங்கள் மழைநீரில் அலை மோதும். மழைக்காலம் தொடங்கி விட்டதே!…….
விரைவில் மீண்டும் சந்திப்போம்.
மாமழை* ….
சொற்கள் இல்லை
இல்லவே இல்லை
இல்லை
என்னமாக எழுதுகிறார் மீனாட்சி பாலகணேஷ் அவர்கள்!
சங்க இலக்கியத்தில் பிரிவு ஆற்றாமை …அதில் மழையின் குறிப்பு..மழை பெய்த ஈர மண் வாசம்..
வாசத்தைப் பற்றிய அபார வருணிப்பு தாகூர் கவிதை வரியில்…
அந்த உவமையில் இருந்து அறிவியல் ஆய்வுப் பயணம் தொடங்கும் இடம்… அம்மம்ம…ஆஹா .
வணக்கமும் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும்
*எஸ் வி வேணுகோபாலன்*
LikeLike
எது எப்படியானால் என்ன? இனி மழைபெய்யும்போது, நாம் மண்வாசனையை உணரும்போது கட்டாயம் மிக்ஸோபாக்டீரியா பற்றிச் சிந்திப்போம்.
மீனாக்ஷி பாலகணேஷையும் நினைவு கொள்வோம்…!!!
LikeLike